வெற்றியை தரும் புலனடக்கம்



மகாபாரதம் 99

‘‘ஸ்ரீகிருஷ்ணரின் பேச்சை மறுதலிக்காதே. யார் உன்னை போருக்கு தூண்டுகிறார்களோ அவர் உனக்கு பயன்பட மாட்டார்கள். பகையின் சுமையை உன் தோளில் போட்டு நகர்ந்து விடுவார்கள். பிறகு பச்சாதப்படுவாய். இத்தனை பேர் இவ்வளவு பேசிய பிறகும் இன்னும் கோபம் குறையாது அமர்ந்திருக்கிறாய். பகவான் ஸ்ரீகிருஷ்ணனும், அர்ஜுனனும் எந்தப் பக்கம் இருக்கிறார்களோ அந்தப் பக்கம் ஜெயிப்பது உறுதி. இது தெரிந்த பிறகும் ஒருவன் போருக்கு முற்படுவானா. போரில் வெல்ல முடியாதவர்களை வெல்ல ஆசைப்படுவானா. இதற்கு மேலும் உன்னிடம் பேசுவதற்கு எனக்கு மனமில்லை.”  இப்பொழுது விதுரர் பேசத் துவங்கினார்.

‘‘நான் உனக்காகவோ உன் அழிவுக்காகவோ வருத்தப்படவில்லை. உன்னுடைய தாய் தந்தையருக்காக வருத்தப்படுகிறேன். ஒரு துஷ்டப்பிள்ளையை பெற்று அவன் மூலம் வேதனைப்படுகிறார்களே என்று கலவரப்படுகிறேன். உன் நண்பர்களும், மந்திரிகளும் கொல்லப்பட்ட பிறகு அவர்கள் அந்த பாதிப்பிலிருந்து மீளாமல் புலம்பித் தீர்ப்பார்கள். உன்னை புதல்வனாக பெற்ற காரணத்தால் அவர்களுக்கு கிடைத்த வெகுமதி இதுதான்.

நீ இறந்த பிறகு இந்த பூமியில் அனாதையாக அலையப் போகிறார்கள். உன்னாலான உதவி இதுதான். ஸ்ரீகிருஷ்ணரை எதிர்க்காதே. அவரை விட்டு விலகாதே. ஸ்ரீகிருஷ்ணரின் மூலம் பஞ்ச பாண்டவர்களோடு நெருக்கம் கொள். ஸ்ரீகிருஷ்ணரை மறுதலிப்பாயானால் அவர் கட்டளையை ஏற்கவில்லையானால் நீ கடைத்தேற முடியாது.”

 மறுபடியும் பீஷ்மர் பேசத் துவங்கினார். “பாண்டவர்களோடு போர் புரிய மாட்டேன் என்று சங்கல்பம் செய்து கொள். அடித்து நொறுக்குவேன் என்ற பீமனிடம் சமாதானம் பேசு. அர்ஜுனனுடைய அம்புகள் மழை போல் பொழிந்து உன் படையை நாசம் செய்வதற்கு முன்பு அமைதியடைந்து நட்பு பேசு. யுதிஷ்டிரர் தலைவணங்கி உன் எதிரே கை கூப்பும் போது அவரை நீ தடுத்து நிறுத்தவேண்டும். ஆலிங்கனம் செய்து கொள்ள வேண்டும். இந்தக் காட்சியை நாங்கள் பார்க்க வேண்டும். ஊர் முழுவதும் ஒரு தகிப்பில் இருக்கிறது. யுத்தம் குறித்த கலவரத்தில் இருக்கிறது.

நகுலனும், சகாதேவனும் உன் இருபக்கமும் அணுகி உன்னை தழுவிக் கொள்கிறபோது இங்குள்ள மன்னர்கள் ஆனந்தக் கண்ணீர் வடிப்பார்கள். எல்லாம் நல்லபடியாக முடிந்தது என்று அஸ்தினாபுரத்து மக்கள் தங்கள் தினசரி கடைமையில் ஈடுபட வேண்டும். இது நடைபெற வேண்டுமென்று விரும்புகின்றேன். ” பீஷ்மருடைய இந்தப் பேச்சு அற்புதமானது. போரின் கொதிநிலையில் அந்த ஊர் சபை இருக்கும் பொழுது மிக இனிமையானவற்றை கற்பனை செய்து சொல்வதின் மூலம் சமாதான எண்ணத்தை தோற்றுவிக்கிற சாதுர்யம் அது. சபையை தன் பக்கம் வளைக்கும் வித்தை அது.

