கண்ணனிருக்க கவலை ஏன்?மகாபாரதம் 86

‘‘பேரன்புமிக்க பெரியோர்களே, தர்மம் என்றால் என்ன என்பதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள். நீங்கள் அதைப்பற்றி கூறுவதை, நான் பேசுவதை, ஆமோதிப்பதை பிற்பாடு நான் கேட்கத்தான் போகிறேன். ஆயினும் எது தர்மம் என்ற பேச்சை நான் ஆரம்பித்து வைக்கிறேன். நீங்கள் சுகமாக முடிப்பீர்கள் என்று நம்புகிறேன்.’’அந்த அந்தணர் உரத்த குரலில் தெளிவாக சபையில் உள்ள எல்லோருக்கும் கேட்கும் வண்ணம் மூன்று புறமும் சுற்றிப் பார்த்து தன் பேச்சைத் துவக்கினார். பேசுவதற்கு முன்பு திருதராஷ்டிரனிடமும், விதுரரிடமும், பீஷ்மரிடமும் நலம் விசாரித்தார். தன் வணக்கங்களை தெரிவித்துக் கொண்டார். அவரின் வருகையை அந்தச் சபை அங்கீகரித்தது. அவர் பேச்சை கேட்க தயாராக இருந்தது. இது முக்கியமான நிகழ்வு என்று எல்லோருக்கும் தோன்றியது.

‘‘தந்தை வழியாக வந்த ஒரு சொத்தை இரண்டு சகோதரர்கள் பங்கு போட்டுக் கொள்ள வேண்டுமென்பதுதான் தர்மம். அதுதான் நியதி. காலம் காலமாக அப்படித்தான் நடந்து கொண்டு வருகிறது. திருதராஷ்டிரன், பாண்டு என்ற இரண்டு சகோதரர்களுக்கிடையே யுத்தமென்று ஏதும் வரவில்லையெனினும் திருதராஷ்டிரன் பாண்டுவிற்கு ஏனோ சொத்தை பிரித்துக் கொடுக்கவேயில்லை. பஞ்சபாண்டவர்களுக்கு இது உன்னுடைய பங்கு என்று அளிக்கவேயில்லை. இது எதனால் என்பது எனக்குப் புரியவேயில்லை. ஒருவேளை பிற்பாடு செய்து கொள்ளலாம், அதற்குண்டான நேரம் வரவில்லை என்று திருதராஷ்டிரன் நினைத்துக் கொண்டிருக்கலாம் என்று நான் ஆதரவாகவே பேசுகிறேன்.

ஆனால், ஆரம்பத்திலிருந்தே துரியோதனாதிகள் பாண்டவர்களை மரியாதையாக நடத்தவில்லை. மாறாக ஒழிக்க எண்ணம் கொண்டு பல்வேறு விதமான தொந்தரவுகளை அவர்கள் திரும்பத் திரும்ப செய்து கொண்டு வந்தார்கள். என்ன என்பதை நீங்களும் அறிவீர்கள். நானும் அறிவேன். மறுபடியும் அதைச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். அப்படி தங்கள் சகோதரர்களை சிற்றப்பனுக்கு பிறந்த அந்த ஐந்து குழந்தைகளை மிகுந்த வெறுப்பு கொண்டு ஒதுக்கி வைத்தது மட்டுமல்லாது துரியோதனன் சூதாட அழைத்தான். தன்னுடைய பலத்தால் ஒரு சிறிய தேசத்தை ஆண்டு கொண்டிருந்த அவர்களை அழைத்து சூதாடச் சொல்லி வற்புறுத்தி, துரியோதனன் சூதாடாது சகுனியை வைத்து சூதாடி வஞ்சனையாக அவர்களுடைய உரிமைக்கு உண்டான தேசங்களை பெற்றுக் கொண்டார்கள். இது அநீதி என்பதைத் தெரிந்திருந்தும் இந்தச் சபை மௌனமாக இருந்திருக்கிறது.’’

