தை திங்களில் தென்பெண்ணை ஆற்று திருவிழா



இந்து மத விழாக்களும், கொண்டாட்டங்களும் மானுடத்தின் வாழ்வை நெறிபடுத்தும் அர்த்தம் பொதிந்தவை. இறைவனை வழிபடுவதோடு விழாக்களின் நோக்கம் நிறைவுறுவதில்லை. உறவுகளை ஒன்றுபடுத்தவும், மனித நேயத்தை மேம்படுத்தவும் திருவிழாக்கள் அடித்தளமாக அமைகின்றன. ஆற்றின் வழிேய பிறந்தது மனித நாகரீகம். எனவே, இன்றளவும் ஆறுகளை போற்றும் மரபும், பண்பும் நம்மிடம் இருக்கிறது. மக்களின் கொண்டாட்ட திடலாகவும் ஆறுகள் அமைந்திருக்கின்றன. பொங்கிப் பெருகி வரும் புதுவெள்ளத்தை, அள்ளிப் பருகத் தரும் ஆறுகளுக்கு, நாம் செலுத்தும் நன்றி பெருவிழாவே ஆற்றுத்திருவிழா.

தமிழகத்தின் ஆகச்சிறந்த விழாக்களில் ஆற்றுத்திருவிழாக்கள் தனிச்சிறப்பு மிக்கவை. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டம், மணலூர்பேட்டையில், தென்பெண்ணை ஆற்றில் ஆண்டுதோறும் தை திங்கள் 5ம் நாள் நடைபெறும் ஆற்றுத் திருவிழா பிரசித்தி பெற்றது. மணல்கள் மறைந்து மனிதர்கள் நிறைந்திருக்கும் தனிப்பெரும் விழா. இறையருள் பெருகும் பக்திப் பெருவிழா. தீர்த்தவாரி திருவருள்தரும் முக்கண்ணன் சிவபெருமான் ஆற்றுத்திருவிழாவில் அருள்தருவது தனிச்சிறப்பு. ஆம்..! திருவருணை அக்னித்திருநகரில் அருள்தரும் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், தென்பெண்ணையாற்றில் எழுந்தருளி அருள்பாலிப்பது இதன் தனிச்சிறப்பு.

அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் தீ்ர்த்தவாரி நிகழ்வுகள் தனித்துவமும், ஆன்மிக பின்னணியும் மிக்கது. திருக்கோயில் பிராகாரங்களுக்குள் அமைந்துள்ள பிரம்ம தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், அருணை நகருக்குள் அமைந்துள்ள ஐயங்குளம், தண்டராம்பட்டு சாலையில் அமைந்துள்ள தாமரை குளம், கிரிவலப்பாதையில் அமைந்துள்ள ஈசான்ய குளம் ஆகியவற்றில் சந்திரசேகரர் திருவடிவான அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

நிலையாக நிற்கும் குளத்து நீரில் நடைபெறும் தீர்த்தவாரிகளைவிடவும், ஆழி நோக்கி செல்லும் ஆற்று நீரில் நடைபெறும் தீர்த்தவாரிக்கு தனிச்சிறப்பு உண்டு. அதன்படி, திருவண்ணாமலை நகரை இருகரம் தொட்டு அணைத்துச்செல்லும் தென்பெண்ணை மற்றும் வடபெண்ணையில் இறைவனுக்கு நடைபெறும் தீர்த்தவாரியும், கவுதம நதியில் நடைபெறும் தீர்த்தவாரியும் சிறப்பானவை.

தென்பெண்ணை ஆற்று தீர்த்தவாரி திருவண்ணாமலை திருநகரின் தென்திசையில் பாய்ந்தோடும் நதியின் பெயர் தென்பெண்ணை. ஆண்டுதோறும்  தை மாதம் 5ம் நாள், தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறும். விழுப்புரம் மாவட்டம் மணலூர்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் தீர்த்தவாரியில், சந்திரசேகரர் திருவடிவாக அண்ணாமலையார் எழுந்தருளி அருட்பாலிக்கிறார்.

அதையொட்டி, திருக்கோயிலில் இருந்து தென்பெண்ணைக்கு புறப்பட்டு செல்லும் சுவாமிக்கு, வழிநெடுக நூற்றுக்கணக்கான கிராமங்களில் மண்டகபடி நடைபெறும். தை மாதம் 5ம் தேதி உத்ராயண புண்ணியகாலத்தில் இந்த தீர்த்தவாரி வைபவம் நடைபெறுகிறது. வடபெண்ணை ஆற்று (செய்யாறு) தீர்த்தவாரி திருவண்ணாமலை திருநகரின் வடதிசையில் பாய்ந்தோடும் நதியின் பெயர் வடபெண்ணை என்கிற செய்யாறு. சேய் ஆறு, செம்மை நதி, செந்நதி எனும் பெயர்களும் உண்டு. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் ‘ரதசப்தமி’ திதியன்று, கலசபாக்கத்தில் வடபெண்ணையாற்றில் சந்திரசேகரர் திருவடிவில் அண்ணாமலையார் அலங்கார ரூபத்தில் எழுந்தருள்கிறார்.

