வீண்பயம் போக்கும் வீர ஆஞ்சநேயர்சென்னை கிண்டியில் கோயில் கொண்டுள்ள வீர ஆஞ்சநேயர் வலது கரத்தில் ‘அபய’ ஹஸ்தத்துடன் இடது கரத்தில் சௌகந்திக மலருடனும் நின்ற கோலத்தில் அருட்பாலிக்கிறார். இந்தக் கோயில் 15ம் நூற்றாண்டில் விஜய நகர சாம்ராஜ்யத்தின் மத குருவாகத் திகழ்ந்த ஸ்ரீவியாசராய மகானால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 732 ஆஞ்சநேய மூர்த்திகளில் ஒருவரே இந்த ஸ்ரீவீர ஆஞ்சநேயர் ஆவார்.

பிராகாரத்தில் ஈசான்ய மேற்கு திசை நோக்கி ஸ்ரீவிநாயக பெருமான், தும்பிக்கையாழ்வார் என்ற பெயருடன் அருட்பாலிக்கிறார். நவக்கிரகங்களில் ராகு-கேது இருவரும் தனித்தனியாக எழுந்தருளியுள்ளனர். இங்கு வேப்பமரமும் அரச மரமும் பின்னிப்பிணைந்து வளர்ந்து நிற்கிறது. இந்தத் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.

அருள்மிகு வீர ஆஞ்சநேய சுவாமிக்குத் தொடர்ந்து ஒன்பது சனிக்கிழமைகளில் வெற்றிலை மாலை சாத்தி அர்ச்சனை செய்து, அணையா விளக்கில் நெய் ஏற்றி, வடை மாலை சாத்தி வழிபட்டு வந்தால் திருமண யோகம் கைகூடும் என்கின்றனர் பக்தர்கள்.  இவ்வாலய ஸ்ரீவேணு கோபால சுவாமிக்குத் தொடர்ந்து 18 சனிக்கிழமைகள் துளசி மாலை சாத்தி அர்ச்சனை செய்து, 18வது வாரம் திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாத்தி கணவன்-மனைவி இருவரது ஜாதகத்தையும் வைத்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கைகூடும். சகல காரியங்களிலும் வெற்றி கிட்டும்.

வேணு கோபாலன், மிகச்சிறிய மூர்த்தியாகவும், பின்புறம் பசுவுடனும் குழலூதும் கண்ணனாகவும் கிழக்கு திசை நோக்கி அருட்பாலித்து வருகிறார். உற்சவ மூர்த்திகளாக ஸ்ரீஆண்டாள், ஸ்ரீஅழகிய மணவாளப் பெருமாள், ஸ்ரீராமானுஜர் உள்ளனர். ஸ்ரீசக்கரத்தாழ்வார் 16 திருக்கரங்களுடன் கிழக்கு நோக்கி அருட்பாலிக்கிறார். ஸ்ரீநரசிம்மர், ஆதிசேஷ பீடத்தின் மீது எழுந்தருளியுள்ளார்.

இக்கோயிலில் போகியன்று ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணம் நடக்கிறது. காலை 6.30 முதல் பகல் 11 மணி வரைக்கும், மாலை 5 மணி முதல் 7 மணி வரைக்கும் கோயில் நடை திறந்திருக்கும்.கோயில் சென்னை கிண்டி ரயில் நிலை யத்திற்கு அருகே மடுவாங்கரை மேம்பாலத்திற்கும், காந்தி மார்க்கெட்டிற்கும் இடையில் எம்.கே.என்.சாலை பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ளது.

கட்டுரை மற்றும் படங்கள்: ஆர்.சந்திரசேகர்