‘‘இது நடந்து முடிந்த கதை நடக்க
வேண்டியதைப் பற்றி பேசு.’’
மிக வேகமாக கர்ணன் அந்த அந்தணரை மடக்கினான். அந்த அந்தணர் அவனை உறுத்துப் பார்த்தார்.
ஒரு பேச்சு முடியும் முன்பு நான் முடித்து விட்டேன் நீங்கள் பேசலாம் என்று ஒருவர் சொல்லும் முன்பு குறுக்கே மறிப்பது, அதட்டிப் பேசுவது அநாகரீகம். சபை நாகரீகம் தெரியாதவன்தான் அப்படி நடந்து கொள்வான். இந்த ராதேயன் என்கிற தேரோட்டி மகனுக்கு இது தெரியவில்லை என்பதாக அவர் அவனையே உறுத்துப் பார்த்தார்.
‘‘சூதுக்கு அழைத்ததும், அதில் தோற்றுப்போனதும், வனவாசம் மேற்கொண்டதும், அஞ்ஞாத வாசம் மேற்கொண்டதும் தெரியும் அல்லவா. அதைச் சொல்லிக் கொண்டிருப்பானேன். இப்போது எதற்காக வந்திருக்கிறீர் அதைச் சொல்லும்.’’

‘‘நீங்கள் விதித்தபடி அந்த இரண்டு விஷயங்களையும் தருமபுத்திரர் செவ்வனே முடித்து விட்டார். பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகியும் இதை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து வனவாசமும், அஞ்ஞாதவாசமும் மிகத் திறமையாக செய்து முடித்து விட்டார். இப்பொழுது உங்களுடைய முறை. அவர் முடித்து விட்டார் என்று தெரிந்தும் அவரை அழைத்து அவருடைய ராஜ்ஜியத்தை நீங்கள் திருப்பிக் கொடுக்கவில்லை. இது அநீதி. உனக்கு என்ன வேண்டும் என்று நீங்கள் கேட்கவில்லை. இது அயோக்கியத்தனம். எனவே, இந்த இரண்டையும் விட்டுவிட்டு அவரை அழைத்து உடனடியாக அவருக்குண்டான பங்கை தரவேண்டும் என்று திருதராஷ்டிரன் முன்னால் கௌரவர்களை கேட்டுக் கொள்கிறேன்.’’

‘‘தராவிட்டால்...’’மறுபடியும் கர்ணன் உரத்தக் குரலில் பேசினான். பீஷ்மர் எழுந்தார்.‘‘வாயை மூடு கர்ணா. ஒரு சபையில் எதைப் பேச வேண்டும், எப்பொழுது பேச வேண்டும் என்று தெரியாதவர்களெல்லாம் ஏன் சபைக்கு வருகிறீர்கள். பேச்சு என்பது நாகரீகம் மிக்கது. ஒரு கிராமத்து சபையில்கூட அந்த ஒழுக்கம் கடைபிடித்து வருகிறது. மிக விரைவாக ஒரு விஷயத்தை முடித்து விடவேண்டும் என்று எண்ணாதே. உன் மனப்போக்கு எப்படி இருக்கிறதோ அப்படி இந்த விஷயம் முடிக்க வேண்டும் என்றும் நினைக்காதே. விஷயத்தை வளர விடு. அதன் போக்கில் விடு. அது என்ன செய்ய வேண்டுமோ செய்யட்டும். இன்னொரு முறை குறுக்கே பேசாதே’’ என்று அதட்டினார்.

‘‘அந்தணரே, அறிவில் சிறந்த ஸ்ரீகிருஷ்ணரும், வலிவுமிக்க அர்ஜுனனும் ஒரு பக்கத்தில் இருக்கிறபொழுது அவர்களை எதிர்கின்ற திறன், தைரியம் இந்த உலகத்தில் எவருக்கு வரும். அப்படி எதிர்ப்பானேயானால் அவனைவிட முட்டாள் யார் இருக்க முடியும்.’’ பீஷ்மர் தொடர்ந்து பேச, அது தன்னைக் குறித்துதான் வருகிறது என்று கர்ணன் புரிந்து கொண்டான். உற்றுஅவரை கவனித்தான். அந்த இடத்தில் உஷ்ண அலை வீசியது.ஆரம்பம் சரியாக இல்லையே என்று திருதராஷ்டிரன் பதைபதைத்தான். மற்ற மன்னர்களும், சேனாதிபதிகளும் கவலைப்பட்டார்கள். ஒரு இயல்பாக நடக்க வேண்டிய விஷயத்தை கர்ணனுடைய பேச்சு குலைத்துப் போடுகிறது. அது வேறு ஒரு திசைக்கு அழைத்துப் போகிறது என்று சகலரும் புரிந்து கொண்டார்கள்.