ஆனால் இவை ஏதும் துரியோதனனை அசைத்துக் கூட பார்க்கவில்லை.எல்லோரும் அவன் பதிலுக்கு காத்திருந்தார்கள். அவன் நிமிர்ந்து அமர்ந்து நிதானமாக பேசத் துவங்கினான். முதல் வாக்கியத்திலேயே ஸ்ரீகிருஷ்ணரை அவன் மறுதலித்தான். ‘‘ஸ்ரீகிருஷ்ணா, எதனால் எப்பொழுதும் என்னையே குறை சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை. உங்களுக்கு நான் ஏன் பிடிக்காமல் போனேன். இதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை. உங்களுக்கு நான் ஒன்றும் கொடுமை ஏதும் செய்து விடவில்லையே.

உங்களுக்கு நாங்களும் உறவுதானே. அப்படியிருக்க பாண்டவர் பக்கம் பேசுவது என்பது நியாயமானதா. நீங்களாக ஒரு முடிவு எடுத்துக் கொண்டு அதை தர்மம் என்பதா. பலமுறை யோசித்துப் பார்த்தும் நான் என்ன குற்றம் செய்தேன் என்றுத் தெரியவில்லை. என்னிடம் குற்றம் ஏதும் இல்லை. சூதாட்டத்திற்கு அழைத்ததும் மறுப்பேதும் இன்றி ஒப்புக் கொண்டார்கள். சூதாடினார்கள். இழந்தார்கள். ஜெயித்தது சகுனி. இதில் குற்றமேதும் உண்டா.

ஜெயித்தது அத்தனையும் என் தந்தையின் கட்டளைப்படி திருப்பி கொடுக்கப்பட்டன. அந்த சூதாட்டம் என்பதே அபத்தமாகப் போயிற்று. பிறகு ஒட்டுமொத்தமாக பணயம் வைத்து கடைசி முறை என்று சூதாடினார்கள். அது என் குற்றமல்ல. ஒருவேளை நான் தோற்றிருந்தால் நீங்கள் யார் பக்கம் இருந்திருப்பீர்கள். நான் சொல்கிறேன். அப்பொழுதும் நீங்கள் பாண்டவjகள் பக்கம் இருப்பீர்கள். நாங்கள் அவர்களை என்ன கெடுத்தோம். எங்கள் பகைவர்களோடு பாண்டவர்கள் சேர்ந்து கொண்டு எங்களை பழிவாங்கத் துடிக்கிறார்கள். எங்களை எதிர்க்கிறார்கள்.

இங்குள்ளவர்களின் பயமுறுத்தலான சொற்களால் நடுங்கிப்போய் சத்திரிய தர்மத்திலிருந்து பின் வாங்க முடியாது. இந்திரனுக்கு முன்னாலும் தலைவணங்க முடியாது. கர்ணனை தேவர்களாலும் வெல்ல முடியாது. பாண்டவர்கள் ஜெயித்து விடுவார்களா,சரி, உங்கள் விருப்பப்படி ஆயுதத்தால் அடிபட்டு நான் மரணமடைந்து விட்டால் அது வீர சொர்க்கம். உன்னதமான விஷயம். ஒரு சத்திரியனுக்கு அம்புப் படுக்கை கிடைப்பது மிகப் பெரிய வரம். ஒரு பொழுதும் பகைவருக்கு முன்னால் ஒரு வீரன் தலைகுனிய மாட்டான். ஒரு சத்திரியன் பயந்து பின்வாங்க மாட்டான்.

என்னால் தர்மத்தையும், பிராமணனையும் மட்டுமே வணங்க முடியும். நான் சிறுவனாக இருந்தபோது பாண்டவர்களுக்கு ராஜ்ஜியம் பிரித்து தரப்பட்டது. அப்பொழுது நான் சிறுவன். இந்தப் பிரிவு பற்றி தெளிவில்லாதவன். இப்பொழுது என் வசம் வந்த இந்த ராஜ்ஜியத்தை ஒருபொழுதும் பாண்டவர்களுக்கு திருப்பித் தரமுடியாது. இந்த துரியோதனன் உயிரோடு இருக்கும் வரை பாண்டவர்களுக்கு ஊசி முனையால் துளைக்கும் அளவு இடத்தைக் கூட தர முடியாது.”

