குலம் காக்கும் குகாலயப் பெருமாள்!தெலங்கானா - கண்டிச்செருவு

விஜயலட்சுமி சுப்பிரமணியம்


வைணவ சம்பிரதாயத்தில் கோவில் என்றால் திருவரங்கம் ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி ஆலயத்தையே குறிக்கும். ஸ்ரீமஹாவிஷ்ணு, ரங்கநாதர் என்ற திருநாமத்தில் எழுந்தருளியிருக்கும் பல ஆலயங்கள் தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் பல உள்ளன. ஆந்திர மாநிலம் தல்பகிரி, பொலிகொண்டா, புலிவெந்துலா போன்ற இடங்களிலும், தெலங்கானா மாநிலம் ஸ்ரீரங்கபுரம், ஏதுலாபாத், ஹைதராபாத், ஜீயகுட்டா போன்ற இடங்களிலும் உள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாள் ஆலயங்கள்
பிரசித்தமானவை.

தெலங்கானா மாநிலத் தலைநகரான ஹைதராபாத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள கண்டிசெருவு கிராமத்தில் குன்றின் மீதுள்ள குகையில் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் சயனத் திருக்கோலத்தில் அருட்பாலிக்கிறார். இத்திருத்தலத்திற்கும், தமிழக ஸ்ரீவில்லிப்புத்தூருக்கும் இடையே ஒற்றுமையிருப்பதாக இங்குள்ள பக்தர்கள் நம்புகின்றனர். இந்த குகை ரங்கநாதப் பெருமாள் ஆலயம் அமைந்ததன் பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்வு கூறப்படுகிறது.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பாக கேசவ பட்டணம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சிங்காரய்யா என்ற அந்தணர் தன்னுடன் வைணவ பக்தர்களை அழைத்துக் கொண்டு தல யாத்திரையாகச் சென்று கொண்டிருந்தபோது இந்தப் பகுதிக்கும் விஜயம் செய்தார். பக்தர்கள் குழாம், கண்டிச் செருவு கிராமத்திற்கு அருகில் உள்ள ஹொகேடா கிராமத்தில் அனுமந்த பாதம் என்ற இடத்தை நெருங்கியபோது, சாலையோரத்தில் இருந்த ஒரு புற்றிலிருந்து திடீரென்று ஓங்கார ஒலியும், சுகந்த நறுமணமும் வரக்கண்டு அதிசயித்து, கிராமத் தலைவர் மற்றும் மக்களிடம் விவரத்தைக் கூறினர்.

அந்த அதிசயத்தைக் கேள்விப்பட்ட கிராம மக்கள் புற்றினை அணுகியபோது ஓர் அசரீரியைக்கேட்டனர். ஸ்ரீமஹாவிஷ்ணு, தான் ஸ்ரீரங்கநாதராக சயனக் கோலத்தில் புற்றுக்குள் எழுந்தருளியிப்பதாகத் தெரிவித்து, தன்னை எடுத்து ஒரு மாட்டு வண்டியில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படியும், எந்த இடத்தில் அந்த வண்டி தொடர்ந்து நகராது செய்து நின்று விடுகிறதோ அங்கு தன்னை பிரதிஷ்டை செய்து, ஆலயம் எழுப்பும்படியும் ஆணையிட்டார். அனைவரும் புற்றினை அகற்றியபோது அற்புதமான ஸ்ரீரங்கநாதப் பெருமாள் திருமேனியைக் கண்டு மகிழ்ந்து மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.

