முக்கண்ணிலிருந்து முருகன்; தாமரைக் கண்ணிலிருந்து வள்ளி-தெய்வானை!



பூசை. ஆட்சிலிங்கம்

சிவபெருமானைத் தீயின் வடிவமாகவும், அன்னை பராசக்தியைத் தண்ணீரின் வடிவாகவும் கூறுவர். சிவலிங்கத்தில்  ஆவுடையாரின் வடிவம் பரந்த நீரையும், அதன் நடுவே ஓங்கி எழுந்துள்ள ருத்திர பாகம் நெருப்பையும் குறிக்கின்றன.  நீரும் நெருப்புமே உயிர்களின் தோற்றத்திற்கும் வாழ்வுக்கும் ஆதாரமாகும்.சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து  தீப்பொறி வடிவில் வெளிப்பட்டு குழந்தையாக உருப்பெற்றவர் கந்தன். அதனால் கண்ணில் தோன்றிய கனல் வடிவாக  வந்தவன் என்று அவனைப் புராணங்கள் போற்றுகின்றன.

அவனது தேவியர்களான வள்ளி, தெய்வானை இருவரும்கூட கண்ணிலிருந்து தோன்றியவர்களே. கந்தன் கனல் வடிவில்  வெளிப்பட்டதுபோல, இவர்கள் புனல் வடிவில் வெளிப்பட்டவர்களாவர்.பராசக்தி உலகப் படைப்பிற்காக நான்கு வடிவில்  விளங்குகிறாள். சிவனோடு பவானியாகவும், ஆண் வடிவில் காத்தல் தொழில் புரிகையில் திருமாலாகவும்,  பகைவர்களை அழிப்பதில் காளியாகவும், வெற்றிகளைக் குவிப்பதில் வெற்றித் திருமகளாக (துர்க்கையாக)வும்  விளங்குகிறாள். அவளுடைய புருஷாகார வடிவமே திருமால். திருமுறைகளில் திருமால் பராசக்தி என்பதை,  ‘காவியங்கண்களாகி கடல் வண்ணன் ஆகி நின்றதேவி’ (சிவந்த கண்களை உடைய கடல் போன்று நீல நிறத்துடன்  திருமாலாக நின்ற பராசக்தி) என்றும், ‘அரியலால் தேவியில்லை’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

பராசக்தியின் புருஷாகார வடிவான திருமாலின் அழகிய நெடிய கண்களிலிருந்து வள்ளியும், தெய்வானையும்  வெளிப்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.ஆதியில் உலகம் படைக்கப்பட்டபோது, ஆதிசக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி,  ஞான சக்தி, பராசக்தி என்னும் ஐந்து வடிவங்களைத் தாங்கி உலகைப் படைத்தாள். அதில் தோன்றிய உயிர்த்தொகுதிகள்  வம்சத்தைப் பெருக்கி வளம்பெறச் செய்ய ஆறாவது தேவியாகத் தோன்றினாள். உயிர் தொகைகளைப் பெருக்கும் அந்த  தேவியை (ஆறாவதாகத் தோன்றியதால்) சஷ்டிதேவி என அழைத்தனர்.

உலகப் படைப்பிற்குப்பின் அந்த சஷ்டி தேவி சிவபெருமானைக் குறித்து தவம் செய்தாள். அவளுக்குக் காட்சியளித்த  சிவபெருமான் தன் அம்சமாக குமரன் தோன்றுவான் என்றும், அவனை மணந்து அருள் பெருக என்றும் கூறினார்.மகிழ்ச்சியடைந்த அவள் படைப்புத் தொழிலுக்கு அதிபதியான மகாவிஷ்ணுவின் மகளாக வெளிப்பட தீர்மானித்தாள்.  ஒருசமயம் அவர் யோக நித்திரையில் இருந்தவாறு தியாகேசப் பெருமானின் ஆனந்த நடனத்தைக் கண்டு  மகிழ்ந்திருந்தார். அவருடைய ஆனந்தத்தில் கலந்து அதன் வெளிப்பாடாக விழியோரத்தில் துளிர்த்த ஆனந்தக் கண்ணீரில்  கலந்து சஷ்டி தேவி வெளிப்பட்டாள்.

