பிரசாதங்கள்



பஞ்சாமிர்த பர்பி

என்னென்ன தேவை?

தேங்காய்த்துருவல், வறுத்த ரவை, நெய் - தலா 1 கப்,
நறுக்கிய பேரீச்சம் பழம் - 1/4 கப்,
நறுக்கிய முந்திரி, காய்ந்த திராட்சை கலந்தது - 1 கப்,
சர்க்கரை அல்லது பொடித்த வெல்லம் - 2½ கப்,
சுண்டக் காய்ச்சிய பால் - 1 கப்,
தேன் - 1/4 கப்,
பொடியாக நறுக்கிய வாழைப்பழம் - பாதி,
டைமண்ட் கற்கண்டு - சிறிது.

எப்படிச் செய்வது?

நெய், தேன், டைமண்ட் கற்கண்டைத் தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். கடாயில் நெய் சேர்த்து கலந்த கலவையை போட்டு மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும். அனைத்தும் சேர்ந்து சுருண்டு பர்பி பதத்திற்கு வந்ததும், தேன், கற்கண்டை சேர்த்து இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும், வில்லைகள் போட்டு இந்த மிருதுவான பர்பியை பரிமாறவும்.

கம்பு மாவு கடலை உருண்டை


என்னென்ன தேவை?


கம்பு மாவு - 2 கப்,
பொடித்த வெல்லம் - 1 கப்,
பொடியாக நறுக்கிய பேரீச்சம் பழம், காய்ந்த திராட்சை - தலா 1/4 கப்,
நெய் - 1/2 கப்,
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
வறுத்த வேர்க்கடலை - 1/2 கப்,
விரும்பினால் வறுத்த எள் - 1/4 கப்.

எப்படிச் செய்வது?


சுத்தமான வெல்லத்தில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி பாகு பதத்திற்கு காய்ச்சி, தேன் போன்ற பதம் வந்ததும் இறக்கி வடித்துக் கொள்ளவும். கடாயில் கம்பு மாவை கொட்டி மிதமான தீயில் வைத்து நன்கு வாசனை வரும்வரை வறுத்து, அதில் 1/4 கப் நெய் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். பிறகு மாவில் வேர்க்கடலையை ஒன்றிரண்டாக பொடித்து சேர்த்து பேரீச்சம் பழம், காய்ந்த திராட்சை, ஏலக்காய்த்தூள் கலந்து வெல்ல பாகு, மீதியுள்ள நெய் சேர்த்து நன்றாக கிளறி, கை பொறுக்கும் சூட்டிலேயே சிறு சிறு உருண்டைகள் பிடித்து ஆறியதும் டப்பாவில் போட்டு வைக்கவும்.

தினை பிர்னி


என்னென்ன தேவை?


தினை அரிசி - 1/2 கப்,
பால் - 1 லிட்டர்,
சர்க்கரை - 1 கப்,
குங்குமப்பூ - 1 சிட்டிகை,
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
அலங்கரிக்க முந்திரி, பாதாம், பிஸ்தா சீவல் - தேவைக்கு,
தேன் - 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?


தினை அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து நைசாக அரைத்து எடுத்து, சிறிது காய்ச்சிய பால் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு சுண்டக் காய்ச்சி, சர்க்கரை, தினை விழுது சேர்த்து மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கட்டி தட்டாமல் கலக்கவும். இந்த கலவை இட்லி மாவு பதத்திற்கு வந்ததும் ஏலக்காய்த்தூள் தூவி கலந்து இறக்கி குங்குமப்பூ கலந்து ஆறியதும், விருப்பமான கிண்ணம் அல்லது சிறு சிறு மண் சட்டியில் ஊற்றி அதன் மீது தேன் ஊற்றி, நட்ஸ் சீவலால் அலங்கரித்து குளிரவைத்து பரிமாறவும்.குறிப்பு : விரும்பினால் பாதி பால், பாதி கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து சர்க்கரை அளவை சிறிது குறைத்து செய்யலாம்.

மாம்பழ புளிசேரி அல்லது மாம்பழக்குழம்பு


என்னென்ன தேவை?

