என்ன சொல்கிறது, என் ஜாதகம்?மறுமண வாழ்வில் நறுமணம் வீசும்!

?எனது திருமணம் 2012 மார்ச் மாதத்தில் நடந்தது. வரதட்சணை என்ற அரக்கனின் பிடியில் சிக்கி வாடிய மலராகப் போனேன். 21 வயதிற்குள் எனக்கு ஏன் இவ்வளவு பெரியதண்டனை? இரண்டாவது திருமணம் நடக்குமா? தொழிலில் நல்ல நிலைக்கு வருவேனா? மொத்தத்தில் எதிர்காலம் எப்படி இருக்கிறது? வாழ ஆசைப்படுகிறேன். விடை தாருங்கள்.
- தாமரை, வேளச்சேரி.

 உங்கள் மனநிலையில் உள்ள விரக்தியின் அளவினை உங்கள் கடிதத்தில் வெளிப்படுத்தி உள்ளீர்கள். இத்தனை சிரமத்திற்கு மத்தியிலும் கடிதத்தில் கவிதை மழையைப் பொழிந்திருக்கிறீர்கள். உங்களுடைய எழுத்துநடை உங்கள் வலிமையைப் பறை சாற்றுகிறது. உங்கள் ஜாதகக் கட்டத்தினைக் கொண்டு 7க்கு உடையவன் 8ல், 8க்கு உடையவன் 12ல், விரயாதிபதி குரு வக்ரம் பெற்று கேதுவுடன், சனி பார்வை, செவ்வாய் பார்வை, சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம், சயன தோஷம், சனி அஸ்தங்கதம் என்று அதில் உள்ள எதிர்மறையான கருத்துக்களை மட்டும் வரிசைப்
படுத்தி எழுதியுள்ளீர்கள். இதுபோன்ற எதிர்மறையான கருத்துக்களை துச்சமாக எண்ணி தூக்கி எறியுங்கள்.

மகம் நட்சத்திரம், சிம்மராசியில் பிறப்பதற்கே மிகப்பெரிய பாக்கியம் செய்திருக்க வேண்டும். மகத்தினில் பிறந்தார் ஜகத்தினை ஆள்வார் என்பதை உங்கள் மனதில் ஆழப்பதிய வைத்துக் கொள்ளுங்கள். மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சுக்கிரன் ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருப்பதும், சிந்தனையைத் தரும் ஐந்தாம் வீட்டில் செவ்வாயின் அமர்வும் உங்களை தொழில்முறையில் வெகு சிறப்பாக செயல்பட வைக்கும். எல்லோருடைய ஜாதகத்திலும் நற்பலன்களும், கெடுபலன்களும் கலந்துதான் இருக்கும். கெடுபலன்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல் நம் ஜாதகத்தில் உள்ள நற்பலன்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். சாலையில் நடந்து கொண்டிருக்கிறோம். எதிர்பாராத விதமாக சாக்கடை நீர் ஆடையில் தெறித்துவிட்டது என்பதற்காக அங்கேயே அமர்ந்து அழுது கொண்டிருப்பதால் என்ன பயன்? அதனைத் துடைத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க வேண்டாமா? பொறியியல் பட்டதாரியான நீங்கள் உங்கள் வாழ்க்கையை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடக்கிக் கொள்ளாமல் முன்னேற்றச் சிந்தனையுடன் செயல்படுங்கள்.

சிந்தனையில் உள்ள வேகம் செயலிலும் வெளிப்படட்டும். உத்யோகரீதியாக உயர்ந்த நிலையை அடைவீர்கள். தற்போது நடந்து வரும் சூரியதசை சற்று அலைச்சலைத் தந்தாலும் தொழில் முறையில் சிறப்பான முன்னேற்றம் காண்பீர்கள். திருமணம் என்பது மட்டும் வாழ்வினில் முழுமையான திருப்தியைத் தந்து விடாது. அதையும் தாண்டி வாழ்வினில் சாதிக்க வேண்டிய விஷயங்கள் பல உண்டு. சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் என்பதை ஆழ்மனதில் பதிய வைத்துக் கொண்டு செயலில் இறங்குங்கள். மறுமணத்தைப்பற்றி கவலைப்படாது உங்கள் தொழிலில் முழு கவனமும் செல்லட்டும். 23.11.2018ற்குப் பின் உங்கள் மனதினைப் புரிந்து கொண்ட மனிதரை சந்திப்பீர்கள். 2019ம் ஆண்டு மே மாத வாக்கில் அவரை நீங்கள் கரம் பிடிக்க இயலும். மறுமண வாழ்வு என்பது நறுமணம் வீசுவதாகவே அமையும். வெள்ளை உள்ளம் கொண்ட உங்கள் பெற்றோரின் மனதிற்கு முழுமையான சந்தோஷத்தைத் தருவதாக உங்கள் வாழ்வு அமையும். வெள்ளிக்கிழமை தோறும் வீட்டினில் விளக்கேற்றி வைத்து மகாலக்ஷ்மி பூஜை செய்து வழிபட்டு வாருங்கள். வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண்களை நமஸ்கரிக்கத் தவறாதீர்கள். லக்ஷ்மி யோகம் என்பது உங்கள் ஜாதகத்தில் உள்ளதால் உங்கள் எதிர்காலம் சிறப்பானதாகவே அமையும். கவலை வேண்டாம்.