அந்தத் துளிகளில் திருமகளின் திருவுருவம் பிரதிபலித்தது. அதையே தன் வடிவாகக் கொண்டு அவள் இரண்டு  வடிவங்களாக வெளிப்பட்டாள். அழகாகவும், அமுதாகவும் விளங்கும் திருமகளின் அம்சத்துடன் அவளைப் போலவே  வெளிப்பட்டதால் திருமால் அவர்களுக்கு அமுதவல்லி, சுந்தரவல்லி என்று பெயரிட்டார். அவர்கள் மீண்டும் முருகனை  நோக்கித் தவம் செய்தனர். அவர் காட்சியளித்து அருளியபடி இந்திரனின் மகளாகவும், வேடன் நம்பிராஜன் மகளாகவும்  தோன்றினர். சில காலத்திற்குப் பிறகு சிவன் அளித்த வரத்தின்படி முருகப்பெருமானைக் கணவனாக அடைந்தனர்.இந்த வரலாற்றின்படி முருகனைப் போலவே வள்ளி, தெய்வானை இருவரும் கண்ணில் இருந்து வெளிப்பட்டவர்கள்  என்பதையும், பராசக்தியைப்போல தண்ணீர் வடிவாகத் தோன்றியவர்கள் என்பதையும் அறிய முடிகிறது.

வள்ளியம்மை இரண்டாவது முறையாகவும், கண்ணில் இருந்து தோன்றியதைக் காண்கிறோம். அப்படி அவள் மான்  வயிற்றில் சென்று பிறந்தபோது, திருமாலின் கண் வழியே மான் வடிவான திருமகளின் கருவில் நுழைந்தாள் என்பதை,  ‘காமம் முனிந்த கலை முனிவன் கண்ணருளால் வாமமடமானின் வயிற்று தித்து’ என்று குமரகுருபர சுவாமிகள்  அருளிச்செய்துள்ளார். வள்ளியம்மையாக இரண்டாவது முறையும் கண்ணின் வழியே தோன்றியது இங்கே
சிந்திக்கத்தக்கதாகும்.

கண்களில் இருந்து தோன்றியவர்களான கந்தனும், வள்ளி - தெய்வானையும் இனம் இனத்தோடு சேரும் என்பதற்கேற்பத்  தம்முள் இணைந்து தெய்வீகத் தம்பதிகளாகினர்.மகாலட்சுமிக்கு ஹரிணி என்று ஒரு பெயர். அரி என்றால் மான். மான்  வடிவமாகவும் மானை விரும்புபவளாகவும்  இருப்பதால் அவள் ஹரிணி என்று அழைக்கப்படுகின்றாள். அவள் மானாக  வடிவு தாங்கி ஒரு பெண் குழந்தையைப் பெற்றதாகப் புராண வரலாறு கூறுகின்றது. அவ்வாறு அவள் பெற்ற திருமகளே  வள்ளியம்மை நாச்சியாராவார். அதனால் அவளை மான் பெற்ற மயிலென்று அன்பர்கள் கொண்டாடுகின்றனர். முருகப்பெருமான், தம்மை நோக்கித் தவம் செய்த திருமாலின் குமாரத்திகளான அமுதவல்லி, சுந்தரவல்லி  இருவரையும் முறையே இந்திரனுக்கும், நம்பிராஜனுக்கும் மகளாகப் பிறந்து வளர்ந்து வாருங்கள் என்றருளினார்.  அதன்படி, அமுதவல்லி இந்திர லோகத்தில் கற்பக மரத்தின் கீழ்க் குழந்தையாகத் தோன்றினாள்.

சுந்தரவல்லி காலத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தாள். ஒருசமயம் திருமால் மலைச்சாரலில் யோக நாராயணனாக  தவத்தில் வீற்றிருந்தார். திருமகள் மான் வடிவில் அவர் முன்னே துள்ளியோடித் திரிந்துகொண்டிருந்தாள். ஆனந்தத்தில்  நிலை பெற்றிருந்த அவர் கண் விழித்தார். தன் முன்னே ஓடியாடும் மானைக் கண்டார். அவள் திருமகள் என்பதை  உணர்ந்து அன்புடன் நோக்கினார். அடுத்த கணமே மான் வடிவிலிருந்த மகாலட்சுமி அழகிய பெண் குழந்தையை  ஈன்றாள். அக்குழந்தையை அவள் வள்ளிக்கிழங்கை அகழ்ந்ததால் உண்டான ஒரு குழியில் இட்டுவிட்டுத் தன்னுலகம்  சென்றாள்.வேடுவமன்னன் நம்பிராஜன் அக்குழந்தையை எடுத்து வளர்த்தான். தக்க பருவத்தில் தினைப்புனம் காத்த  வள்ளியை முருகப்பெருமான் வேடனாகவும், வேங்கையாகவும் மாறி காதலித்து விநாயகப் பெருமானின் அருளோடு  மணமுடிக்க சம்மதித்தான்.

