பேரின்பம் நல்கும் பெருமைக்குரிய பெரிய திருவடிகருடசேவை -29.5.2018

பகவான் கருணையே வடிவானவன். பக்தர்களுடைய வேண்டுகோளை பிரார்த்தனையால் நிறைவேற்றுபவன். தன்னை யார் சரண் அடைகிறார்களோ, அவர்களை கடைசி வரை காத்து ரட்சித்துக் காப்பாற்றக் காத்திருப்பவன். அப்படிப்பட்ட பரம்பொருளைச் சிந்திக்க விழா எடுத்துக் கொண்டாடுவது சரி, ஆனால், அதைத் தாங்கும் வாகனம் என்று ஒரு பறவையை உயர்த்தி அதன் பெயராலேயே ‘கருட சேவை’ என்று ஒரு உற்சவத்தை ஏற்படுத்தி அதைச் சீரும் சிறப்புமாக விமரிசையாகக் கொண்டாடி மகிழ்கிறார்களே, ஏன்?

மானிட உருவத்திற்கு இறகுகள் கூட்டி அதை தேவபாணியாக்கி வழிபடுவது என்பது புராதன காலம் தொட்டே நடைமுறையில் தொடர்ந்து இருந்து வரும் பழக்கமாகும். பாரத தேசத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இந்த வழிபாடு இருந்து வருகிறது.கி.மு. 2600ல் சுமேரிய மன்னன் மதுக் கோப்பைகளை அழகுபடுத்துவது, பின்னிப் பிணைந்த நாகங்களைக் கொத்தும் சிறகுகள் கொண்ட பறவை போன்ற மானிட உருவைக் கொண்டதாக இருந்தது.
மெசபடோமியாவில் வழிபாட்டில் இருந்த எல்லா தெய்வங்களுக்கும் இறகுகள் இருந்தன. இறகுகள் இல்லாத தெய்வங்களே இல்லை.

ஹோமரின் ‘இலியத்’ எனும் மகாகாவியத்தில், உதிரம் கொட்டும் அரவத்தைப் பிடித்த கருடன் வானில் வட்டமிட்டதை, கல்சாஸ் என்ற ஜோதிடன் ‘இது மகா உத்தம சகுனம்’ ஆகும். ‘ட்ரோஜன் மக்களை கிரேக்கர்கள் அடக்கும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்பதைக் குறிக்கிறது’ என்று கணித்துச் சொன்னானாம்.கிறிஸ்துவ மதத்தில் வரும் ‘தேவதைகள்’ என்றாலே சிறகு விரித்த, அழகிய பெண் குழந்தைகளின் இனிய தோற்றமே நினைவுக்கும் வரும் இல்லையா? மாத்யூ எழுதிய நூலில் அத்தியாயம் 6-26 என்ன சொல்கிறது? ‘‘ஆகாயத்தில் பறவைகளை கவனித்துப் பாருங்கள்!’’ என்று தானே சொல்கிறது.காம்போஜம் எனும் நாட்டில் கருடன் தான் ஆலயங்களைத் தாங்குகிறது என்று ஐதீகம் பேசி, அதற்கேற்ப சிற்பங்களையும் அமைத்துள்ளனர்.

அமெரிக்க நாட்டின் சின்னமாக ‘கருடன்’ தானே உள்ளது. இப்படி உலகம் முழுவதும் கருடன் பற்றிய உயர்வான கருத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. நம் பாரத நாட்டில் கருடன் இறைவனாகவே பாவிக்கப்படுகிறான்.வேதகால சூரியன், புராண காலத்தில் விஷ்ணு, வாசுதேவன், நாராயணன் என்றெல்லாம் மாறிய போது ‘கருத்மான்’ என்ற பறவையே கருடனாகப் பரிணமித்தது. அத்துடன் வாசுதேவனுக்கு வாகனமாகியது. அதற்குப் பொன்மயமாகிய சிறகுகள் படர்ந்ததால் ‘சுபர்ணா’ என்றும், வானத்தில் வட்டமிடுவதால் ‘சுகனேஸ்வரன்’ என்றும், விஷ்ணுவுக்கு ஊர்தியானதால் ‘விஷ்ணுரத’ என்றும், நாகங்களுக்கு யமனாகியதால் ‘நாகாந்தகன்’ என்றும், புஜகாந்தகன் என்றும், நாகாசனன் என்றும் பல நாமங்களைக் கருடன் பெற்றிருந்தான்.