?அறுபத்து மூன்றாவது வயதில் இருக்கும் எனக்கு அடிக்கடி தலைவலி, வயிற்றுவலி வருகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிருடன் இருப்பேன்? வயிற்றின் வலது பக்கம் கனமாக உள்ளது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா? இன்னும் என் இரண்டாவது பெண்ணுக்கு திருமணம் செய்யவில்லை. இன்னும் 10 ஆண்டுகளாவது உயிர் வாழ
ஆசைப்படுகிறேன்.என் இறுதிகாலம் சிரமம் இன்றி அமைய நான் என்ன செய்ய
வேண்டும்?
 - காந்திமதி, சிதம்பரம்.

தலைவலியும், வயிற்றுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள். இந்த இரண்டின் கொடுமையையும் சேர்த்து அனுபவிப்பதால் ஆயுள்பற்றிய பயம் உங்களை வந்து தொற்றியிருக்கிறது. மூலம் நட்சத்திரம், தனுசு ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு தற்போது ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கிறது. என்றாலும் தற்போது நடந்து வரும் தசாபுக்தி காலம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. குரு தசையில் குரு புக்தியின் காலத்தை அனுபவித்து வரும் உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. மருந்து மாத்திரைகளின் மூலமாகவே உங்கள் வயிற்றுவலி பிரச்னையை சரி செய்ய இயலும். மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருந்துகளை தவறாமல் எடுத்து வாருங்கள். 27.10.2018க்குப் பின் வயிற்றுவலியின் வீரியம் குறையத் துவங்கும். 77 வயது வரை உங்கள் ஆயுளைப் பற்றிய கவலை தேவையில்லை. வரும் வருட வாக்கில் உங்கள் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளதால் மகளின் திருமணத்தை நடத்துவதில் தடையேதும் இருக்காது. இறுதிக் காலத்தில் பிறந்த வீட்டினரையோ, புகுந்த வீட்டினரையோ சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

நீங்கள் பெற்றெடுத்த பிள்ளைகளுடனேயே உங்கள்அந்திமக் காலத்தை சுகமாகக் கழிக்க இயலும். உங்கள் பெண்ணும் சரி, மருமகனும் சரி உங்களை பாரமாக எண்ணாமல் கண்ணும் கருத்துமாக வைத்துப் பார்த்துக் கொள்வார்கள். தேவையற்ற பயத்தினை விடுத்து தைரியமாக உங்கள் பணியைச் செய்து வாருங்கள். நடராஜப் பெருமானின் மேல் நம்பிக்கை வைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ஏதேனும், ஒரு செவ்வாய்க்கிழமை நாளில் வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். அங்கு தரும் விபூதி பிரசாதத்தை வயிற்றுப் பகுதியில் தினமும் தடவி வர உங்கள் பிரச்னை தீரும். ஆரோக்யத்துடன் வாழ்வீர்கள்.

?என் மகளுக்கு கடந்த 2010ல் திருமணம் நடந்தது. குழந்தை பாக்யம் இல்லை. உடல் சுகவீனத்தால் ஜூன் 2016 முதல் எங்களுடன் வசித்து வருகிறாள். மாமியார் சரியில்லை. மருமகன் தனிக்குடித்தனம் செய்ய விரும்பவில்லை. அவருக்கு மனைவியின் மேல் அக்கறை இல்லை. சட்டப்படி பிரிந்தால் நிம்மதி கிடைக்குமா? நல்வழி கூறி சரியான பாதை காண்பியுங்கள்.
 - சுகுமாரன், சென்னை.