‘‘தன் தந்தையினுடைய சொத்து முழுவதையும் பெற யுதிஷ்டிரருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது. கொடுத்தே ஆக வேண்டிய சொத்து அது. ஆனால், தருமபுத்திரர் அமைதியை விரும்பி ஒரு அந்தணரை இங்கு தூது அனுப்பியிருக்கிறார். ஒருவேளை இது ஸ்ரீகிருஷ்ணருடைய ஆலோசனையாகவும் இருக்கலாம். வந்த அந்தணர் மிகத் தெளிவாக தன்னுடைய கருத்தை எடுத்து வைத்து விட்டார். மறுத்தால் என்ற கேள்வி வரவேயில்லை. மறுக்கக்கூடாது என்பதுதான் இங்குள்ள நிபந்தனை. மறுப்பது அதர்மம் என்பதுதான் இங்கு அவருடைய பேச்சு.’’
‘‘யுதிஷ்டிரர் சமாதானத்தை விரும்புகின்றாரா. எங்கோ படை திரட்டிக் கொண்டிருப்பதாக கேள்விப்படுகிறேன். பாஞ்சால தேசத்து அரசனிடம் மண்டியிட்டு உதவி கேட்பதாக கேள்விப்படுகிறேன். சமாதானத்தை விரும்புகிறவர் செய்கிற செயலா இது. அப்படி சமாதானத்தை விரும்புகிறவர் நேரிடையாக வந்து துரியோதனனிடம் அடைக்கலம் கோரவேண்டியது தானே. துரியோதனன் அவரை பார்த்துக் கொள்ள மாட்டாரா வாழ்நாள் முழுவதும். தர்மம் தர்மம் என்று சொல்லிக் கொண்டே யுதிஷ்டிரர் வேறு ஏதோ செய்து கொண்டிருக்கிறாரே தவிர இந்தத் தூது அர்த்தமாகப்படவில்லை. எங்களை பேசி பயமுறுத்தினால் அர்ஜுனன் மகாவீரன் என்பதை நிரூபிக்க துடிதுடித்தால் எங்களோடு மோதிய பிறகு யுத்தம் என்பது என்ன என்பதை புரிந்து கொள்வார்கள்.’’கர்ணன் உரத்த குரலில் பேசினான். சபை குழம்பிற்று.

‘‘கர்ணா போதும் நிறுத்து. உன் பேச்சுக்கு ஒன்றும் குறையில்லை. ஒரு சபை இருக்கிறது என்பது தெரிந்தும் துரியோதனன் பக்கம் நீ பேச வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதை எல்லோரும் கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அதிகப்பிரசங்கித்தனமாக அளவுக்கு அதிகமாகப் பேசுகிறாய். விராடதேசத்தில் தனி ஒருவனாக அர்ஜுனன் உங்கள் அத்தனைப் பேரையும் அடித்து துரத்தினான். நான் உட்பட பின்னடையும் படியாக ஆயிற்று. பலமுறை அர்ஜுனனிடம் நீ தோற்றோடி திரும்பியிருக்கிறாய். அதை ஞாபகம் வைத்துக் கொண்டு பேசு. அதிகம் பேசாதே. வீணாகப் பேசினால் அர்ஜுனன் கையால் நீ அடிபட்டு சாக வேண்டியிருக்கும்.’’இந்தப் பேச்சை முழுவதும் கேட்டுக் கொண்டிருந்த திருதராஷ்டிரன் கை உயர்த்தினார். சபை அமைதியாயிற்று.

‘‘அந்த அந்தணர் பேசியதில் தவறில்லை. ஒருவேளை சமாதானத்திற்கு உட்படவில்லை என்றால் பாண்டவர்கள் போருக்கு அழைக்கிறார்கள் என்பதை மறைமுகமாகவும், தெளிவாகவும் சொல்லி விட்டார். முடிவு செய்ய வேண்டியது நம்முடைய கவலை. எனவே, உடனடியாக அந்த அந்தணர் தன் ஊருக்கு திரும்ப வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன்.அந்தணரே, நான் இங்குள்ள சபையினரோடு ஆலோசித்து சஞ்சயனை பாண்டவர்களிடம் அனுப்புகிறேன். என் செய்தியை தெளிவாக மேற்கொண்டு என்ன நடக்க வேண்டும் என்பதை உறுதியாக சஞ்சயன் உங்களுக்குச் சொல்வார். உங்களுக்கு விடை கொடுக்கிறேன்.’’ என்று கை கூப்பினார்.