சிறிய மாங்காய் - 1,
பழுத்த மாம்பழம் - 1,
பச்சைமிளகாய் - 8,
தேங்காய்த்துருவல் - 1 கப்,
கெட்டித்தயிர் - 1 கப்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 3,
கடுகு - 1 டீஸ்பூன்,
உப்பு, கறிவேப்பிலை - தேவைக்கு,
தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?


மாங்காயை துருவி தேங்காய்த்துருவலுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். மாம்பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு மாம்பழ துண்டுகள், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். மாம்பழம் நன்கு வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து, கொதிக்க ஆரம்பித்ததும் தயிரை மோர் போல் அடித்து ஊற்றி கைவிடாமல் கலந்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். உடனே ஒரு கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் தாளித்து மாம்பழக்குழம்பு கலவையில் கொட்டி மூடி வைக்கவும்.குறிப்பு: விரும்பினால் சிறு துண்டு வெல்லம் சேர்க்கலாம்.

முக்கனி டிலைட்


என்னென்ன தேவை?


மாம்பழம் - 2,
வாழைப்பழம் - 8,
பலாச்சுளை - 8,
கன்டென்ஸ்டு மில்க் - 1/2 டின்,
பால் - 4 கப்,
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை,
குங்குமப்பூ - சிறிது,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
பொடித்த முந்திரி, பாதாம், பிஸ்தா, காய்ந்த திராட்சை - அனைத்தும் சேர்த்து 1/2 கப்.

எப்படிச் செய்வது?


பழங்களை தோல் நீக்கி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாதி மாம்பழத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும். அலங்கரிக்க கடாயில் நெய் விட்டு சிறிது பலாப்பழத்தை வதக்கிக் கொள்ளவும். மீதியுள்ள மாம்பழம், பலா, வாழைப்பழத்தை ஒன்றாக கலந்து வைக்கவும்.பாலை மிதமான தீயில் வைத்து சுண்டக் காய்ச்சி, பாதியாக வந்ததும் கன்டென்ஸ்டு மில்க் கலந்து இறக்கவும். ஆறியதும் அதனுடன் மாம்பழ விழுது, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து கலந்து கொள்ளவும். கண்ணாடி டம்ளரில் 2 டேபிள்ஸ்பூன் பழக்கலவையை போட்டு, அதன் மேல் கெட்டியான பால் கலவையை முக்கால் பாகம் ஊற்றி, அதற்கு மேல் மீண்டும் பொடித்த பழக்கலவை, வதக்கிய பலா, நட்ஸ் கலவையைத் தூவி ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

மேங்கோ கேரமல் கஸ்டர்டு


என்னென்ன தேவை?


பால் - 1 லிட்டர்,
சிறிய மாம்பழம் - 1,
மேங்கோ கஸ்டர்டு பவுடர் - 2
டேபிள்ஸ்பூன், கன்டென்ஸ்டு மில்க் - 1/2 டின்,
விரும்பினால் அகர் அகர் பவுடர் - 2 டீஸ்பூன்,
சர்க்கரை - 1/2 கப்.

எப்படிச் செய்வது?


பாத்திரத்தில் சர்க்கரை, 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். இது கரைந்து பொன்னிறமாக தேன் போல் வந்ததும் இறக்கி மூடி போட்ட பாத்திரத்தில் ஊற்றி ஆற விடவும். ஆறியதும் கெட்டியாகி விடும். கேரமல் ரெடி.ஒரு அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க வைத்து சுண்ட காய்ச்சவும். பாதியாக வந்ததும் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து கலந்து, அகர் அகர் பவுடர், கஸ்டர்டு பவுடரை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி கட்டி தட்டாமல் கிளறி கொதிக்க விடவும். கலவை கெட்டியாக வந்ததும் இறக்கி, சிறிது ஆறவிட்டு கேரமல் உள்ள பாத்திரத்தில் ஊற்றி மூடி போட்டு இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் 25-30 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுத்து, ஆறியதும் ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைத்து எடுத்து தட்டி, மேலே பொடித்த மாம்பழங்களால் அலங்கரித்து பரிமாறவும்.

படங்கள்: ஆர்.சந்திரசேகர்