வேதங்களிலேயே ‘கருத்மான்’ என புகழப்பட்ட கருடன் என்ற புள்ளரசு. தீரம் என்ற சொல்லுக்கு உருவமாகியது என ‘சதாபதபிரமாணம்’ புகழ்கிறது. சாமகானம் உடல் ஆகவும், 3 வேதப் பொருள் இறகு என்றும், அதர்வண வேதம் பிறபாகம் எனவும் போற்றுகிறது.ராமாயணம், மகாபாரதம், பகவத் புராணம், மச்ச புராணங்களில் ‘கருடன்’ சிறப்பிக்கப்பட்டதோடல்லாமல் இவருக்கு ‘கருட புராணம்’ என்ற தனிக் கிரந்தமே எழுந்தது. இதில் கருடன் தர்ம சாஸ்திரம், நீதி சாரம், பிரேத கல்பம், வியாகர்ணம், சந்தஸ், ஜ்யோதிஷம், சாமுத்ரிகா லட்சணம், ரத்தினப் பரீட்சை ஆகிய பல விஷயங்களை ‘கருட புராணம்’ போதிப்பதாகக் கூறப்படுகிறது.

வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது கருடப் பறவையே முன்னிலை பெற்றுத் திகழ்கிறது.கி.மு. 140ல் குவாலியர் பிராந்தியத்தில் விதீஷா எனும் நகரில் எழுந்த ஒரு துவஜஸ்தம்பம் கருட கம்பமாகியது. கிரேக்க மன்னன் அம்தலிக்காவின் யவன தூதனான தியாஸனின் புத்திரன், தட்சசீலாவாசி, பாகவதனான ஹீலியோடோரா, தேவதேவனான வாசுதேவனுக்கு எழுப்பிய கல்லாலான ஸ்தம்பத்தின் சிகரத்தில் ‘கருடனை’ எழுந்தருளப் பண்ணினான் என்ற கல்வெட்டு - இந்தியாவில் கருடனுக்கு எழுந்த முதல் கற்சிலையும் கல்வெட்டுமாகும்.‘ருக்’ வேதத்தில் ‘‘வேதம் தேவத்ரா’’ என துதிக்கப்பட்ட சூரியனே இங்குவாசுதேவனாகி ‘தேவதேவ’ என சிலாகிக்கப்படுகிறார். அதனால் கருடன் திருமாலின் வாகனம் ஆனார். அவரும் ‘கருடத்வஜன்’ ஆனார். கிருஷ்ண பரமாத்மாவுக்கு உரிய கொடியில் சின்னமாகத் திகழ்வது கருடன்தான். சிசுபால யுத்தத்தில் கிருஷ்ணன் பாசறையில் கருடக்கொடி படபடத்தது என்று பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காணலாம்.

பின்னர் ஆட்சிக்கு வந்த மெளரியப் பேரரசர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களது கலைப்பாணியில் கருடனுக்குப் பங்குண்டு. குப்தர்கள் காலத்தில் கருடனின் மதிப்பு மிகவும் உயர்ந்தது. குமாரகுப்தன், சமுத்திரகுப்தன் ஆகிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்கள் வெளியிட்ட தங்கள் பொற்காசுகளில் ‘கருடனின்’ உருவத்தை முத்திரையாகப் பொறித்தார்கள். சந்திரகுப்த விக்கிரமாதித்தன் என்பவன் டெல்லியில் ஒரு கருட ஸ்தம்பத்தை நிறுவினான். தேவகிரியை தலைநகரமாகக் கொண்ட ஆட்சி புரிந்து வந்த யாதவ மன்னர்களுக்கு கொடியும் சின்னமும் ‘கருடன்’ தான்.

