அந்தர்கத பராசக்தி



அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் - 20

 வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்
    சிந்திப்பவர், நற்றிசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர், அழியாப்பர மானந்தர், பாரில் உன்னைச்
    சந்திப்பவர்க்கு எளிதாம் - எம்பிராட்டி! நின் தண்ணளியே
- பாடல் - 14

பொதுவாக சாத்திரங்கள் இறைவனுக்கு இரண்டுவிதமான தன்மைகள் இருப்பதைக் குறிப்பிடுகின்றன.
1. சௌலப்யம் (எளிமையாக அடையத்தக்க வடிவம்)
2. காம்பீர்யம் (அடைதற்கு அறிய வழி) என்று அபிராமி பட்டர்
உமையம்மையின் முரண்பட்ட இருதன்மைகளையும் இந்த ஒரே பாடலில் குறிப்பிட்டுள்ளார்.அம்மையின் காம்பீர்ய வடிவத்தை முதலில் சொல்லி, உண்மைத் தன்மையையும், உயர்வையும் விளக்குகிறார். ‘‘வந்திப்பவர்... பரமானந்தர்’’ எளிமையாக அடையத்தக்க அவளின் கருணையை, மாண்பை, பாரில் ‘‘உன்னைச்... நின் தண்ணளியே’’ என்ற வரிகளால் சூட்டுகிறார்.வணங்குபவர்களைக் கொண்டே வணங்கப்படுகிற தெய்வத்தின் உயர்வை விளக்கியிருப்பது அபிராமி பட்டருக்கேயுரிய தனிச்சிறப்பு. ஒரு தேவதையின் தன்மைகளை மனிதனுக்குப் புரிய வைப்பதற்காக நான்கு வகையாகப் பிரித்து விளக்குகிறது சாத்திரம். புலன்களுக்குப் புலப்படுகிற உண்மைகளை திருஉருவ அமைப்புகளாகவும், உள்ளத்தில் கருணை, வீரம் போன்ற உணர்வுகளாகவும், அறிவிற்கு சொல்லின் வழியாக வெளிப்படும் பொருளாகவும், ஆன்மாவிற்கு ஒரு சில இடையீடற்ற தொடர் நிலையிலான பயிற்சியின் வழி தோன்றுகிற அனுபவமாகவும் சாத்தியப்படுத்தி காட்டுகிறது அந்தாதி.

‘‘ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை’’ - புலன்களுக்கு புலப்பட
ஆண்டு கொண்ட நேசத்தை என் சொல்லுவேன் - உணர்வுகள்
சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் அறிவிற்கு
தோத்திரம் செய்து தொழுது அனுபவப் பயிற்சி’’

அபிராமி பட்டர் இப்பாடலின் வழியே இறையருளாற்றலையும், கருணையையும் எவ்வாறு வியந்து போற்றுகின்றார் என்பதை இனி காண்போம்.‘‘வந்திப்பவர் உன்னை’’இறைவியை அடைவதற்கு வெவ்வேறு வழிகள் இருக்கின்றன. அவை பக்தி மார்க்கம் (அன்பின் வழி) ‘‘உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே’’ - 93 அன்பை முதன்மைபடுத்துகின்றார்.சாத்திர மார்க்கம் (அரத்தின் வழி) - ‘‘சரணம் அரண் நமக்கே’’ - 50 யோக மார்க்கம் (பயிற்சியின் வழி) - ‘‘சிந்தையுள்ளே மன்னியது உன் திருமந்திரம்’’ - 6ஞான மார்க்கம் (அறத்தின் வழி) - ‘‘ஒன்றே பல உருவே அருவே’’ - 30

இந்த வழிகளை அவர் குறிப்பிடவில்லை ‘‘வந்திப்பவர் உன்னை’’ என்ற பதத்தால் இறைவியை பூஜனை வழியில் சென்றடைந்தவர்களையே குறிப்பிடுகின்றார்.ஆலய வழிபாட்டை பொறுத்தவரை வந்திப்பவர் என்பவர் ஆலய அர்ச்சகரேயாவார். வணங்குபவர் என்பவர் கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்களாவர். அதை பிரித்து சொல்வதற்காகவே ‘‘வந்திப்பவர்’’ என்ற சொல்லை பயன்படுத்துகிறார்.