வேடர்கள் வள்ளியின் திருமணத்தை முன்னிட்டு தங்கள் வீடுகளை அலங்கரித்தனர். நம்பிராஜனின் வீட்டு முற்றம்  அலங்கரிக்கப்பட்டு, அங்கு திருமண மேடை அமைக்கப்பட்டது. மணமேடையில் புலித்தோலை விரித்திருந்தனர்.  அதன்மீது முருகன் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் வள்ளியை அமர்த்தினர். வள்ளி தேவியை நம்பிராஜன்  நீர்வார்த்து முருகனுக்கு மனைவியாக அளித்தார்.நாரதர் திருமண வேள்வியை நடத்தினார். வான மண்டலத்திலிருந்து  சிவ-பார்வதி, முருகன் வள்ளியை வாழ்த்தினர். திருமால், மகாலட்சுமி, சரஸ்வதி, பிரம்மா, இந்திரன் எல்லோரும்  பூமாரி பொழிந்தனர். எங்கும் நறுமணம் வீசியது. இதமான தென்றல் குளிர்வித்தது. உலக மக்கள் எல்லோருடைய  மனதிலும் மகிழ்ச்சி பொங்கியது. குறவர்கள் விருந்து உண்டு களித்தனர்.

முருகனும் வள்ளியும் குறவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு திருத்தணிகை சென்று மகிழ்ச்சியுடன் தங்கினர்.  திருத்தணிகையில் வள்ளி தினமும் நீராடிய குளம் உள்ளது. அதன் தீர்த்தமே இப்போதும் முருகன் வழிபாட்டுக்குப்  பயன்பட்டு வருகிறது.தெய்வங்கள் யாவரும் ஆகமங்களையும், அவற்றின் நுட்பங்களையும் முதலில் தம் தேவியருக்கே  உபதேசித்தனர். சிவபெருமான் உமாதேவியாருக்கும், திருமால் மகாலட்சுமிக்கும், பிரம்மன் சரஸ்வதிக்கும் ஆகமங்களை  உபதேசித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. தேவியர்கள் மூலமாகவே ஞானங்கள் பூமியிலுள்ள மக்களை அடைந்தன.  அதையொட்டி தேவியர்களை ஞானத்தின் பெயரால் அழைக்கின்றனர்.

பார்வதியை ஞானப்பூங்கோதை, ஞானவல்லி, ஞானகெளரி எனவும், மகாலட்சுமியை, ஞானலட்சுமி எனவும்,  சரஸ்வதியை ஞான சரஸ்வதி என்றும் அழைக்கிறோம். அவ்வகையில் வள்ளியை ஞானக்குறத்தி என்றும், ஞானமாது என்றும் அழைக்கின்றனர்.சிவபெருமான், அன்பர்களுக்கு ஞானத்தை அருள வரும் வேளையில் உமாதேவியுடனேயே  வருகின்றான். தேவியுடன் வரும் அவளை உமாமகேஸ்வரர் என்றும், சாம்பவி தட்சிணாமூர்த்தி எனவும்  அழைக்கின்றனர். அதுபோலவே முருகப் பெருமானும் தம் அன்பர்களுக்கு ஞானத்தை அருளவரும் வேளையில் வள்ளி  தேவியுடன் நீலமயில் மீது வருகின்றான். இதனை,

நீலச்சிகண்டியில் ஏறும் பிரான்-
எந்த நேரத்திலும்
கோலக் குறத்தியுடன் வருவான்
குருநாதன் சொன்ன
சீலத்தைத் தெளிந்தறிவார்
சிவயோகிகளே
காலத்தை வென்றிருப்பர்
மரிப்பார் வெறும் கர்மிகளே!

- என்று அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில் அருளிச் செய்கின்றார். நீலச்சிகண்டியில் கோலக்குறத்தியுடன் வரும்  குருநாத முருகனை ஞானப்பிரான் என்று அன்பர்கள் கொண்டாடுகின்றனர்.சென்னையிலிருந்து வேலூர் செல்லும்  வழியிலுள்ள காவேரிப்பாக்கத்திற்கு அருகில் (தற்போது கோவிந்தச்சேரி என்று பெயர்) ஞானமலை என்னும் திருப்புகழ்  திருத்தலமுள்ளது. இங்கு அருணகிரிநாத சுவாமிகளுக்கு முருகன் மயில்மீது வள்ளியம்மையுடன் தோன்றி ஞானப்  பொருளை உரைத்தார் என்று கூறப்படுகின்றது. அதையொட்டி மயில் மீது வள்ளியுடன் வீற்றிருக்கும் குமரனின்  கோலத்தை இந்த ஆலயத்தில் அழகிய உலாத்திருமேனியாக அமைத்துள்ளனர். இது காணற்கரிய அற்புதத்  திருமேனியாகத் திகழ்கிறது.