பகவான்ஸ்ரீகிருஷ்ணருக்கு கண்கள் சிவந்தன. ‘‘என்ன துரியோதனா, பெரிய உத்தமனைப் போல பேசுகிறாய். எந்தவித குற்றமும் செய்தே அறியாதவன் போலும், செய்யத் தெரியாதவன் போலும் நடிக்கிறாய். சகுனியா சூதாட்டத்திற்கு அழைத்தான். சகுனியா சூதாடினான். அந்த விஷயம் தோன்றியது உன் புத்தியில் அல்லவா. சகுனியை முன்னிறுத்தி நீ செய்த சூழ்ச்சியல்லவா அது. ஒரு நல்ல சத்திரியன் அப்படி நடந்து கொள்வானா, அடுத்தவர் ராஜ்ஜியம் வேண்டுமென்று ஆசைப்படுகின்ற அரசன் போருக்குத்தான் அழைப்பான். சூதுக்கு அழைத்த முதல் அரசன் நீதான். அந்த பெருமை உனக்கே சேரும். ”

சபை லேசாக சிரித்தது. அடக்கிக் கொண்டது. துரியோதனன் மேலும் ஆத்திரமடைந்தான். ‘‘செல்வமும், ராஜ்ஜியமும் அடைவது மட்டும் உன் நோக்கமல்ல. பாண்டவர்களை அவமானப்படுத்துவது உன் நோக்கம் . திரௌபதியின் மீது கவனத்தை திருப்பினாய். மாத விலக்கான அந்தப் பெண்ணை ஒற்றை ஆடையுடன் சபைக்கு வரவழைத்தாய். நியாய புத்தியுள்ள எந்த மனிதனாவது செய்யும் காரியமா இது. தகாத வார்த்தைகளை திரௌபதியின் முன்பு சொல்லிவிட்டு தர்மத்தின் பால் இருக்கின்ற உத்தமன் போல உன்னை வர்ணித்துக் கொள்கிறாயே. துச்சாதனனா ஆடை உரித்தான். தூண்டிவிட்டது நீ.

மூடன் கர்ணனா இடித்துரைத்தான். தூண்டிவிட்டது நீ. அதட்டி கேட்ட விதுரரை எதிர்த்து நின்றவன் நீ. இன்னும் சற்று பொறுத்தால் பீஷ்மரையும், துரோணரையும் கலந்தாலோசித்து இதைச் செய்தேன் என்று சொல்வாய் போலும். இவ்விதம் செய்யக் கூடியவன் தான் நீ. சூதாட்டத்தில் விரிக்கப்பட்ட படு மோசமான தண்டனைகளை பாண்டவர்கள் மிகுந்த சிரமத்தின் பேரில் மேற்கொண்டார்கள். நிபந்தனையை நிகழ்த்தி விட்டார்கள். அந்த பாண்டவர்களை அரக்கு மாளிகையில் அவர்கள் தாயோடு எரிக்கின்ற முயற்சியை செய்யவில்லையா. பீமனை கை, கால் கட்டி ஆற்றில் போடவில்லையா.

நச்சுப் பாம்புகள் நிறைந்த பொய்கையில் வீசவில்லையா. எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று நீ சொன்னால் இங்கு யார் கேட்டிருப்பார்கள். ஆரம்பத்திலிருந்தே பீஷ்மரும், துரோணரும், விதுரரும் சமாதானம் செய்து கொள் என்று இடையறாது சொல்லி வருகிறார்கள். ஆனால் நீ மறந்தும் சமாதானம் என்ற வார்த்தையை உச்சரிப்பதேயில்லை. உன்னைப் போல ஒரு அதமனை உலகம் கண்டதில்லை. எப்பொழுதும் அதர்மமும், இகழ்ச்சியுமான காரியத்தையே செய்து வருகிறாய். ”

ஸ்ரீகிருஷ்ணர் இப்படி பேசிக் கொண்டிருக்கும் போது யாரும் எதிர்பாராத வண்ணம் துச்சாதனன் எழுந்தான். ‘‘மன்னா, இவர்கள் அனைவரும் ஒரு தீர்மானத்தோடு வந்திருக்கிறார்கள். உங்களை கைது செய்து பாண்டவர்களிடம் ஒப்படைத்து விடுவார்கள். பீஷ்மரையும், துரோணரையும், விதுரரையும், என்னையும் பாண்டவர்களுக்கு உரிமையாக்கி விடுவார்கள். இவர்கள் பேச்சிலிருந்து இவர்கள் எண்ணம் மிகத் தெளிவாகத் தெரிகிறது.”