தோத்திரம் செய்து தொழுது - 67
விரும்பித் தொழும் அடியார் - 94
இதன் வழி ‘‘வந்திப்பவர்’’ என்பது பூஜை செய்பவரான அர்ச்சகரையே குறிக்கும். அர்ச்சனை என்பது பூஜனையே, பொதுவில் இறைவியை வணங்குகிற பக்தர்களை அவர் சூட்டவில்லை. சிறப்பாக அவளால் அருளப்பட்டவர்களையே இங்கு குறிப்பிடுகின்றார்.வேதமானது ‘‘த்வம்’’ என்ற பதத்தால் இறைதன்மையுடைய முன்னிலை பொருளை குறிக்கிறது.பூஜனை வழியென்பது பழம், இலை, நீர், மலர் இது போன்ற சில பொருட்களைக் கொண்டு குறிப்பிட்ட ஒலிகளை மந்திரம் என்பதாக கூறி, உடலாலும் உள்ளத்தாலும் இறைவனின் திரு உருவம் குறித்து செய்யப்படுகின்ற ஒரு சில செயலாகும்.

பூஜனை செய்பவரையே ‘‘வந்திப்பவர்’’ என்று கூறுகின்றார். பூஜை செய்யும் விதத்தாலும், செய்யப்படுபவராலும், பூஜிக்கப்படுகின்ற தேவதையாலும், பயனும் முறையும் மூன்று வகையாக மாறுபடும்.அசுர வழிபாடு - வாமாசாரம், தேவ வழிபாடு - சவ்யாசாரம், மானுட வழிபாடு - வாமமும் சவ்யமும் கலந்த சவ்யாப சவ்யம் என பெயர் பெறும்.
1. சவ்யாசாரம் என்பது உயிர்களை வதைக்காது சைவமான பொருட்களைக் கொண்டு செய்யப்படுவதாகும்.(உ.தா) சிவன் கோயிலில் எழுந்தருளியிருக்கிற உமையம்மைக்கு செய்யப்படுகிற பூஜனை.
2. வாமா சாரம் என்பது மது, மாமிசம் போன்ற உயிர்களை துன்பப்படுத்தி செய்கிற பூஜை. இது பேச்சியம்மன், கருப்பு சாமி போன்ற சாமிகளுக்கு செய்யப்படும் படையல் முறை.
3. சவ்யாப சவ்யம் என்பது ஐயனார், மாரியம்மன் கோயில்களில் மாரியம்மன், ஐயனாருக்கு சைவப் படையலும், அதன் முன்னடியானாக--- திகழ்கிற வீரன் காத்தவராயன் போன்ற சாமிக்கு அசைவ படையலும் செய்யப்படும் படையல் முறையாகும்.இந்த மூன்று வித பூஜை முறைகளை பின்பற்றி பூஜனை செய்பவர்களை தான் ‘‘வந்திப்பவர்’’ என்று குறிப்பிடுகின்றார்.அர்ச்சனை செய்பவர்களையும் ‘‘வந்திப்பவர்’’ என்றே குறிப்பிடுகின்றார்.மந்திரங்களை கொண்டு குறிப்பிட்ட ஒழுங்கு முறையில், குறிப்பிட்ட மனோ பாவத்தில், குறிப்பிட்ட செயலை தேவதையின் திரு உருவத்தை குறித்து செய்யப்படுவதை பூஜை என்கிறது ஆகமம்.