சபை எழுந்தது. அந்த அந்தணரை வணங்கியது. அவர் மிக நிதானமாக நடந்து வாயிலைக் கடந்து தன் தேரில் ஏறிக் கொண்டார். அந்த அந்தணர் நகர்ந்ததும் சபையினர் என்ன செய்வது என்று திரும்பி திருதராஷ்டிரனை பார்க்க, ‘சஞ்சயா’ என்று அவர் உரக்க கூற, சபை முடியவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்தது. அவரவர்கள் ஓசை எழ ஆசனத்தில் அமர்ந்தார்கள். துரியோதனனும், கர்ணனும் இல்லாத அந்த சபையில் சஞ்சயனிடம் திருதராஷ்டிரன் பேசஆரம்பித்தார்.‘‘சஞ்சயா, பாண்டவர்களுக்கு என் ஆசீர்வாதத்தைச் சொல். அவர்களை நலம் விசாரி. நான் நலமாக இருக்கிறேன் என்பதையும் அவர்களுக்குத் தெரிவித்து விடு. துரியோதனன் முட்டாள். மோசமான ஒரு விஷயத்தை உத்தமம் என்றும், உத்தமமான ஒரு விஷயத்தை மோசம் என்றும் கருதுகின்ற அளவுக்கு முட்டாள். ஒரு அரசகுமாரனாக சுகத்திலேயே வளர்ந்தவன். அவனுக்கு வாழ்வின் வேதனை தெரியவில்லை.

யுத்தத்தின் உக்கிரம் இன்னும் புரிபடவில்லை. வெகு எளிதாக அர்ஜுனனை ஜெயித்து விடலாம் என்று தனக்குத்தானே பேசி நம்பிக் கொண்டிருக்கிறான். தன்னுடைய பலத்தை தானே அதிகரித்து தன்னைப் பற்றி தானே புகழ்ந்து நினைக்கிறவனுடைய நிலைமை மூடத்தனமானது.அர்ஜுனனை விட அற்புதமான வில்லாளி எவரும் இல்லை. வடக்கு பக்கம் போய் முழுவதும் ஜெயித்து விட்டு வந்திருக்கிறான். அவனுக்கு இணை அவனே. துரியோதனன் யாரை நம்பிக் கொண்டிருக்கிறானோ அவன் பேச்சில் வல்லவனே தவிர செய்கையில் அர்ஜுனனுக்கு குறைந்தவன்தான். பீமன் கதை எடுத்து சுழற்ற ஆரம்பித்தால் அந்த கோபாவேசத்திற்கு முன்பு எவரும் நிற்க முடியாது.

போர் போர் என்று ஆசைப்பட்டால் போதுமா. யாரோடு போர் செய்கிறோம், எதன் பொருட்டு போர் செய்கிறோம் என்று தெரிய வேண்டும். பன்னிரண்டு வருட வனவாசத்திலும், ஒரு வருட அஞ்ஞாத வாசத்திலும் உடம்பும், மனதும் கடும் வேதனைகள் ஏற்பட்டு அவற்றை சகித்துக் கொண்டு இதற்கெல்லாம் காரணம் துரியோதனன் என்பதை மனதிற்குள் மூடி வைத்துக் கொண்டு, சரி போனால் போகட்டும் அவனுக்கு ஒருமுறை நல்ல வாய்ப்பு தருவோம் என்று தூது அனுப்பியிருக்கிறார்கள். அதை புறக்கணித்துப் பேச கர்ணன் என்ற ஒரு முட்டாள் இங்கே இருக்கிறான். என்ன செய்வது. விதி வலியது. மோசமான நண்பர்கள் சூழலில்தான் விதி ஒருவனை கெடுக்கும் பொழுது ஏற்படும்.