கி.பி. 4ம் நூற்றாண்டு முதல் 6ம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்த குப்தர்கள் நிர்மாணித்த தேவகிரி ஆலயத்தில் உள்ள தசாவதார சிற்பங்களில் கஜேந்திர மோட்சத்தை அழகாகச் செதுக்கியுள்ளனர். அதில் மகாவிஷ்ணு கருடாரூடனராய், ‘ஆதிமூலமே’ எனக் கதறிய கஜத்தைக் காக்க, ‘‘புள் ஊர்ந்து, ஆழி தொட்டு அபயமளித்தான்’’ என்ற ஆழ்வார்கள் அருளிய பாசுரத்தின் ஜீவன் ததும்புவதைக் காணலாம்.பெளத்த மதத்திலும் இப்பட்சிராஜன் ஊடுருவினான். அமராவதியில் கருடனும் நாகங்களும் வணங்குவதைக் காணலாம். பர்கூத் சிற்பம் ஒன்றில் கருடன் சிகரமொட்டாக நீண்ட தண்டைக் கையிலேந்திய ஓர் அச்வபதியைக் காணலாம்.தஞ்சாவூர் சரஸ்வதி மகாலில் உள்ள ‘கஜ சாஸ்திரம்’ என்ற நூலைப் போன்று, வடக்கே ‘மாதங்கலீலா’ என்ற ஒரு யானை சாஸ்திர நூல் உள்ளது. அதில் காலச்சக்கரம் உதிக்கும் போதே யானையும் சுபர்ணா என்ற கருடனும் தோன்றினார்கள் என்று கூறுகிறது.

நேபாளத்தில் ‘கருடநாக யுத்தம்’ என்று ஒரு பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதில் கருட விக்கிரகத்துக்கு வேர்வைகள் துளிர்க்க, அர்ச்சகர் அதைத் துணியில் ஒத்தி, அதைப் பிரசாதமாக அரசருக்கு அனுப்பி வைக்கிறார். அந்தத் துணியில் உள்ள ஒவ்வொரு இழை நூலும் பாம்பு விஷம் படிந்தவர்களுக்குக் கையில் கட்ட விஷம் இறங்கப் பயன்படுகிறது என்று கோலாகலமாய் கொண்டாடுகிறார்கள்.அதே போன்று இங்கே சூளுர்பேட்டைக்கு அருகில் உள்ள ‘மன்னார் போலூர்’ ஆலயத்தில் நடைபெறும் ‘கருடபங்க’ நிகழ்ச்சியின் போது கருடன் கண்களில் சதா நீர் வழிய, அதை பட்டர் ஒருவர் துணியால் ஒத்தி எடுப்பது பலரும் அறிந்திராத விஷயமாகும்.

ஒரு சமயம் சுவர்ணமேருவுக்கு தன்னை மிஞ்சிய பர்வதம் இல்லை என்ற கர்வம் ஏற்பட்டு விட்டது. இத்தகைய தருணங்களில் தானே நாரதர் கதாநாயகர் ஆகிறார். உடனே சென்று மெதுவாக வாயுவை ஏவி விட்டார். வாயு சிகரங்களை உருட்ட மேரு கருடனை உதவிக்கழைக்க, அது தன் விரிந்த சிறகால் வாயுவை அண்டவிடாமல் தடுத்தது. விடுவாரா நாரதர். கருடன் இல்லாத சமயம் பார்த்து வாயுவுக்குத் துப்புக் கொடுக்க மேருமலை தன் சிகரத்தை இழந்தது. வாயு பெயர்த்து கடலில் வீசப்பட்ட அச்சிகரத் துண்டே இலங்கைத் தீவு என்கிறது புராணம். மேலும், கருடனின் பெருமைகளைப் பற்றிப் பல புராணங்கள் கூறுவனவற்றையும், வரலாற்றுச் சான்றுகளையும் பார்ப்போம்.