 துச்சாதனன் பேச்சைக் கேட்டு துரியோதனன் கால் உதைத்து எழுந்திருந்தான். தனித்திருந்த அவனுக்கு அவன் பக்கம் பேசுகின்ற சகோதரனால் கோபம் அதிகரித்தது. மேலே உள்ள சால்வை பறக்க விதுரர், திருதராஷ்டிரன், பீஷ்மர், துரோணர் , கிருபர் , ஸ்ரீகிருஷ்ணர் அனைவரையும் அவமரியாதை செய்து அங்கிருந்து வெளியேறி விட்டான். இது ஒரு தந்திரம். சபையை கலகலத்துச் செய்யும் முயற்சி. கிருஷ்ணருடைய பேச்சை நிறுத்துவதற்குண்டான திட்டம். இத்தனை பேச்சுக்குப் பிறகும் தன் பக்கம் யார் என்று தெரிந்து கொள்ளும் திட்டம். அவன் சபையை அவமரியாதை செய்து அங்கிருந்து நீங்க அவன் சகோதரர்களும், அவன் மந்திரிகளும் , அவனுக்கு உதவுவதற்காக வந்திருந்த மன்னர்களும் திரண்டு எழுந்து அவனோடு வெளியேறினார்கள்.

இப்பொழுது சபையினுடைய நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டிய நிலைக்கு வந்து விட்டது. இது குரு குலத்தின் தலையெழுத்து .  ஸ்ரீகிருஷ்ணர் சீறினார்.  ‘‘இங்கு இந்த முட்டாள் துரியோதனனை கட்டுப்படுத்துவார் எவருமில்லை. மீதம் இருக்கின்ற உங்கள் மீது நம்பிக்கை வைத்து இன்னும் ஒரு விஷயம் சொல்கிறேன் கேளுங்கள். முதிய போஜராஜனுடைய மகன் கம்சன் தன் தந்தையை சிறைபடுத்தி அந்த ராஜ்ஜியத்தை தானே எடுத்துக் கொண்டான். கம்சனுடைய சகோதரர்கள் அனைவரும் அவனை விட்டு விலகி விட்டார்கள். நான் உள்ளே புகுந்து கம்சனை வலிய போருக்கு அழைத்து முஷ்டிகளால் அடித்துக் கொன்றேன். நாங்கள் அனைவரும் சேர்ந்து உக்கரசேனனை மறுபடியும் மன்னனாக்கினோம். ஒரு தேசத்தின் நன்மைக்காக கம்சன் ஒருவனை வ்ருஷினி குல யாதவர்கள் தியாகம் செய்தார்கள்.

இப்போது ஒன்று சேர்ந்து படிப்படியாக மேன்மை பெறுகிறார்கள்.முன்பொரு சமயம் தேவாசுர போர் நடந்தது. அதனால் மிகப் பெரிய கலகம் உண்டாகும் என்றுத் தோன்றியது. இதை அறிந்த பிரம்மா அசுரர்களுக்கு தோல்வி உண்டாகும் என்று சொன்னார். பிரம்மா தர்மராஜரிடம் இந்த அசுரர்களை காட்டி வருணனிடம் ஒப்படைத்து விடு. அப்பொழுதுதான் கலகம் உண்டாகாது இருக்கும் என்று சொன்னார். மிகப் பெரிய அழிவை நிறுத்த இதுவே வழி என்று காட்டினார். வருணன் அவ்விதமே அவர்களை கட்டி கடலின் ஒரு எல்லைக்குள் வைத்து விட்டார்.

நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து துரியோதனன், கர்ணன், சகுனி மற்றும் துச்சாதனனை கைது செய்து பாண்டவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். ஒரு குலத்தின் நன்மைக்காக ஒரு புருஷனையும், ஒரு கிராமத்தின் நன்மைக்காக ஒரு குலத்தையும், ஒரு ஜனபதத்தின் நன்மைக்காக ஒரு கிராமத்தையும் உயிரினங்களின் நன்மைக்காக பூமண்டலம் முழுவதையும் தியாகம் செய்யலாம். இன்று இவ்வாறு செய்யவில்லையெனில் சத்திரிய வம்சமே பரதகண்டத்தில் அழிந்தொழிந்து விடும்.”