முருகப் பெருமானை இருபெரும் தேவியர்களான வள்ளி தெய்வானை பிராட்டியார்களுடன் வழிபடுவதே பெரு  வழக்கமாக இருக்கிறது என்றாலும் சில தலங்களில் வள்ளியம்மைக்கு ஏற்றம் கொடுத்தும், சில தலங்களில்  தெய்வானை பிராட்டியாருக்கு ஏற்றம் கொடுத்தும் சிறப்புச் சந்நதிகள் அமைத்துப் போற்றுகின்றனர்.இவ்வகையில்,  திருவிடைக்கழி என்னும் தலத்தில் தெய்வானை பிராட்டியாருக்கு ஏற்றம் தந்து அவளுக்குப் பெரிய சந்நதி அமைத்து  வழிபடுகின்றனர்.அேதபோல் முருகனுடன் வள்ளியம்மையை மட்டும் எழுந்தருளச் செய்து வழிபடும் வழக்கம் சில  இடங்களில் உள்ளது.

வள்ளியம்மை ஞானத்தின் வடிவமாவாள். அன்பர்களுக்கு ஞானம் அருள வரும்போது முருகன் மயில் மீது வள்ளியுடன்  வருவதாகவே கூறுவர். அருணகிரி, ‘நீலச்சிகண்டியில் ஏறும் பிரான் கோலக் குறத்தியுடன் வருவான் குருநாதன்’  என்று கூறுகின்றார். அப்பர் அடிகளும் அவரை வள்ளி மணவாளன் என்றே அழைக்கின்றார்.புராதன தலங்கள் பலவற்றில்  அவனை ஞானம் அருளும் மூர்த்தியாக வள்ளியுடன் எழுந்தருளி வைத்து வழிபடுகின்றனர்.இத்தலங்களில் வள்ளியைக்  கருவறையில் முருகப் பெருமானோடு சேர்த்தே அமைத்துள்ளனர்.

இத்தகைய வள்ளி மணவாளத்தலங்களில் முதலாவதாகக் கூறப்படும் வேளிர்மலை, குமரி மாவட்டத்தில் உள்ளது.  இதுவே திருமுருகாற்றுப் படையில் கூறப்பட்டுள்ள திருவேரகம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்;  இரண்டாவதான வள்ளிமலை திருவண்ணாமலைக்கு அருகில் உள்ளது; மூன்றாவதான தலம் கேரள மாநிலத்தில்  உள்ளதாகும்.

நாகர்கோவிலுக்கு வடக்கே ஏறத்தாழ 15 கி.மீ. தொலைவில் வேளிர் மலை என்னும் தலம் உள்ளது. இங்குள்ள சிறிய  குன்றின் மீது முருகப் பெருமான் வள்ளியுடன் கோயில் கொண்டுள்ளார். இவ்வூரை மக்கள் குமரகோயில் என்று  அழைக்கின்றனர். இங்கே பரந்து விரிந்துள்ள மலை மீதுதான் வள்ளியம்மை காத்த தினைப்புனமும், ஆடி மகிழ்ந்த  சோலைகளும் உள்ளன. இப்பகுதியில் வாழும் மலையக மக்கள் வள்ளியைத் தங்கள் குடிப்பிறந்த மகளாகப்  போற்றுகின்றனர். மலையில் புனச்சோலை, வள்ளிச்சோலை, கிழவன் சோலை முதலிய இடங்கள் வள்ளி வளர்ந்ததை  நினைவூட்டிக்கொண்டிருக்கின்றன.  

கருவறையில் முருகன் கம்பீரமாக ஏறத்தாழ எட்டடி உயரத்துடனும் அவருக்கு ஏற்ப வலப்பாகத்தில் வள்ளி ஆறடி  உயரத்திலும் காட்சியளிக்கின்றனர். இது தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய முருகன் வடிவமாகும். இவருக்கு லட்சண  குமாரர் என்பது பெயர். இத்தலத்தில் வள்ளி திருமண விழா சிறப்பாக நடைபெறுகிறது. முருகன் மலை மீதுள்ள  மண்டபத்திற்கு எழுந்தருளுதல், வள்ளியைக் கண்டு மகிழ்தல், அவளை அழைத்துக்கொண்டு வரும்போது குறவர்கள்  மறித்துச்சண்டையிட்டு மாளுதல் அவர்களை வள்ளி மீண்டும் உயிர்ப்பித்தல் முதலியன ஐதீக விழாவாக  நடத்தப்படுகின்றன. இவ்விழாவில் குறவர் படுகளம் என்னும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

வள்ளியைப் பெருமான் சிறையெடுத்து வரும்போது நம்பிராஜனும் அவனது கூட்டத்தாரும் அவரைத் தடுத்துப்  போரிடுவர். அப்போரில் வேட்டுவர்கள் வீழ்ந்து மாள்வர். பின்னர் நாரதரின் வேண்டுகோளின்படி வள்ளியம்மையைக்  கொண்டு முருகப்பெருமான் அவர்களை உயிர்ப்பிப்பார். இதை நினைவூட்டும் வகையில் கொண்டாடப்படும் நிகழ்வே  குறவர் படுகளம் என்று அழைக்கப்படுகிறது.