புள்ளரசான கருடன் தேவலோகத்தில் இருந்து அமுதம் கொண்டு வரும்போது கூடவே தர்ப்பைப் புல்லையும் கொண்டு வந்து பதித்தனன். ஆதலால் தர்ப்பைப் புல் புனிதமானது.கருடன், வலாசுரன் என்ற அசுரன் உடலைத் தின்று நகைத்து உமிழும்போது கருடோற்காரமென்னும் மரகத ரத்னமென்னும் கருடப்பச்சை உண்டாயிற்று. இந்த அசுரனது எலும்புகள் வைரமாயின.கருடனின் வலிமை கண்டு வியந்த திருமால் கேட்டுக் கொள்ள அவருக்கு வாகனமும் கொடியும் ஆனவன்.ஒரு முறை காளியன் என்னும் நாகன் ரமணகத் தீவில் உள்ளாரை வருத்த அவர்களுக்கு கருடன் அபயந் தந்து அக்காளியனை யமுனை மடுவில் ஓடும்படி செய்வித்தான்.

கண்ணபிரான் புத்திரப்பேற்றின் பொருட்டு உபமன்னியுவுடன் சிவதீட்சை பெற்றுத் தவம் செய்கையில் துவாரகையை அவுணர் வளைக்க அவர்களைப் போரிட்டுக் கொன்று கோட்டையைக் காத்தவன் கருடன்.ராவணவதத்தின் போது இந்திரஜித்துடன் போர் செய்த லட்சுமணன் நாக பாசத்தால் கண்டுண்ட காலத்து யுத்த களத்தில் வந்து நாக பாசத்தைப் போக்கி ராமமூர்த்தியைத் துதித்துச் சென்றான் கருடன். பாற்கடல் கடைந்த காலத்து மகாவிஷ்ணுவின் கட்டளையால் மந்தர மலையை ஏந்தி நின்றவன் கருடன். ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிரீடாசலங் கொண்டு வந்து பூமியில் பதித்துத்
திருமாலை எழுந்தருளப் பண்ணியவன் கருடன். இதுவே திருமலை - திருப்பதி எனும் திருவேங்கடமலையாயிற்று.பாதாள லோகத்திலிருந்த உபரிசரவசு என்பவனை பூமிக்குக் கொண்டு வந்து, அவனுக்கு அரசு பதவி பெற்றுத் தந்தவன் கருடன்.

திருக்கயிலாயத்துக்கு கர்வத்துடன் சென்று அவ்விடத்திலிருந்த நந்தியம் பெருமானின் உச்வாச நிச்வாசங்களில் அகப்பட்டு மயங்கித் துதித்தவன் கருடன். இவனுக்கு புள்ளரசு, சுகபதி, நாகாரி, பெரிய திருவடி, கருத்மந்தன் என்று பல பெயர்களும் உண்டு என்கிறது திருக்கழுக்குன்ற புராணம்.வால விருத்தையென்பவள் தவம் புரிகையில் அவளுக்கு இடையூறு விளைவித்து, தன் இரு சிறகுகளையும் இழந்த கருடன், பின் சிவபூஜை செய்து அவற்றைத் திரும்பப் பெற்றான் என்கிறது திருவாரூர் புராணம்.ஒரு சமயம் திருப்பாற்கடலின் மத்தியில் உள்ள சுவேதத் தீவிலிருந்து பாற்கட்டிகளைக் கொணர்ந்து தன் பிடரிச் சட்டையினால் உதறி எங்கும் சிதறியடிக்க அவை சுவேத மிருத்திகை ஆயின. இம்மிருத்திகையே ‘ஊர்த்வ புண்டரம்’ எனும் தரித்தற்குரிய பொருளாயிற்று.