பாண்டவர்களுடைய பக்கத்தில் திருஷ்டதுய்ம்னன் என்ற பெயரில் ஒரு பலசாலி வீரன் இருக்கிறான். அவன் தன்னுடைய சரீரத்தையையும், யுத்தத் திறமையையும் தன் மந்திரிகளோடு யுதிஷ்டிரனுக்கு அர்ப்பணித்து விட்டான். மத்ஸ்ய மன்னன் விராடன் தன் புதல்வர்களோடு பாண்டவர்களின் உதவிக்காக எப்பொழுதும் காத்திருக்கிறான். ஒரு வருடம் பாண்டவர்கள் அந்த மன்னனிடம் அமைதியாக வாழ்ந்து வந்தார்கள். அதற்கு அவர்கள் நன்றியோடு இருக்கிறார்கள். இவர்கள் யாரென்று அறியாமல் அடைக்கலம் கொடுத்து விட்டோமே, ஏதேனும் தவறு செய்திருப்போமோ என்ற பயத்தில் யுதிஷ்டிரர் என்ன சொன்னாலும் சரி என்று தலை அசைக்கின்ற விதத்தில் விராடன் இருக்கிறான். பீஷ்மரிடம் அஸ்திர வித்தை பயின்ற சாத்விகி பாண்டவர்களுக்கு உதவியாக இருக்கிறான். எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீகிருஷ்ணர் அவர்களோடு இருக்கிறார். ஸ்ரீகிருஷ்ணருடைய வேகத்தை எவரால் சகித்துக் கொள்ள முடியும். அடுத்தபடி என்ன நடக்கும் என்பதை அவரைப் போல் திறமையாக, தெளிவாக புரிந்து கொண்டு செயல்படுபவர்கள் வேறு எவராவது இருக்கிறார்களா, அப்படிப்பட்ட புத்திமான் அங்கு இருக்கிறபொழுது அந்த இடத்தை பகைத்துக் கொள்வது சரிதானா.

இன்னொன்று நடந்தது சஞ்சயா, சிசுபாலன் என்ற மிகச் சிறந்த வில்லாளி, அற்புதமான போர் வீரன், அவன் ஒருவேளை துரியோதனன் பக்கம் நின்று விடுவானோ, அப்படியெனில் அவனை ஜெயிப்பது கடினம் என்ற நினைப்பில் ஸ்ரீகிருஷ்ணர் தானே எதிரே நின்று தன் சக்கரத்தால் அவனைக் கொன்று போட்டார். யுத்தம் வரும் முன்பே மிகப்பெரிய வில் வீரன் ஒருவன் அவர் கையால் இறந்து போனான். ஆக, இங்கு அத்தனையும்ஸ்ரீகிருஷ்ணரின் திட்டப்படி நடைபெறுகிறதே அன்றி வேறு எப்படியும் அல்ல. இது எனக்குப் புரிகிறது. ஏன் துரியோதனனுக்கும், கர்ணனுக்கும் புரியவில்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. சிசுபாலனை ஸ்ரீகிருஷ்ணர் தொடர்ந்து மன்னித்திருப்பார். ஆனால், பாண்டவர்களுக்காக அவனை சக்கரத்தால் கொன்றார். இப்படி ஒவ்வொரு செயலும் பாண்டவர்களுக்காக ஸ்ரீகிருஷ்ணர் செய்து வருகிறபோது அந்த பாண்டவர்களை எதிர்த்துப் போரிடுவது முட்டாள்தனம்.

அரக்கர் சேனையை இந்திரனும், விஷ்ணுவும் சேர்ந்து அழித்தது போல கௌரவர்கள் அழிக்கப்பட போகிறார்கள். அர்ஜுனன் இந்திரனாகவும், ஸ்ரீகிருஷ்ணர் சனாதன விஷ்ணுவாகவும் எனக்குத் தோன்றுகிறார்கள். யுதிஷ்டிரர் தர்ம நடத்தையில் பற்றுள்ளவர். அமைதியானவர். இதனாலேயே அவர் பக்கம் அதிகம் பேர் சேர்வார்கள். இந்த நல்லவருக்கு ஆபத்தா என்று பதறி போரில் ஈடுபடுவார்கள். துரியோதனன் வெறுமே எண்ணிக்கையில் படை திரட்டிப் போவதில் என்ன பிரயோஜனம். நம்மிடம் பதினோறு அக்ஷௌனி சேனை இருக்கிறது. பாண்டவர்களிடமோ ஏழுதான் இருக்கிறது. ஆனாலும் அந்த ஏழு அக்ஷௌனி சேனை தர்மத்தால் பலமானது. நீ தயவு செய்து பாண்டவர்களிடமேபோய் அவர்கள் கோபத்தை கிளராத வண்ணம்