‘‘மந்த்ர, தந்ர, க்ரியா, பாவனா, அர்ச்சனா’’இந்த மூன்று வழிபாட்டு முறைகளாலும் வழிபட தக்கவள் உமையம்மை.
வழிபடுவதால் முன் நிற்பவள் உமையம்மை இதையே ‘‘வந்திப்பவர் உன்னை’’ என்கிறார்.வானவர், தானவர், ஆனவர்கள்வானவர்கள் என்பவர்கள் விண்ணை இருப்பிடமாக கொண்டவர்கள். இந்திரன் முதலான முப்பத்தி முக்கோடி தேவர்கள் எனப்படுவர். தானவர்கள் என்பவர்கள் அசுரர்கள் எனப்படுவர். இவர்கள் தேவர்களுக்கு விரோதியாவர்.
அமுதம் உண்ணாமையால் இறப்பை தழுவியவர்கள்.கசிபனுக்குத் தனுஸியிடத்துப் பிறந்த புத்திரர் இந்த சந்ததியில் பெயர் படைத்தவர். இவர்கள் அறுபத்தி ஆறு கோடி என்பது செவி வழி தகவல்.இவர்கள் அந்தரிக்‌க்ஷம் என்று சொல்லக்கூடிய இடைப்பட்ட பகுதியை இடமாக கொண்டவர்.ஆனவர்கள் என்பவர்கள் ஞானம் வந்த மானுடர்கள் ஆவர். இவர்கள் பூமியை இடமாக கொண்டவர்கள். இந்த மூன்று உலகத்தை சேர்ந்தவர்களும் உமையம்மையை பூஜை வழியில் வழிபாடு செய்து உய்தவர்கள். இவர்கள் தங்களுக்குள்ளே முரண்பாடுகள் பல பெற்றிருந்தாலும் இறைவியை வணங்குவதில் ஒரே நோக்குடையவர்களாய் திகழ்ந்தார்கள். என்றாலும் விண்ணவர்கள் இறைவியை சவ்யாச்சார முறைபடி பூஜித்து வணங்கினர்.

அசுரர்கள் இறைவியை வாமாசார முறைப்படி பூஜித்து வணங்கினர்.ஆனவர்கள் ஆகிய மானுடர்கள் சவ்யாப சவ்யம் என்ற முறையில் பூஜித்து இறைவியை வணங்கினர்.இதையே அபிராமி பட்டர்‘‘வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர் சன்டி’’ - 77 என்று வாமாசாரத்தையும், நாயகி, நான்முகி நாராயணி - 50 என்று சவ்யா சாரத்தையும்,‘‘பலி கவர் தெய்வம்’’ - 64 என்று சவ்யாப சவ்யத்தையும், இந்த மூன்று முறையிலும் பூஜித்ததை தெளிவாக வேற்றுமைபடுத்தி கூறியுள்ளார். இதில் வாமாசாரம் என்பது விருப்பத்தை அடைவதற்கும், சவ்யாசாரம் என்பது மோக்ஷத்தை அடைவதற்கும், சவ்யாப சவ்யம் என்பது ஞானத்தை அடைவதற்கும் உரிய செம்மையான முறைகளாக சாக்த ஆகமங்கள் பரிந்துரை செய்கின்றது.

திருக்கடையூரை பொறுத்தவரை தேவர்களான அஸ்வினி தேவர்கள், அசுர வம்சத்தை சார்ந்த ஏம கிங்கரணர், மானுடர்களாகிய கலிய நாயனார் முதலானோரும், வணங்கிய தலபுராண குறிப்பை இப்பாடல் வரிகளால் அறிவுறுத்துகின்றார்.அஸ்வினி தேவர்களை பிராகாரத்திலும், எம கிங்கரணர், காலசம்ஹார மூர்த்தியின் திருவடியின் கீழும், கலயநாயனாரை அறுபத்திமூவர் திருஉருவத்திலும் காணலாம். இவர்கள் அனைவருமே பூஜனை செய்ததன் மூலம் இறையருளை பெற்றவர்கள்.

வந்தித்தல் என்பது பூஜை செய்வதை குறிப்பிடுகின்றது. பூஜனை என்பது இறைவியை அடைவிக்கும் சாதனங்கள் பலவற்றுள்ளும் முதன்மையாகத் திகழ்வதாலும், அனைவருக்கும் உரிய படிநிலை பயிற்சியாலும், இறைவனால் மிகவும் விரும்பி ஏற்கப்படுவதாலும் பூஜையை முதலில் வைத்து தியானம் முதலான மார்க்கத்தை பின்னே வைத்து ஓதினார். பூஜனை என்பது பக்குவம் அல்லாதவர்க்கும் பக்குவத்தை தரவல்ல மாண்புடையதானதால் ‘‘வந்திப்பவர்’’ என்ற வார்த்தையை முதலில் வைத்து ஓதினார். எல்லாவற்றையும் விட மேலாக உண்மை ஞானிகள்தான் அனுபவத்தில் கண்ட உண்மையையும், நன்மையையும் மட்டுமே விளக்கி கூறுவர். பரிசாரகராக பணி புரிந்ததனால் அனைத்து தேவதைகளுக்கும் பூஜை செய்த பலனை பெற்றார். அதை பரம்பரையாக பின்பற்றி வந்ததனால் கிடைத்த அறிவாலும், நீண்டகால அனுபவத்தாலும், இறை அருட்செறிவாலும் ‘‘வந்திப்பவர்’’  என்ற வார்த்தையால் கூறினார்.