குமரகோயிலில் நடைபெறும் குறவர் படுகளம் நிகழ்ச்சி மிகப்புகழ் பெற்றதாகும். இதில் குறவர் குலமக்கள் பங்கு பெற்று  நடத்துகின்றனர். இது வள்ளியம்மைக்குரிய சிறப்புத்தலமாக விளங்குகிறது.கேரளம், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில்  முருகனைப் பாம்பு வடிவில் வழிபடும் வழக்கம் அதிகமாக இருக்கிறது. சுப்பிரமண்யா தலத்தினைச் சுற்றியுள்ள  கொல்லூர், மூகாம்பிகா ஆலயம், தர்மஸ்தலா, கேரளத்திலுள்ள கன்னிமங்கலம் முதலிய அனேக இடங்களில் பாம்பு  வடிவில் விளங்கும் குமார சுவாமியைக் காண்கிறோம்.கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் ஆறுமுக சுவாமி சந்நதி  உள்ளது. இதில் பாம்பு படத்தின் நடுவே ஆறுமுக சுவாமியை அமைத்துள்ளனர். சிறிய பாம்பு வடிவங்களும் வழிபாட்டில் உள்ளன.

கேரளத்துப் புராதன தெய்வீகக் கிராமங்களில் ஒன்று கன்னிமங்கலம். பாலக்காட்டிலிருந்து 50 கி.மீ. தொலைவில்  உள்ளது. இவ்வூரில் பெரிய அரச மரத்தின் கீழ் ஐந்து தலை நாகர் அமைக்கப்பட்டுள்ளது. குமார சுப்பிரமணிய சுவாமியே  இங்கு ஐந்து தலை அரவு வடிவில் விளங்குகிறார். இவருக்குக் கேரள பாணியில் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. தைப்  பூசத்தன்றும், குமார சஷ்டியன்றும் திரளான மக்கள் வந்து வழிபாடு செய்கின்றனர். வீதியுலாவாக யானைகளின்  பவனியுடனும், பெரிய விருந்துடனும் சிறப்பாக நடைபெறுகிறது. உள்ளூர்க்காரர்கள் இந்நாளில் தவறாமல் வந்து கூடிப்  பெருமானை வழிபடுகின்றனர். இயலாதவர்கள் தமது காணிக்கைகளை அனுப்பி விடுகின்றனர்.இங்கு ஐந்தலைப் பாம்பின்  நடுவே ஒரு சாண் உயரமுள்ள அழகிய குழந்தை வடிவம் உள்ளது. அதைக் கண்ணன் என்று சிலரும், கந்தனென்றும்  சிலரும் கூறுகின்றனர். கந்தன் என்று போற்றுவதே பெருவழக்காக உள்ளது.சிலர் கண்ணனையும், கந்தனையும்  ஒன்றாகவே காண்கின்றனர். உடுப்பியில் கண்ணன் கோயில் வளாகத்தில் சுப்பிரமணியர் பாம்பு வடிவில் இருப்பதுடன்  அக்கோயிலின் பெருந்தனத்தைப் பாதுகாப்பவராகவும் போற்றப்படுவது இங்கு எண்ணத்தக்கதாகும்.

உடுப்பி கிருஷ்ணன் ஆலயத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கென பெரிய சந்நதி உள்ளது. இதில் முருகன் பாம்பு வடிவில்  மேற்கு நோக்கியுள்ளார். பாம்பு படத்தின் நடுவே முருகன் திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது. இப்போது, சுப்பிரமணிய  சுவாமி ஆலயம் அமைந்துள்ள இடத்தில்  பெரும் பொருள் புதையலாக இருந்ததென்றும், அதை முருகன் பாம்பு வடிவம்  கொண்டு காத்து வந்து தேவைப்பட்டபோது அளித்ததாகவும் தலவரலாறு கூறுகிறது. தல வரலாற்றைக் குறிக்கும்  காட்சிகள் இந்தச் சந்நதியைச் சுற்றிலும் சுவர்களின் வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.