ஸ்ரீகிருஷ்ணனை முன்னிறுத்தி இந்தப் பேச்சை துவக்கு. ஸ்ரீகிருஷ்ணரின் எந்தப் பேச்சையும் யுதிஷ்டிரர் தட்ட மாட்டார். சமாதான வார்த்தைகளில் ஸ்ரீகிருஷ்ணருக்கு நிச்சயம் ஈடுபாடு இருக்கும். எனவே, இப்போதே உடனேயே நீ பாண்டவர்கள் இடம் நோக்கி தூதுவனாக போய் வா. சண்டையை தவிர்க்கின்ற பேச்சை மட்டும் பேசு. கோபத்தை க்
கிளற வேண்டாம்’’ என்று பலமுறை அறிவுரை சொன்னார்.திருதராஷ்டிரனிடம் விடைபெற்றுக் கொண்டு சஞ்சயன் உபப்லவ்யம் என்ற இடத்திற்கு போனார். பாண்டுவின் புதல்வனான யுதிஷ்டிரரிடம் சேர்ந்து அவரை வணங்கினார்.
‘‘இந்த அழகிய அரண்மனையில் தங்கள் சகோதரர்களோடு ஒரு இந்திரனைப் போல யுதிஷ்டிரரே  நீங்கள் வீற்றிருக்கிறீர்கள். எல்லா கெடுதலும் முடிந்து நீங்கள் நன்மைக்கு திரும்பிய இந்த நேரம் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இத்தனை சோதனைகளுக்குப் பிறகும் உங்கள் முகம் தெளிவாகவும், அமைதியாகவும் இருப்பதைப் பார்த்து நான் வியந்து போகிறேன். யுதிஷ்டிரர் ஒரு தர்மவான் என்று மக்கள் சொல்வது இதனால்தான் என்று கருதுகிறேன். உங்கள் அமைதி பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. அதேசமயம் அது குறித்து ஒரு பயமும் வருகிறது. மனதில் இருப்பதை வெளியே தன் முகத்தில் காட்டாதவரை பார்க்கும்பொழுது பயம் வருவது இயல்புதானே.’’

‘‘வருக சஞ்சயா வருக. திருதராஷ்டிரன் நலமாக இருக்கிறாரா? அவரிடமிருந்து அவர் சொல்லி ஒரு தூதுவன் என்னை நோக்கி வந்திருப்பதில் நான் மட்டமற்ற மகிழ்ச்சியடைகிறேன். அவர் பெருந்தன்மைக்கு நான் தலைவணங்குகிறேன். அங்கே சகலரும் நலமா. பீஷ்மரும், விதுரரும் எப்படி இருக்கிறார்கள். துரோணரும் அவர் புதல்வரும் எப்படி இருக்கிறார்கள். கிருபர் நலமாக இருக்கிறாரா? அவர் மிகச்சிறந்த வில்லாளி. அவர் எவர் பக்கம் நின்றாலும் அவர் வெற்றி குறித்து அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. மூடனான துரியோதனன் எப்படி இருக்கிறான். அவனுக்கு நெருக்கமான கர்ணனோடு இன்னும் சல்லாபித்துக் கொண்டிருக்கிறானா?

கௌரவ வம்சத்து தாய்மார்களும், பெரிய சிறிய பெண்களும், சபையில் பணிபுரியும் பணிப்பெண்களும், மருமகள்களும், மகன்களும், சகோதரிகளும், மகன்களின் புதல்வர்களும் எல்லோரும் நலமாக இருக்கிறார்களா. நான் அங்கு பலருக்கு தானம் கொடுத்து வந்தேன். அவைகளையெல்லாம் துரியோதனன் கெடுக்காமல் இருக்கிறானா. இல்லையென்றால் கொடுத்தது நான் என்பதாலேயே துவேஷம் கொண்டு அதை தடுக்கிறானா. அரசவையில் உள்ள மந்திரிகள் சன்மானம் பெறுகிறார்களா? எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறார்களா? பகைவர் பக்கம் சேராமல் இருக்கிறார்களா? நாட்டு நடப்பை கூர்மையாக கவனிக்கிறார்களா? அரசருக்கும் மக்களுக்கும் பாடமாக திகழ்கிறார்களா என்பதை எனக்கு தயவுசெய்து சொல்லுங்கள். எனக்கு உடமையாக இல்லாவிட்டாலும் அந்த தேசத்து மக்கள் மீது நான் மாறாத காதல் கொண்டிருக்கிறேன். அவர்கள் நலம் முக்கியம்.’’