அந்தகனம் திருதராஷ்டிரன் என்ன செய்வதென்று தெரியாமல் திணறினான். விதுரர் இருக்கும் திசை நோக்கித் திரும்பினான். ‘‘காந்தாரியை உடனடியாக இங்கு வரவழை. பெற்றதாயே பிள்ளையை சமாதானம் செய்யட்டும். அப்போதாவது அவன் தலையில் சமாதானம் ஏறுகிறதா என்று பார்ப்போம். காந்தாரி வந்த பிறகு விதுரர் துரியோதனனை சமாதானப்படுத்தி அழைத்து வந்தார். துரியோதனன் கோபத்தால் நிலைகொள்ளாமலேயே இருந்தான். காந்தாரி அவள் பங்குக்கு மகனிடம் பேசத் துவங்கினாள்.


‘‘காமமும், கோபமும்தான் மனிதனை நிம்மதியிலிருந்து வெக தூரம் அழைத்துப் போகிறது. இந்த இரண்டையும் வென்று விட்டால் அந்த மன்னன் பெரும் புகழோடு வாழ்கிறான். இப்படிப்பட்டவனின் அதிகாரமே இந்த உலகில் விரும்பத்தக்கது. பிடிவாதம் உள்ள குதிரை தன் மீது சவாரி செய்யும் எஜமானனை மண்ணில் சரித்து கால்களால் ஏற்றி கொன்று விடுகிறது. புலன்களால் வசப்படுத்தாத மனிதனுக்கு அழிவு புலன்களாலேயே ஏற்படுகிறது. ஒரு அரசன் மனதை வெல்லாமல் மந்திரிகளை வெல்ல முடியாது. மந்திரிகளை வெல்லாமல் பகைவர்களை வெல்ல முடியாது. உண்மையில் உனக்குப் பகை உன் மனதே. வேறு யாருமில்லை. மனதை வெல்ல கற்றுக் கொள்.


 சாந்தனுவின் மகனான பீஷ்மரும், மகாரதியான துரோணரும் சொல்வது சத்தியம். அர்ஜுனனும்,ஸ்ரீகிருஷ்ணனும் வெல்ல முடியாதவர்கள். இவர்களோடு போர் செய்வதில் நன்மை வராது. நீ உன்னுடைய ராஜ்ஜியத்தை அனுபவிக்க விரும்பினால் பாண்டவர்களுக்குண்டான பாகத்தை கொடுத்து விடு. ஏற்கனவே தவறு செய்து விட்டாய். பதிமூன்று வருடங்கள் பெருத்த அபகாரம் செய்து விட்டாய். உன் சமாதானத்தின் மூலம் அதற்கு பிராயச்சித்தம் செய்.

பாண்டவர்களின் செல்வத்தை உன்னால் அபகரிக்க முடியாது. உன் சகோதரர்களோ, சூர்ய புத்திரன் கர்ணனோ அவ்விதம் செய்வதற்கு யோக்கியதையானவர்கள் அல்ல. பாண்டவர்களை பகைத்துக் கொண்டு நீ செய்யும் போரினால் இந்தப் புவி அழிந்து விடும். துரியோதனா, பேராசையால் வெற்றி கொள்ள முடியாது. நீ பாண்டவர்களோடு சமாதானம் செய்து கொள்” என்று சொன்னாள்.

‘‘இவ்வளவுதானா, இதற்குத்தான் அழைத்தீர்களா” என்று துரியோதனன் கோபப்பட்டு மறுபடியும் மேல் துணி உதறி மறுபடியும் சபையிலிருந்து சகோதரர்கள், நண்பர்கள் சூழ வெளியேறினான். என்ன செய்வது இப்போது என்று சகுனியிடம் துரியோதனன் அவசரமாகக் கேட்டான். அவருக்கு நிலைமையின் முழு நிலைமையும் பிடிபடவில்லை. சகுனி சபையின் நிலையை நன்கு அறிந்தவர் போல பேசத் துவங்கினார்.