முருகனின் மயிலுக்கு உக்ரதுரகம் என்பது பெயர். துரகம் என்றால் குதிரை, முருகனின் மயிலை பச்சைப்புரவி (பச்சைக்  குதிரை), தோகைப் பரவி (தோகையை உடைய குதிரை), ஆடும்பரி (ஆடிக் கொண்டிருக்கும் குதிரை) என்று  குதிரையாகவே குறிக்கின்றனர். துரகம், புரவி, பரி என்பவை குதிரையைக் குறிக்கும் சொற்களாகும்.குதிரை அடங்காமல்  துள்ளும் தன்மை உடையது. அதை அடக்கி, தமது விருப்பப்படிச் செலுத்த அதற்குக் கடிவாளம் அணிவிக்கின்றனர்.  குதிரையின் வாயில் பொருத்தி அதன் இரு முனைகளும் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் வகையில் அமைந்த  கம்பியின் முனைகளில் வளையங்களைப் பொருத்தியுள்ளனர். அதில் தோல் வார்களை இணைத்து குதிரையின்  பிடரியில் கட்டியிருப்பர். மேலும் அவற்றிலிருந்து இரண்டு வார்களை இணைத்துக் கைப்பிடியாக வைத்திருப்பர். இதை  இழுப்பதன் மூலம் குதிரையின் வாயில் உள்ள கம்பி இழுபட்டுக் குதிரையை அடக்கும். இதனைக் கடிவாளம் என்று  அழைப்பர். முருகனின் மயில் உக்ரமான, ஆர்ப்பரிக்கும் குதிரையாக இருப்பதால் அதற்கு முருகன் நாகங்களைக்  கடிவாளமாக இட்டுள்ளான். அந்த நாகங்களும் சாதாரணமானவையல்ல. அஷ்ட மாநாகங்களே கடிவாளமாக  இருக்கின்றன.

நாகங்களைக் கொண்டு கட்டப்பட்டிருப்பதால் மயிலுக்கு நாகபந்தம் என்பதும் பெயர். அருணகிரிநாதர், ‘நாகபந்த மயூரா  நமோ நம’ என்று கூறுவதைக் காண்கிறோம். மயில் வாகனங்களை அமைக்கும்போது அதன் அலகில் நாகங்களைச்  சேணங்களாக அமைத்தனர். காலப்போக்கில் கலைஞர்கள் நாகத்தைச் சேணமாக அமைக்காமல் அலகில் பற்றியிருப்பது  போல் அமைக்கத் தொடங்கி விட்டனர். அத்துடன், மயிலின் பாதத்தடியிலும், பெரிய பாம்பை அமைக்கின்றனர்.மயில் அட்டமா நாகங்களை வென்றடக்கிய தன் நினைவாக இப்படி அதன் பாதத்தடியில் பாம்பு வடிவத்தை  அமைக்கின்றனர் என்பர். சில மயில் வாகனங்களில் இரண்டு பாம்புகளும் உள்ளன.

ஆலயங்களில் கருங்கல்லால் அமைந்த இறை வடிவங்களையும், அதன் பீடத்தையும் அஷ்டபந்தனம் என்ற மருந்து  கொண்டு இணைப்பர். கும்பாபிஷேகத்தின் மிக முக்கிய நிகழ்ச்சியாக மருந்து சாத்துதல் எனும் அஷ்டபந்தனத்தினை  சாத்தும் நிகழ்ச்சி அமைகிறது. பல ஆலயங்களில் அஷ்டபந்தனத்தின் அதில் வெள்ளித் தகடுகளைப் பதித்தும் (ரஜித  பந்தனம்) தங்கத் தகடுகளைப் பதித்தும் (சுவர்ண பந்தனம்) செய்து கும்பாபிஷேகம் செய்வது வழக்கமாகும். பன்னிரண்டு  ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மருந்தைச் சாத்தினால்தான் தெய்வீக ஆற்றல் அங்கு முழுமையாக இருக்கும் என்று  பூஜா பத்ததி நூல்கள் கூறுகின்றன.

இதையெல்லாம் கடந்து ஒரு பாம்பே முருகனுக்குப் பந்தமான செய்தி வியப்பைத் தருகின்றது. வடாற்காடு  மாவட்டத்தில் செங்கம் போளூர் பாதையில் அமைந்துள்ள மோட்டூர்-வில்வாரணி எனும் ஊர்களுக்கு இடையே ஒரு சிறு  குன்று அமைந்துள்ளது. இதன் மீது நட்சத்திரக் கோயில் என்றழைக்கப்படும் அழகிய முருகன் ஆலயம் உள்ளது. இங்கு  சுயம்பு மூர்த்தியாக சிவலிங்க வடிவில் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார். இதற்கான காரணத்தை விளக்கும்  செவிவழிக் கதை ஒன்று இப்பகுதியில் வழங்குகின்றது.

