வேண்டுவோம் அன்னை பராசக்தியின் பேரருளை!



மன இருள் அகற்றும் ஞானஒளி 40

நாம் என்னதான் மனதிற்கு கட்டுப்பாடுகள் விதித்தாலும் நம் மனம் நம்மை மீறி ஊர் சுற்ற கிளம்பி விடுகிறது. இதுதானே யதார்த்தமான உண்ைம!
திருமந்திரத்திலே ஓர் அருமையான பாடல்:

‘‘அது இது என்னும் அவாவினை நீக்கித்
துதியது செய்து சுழியுற நோக்கில்
விதியது தன்னையும் வென்றிடலாகும்
மதி மலராள் சொன்ன மண்டலம் மூன்றே!’’

இந்தப் பாடலின் பொருள் என்ன?தடுமாற்றமும் மன சஞ்சலமும் நீங்கும். எப்படி? சிவபெருமானின் பத்தினியான பார்வதி அம்மையை மனதில் நிலைநிறுத்தினால் மனம் லேசாகும், மன மாசு தீரும், தேவையற்ற எண்ணங்களும் நம்மை விட்டு நீங்கும்.சிலை செய்கிற சிற்பி கற்சிலையை செதுக்கும்போது தேவையற்ற பாகங்களை முதலில் வெட்டி வெளியே எறிந்து விடுகிறாரே, அதுபோல. தேவையற்றதை போக்கினாலே தேவையானது நமக்கு கிடைக்கும்.அதுபோல நம் விதியை நாம் வெல்ல வேண்டுமானால் அது அப்படி நடக்கும், இது இப்படி நடக்கும் என்று மனம் சதா சர்வகாலம் தேவையற்ற ஆராய்ச்சியில் ஈடுபடுவதை முதலில் தடுக்கும், அன்னை பராசக்தியின் பேரருள்.ஏனென்றால் நம் மனம் ஒன்றிலும் உறுதியாக நிற்பதில்லை, நிலைப்பதில்லை. திருமூலர் பாடலில் எடுத்த எடுப்பிலேயே சொல்கிறார்:

‘அது இது என்னும் அவாவினை நீக்கி’ நம் மனம் இருக்கிறதே அது விசித்திரமானது. இன்றைக்கு வேண்டிய ஒன்றை அடுத்த நாளே நிராகரிக்கும். விருப்பு வெறுப்புக்கு உட்பட்டிருக்கும் நம் மனத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டுமானால் சிற்றின்ப ஆசைகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நம் மனதை நாம் வெளியே எடுக்க வேண்டும். பயிற்சியும் முயற்சியும் இருந்தால் எல்லாம் நம் வசமாகும், கூடவே ஒன்று நம்மை காத்து நிற்கும். அதைத்தான் திருமூலர் ஆணித்தரமாக சொல்கிறார்: ‘விதியது தன்னையும் வென்றிடலாகும் மதிமலராள்’மதிமலராள் யார்? சாட்சாத் அன்னை பராசக்தி தான், இதுதான் வாழ்க்கை, இதுதான் பயணம் என்பது வாழ்க்கையின் முடிந்து போன முடிவல்ல. வாழ்க்கையின் திசைகளையும், திருப்பங்களையும் உருவாக்குபவள் அவள்தானே! இல்லாவிட்டால், ‘கற்பகமே கற்பனைக்கு எட்டாத அற்புதமே’ என்று மகிழ்ச்சியோடு சொல்ல முடியுமா?பரம்பொருளை நினைத்து கண்ணீர் வடிக்கிறார் வள்ளல் பெருமான்! வடலூர் வள்ளல் பெருமான் தமிழருக்கும் தமிழகத்திற்கும் இறைவன் வழங்கிய கொடை! மனிதநேயத்தின் உச்சம் தொட்டவர். இறை உணர்வால் ஆட்கொண்டவர். தன் பாரத்தை அதாவது சுமை முழுவதையும் பரம்பொருளின் மீது இறக்கி வைத்திருக்கிறார்:

‘அம்பலத்தரசே அருமருந்தே
ஆனந்த தேனே அருள் விருந்தே
பொது நடத்தரசே புண்ணியனே
மலைதரு மகளே மடமயிலே
மதிமுக அமுதே இளங்குயிலே
ஆனந்தக் கொடியே இளங்குயிலே’