கவுதம நதி தீர்த்தவாரி திருவண்ணாமலையின் கிழகுத் திசையில் பாய்ந்தோடும் நதியின் பெயர் கவுதம நதி. கவுதம மகரிஷி இந்த நதியை உருவாக்கி, நீராடி இறைவனை வழிபட்டதால் கவுதம நதியென பெயர்பெற்றுள்ளது. ஆண்டுதோறும் மாசி மாதம் மகம் நட்சத்திரத்தன்று, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தையொட்டி பாயும் கவுதம நதியில் தீர்த்தவாரி நடைபெறும்.

அண்ணாமலையாரை தனது தவப்புதல்வனாக பாவித்த வீரவள்ளாள மகாராஜாவுக்கு திதி கொடுப்பதற்காக, இறைவனே இங்கு எழுந்தருளி தீர்த்தவாரியில் அருள்தருகிறார். இறைவனுக்கு மன்னர்களும், மக்களும் தொண்டாற்றுவது உண்டு. ஆனால், தனது ஆலயத்தை கட்டியெழுப்பி தொண்டாற்றிய வள்ளாளனுக்கு, இறைவனே திதி அளித்து தொண்டாற்றும் தனிச்சிறப்பு கவுதம நதி தீர்த்தவாரிக்கு உண்டு.

தீர்த்தவாரியின்போது எழுந்தருளும் இறைவன், ஆறுகளை கடந்து செல்வது மரபு கிடையாது. எனவே, தென்பெண்ணை, வடபெண்ணை, கவுதம நதி ஆகிய மூன்று ஆறுகளில் தீர்த்தவாரியில் அருள்தரும் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், ஆறுகளை கடந்துசெல்லாமல், ஆற்றில் இறங்கி அருள்தருகிறார். இறைவனின் திருவூடலுக்குப் பின் தீர்த்தவாரி திருவருணை திருக்கோயிலில் நடைபெறும் ஒவ்வொரு விழாவுக்கும், ஒவ்வொரு உட்பொருள் உண்டு. அதன்படி, ஆண்டுதோறும் தைத்திங்கள் 2ம் நாளன்று நடைபெறும் திருவூடல் விழா பொருள் நிறைந்ததும், அருள் நிறைந்ததுமாகும்.

தமிழர் திருநாளான பொங்கல் விழாவின் மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல். அன்றைய தினம், தெற்கு மாட வீதியில் திருவூடல் திருவிழா கோலாகலமாக நடைபெறும். இதன் காரணமாகவே, இந்த வீதியை திருவூடல் தெரு என அழைக்கப்படுகிறது. அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலையம்மனுக்கும் இடையே ஏற்பட்ட ஊடலையும், அதைத்தொடர்ந்து நடைபெறும் கூடலையும் உள்ளடக்கியது இத்திருவிழா. இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல்களில் சிறப்பானது இத்திருவிளையாடல்.

இத்திருவிளையாடலின் பின்னணியாக கூறப்படும் ஆன்மிக தகவல்கள் சுவையானது..! இறைவனின் கண்களை தனது மலர் கரத்தால் விளையாட்டுக்காக அம்பாள் மூடிட, அதனால் உலக இயக்கம் தடைபட்டது. சினம் கொண்ட சிவபெருமான், காலம் அறிந்து நடந்து கொள்ள தவறியதால், பூலோகத்துக்கு சென்று, கடும் தவமிருந்து கிரிவலம் செல்ல வேண்டும் என அருளினார்.

அதன்படியே, பூலோகம் வந்த அம்பாள், திருவண்ணாமலையில் துர்கையம்மன் கோயில் அமைந்துள்ள இடத்தில் கடும் தவமிருந்தார். பின்னர், இறைவனின் கருணை வேண்டி கிரிவலமும் சென்றார். அப்போது, எழுந்தருளிய இறைவன் அன்னைக்கு அருள்புரிந்ததாக அருணாசல புராணம் கூறுகிறது. அதேபோல், சிவனை மட்டுமே இறைவனாக ஏற்று வழிபடும் பிடிவாதக்காரர் பிருங்கி மகரிஷி. சிவனைத்தவிர வேறு யாரையும் வலம் வந்து வழிபடும் வழக்கம் இவருக்கு இல்லை. இதையறிந்த உமையவள், சிவனொடு சக்தி என இறைவனை இணக்கமாக கொண்டு அமர்ந்திருந்தார். சிவனை வழிபட வந்த பிருங்கி மகரிஷிக்கு தயக்கம்.