தலபுராணத்தின் வழியாகவும் உமையம்மையே பூஜித்து பேரு பெற்றதையும் கொண்டு இதை மேலும் உறுதி செய்யலாம்.‘சிந்திப்பவர் நற்றிசைமுகர் நாரணர்’’சிந்தனை என்ற சொல்லானது நாம் விரும்புகிற இறைவனை குறித்த தொடர்ந்த தேடலினால் அடையும் அனுபவத்தை விளக்கும் ஆய்வாகும். அந்த வகையில் இறைவனைப் பற்றிய ஞான நூல்களை கேட்பதும், கேட்டவற்றை நூல்களின் அடிப்படையில் நோக்கி சிந்தித்தலுமாம். இதை ஞான யாகம் என்பர்.
இந்த ஞான வேள்வியை செய்பவர் வேள்வியின் நாயகனான பிரம்மா, வேத நாயகனான விஷ்ணுவுமாவார்.அந்த வகையில் ‘‘நற்றிசைமுகர்’’ என்று பிரம்மாவை பாடல் குறிக்கிறது. திசைக்கு ஒரு வேதமாக ரிக், யஜுர், சாம, அதர்வண என்ற மறையை வெளிப்படுத்திய பிரம்மன், அவருள் மந்திரங்களின் உட்பொருளான உமையம்மையை தியானிக்கிறார். அதையே இப்பாடலில் ‘‘சிந்திப்பவர்’’ என்று குறிப்பிடுகின்றார்.

வேதத்தை கேட்டதோடு மட்டுமல்லாமல் அதன் உண்மைப் பொருளை சிந்தித்து வியாசர் பிரம்ம சூத்திரம் இயற்றினார். வியாசராகிய விஷ்ணுவால் வேத விழுப்பொருளாக சிந்திக்கப்பட்டவள். இதையே ‘‘வியாசாய விஷ்ணு ரூபாய’’ என்ற வரிகளால் உணரலாம்.சன்யாச தர்மத்தில் வேதத்தின் ஞான காண்டமான வேதாந்தத்தைப் பற்றி சிந்திப்பவர் உலகை காக்கும் விஷ்ணுவாகவே கருதப்படுகிறார். ‘‘குருர் விஷ்ணு’’ என்ற வரிகளால் உணரலாம்.அத்வைத சித்தாந்தம், துவைத சித்தாந்தம், விசிஷ்டாத்வைத சித்தாந்தம், சைவ சித்தாந்தம் என்ற சாத்திரங்களை சிந்தித்து உருவாக்கிய குருமார்களை பிரம்மா என்றே கருதுவர். இதை ‘‘குரு பிரம்மா’’ என்ற வார்த்தையால் உணரலாம். அப்படிப்பட்ட அந்த குருமார்களால் இலக்குமியாகவும், சரஸ்வதியாகவும், பார்வதியாகவும் சிந்திக்கப்பட்டவள் உமையம்மையே.