ஒரு சமயம் ஐயாசாமி சிவாச்சாரியார், முன்சீப் ஐயா என்ற இரண்டு அன்பர்கள் இப்பகுதியில் வாழ்ந்து வந்தனர்.  அவர்கள் இருவரும் கிருத்திகை தோறும் திருத்தணிக்கு அன்பர்களுடன் சென்று முருகப்பெருமானை வழிபட்டுத்  திரும்புவது வழக்கம். அவர்கள் பல ஆண்டுகள் தொடர்ந்து இந்த அருட்பயணத்தை மேற்கொண்டிருந்தனர். வயது  முதிர்ந்த நிலையில் அவர்களால் பயணம் மேற்கொள்ள முடியவில்லை. அவர்கள் வருந்தி அழுது தங்கள்  இயலாமையை முருகப்பெருமானிடம் முறையிட்டனர்.

அவர்களுக்கு இரங்கிய முருகப்பெருமான் அவர்களுடைய கனவில் தோன்றி இங்குள்ள மலையே தணிகை மலையாக  நினைத்து இந்த மலையின் மீது ஏறி வருமாறும் அங்கு தாம் அவர்களுக்குக் காட்சி அளிப்பதாகவும்கூறினார்.  நள்ளிரவில் கண்விழித்த அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விசாரித்து கனவினை நினைத்து ஆர்வம் மிகுதியால்  அந்த இரவிலேயே மலை மீது ஏறி முருகனைத் தொழுதனர்.

அவர்களுக்குப் பெருமான் மின்னல் போல் காட்சியளித்தார். அவர்கள் தங்களுக்கு முருகன் காட்சியளித்த இடத்தில் ஒரு  சுயம்புலிங்கம் இருப்பதைக் கண்டு அதனைத் தொழுது மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் மலையை விட்டிறங்கித் தாம்  பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றபடி அங்குள்ள மக்களை அழைத்துக் கொண்டு மலைமீது சென்றனர். அதற்குள்  பொழுது புலர்ந்து விட்டது.

அவர்கள் இருளில் ஒளி வடிவில் தமது கண்முன் கண்டு மகிழ்ந்த இறைவனையும் சுயம்புலிங்க வடிவான  முருகனையும், இப்போது இனம் காண முடியாது வருந்தினர். அப்போது ஒரு பாம்பு தோன்றியது. அது அந்த  சுயம்புலிங்கத் திருமேனியை சுற்றி வளைத்தது. பின்னர் அனைவரும் காண அதற்குப் பந்தனமாகியது.

உடனே அனைவரும், ‘‘முருகா, முருகா’’ என்று விண்ணதிர ஒலியெழுப்பிய பின்னர், தொடர்ந்து அங்கே  வழிபாடுகளை நடத்த ஏற்பாடு செய்தனர். அந்தக் கோயிலே இன்று நட்சத்திரக் கோயில் என்று வடாற்காடு  மாவட்டத்தில் தனிச் சிறப்புடன் திகழ்கிறது. கிருத்திகை தோறும் ஏராளமான மக்கள் இங்கு வந்து வழிபாடு  செய்கின்றனர்.இங்கு மலையடிவாரத்தில் விநாயகர், ஆஞ்சநேயர், நவகிரகம் ஆகியோருக்குச் சிற்றாலயங்கள் உள்ளன. அழகிய  அலங்கார மண்டபம் உள்ளது. இங்கிருந்து மலைக்குச் செல்ல நன்கு செதுக்கி அமைக்கப் பெற்ற படிகள் உள்ளன. அதில்  ஏறிச் சென்றால் மேற்கு நோக்கிய தலைவாயிலை அடையலாம். இதன் வாயிலிலும் ஒரு விநாயகர்  எழுந்தருளியுள்ளார். அவரை வணங்கி மூன்று நிலை கோபுரம் கொண்ட இந்த வாயிலைக் கடந்து உட்சென்றால் அகன்ற  பிராகாரத்தை அடையலாம்.இங்கு வலம் வரும்போது சிவலிங்கமும், அம்பிகையும் எழுந்தருளியுள்ள சந்நதிகளைக்  காண்கிறோம். இனி வலம் வந்து கிழக்குப் பக்கத்திலுள்ள மகா மண்டபத்தை அடையலாம். மகா மண்டபத்தின் மேற்கில்  கிழக்கு நோக்கியவாறு கருவறை அமைந்துள்ளது. கருவறையில் சிறிய சுயம்புலிங்கத் திருமேனியாக முருகப்பெருமான்  காட்சி அளிக்கிறார். எனவே இவருக்குச் சிவசுப்பிரமணிய சுவாமி என்பது பெயராயிற்று.

