வெற்றி தரும் சூர்யநாராயணன்
கணிக்க முடியாத யுகங்கள்
நிலைத்து மங்காத ஒளியுலகை
கருணையுடன் வழிநடத்தும்
இளம்செம்பரிதி போற்றி!
கடல் துயிலும் நாராயணன்
கதிரவனாய் வானில் நடந்து
மலைமுகடு கடந்து கடமையாற்றி
கடல்மடி சேரும் மாலைப்பொழுது!
கால சுழற்சிக்கு வேரானவன்
கடவுள் ஒளிக்கு நேரானவன்

கடமையில் சீரானவன்

தூய மனத்தினன் - தனை
சேரும் பொருளை
தூய்மை படுத்துவன்!
செளர  நெறியில் உனை
வணங்குமென்னை  பொன்னாய்
உருக்கி வடிவாய் உறுப்புகள்
படைத்து உயிர் தந்து
உள்ளொளி பெருக்கி
புதியவிதி எழுதி
உன்னைப்போல் தன்னலமில்லா
நாயகனாய்; நேசக்கரம்
கொடுத்து காக்கும் சேவகனாய்!
சான்றோர் போற்றும் சத்தியனாய்!
பாமரர் வணங்கும் பரந்தாமனாய்!
பகையழிக்கும் வீரனாய்!
வெற்றிகள் பல குவிப்பாய்!
நாடு செழிக்க மக்கள் மனதில்
நற்குணம் விதைத்திடுவாய்!
உத்தமர் மனம்நோகில்
தணல் தகிக்கு முனையே
அவர் கோபம் சுட்டெரிக்கும்
ஆதிசங்கரன் தாயின்
சிதைக்கு தீமூட்டினாய்!
கண்ணகி அழைத்தவுடன்
மதுரை மாநகர் எரித்தாய்!
சிவப்பு பழமுனை அனுமன்
பறிக்க முயன்றபோது
குருவாய் நின்று போதித்தாய்!
ஒருமுகம் வெப்பம் மறுமுகம் குளுமை
இருமுகத்தால் ஏழுலகம்
ஆளும் உனை எவரும்
பகுத்தறிய முடியாத புதிராய்
ஒப்பற்ற பொருளாய் உயர்ந்து நிற்கிறாய்!
மழையும் உணவும் படைத்து
உயிர்கள் பூமியில் தழைக்க
ஒளிச்சாரம் தரும் ஆதவனே
அகத்தியன் சொல்லால்
அழைக்கிறோம் அருள்புரிக!
தரணியில் தர்மம் பெருக!

விஷ்ணுதாசன்