ஒரு வழக்கறிஞராக உங்கள் அனுபவத்தில் பல குடும்பங்களின் பிரச்னைகளை தீர்த்து வைத்திருப்பீர்கள். உங்கள் மகளின் நல்வாழ்விற்காக இன்னும் சிறிது காலம் பொறுத்திருங்கள். உங்கள் மகளின் ஜாதகத்தில் கணவரைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் நீசம் பெற்ற சந்திரனுடன் செவ்வாய் மற்றும் கேது இணைந்திருக்கிறார்கள். உங்கள் மருமகனின் ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் நீசம் பெற்ற செவ்வாயுடன் ராகு இணைந்திருக்கிறார். ஆக சந்திரன், செவ்வாய், ராகு, கேது ஆகிய இந்த நான்கு கிரகங்களின் தாக்கம் தம்பதியர் இருவரின் ஜாதகத்திலும் உள்ளது. விதிப்பயனின் படியே இவர்கள் இருவரும் வாழ்க்கையில் இணைந்திருக்கிறார்கள். உங்கள் மருமகனுக்கு தனது மனைவியின் மீது அதாவது உங்கள் மகளின் மீது அக்கறை இல்லாமல் இல்லை.

பெற்ற தாயின் பேச்சிற்கு மறுபேச்சு பேசாமல் வாழும் பிள்ளையாக இருக்கிறார். அதில் தவறேதும் இல்லை. இருந்தாலும் மனைவியின் உள்ளத்தில் இருக்கும் உணர்வினை அவர் வெகுவிரைவில் புரிந்து கொள்வார். அதற்கான கால நேரம் கனிந்து வர வேண்டும். இத்தனை காலம் பொறுத்திருந்த நீங்கள் வருகின்ற 11.03.2019 வரை பொறுத்திருங்கள். அதன்பிறகு நடைபெறும் சம்பவங்கள் அவரது மனதை மாற்றும். சட்டப்படி நிரந்தரமாகப் பிரிவதால் மட்டும் உங்கள் மகளுக்கு நிம்மதி கிடைத்து விடாது. அது அவருடைய எதிர்காலத்திற்கும் நல்லதல்ல. சற்று நிதானித்துச் செயல்படுங்கள். செவ்வாய்க்கிழமை தோறும் ராகு கால வேளையில் துர்கையம்மனுக்கு விளக்கேற்றி வைத்து உங்கள் மகளை நமஸ்கரித்து வரச் சொல்லுங்கள். துர்கையின் அருளால் துன்பங்கள் தீரும்.

?எனது பேரனின் ஜாதகப்படி ஆயுள் பாவம், உத்யோக உயர்வு எப்படி உள்ளது? வேறு கம்பெனி மாற்றம் கிடைக்குமா? அவன் ஜாதகப்படி திருமணம் எப்போது நடக்கும்? பெண் வீட்டாரிடம் ஜாதகத்தை கொடுத்தவுடன் ஜோதிடரைக் கலக்காமல் பொருத்தமில்லை என்று தெரிவிக்கிறார்கள். அவனது திருமணத்திற்காக ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா?
 - ஞானசம்பந்தன், வரதராஜபுரம்.

ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேரனின் ஜாதகம் மிகவும் சிறப்பான அம்சத்தினைக் கொண்டுள்ளது. அவரது ஜாதகத்தில் எந்தவிதமான தோஷமும் இல்லை. ஜென்ம லக்னத்திலேயே ஆட்சி பலத்துடன் அமர்ந்திருக்கும் ஆயுள்காரகன் சனிபகவான் நீண்ட தீர்க்காயுளைத் தருவார். உத்யோக ஸ்தான அதிபதி சுக்கிரன் நீசம் பெற்றிருந்தாலும், பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் உத்யோக உயர்வினைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. தற்போது நடந்து வரும் தசாபுக்தியின்படி 25.06.2018க்குப் பின் உத்யோகரீதியாக நல்லதொரு முன்னேற்றத்துடன் கூடிய மாற்றத்தினைக் காண்பார். நல்ல தனலாபத்துடன் கூடிய சம்பாத்தியம் அவருடைய எதிர்காலத்திலும் தொடரும். ஆயில்யம் என்ற நட்சத்திரத்தின் பெயரைக் கேட்டதும் பொருத்தமில்லை என்று சொல்லும் மூட நம்பிக்கையினை உடையவர்களை எண்ணி நீங்கள் கவலைப்படாதீர்கள்.

உங்கள் பேரனை மருமகனாக அடைய அவர்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை என்று எண்ணிக் கொள்ளுங்கள். தற்போதைய நேரத்தின்படி உங்கள் பேரனுக்கு திருமண யோகம் என்ற நேரம் கூடி வந்துவிட்டது. வெகுவிரைவில் அன்பிலும், பண்பிலும் சிறந்த ஒரு பெண் உங்கள் பேரனின் வாழ்க்கைத் துணைவியாக அமைவார். அவருடைய ஜாதகத்தில் தோஷம் ஏதும் இல்லாததால் சிறப்பு பரிகாரம் ஏதும் அவசியமில்லை. குலதெய்வப் பிரார்த்தனை ஒன்று மட்டும் போதுமானது. இந்த வருடத்தின் இறுதிக்குள் உங்கள் பேரனின் திருமணம் முடிவாகிவிடும். வாழ்த்துக்கள்.