மறையின் பரிமளமே என்று பட்டர் குறிப்பிடுவதிலிருந்து வேதத்தின் பொருளாக விளங்குகின்றவள் உமையம்மை என்பதை அறியலாம். ‘‘சுருதிகளின் பனையும் கொழுந்தும் பதி கொண்ட வேரும்’’ - 2 என்ற வரிகளாலும், வேதம், வேதத்தின் சாம, வேதத்தில் காணப்படுகிற மெய்ப்பொருளாகிற பதி உண்மை, வேதத்தின் அங்கமான சிக்‌க்ஷை வியாகரணம், நிருக்தம், சந்தஸ் முதலான அறுவகை சாத்திரமும் அவளே, ஆதலால் அதை பற்றி சிந்திப்பவர்கள் அவளையே சிந்திப்பவர்களாவார்கள். அந்த வேத சப்தத்திற்கு பிரம்மா என்று ஒரு பொருளுண்டு. அங்கத்திற்கு பிரம்மாங்கம் என்று பொருள் கொள்ளப்படுவதால், அந்த சாத்திரங்களையும் உமையம்மையாகவே கருதுவர். வேத, விதி, பிரம்மா என்ற சொற்கள் பிரம்மாவை குறிப்பதனால், வேதம் வழிபட்ட மூர்த்தியையும் ‘‘நாற்றிசைமுகர்’’ என்ற சொல்லால் குறிப்பிடலாம். வேதங்கள் புருஷ வடிவம் கொண்டு பூஜித்ததாக புள்ளிருக்கு வேளூர், திருமறைக்காடு போன்ற தலப்புராணங்கள் குறிப்பிடுகின்றது.

வேதத்திற்கான உருவத்தை சிற்ப சாத்திரமானது நான்கு புருஷ வடிவாக விளக்கி கூறியுள்ளது.பிரம்மாவானவன் நான்கு விதமாவார். அந்த வகையில் அந்தனனும் ஒரு பிரம்மாவாவார். பிரம்மா என்ற சப்தத்தால் குறிப்பிடப்படுவதால் அவர்களும் உமையம்மையை வழிபடுவதாக--- குறிப்பிடுகின்றார். பிரம்ம வித்தையை அறிந்தவன் பிரம்மாவாவான். அவனும் உமையம்மையை வழிபடுகின்றார்.‘‘சிந்தையுள்ளே பந்திப்பவர்’’‘‘பந்திப்பவர்’’ என்பதற்கு கட்டுவது என்று பொருள். யோக சாத்திரமானது அசைந்து கொண்டே இருக்கும் உடலை அசையாது ஒரு குறிப்பிட்ட நிலையில் (பந்திப்பது) பயிற்சியால் நிறுத்துவது ஆசனம் எனப்படுகிறது.மனதின் எண்ண ஓட்டங்களை ஒருநிலைப்படுத்தி (ஜபத்தால் பிற எண்ணங்களை எழமால் செய்வது) பந்திப்பது (நிறுத்துவது) மந்திரயோகம் என்று பெயர்.மனதிற்குள்ளே நிலவும் குழப்பத்தை எழவிடாமல் முடிந்த முடிவாய் தெளிந்து ஐயம் (சந்தேகம்) திரிபு (மாற்றம்) அற (நீங்க) மெய்ஞான தன்மையில் ஒன்றியிருப்பது அறிவை பந்திப்பதாகும்.

இதை காளிதாசன் ‘‘ஞானே மௌனம்’’ ‘‘க்‌ஷமா சக்தௌ’’ என்ற வரியால் அறிவிருந்தும் மௌனமாகயிருப்பதும், ஆற்றலிருந்தும் பொறுமையாயிருப்பது என்று குறிப்பிடுவதிலிருந்து மன அமைதியடைவது என்பது ஒரு விதமான பந்தனமேயாகும் என்பதை உணர முடிகிறது.பிராணாயாமம் என்ற பயிற்சியால் மூச்சு காற்றை வெளியிடாமல் உள்ளேயிழுத்து ஓரிடத்திலே நிறுத்துவது இதை பிராண பந்தனம் என்று கூறுவார்கள்.இத்தகைய பந்தனங்களை செய்கின்ற போது உடல் உள்ளிருக்கிற ஆன்மாவானது ஆணவ மலம் நீங்கி (அறியாமை நீங்கி) அனைத்தின் உண்மை இயல்பை உணரும்போது ஓர் ஆரவாரம் அல்லது அசைவு ஏற்படும். அந்த அசைவையும் நிறுத்துவதற்கு ஆனந்த பந்தனம் என்று பெயர். இந்த ஐந்து பந்தனத்தையும் ஒருங்கே செய்தவர் தட்சிணாமூர்த்தியாவார்.