எப்படி இருவரையும் வலம் வருவது என நினைத்தார். வண்டு உருவெடுத்தார். இருவருக்கும் இடைப்பட்ட இடைவெளியில் நுழைந்து சிவனை மட்டுமே வலம் வந்து வழிபட்டு பறந்தார். உமையவள் சினம் கொண்டார். முகம் சிவந்தார். இறைவனுடன் ஊடல் கொண்டார். உமையொரு பாகனாக வேண்டும் என்றார். அவ்வாறு ஏற்பட்ட ஊடலை உலகுக்கு உணர்த்தும் விழாவாகவே திருவூடல் நடக்கிறது என்பாரும் உண்டு.

திருவூடல் விழா நடைபெறும் தைத்திங்கள் 2ம் நாளன்று, இறைவனுடன் ஊடல் கொண்டு, அன்னை மட்டும் திருக்கோயில் வந்தடைவதும், அண்ணாமலையார் மட்டும் தனியாக அருகில் உள்ள குமரக்கோயிலில் இரவு தங்குவதும் திருவூடலில் நடைபெறும். அதைத்தொடர்ந்து சுவாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் தீர்க்கும் அடியாராக சுந்தரர் தமிழ்பாடி, ஊடல் தீர்ப்பதாக அமைகிறது இத்திருவிளையாடல்.

அதைத்தொடர்ந்து, அண்ணாமலையார் கோயிலில் மறுவூடல் திருவிழா நடைபெறும். சுவாமியும் அம்மனும் ஊடல் தீர்ந்து, கூடல் கொண்டதை காணும் இல்லறத்தார், தங்கள் வாழ்வையும் நல்லறமாக நடத்துதல் வேண்டும் என உணர்த்துகிறது திருவூடல் திருவிழா. திருமணமான தம்பதியர் திருவிளையாடலையும், அதைத்தொடர்ந்து நடைபெறும் மறுவூடலையும் தரிசிப்பது நல்லது. அதன்மூலம், தம்பதிகளுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் குறையும், இல்லறம்  செழிக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.

திருவூடலை தொடர்ந்து தென்பெண்ணையில் தீர்த்தவாரி தைத் திங்கள் 3ம் நாள் சுவாமி கிரிவலமும் மறுவூடலும் நடந்தேறியதன் தொடர்ச்சியாக, தைத் திங்கள் 5ம் நாள் மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் தீர்த்தவாரி விழா விமரிசையாக நடைபெறும். ஊடல் கொண்டு, பின்னர் மறுவூடல் நிகழ்ந்து இறைவனும், இறைவியும் மகிழ்ச்சியாக பக்தர்களுக்கு அருட்பாலிக்கும் பெருமைக்குரியது ஆற்றுத்திருவிழா சுவாமி புறப்பாடு.

திருவண்ணாமலையில் இருந்த  ஆற்றுத்திருவிழாவுக்கு செல்லும் சுவாமிைய தரிசிக்க, திருவண்ணாமலையில் இருந்து மணலூர்பேட்டை வரை வழிநெடுகிலும் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு மண்டகப்படி செலுத்தி மகிழ்வர். பின்னர், மணலூர்பேட்டை ஆற்றுத்திருவிழாவுக்கு வரும் அண்ணாமலையாரை வரவேற்க, ஆற்றின் எல்லையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருப்பார்கள்.

அதோடு, மணலூர்பேட்டை சுற்றுவட்டார கிராமங்களில் அருள்தரும் மணலூர்பேட்டை விநாயகர், மாரியம்மன், செல்லியம்மன், முத்துமாரியம்மன், சிவகாமசுந்தரி சமேத அகத்தீஸ்வரர் என எண்ணற்ற சுவாமிகளும் அண்ணாமலையாருடன் எழுந்தருளி ஆற்றுத்திருவிழாவில் காட்சியளிப்பதை தரிசிக்க கண்கோடி வேண்டும்.தென்பெண்ணை ஆறு பாயும் திருக்கோவிலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அதே நாளில் ஆற்றுத்திருவிழா நடைபெறும். ஆனாலும், அண்ணாமலையார் எழுந்தருளும் மணலூர்பேட்டை ஆற்றுத்திருவிழாவை தரிசிக்கவே மக்கள் வௌ்ளம் பெருமளவில் திரளும்.

ஆற்றுத்திருவிழா தீர்த்தவாரி முடிந்ததும், தை திங்கள் 6ம் நாள் அதிகாலை தென்பெண்ணை ஆற்றில் இருந்து  அண்ணாமலையார் புறப்பாடு நடைபெறும். அப்போதும், வழியெங்கும் கிராம மக்கள் திரண்டிருந்து  மண்டகப்படி செலுத்தி இறைவனை
வழிபடுவது சிறப்புக்குரியது.

கி.வினோத்குமார்