‘‘நாம் இல்லாத போது இந்தச் சபையில் ஸ்ரீகிருஷ்ணர் பேசியதை அறிந்தாயா. யாரும் அதை உனக்குச் சொல்லவில்லையா. நம் நால்வரையும் கைது செய்து பாண்டவர்களிடம் ஒப்படைக்குமாறு ஸ்ரீகிருஷ்ணர் தூண்டுகிறார்.ஸ்ரீகிருஷ்ணர் பீஷ்மருடனும், திருதராஷ்டிரனுடனும் சேர்ந்து கொண்டு நம்மை கைது செய்வதற்கு முன்பு ரிஷிகேசனை கைது செய்து விட்டால் என்ன. ஸ்ரீகிருஷ்ணன் கைது செய்யப்பட்டான் என்றுத் தெரிந்ததும் பாண்டவர்கள் பல் பிடுங்கப்பட்ட பாம்பாக ஆவார்கள். உற்சாகம் இழப்பார்கள் .”

மனிதர் மனதை எளிதில் படிக்கும் சாத்விகி ஸ்ரீகிருஷ்ணனுக்கு பாதுகாப்பாக இருந்தான். கௌரவர்களை மிக உன்னிப்பாக பார்த்து வந்தான். அவர்கள் முகத்தை கண்களை அங்க சேஷ்டைகளை கூர்ந்து நோக்கினான்.அவர்கள் மனதில் இருப்பதை படித்துக் கொண்டான். கிருஷ்ணரிடமிருந்து தள்ளி சபையின் விளிம்பிலிருந்து கௌரவர்கள் வெளியேறுவதை கவனித்த அவன் அசையாமல் அவர்கள் உள்ளத்தை ஊடுருவினான். அவர்கள் திட்டத்தை புரிந்து கொண்டான்.

ஸ்ரீகிருஷ்ணருக்கு அருகே போய் மற்றவர்களுக்கு கேட்க துரியோதனாதிகளின் எண்ணத்தைச் சொன்னான். ஸ்ரீகிருஷ்ணர் வாய் விட்டுச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் கோபம் இருந்தது. ‘‘சிறு புத்தியுடைய இந்த துரியோதனன் எரியும் தீயை துணியால் கட்ட விரும்புவது போலஸ்ரீகிருஷ்ணரை கைது செய்ய விரும்புகின்றான். இது அவன் குலத்திற்கு வந்த கேடு. ஸ்ரீகிருஷ்ணர் பாரிஜாத மலரை அபகரித்தபோது இந்திரன் அவரோடு சண்டையிட்டான். ஆனால் ஜெயிக்க முடியவில்லை. நிர்மோசன் என்ற இடத்தில் முரண் என்னும் தைத்யன் ஆறாயிரம் சக்தியுடைய பாசத்தை விரித்திருந்தான். இந்த வாசுதேவ கிருஷ்ணன் அதற்கு அருகே சென்று அவற்றை அறுத்து விட்டார்.

பாபிகளுக்கு தண்டனை அளிக்கும் திறமை இருந்தும் மன்னிப்பு அளித்துக் கொண்டிருக்கிறார்” என்பதாய் விதுரருடைய குரல் அந்தச் சபையில் பெரிதாய் ஒலித்தது. விதுரர் ஆத்திரத்தால் நடுங்கிக் கொண்டிருந்தார். ‘‘திருதராஷ்டிரா, உன் பிள்ளைகளை மறுபடியும் கூப்பிடு. என்னை கைது செய்யச் சொல். இவர்கள் என்னை பிடிக்கிறார்களா, அல்லது நான் அவர்களை கைது செய்கிறேனா என்று சபைக்குத் தெரிந்துவிடும். என் கோபத்தால் அவர்களை இங்கேயே சாம்பலாக்கி விடுவேன். ஆனால் அது தர்மமல்ல. இவர்களை கட்டி இழுத்துப்போய் பாண்டவர்களிடம் ஒப்படைக்க எனக்கு எவ்வளவு நேரமாகும். அதுவும் தர்மமல்ல.”

 திருதராஷ்டிரனுக்கு புரிந்து விட்டது. ஸ்ரீகிருஷ்ணனுடைய கோபமும், தன் மகனுடைய பலவீனமும் விரைவாய் அவர் புத்திக்கு எட்டி விட்டது. கிருஷ்ணனுடைய கோபத்திலிருந்து தன் மகனை அப்போதும் அவர் காப்பாற்ற விரும்பினார். யாரும் தண்டித்து விடக்கூடாது என்று பதைபதைத்தார். விதுரா, மறுபடியும் துரியோதனனை இங்கு அழைத்து வா என்று கூவினார்.

(தொடரும்)

பாலகுமாரன்