?என் மகன் தற்போது டிப்ளமோ மூன்றாம் ஆண்டு நிறைவு செய்யும் தருவாயில்
உள்ளான். அவன் மேற்கொண்டு என்ன செய்யலாம்? ராணுவத்திற்கு செல்வதற்கான
முயற்சிகள் எடுத்து வருகிறான். அப்பணி கிடைக்க வாய்ப்பு உண்டா?
 - பாஸ்கரன், வேலூர் மாவட்டம்.

உங்கள் மகனின் விருப்பம் நியாயமானதே. அவரது முயற்சி வெகு விரைவில் வெற்றி பெறும். மூலம் நட்சத்திரம், தனுசு ராசி, கடக லக்னத்தில் பிறந்துள்ள அவரது ஜாதகத்தின்படி அவருக்கு ராணுவம், எல்லை பாதுகாப்புப் படை, காவல் துறை போன்ற பாதுகாப்புத் துறையில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு நன்றாக உள்ளது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதும், ஜீவன ஸ்தானஅதிபதி செவ்வாய் 12ல் சூரியன் மற்றும் புதனுடன் இணைந்திருப்பதும் அவருக்கு சுகமாக அமர்ந்திருக்கக் கூடிய பணியினைத் தராது. சிரமப்பட்டு செய்யும் வேலையாக இருந்தாலும், அதனை ஏற்றுக்கொண்டு செய்யும் மனப்பக்குவமும், உடல் வலிமையும் உங்கள் பிள்ளைக்கு உண்டு. அவரது முயற்சிக்கு துணை நில்லுங்கள். அவருடைய ஜாதக பலத்தின்படி 05.03.2020க்குள் வேலை கிடைத்து விடும். பிறந்த நாட்டிற்கு சேவை செய்யும் வாய்ப்பு உங்கள் மகனுக்கு கிடைத்திருக்கிறது. உங்கள் பிள்ளையை எண்ணி நீங்கள் பெருமைப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

?என் மகனுக்கு வயது ஏறிக்கொண்டே போகிறது. இதுவரை திருமணம் நடைபெறவில்லை. ஏன் என்று தெரியவில்லை. பெண் வேலைக்குச் செல்பவளா? எந்தத் திசையில் இருந்து வருவாள்? 30/35 வயதுக்கு மேல் சென்றுவிட்டால் ஜாதகம் பார்க்க வேண்டாம் என்று சிலர் சொல்கிறார்கள். தங்கள் அபிப்ராயம் என்ன? 42 வயது ஆகும் என் மகனின் திருமணம் எப்போது நடைபெறும்?
 - சக்ரவர்த்தி, சென்னை - 80.

கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனுக்கு 29வது வயதிலேயே திருமண யோகம் என்பது வந்திருக்கிறது. அந்த நேரத்தில் அலட்சியமாக இருந்ததன் பயனை இப்போது அனுபவித்து வருகிறீர்கள். உங்கள் மகனின் ஜாதகத்தில் திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீடு எந்தவிதமான தோஷமும் இன்றி சுத்தமாகவே உள்ளது. அதற்காக முயற்சி ஏதும் செய்யாமல் பேசாமல் இருந்தால் எந்த செயலும் நடக்காது. உங்கள் கடிதத்தில் அடுத்தவர் மீது குற்றம் சொல்லும் குணம் வெளிப்படுகிறது. 42 வயதாகும் மகனுக்கு பெண் தேடும்போது பெண் வேலைக்குச் செல்பவளாக அமைவாளா என்ற உங்களது கேள்வி உங்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது என்ற எண்ணத்தையே மற்றவர்களின் மனதில் உண்டாக்கும்.

மேலும், குடும்பத்தில் ஏற்கனவே திருமணமான நபர் ஒருவர் தனது மனைவியுடன் வாழாமல் இருப்பதும் பெண் வீட்டாரை மிகவும் யோசிக்க வைக்கும். உங்கள் உறவினர்களும், பெண் வீட்டாரும் இந்த வயதிற்கு மேல் ஜாதகம் பார்க்கத் தேவையில்லை என்று சொல்லும் கருத்தினை ஏற்றுக்கொண்டு செயல்படுங்கள். உங்கள் மகனின் ஜாதகம் சுத்தமான ஜாதகம் என்பதால் அவருக்கு அமையும் மனைவி நல்ல குணத்தினைக் கொண்டவளாக இருப்பாள் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். தற்போது அவருடைய ஜாதகத்தில் நடைபெறும் தசாபுக்தி காலம் சாதகமாக இல்லாவிட்டாலும், பெருமாளை நம்பி செயலில் இறங்குங்கள்.

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

என்ன சொல்கிறது,
என் ஜாதகம்?
ஆன்மிகம், தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை - 600 004