இதற்குப் பின்புறம் அமைந்த மேடையில் அழகிய கல் திருமேனிகளாக முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோரின்  திருவுருவங்கள் அமைந்துள்ளன. முருகப்பெருமானின் மீது ஐந்து தலைநாகம் படம் எடுத்து குடைபிடித்துக்  கொண்டிருப்பது போல, பித்தளையினால் செய்து பொருத்தியுள்ளனர்.சுயம்பு லிங்கமான சுப்பிரமணிய சுவாமியைச்  சுற்றிலும் கவசம் அமைக்கப்பட்டு உள்ளது. கருவறையின் முன்னுள்ள மகா மண்டபத்தின் வடக்கில் தெற்கு  நோக்கியவாறு அமைந்த சந்நதியில் உலாத் திருமேனியாக சிவசுப்பிரமணிய சுவாமியும், வள்ளி தெய்வானை  நாச்சியார்களும், விநாயகர், சுமந்தரீஸ்வரர், வீரபாகு, அஸ்திரதேவர் ஆகியோரும் எழுந்தருளியுள்ளனர். மகா  மண்டபத்தின் முன்புறம் கொடிமரமும் மயிலும் பலிபீடமும் அமைந்துள்ளன.

இக்கோயிலில் சிவாச்சாரியாரால் நான்கு கால பூஜை சிறப்புடன் நடைபெறுகிறது. ஆடிக் கிருத்திகை, தை மாத  கிருத்திகை முதலியன சிறப்புடன் கொண்டாடப்படுகின்றன.இந்த மலையின் மீது அழகிய சிறு குளமும், வற்றாத  சுனைகளும் உள்ளன. மிகவும் சிதைந்த நிலையில் அழகிய மரச்சிற்பங்கள் கொண்ட தேர் உள்ளது. நாக வடிவில்  முருகப்பெருமான் தோன்றித் தன்னை வெளிப்படுத்திய இடமாதலின் நாகதோஷங்கள், ராகு, கேது கிரகங்களால் ஏற்படும்  தொல்லைகள் புத்திர தோஷங்கள் முதலியவை விலக இக்கோயிலுக்கு வந்து அன்பர்கள் வழிபாடு செய்கின்றனர்.  திருவண்ணாமலைக்கு அருகில் மோட்டூருக்கும் - வில்வாரணிக்கும் இடையில் இந்த நட்சத்திரக் கோயில்  அமைந்துள்ளது.

திருமுருகப் பெருமான் பெரும் பாம்பின் மையத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் தலங்களில் ஒன்று, சென்னை -   மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள ஓம் முருகாஸ்ரமம் ஆகும். இங்கு மூலத்தானத்தில் அறுகோணப் பீடம்  அமைந்துள்ளது. இதன் மீது உடலைச் சுருட்டி ஆசனமாகவும், ஐந்து தலைகளையும் நன்கு விரித்துக் குடையாகவும்  கொண்ட மகா நாகத்தின் சுதை வடிவம் அமைந்துள்ளது. இதன் வால் பின்புறமுள்ள இருவாட்சி மரத்தினைச்  சுற்றியவாறு பூமியில் படிந்துள்ளது.இந்த மகா நாகத்தின் மையத்தில் பெரிய லிங்கம் போன்ற பிரபா மண்டல அமைப்பும்  அதன் நடுவில் ஓம் எனும் எழுத்தில் ஒளிப்பவனாக மயிலினைத் தழுவி மகிழும் இளங்குமரன் சிறப்புடன்  காட்சியளிக்கின்றார்.

அறுகோண வடிவில் அமைந்த ஆலயத்தில் ராஜகம்பீரனாக முருகப்பெருமான் பக்தர்களுக்குக்காட்சியளிக்கின்றார்.  முருகப்பெருமானுக்குரிய அனைத்து விழாக்களும் இங்கு மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகின்றன. பங்குனி  உத்திரத்தில் வள்ளி திருமணப் பெருவிழாவும், ஐப்பசி மாத கந்தர் சஷ்டிப் பெருவிழாவினையொட்டித் தெய்வானைத்  திருமணமும் மிகச் சிறப்புடன் கொண்டாடப்படுகின்றது. இந்த ஆலயத்தில் நடைபெறும் சிறப்புமிக்க அலங்காரங்கள்  கண்ணையும் கருத்தையும் கவர்வதாக அமைகிறது. கிருத்திகை தினங்களில் ராஜ அலங்காரமும், சஷ்டி தினங்களில்  விபூதி சந்தன அலங்காரங்களும், சிறப்புமிக்க விசேஷங்களில் அந்தந்த திருநாளுக்கேற்ப அலங்காரங்களும் சிறப்பாக  நடைபெறுகின்றன. எடுத்துக்காட்டாக அனுமத் ஜெயந்தி நாளில் முருகனை அனுமராகவும், மார்கழி மாதக் கூடாரவல்லி  நாளில் ஆண்டாளாகவும் அலங்கரிப்பது காண்பதற்கு இனிய காட்சிகளாகும்.