-இப்படி பராசக்தியின் கடைக்கண் பார்வைக்காக ஏங்குகிறார் வள்ளல் பெருமான்! நம் கண்ணீரைத் துடைக்கக்கூடிய மாபெரும் சக்தியாக திகழ்வது அம்மை தானே!மனதிற்கு கடிவாளம் போடுவது அவ்வளவு சுலபமான காரியமா என்ன? பேச்சில் அடங்கி விடக்கூடிய ஒன்றா அது? திமிறிக் கொண்டு வெளியே வரும் பேராற்றல் மனதிற்கு இருக்கிறது. திருச்சந்த விருத்தத்தில் திருமழிசையாழ்வாரின் பாசுரம் ஒன்று இந்தக் கேள்விக்கான பதிலைத் தருகிறது:

‘இரந்து உரைப்பது உண்டு, வாழி!
ஏமநீர் நிறத்து அமா வரம் தரும்
திருகுறிப்பில் வைத்தாகில், மன்னுசீர்
பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம்
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க             வேண்டுமே!’

வேறு எந்த சிந்தனையும் நம் மனதின் அடி ஆழத்தில் தோன்றாதவாறு இருக்க வேண்டுமானால் இறைவனின் பரிபூரண அருள் நமக்கு வேண்டும். அது கிடைக்காத பட்சத்தில் எதுவும் நமக்கு சாத்தியமில்லை. அந்த அருளைப் பெறுவதற்கு இறைவனிடமே அப்ளிகேஷன் போடுகிறார் ஆழ்வார்.நம் விண்ணப்பத்தை வேறு யாரிடம் கொடுக்க முடியும்? விண்ணிற்கும் மண்ணிற்கும் நாயகனாகத் திகழும் எம்பெருமானிடத்தில் மனம் ஈடுபட்டால் மன அமைதி தானாக சித்திக்குமே!

‘பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம் நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே’ - உன்னை நான் தவணைமுறையில் நினைப்பதை விட்டு விட்டு சதா சர்வகாலமும் உன் திருவடியில் சரணாகதி செய்ய வேண்டும். அதற்கு எந்த இடையூறும் கூடாது. எந்த வில்லங்கமும் எட்டிகூடப் பார்க்கக் கூடாது. அதற்கு உன் கடைக்கண் பார்வை வேண்டும். பரம்பொருளின் மீதான பார்வை என்ன சாதாரணமான ஒன்றா? அப்பர் பெருமான் சொல்வது போல் ‘நினைப்பவர் மனம் கோயிலாகக் கொண்டவன்’ இறைவன்.ஆழ்வார் பெருமக்களும், அப்பர் பெருமானும் ஒன்றிணைந்து கருத்து வெள்ளத்தில் மூழ்கி நமக்கு நல்முத்துக்களை எடுத்துத் தந்திருக்கிறார்கள்.

‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’ - இந்த ஒற்றை வாக்கியத்தில் நம்வாழ்வின் எல்லாப் பொருளுமே அடங்கி விட்டது! பொருளும், ஆசைகளும், தனி மனித வேட்கையும், சுயநலமும் ஆட்சி புரியும் இந்தக் காலகட்டத்திலிருந்து நாம் மீண்டு வருவதற்கு ஒரேவழி இறை சிந்தனை ஒன்றுதான். இதுவே நம் பிரச்னைகளுக்கு அருமருந்தாக இருக்கும்.நமக்கு விழிப்புணர்ச்சியையும் மனபக்குவத்தையும் அந்த மாலவன்தான் தர வேண்டும். அதை நோக்கித்தான் நம் எண்ணங்கள் இருக்கவேண்டும். எண்ணம் திண்ணமாக இருந்தால் நமக்கு எட்டாத பொருள் உண்டா? வேண்டியதை வேண்டுமளவிற்கு தருவதற்கு இறைவன் தயாராக இருக்கிறான். அதற்கான தகுதிகளைப் பெறுவதற்கு நாம் தயாராக இருப்போம்!

(தொடரும்)