அவர் யோகாசனத்தில் அமர்ந்திருப்பதால் ‘சரீர பந்தனமும்’, அவர் நெஞ்சிற்கு நேராக சின்முத்திரை காட்டியிருப்பது ‘ஞானபந்தனத்தையும்’, அவர் நெஞ்சிற்கு நேராக ஒரு பட்டை அணிவித்திருப்பார்கள் அது ‘பிராண பந்தணத்தையும்’, முயலகன் மேல் காலை ஊன்றியிருப்பது ‘மனோபந்தனத்தையும்’, உயிர் ஆணவமலத்தை உதறி காட்டிய ஓலைச்சுவடியை கையில் வைத்திருப்பது ‘ஆத்ம பந்தனத்தையும்’ குறிக்கும். மூக்கு நுனியில் பார்வையை நிலைக்க செய்து உமையம்மையை கருதி தியானிப்பதால் அவரே ‘‘அழியா பரமானந்தர்’’ என்றுஅழைக்கப்படுகின்றார். உமையம்மையின் அரூப வடிவத்தை தியானித்து ஆனந்த நிலையில் தனக்குள் அடக்கிக் கொள்கிறார். இதையே ‘‘அந்தர்கத பராசக்தி’’ என்கிறது தியானம்.

‘‘அழியா பரமானந்தர்’’மஹாசம்ஹார காரணர் என்று சிவபெருமானை சைவ சிந்தாந்தம் கூறுகிறது. அனைத்து உலகையும் அழித்த பிறகும், தன்னை அழிப்பார் யாருமின்றி தான் அழியாதிருப்பதனால் ‘‘அழியா’’ என்கின்ற வார்த்தையால் சிவபெருமானை சூட்டுகிறார்.திருக்கடையூரை பொறுத்தவரை உலகத்தை அழித்தும்மயானமாகியிருந்தும், தான் அழியாது அங்கு வாசம் செய்வதால் மயான நாதரையே அழியா என்கின்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார். ஆன்மாக்கள் உடலைப் பெற்று பிறப்பு, பிணி, இளமை, மூப்பு இறுதியில் அழிகின்ற தன்மையைக் கொண்டது. மரணம் அடைகின்ற இயல்பை அமுதம் உண்டதால் அழியாமல் நிலைத்து காக்கின்ற (அமிர்தம் - மரணமற்றது) அமிர்தகடேசர் ஆன்மாக்களுக்கு தன் உணர்வு அழியாவண்ணம் அருள்புரிவதால் ‘‘அழியா’’ என்கின்ற வார்த்தையை பயன்படுத்துகின்றார்.

மாயா முனிவரும் - 4 (அழியா)அமுதீசர் - அபிராமி அம்மை பதிகம் (இறவா)‘‘பரமானந்தர்’’ ஆனந்தம் என்பதற்கு ஏகனாய் (ஒருவனாய்) நின்ற பொருளாக அறியப்பட வேண்டிய தன்மையுடைய என்பது பொருள். பரம் என்பதற்கு ஆன்மாவிற்கு உள்ளான, உடலுக்கு உள்ளான, அகத்து, மேலான என்பது பொருள். பரமானந்தர் என்பதற்கு உடல் உள்ளேயிருக்கிற, உயிருக்கு உள்ளேயிருக்கிற ஒரே பொருளான இன்பமயமான பேரரிவு வடிவமான சிவம் என்பது பொருள். இதையே ‘‘ஆனந்தம் பிரம்மேதி ஜானாதி’’ என்கிறது வேதம். ஆன்மயின்பமானது பிரம்மம் (இறைவனாக) சிவமாக அறியத்தக்க ஒரே பொருளாகும். அறிந்தவர்களால் மட்டும் அனுபவிக்கப்படும் ஒரே பொருளாகும். இதையே பட்டர்‘‘ஆனந்தமாய் என் அறிவாய், வான் அந்தமான வடிவு’’ - 11 என்கிறார்.‘‘அழியா பரமானந்தர்’’ என்ற வார்த்தையால் திருக்கடவூரிலே எழுந்தருளியிருக்கிற உமையம்மையோடு அணைந்த சிவபெருமானையே குறிப்பிடுகின்றார்.ஆனந்தமாக உமையம்மையையும், அதை அனுபவிப்பவராக சிவனையும் (தர்மா தர்மி சொரூபம்) கொடையாளன் என்று யாருமில்லை, கொடை என்பது ஒரு குணமே கொடையாளனுக்கும் கொடை தன்மைக்கும் வேறுபாடில்லை.

(தொடரும்)