தேவலோகத்திலிருந்து அமிர்தம் கொணர்ந்தவன் என்பதால் அமிர்த கலசத்துடன் மூலவர், உற்சவர் என இரு கருடாழ்வார்களை ஸ்ரீரங்கத்தில் காணலாம். மூலவர் பிரம்மாண்ட வடிவில் காட்சியளிக்கிறார்.மாங்காடு திருத்தலத்தில் வடிக்கப்பட்டுள்ள கருடன் வடிவம் இறகுகளில் ஒவ்வொரு அலகும் தனித்தனியே பொளியப்பட்டு சிற்ப சிகரமாய் விளங்குகிறது. திருவெள்ளியங்குடி திருத்தலத்தில் அருள்புரியும் கருடனுக்கு சங்கு சக்கரங்கள் இருப்பதால் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். இது வேறு எந்தவொரு வைணவத் தலங்களிலும் காண முடியாத அதிசயம்.நாச்சியார் கோயில் எனப்படும் திருநறையூர் திருத்தலத்தில் உள்ள கல்கருடன் விசேஷமானது. கருட சேவையின் போது சந்நதியில் 4 பேர்கள் மட்டுமே தூக்கி வரும் கருட வாகனம் சிறுகச் சிறுக கனத்து அதைத் தூக்க 64 பேர்கள் தேவைப்படும் காட்சியைக் காணலாம். அதிசயமாக, திருமணிமாடக் கோயில் எனும் திருநாங்கூர் திருத்தலத்தில் தை அமாவாசைக்கு மறுநாள் நடக்கும் 11 கருடசேவை தான். அன்று 11 திருத்தலங்களிலிருந்து வரும் 11 திவ்யதேசப் பெருமாள்களையும், கருடாழ்வார் 11 பேரையும் தரிசிப்பது என்பது பெரும் புண்ணியமாகும்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் திருத்தலத்தில் மூலவரான பெருமாள் ரங்கமன்னாருக்கு இணையாக இடப்புறத்தில் கருடாழ்வாரும், வலப்புறத்தில் ஆண்டாள் நாச்சியாரும் காட்சியளிக்கின்றனர். இது வேறு எங்கும் காண முடியாததாகும்.நாடெங்கிலுமுள்ள எண்ணற்ற வைணவத் திருத்தலங்களில் ‘கருடசேவை’யெனும் உற்சவம் சிறப்பாக நடைபெற்றாலும், எல்லாவற்றிற்கும் மேலாக காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப்பெருமாள் கோயிலில் சீரும் சிறப்புமாக விமரிசையோடு பத்து நாட்கள் கொண்டாடப்படும் ‘கருட சேவை’தான் உலகப் புகழ்பெற்ற உற்சவமாகத் திகழ்கிறது.இங்கு கருடசேவை வருடத்துக்கு மூன்று முறை மட்டும் நடைபெறுகிறது. வைகாசி பிரம்மோற்சவம், ஆனி மாதம் சுவாதி நட்சத்திரம் கூடிய பெரியாழ்வார் சாற்று முறை, ஆடி மாதம் பெளர்ணமி கஜேந்திர மோட்சம் ஆகிய வைபவங்களின் போது நடைபெறுகிறது. கருடனின் பெருமையை கருட தண்டகம், கருட பஞ்சாசத் என்று பல நூல்களை இயற்றிப் பெரிய திருவடிக்குப் பெரும்புகழ் சேர்த்தவர் நிகமாந்த மகாதேசிகன் சுவாமிகள் ஆவார்.

தெலுங்கில் உள்ள யட்சகானம் போல் எழுந்தது ‘கருடா சலம்’ என்ற நாடகம். வடமொழியில் உள்ள கருட புராணத்தைத் தமிழில் நூலாக்கியவர் கவித்தலம் துரைசாமி மூப்பனார் எனும் புலவர் பெருமானாவார்.இவ்வளவு பெருமைகள் கொண்ட கருடனுக்கு ஆவணி சுக்லபட்ச பஞ்சமி அன்று பெண்கள் கருட பஞ்சமி விரதம் அனுஷ்டிப்பதும், கருடனை தரிசிப்பதும் மகா புண்ணியம் என்று நம்புகின்றனர்.ஆன்மிக அன்பர்களால் ‘பெரிய திருவடி’ என்று போற்றப்படுகின்ற கருட பகவானை தரிசிப்பது மகா புண்ணியம் என்று கிராமங்களில் அந்திப்பொழுதில் பெரியவர்கள் கருடன் காட்சிக்குக் காத்திருந்து, தென்பட்டதும் ‘கிருஷ்ணா, கிருஷ்ணா’ என்று பயபக்தியுடன் கன்னத்தில் போட்டுக் கொள்வதும் தெரிந்ததே!

 - டி.எம்.இரத்தினவேல்