தருமபுத்திரனின் இந்தக் கருணை தாங்காது சஞ்சயன் கண்மூடி கைகளை குவித்துக் கொண்டான். எல்லா நேரத்திலும் எல்லோர் இடத்திலும் தர்மசிந்தனையாக இருக்க ஒரு சிலரால் மட்டும்தான் முடிகிறது என்று நினைத்துக் கொண்டான்.
‘‘சஞ்சயா, அர்ஜுனனையும், பீமனையும் கண்டு அவர்கள் பயப்படுவது இருக்கட்டும். நகுல சகாதேவர்கள் சாதாரணமானவர்களா, சகாதேவன் அம்பு மழையைப்பற்றி அவர்களுக்கு மறந்து விட்டதா, இடது கையாலும், வலது கையாலும் அம்புகளை மழைபோல் பொழிய விட்டு கலிங்க நாட்டு வீரர்களை சகாதேவன் ஜெயித்து வந்தானே அது அவர்களுக்கு மறந்து விட்டதா. கண் முன்னாலேயே சிபி மற்றும் நாட்டு நகுலனை தனியே அனுப்பினோம். அவன் ஜெயித்து வந்து அவர்களை எனக்கு ஆதினப்படுத்தினான்.

அதுவும் மறந்து விட்டதா. இவர்களையே எதிர்க்க முடியாத கௌரவர்கள் அர்ஜுனனையும், பீமனையும் ஜெயித்து விடுவார்களா, தன் பலம் என்ன, தன் எதிரியின் பலம் என்ன என்பதை அவனுக்கு சொல்லித் தருவார் யாரும் இல்லையா, அல்லது அவன் யார் பேச்சையும் கேட்காமல் காதுகளை மூடிக் கொண்டிருக்கிறானா, கர்ணனை நம்பி போரில் இறங்குகிறானா. அந்தக் கர்ணனை நம்பித்தானே இவன் தைத்ய வனத்தில் யுத்தத்திற்கு வந்தான். அடிபட்டுத் திரும்பினான் அல்லவா. நான் ஆணையிட்டதின் பேரில் அர்ஜுனனும், பீமனும் உள்ளே இறங்கி துரியோதனனையும், கர்ணனையும் விடுவித்தது முற்றிலும் மறந்து போயிற்றா. எனக்கு அவனை நினைத்தால் வியப்பாக இருக்கிறது சஞ்சயா. இத்தனைக்குப் பிறகும் எனக்கு துரியோதனன் மீது கோபமே இல்லை. பரிதாபமே ஏற்படுகிறது.’’

இந்தச் சொல்லுக்காக சஞ்சயன் யுதிஷ்டிரரை கைகூப்பி வணங்கினான்.‘‘யுதிஷ்டிரா, திருதராஷ்டிரர் ஒருபொழுதும் தன் பிள்ளைகளை போரிடும்படி வற்புறுத்தவில்லை. உங்களுக்கு எதிராக திசை திருப்பவில்லை. மாறாக உங்களோடு போர் புரிய வேண்டியிருக்குமே என்கிற கவலையை மனதில் கொண்டு அடிக்கடி புலம்புகின்றார். போர் செய்யும் எண்ணம் துரியோதனனுக்கும், அவனைச் சார்ந்தவர்களுக்கும் இருக்கிறது. நீங்கள் போருக்குத் தயங்குவதுபற்றி அங்குள்ளவர்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். பீஷ்மரும், விதுரரும் உங்களைப்பற்றி கவலைப்படுகிறார்கள். இது சமாதானமாக முடிந்தால் நன்றாக இருக்குமே என்று துரோணரும், அஸ்வத்தாமனும் நினைக்கிறார்கள். விதுரருக்கும் அந்தக் கவலை உண்டு. முன்பு ஒரு அரசவையில் இருந்து விட்டு அங்கு முக்கியமான இடத்தை கௌரவமாக ஏற்றுக் கொண்டு விட்டு பிறகு ஏதோ ஒரு காரணம் சொல்லி வேறொரு பக்கம் போவது என்பது தங்களுக்கு இழுக்கானது. என்ன நடந்தாலும் எங்கு நின்றோமோ அங்கேயே நிலைத்து நிற்க வேண்டும் என்பது நல்ல வீரர்களுடைய கொள்கையாக இருக்கிறது. அவ்விதமே அவர்கள் இருக்கிறார்கள்.

(தொடரும்)