ஸ்ரீரங்கநாதரை ஏற்றி வந்த வண்டி இந்த கண்டிச்செருவு கிராமத்தில் உள்ள ஒரு சிறிய குன்றை நெருங்கியபோது நின்றுவிட்டது. உடனே பக்தர்கள் ஸ்ரீரங்கநாதர் திருமேனியை இறக்கி அந்தக் குன்றின் உச்சியில் இயற்கையாக அமைந்த ஒரு குகையை கருவறையாக பாவித்து அங்கேயே பிரதிஷ்டை செய்து, அதற்கு முன்பாக ஒரு முக மண்டபத்தையும் கட்டினர். பெருமாள் எழுந்தருளியிருக்கும் இந்தக் குன்று, ரங்கண்ண குட்டா என்றும் ஸ்ரீரங்கநாயக் குட்டா என்றும் அழைக்கப்படுகிறது.

ஸ்ரீஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிப்புத்தூர், ஒரு காலத்தில் ஏராளமான புற்றுகளால் நிறைந்திருந்தது என்றும், ஒரு புற்றிலிருந்து வடபத்ரசாயி (ஆலிலையில் சயனிப்பவர்) கண்டெடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டார் என்றும் சொல்வார்கள். அதேபோல கண்டிச்செருவு ஸ்ரீரங்கநாதப் பெருமாளும் புற்றிலிருந்து தோன்றியதால் இரண்டு பெருமாள் திருமேனிகளுக்கும் தொடர்பு உள்ளது என்றும் இப்பகுதி மக்கள் நம்புகின்றனர். மேலும் ஸ்ரீரங்கநாதப் பெருமாளின்  பாதத்திற்கு அருகில் எழுந்தருளியிருக்கும் தேவியை, கோதா தேவி என்றும் கூறி மகிழ்கின்றனர்.

சுற்றிலும் நெல் வயல்கள் சூழ்ந்து மிக ரம்மியமான இயற்கை ஓவியமாக குன்று அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தைச் சுற்றிலும் உள்ள வயல்களின் அமோகமான சாகுபடிக்கு ஸ்ரீரங்கநாதப் பெருமாளின் கருணையே காரணம் என்று பக்தர்கள் நெகிழ்ந்து, திடமாக நம்புகின்றனர். கண்டிச் செருவு ஆலயம் அமைந்துள்ள குன்றின் மீது ஏறுவதற்கு சுமார் நூறு படிகள் உள்ளன. எளிதாகப் படிகளில் ஏறி ஆலயத்தை அடையலாம். கருவறையின் வலப்புறம் ஒரு பாறையின் கீழ் எழுந்தருளியிருக்கும் வலம்புரி விநாயகரைத் தரிசித்து, தேங்காய்களை உடைத்த பின்னர், பக்தர்கள் ஆலயத்திற்குச் செல்கின்றனர்.

எளிய முக மண்டபத்தை அடுத்து பிரமாண்டமான பாறையில் அமைந்துள்ள குகையில் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் தன் காலடியில் கோதா தேவி பாதசேவை புரிய, பிரகாசமாய் காட்சியளிக்கிறார். பெருமாள் தன் வலக்கையை சிரசின் கீழ் வைத்து, இடக்கையை மார்பில் யோக முத்திரையாகக் கொண்டு பெரிய மீசை, திருநாமத்தோடு பக்தர்களை நேரே நோக்கி யோக பீடத்தின் மீது சேஷ சயனத்தில் சயனித்துக் காட்சி தருவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். பக்தர்கள் பெருமாளின் திருமுக மண்டலத்தை நேராகக் கண்டு களிக்கலாம். பொதுவாக சயனக் கோலத்தில் காட்சி தரும் பெருமாளின் முகம் மேலே நோக்கி பார்த்தபடியே அமைந்திருக்கும். ஆனால், இங்கே நம்மைப் பார்த்தபடி அவர் அருள்வது நம் பாக்கியமே! பெருமாளுக்கு மேலே விதானம் போன்று அமைந்துள்ள பெரிய பாறையின் மீது அழகிய சிறிய விமானம் கட்டப்பட்டுள்ளது.

பக்தர்கள் கருவறைக்குள் சென்று ஸ்ரீரங்கநாதப் பெருமாளை நெருங்கி தரிசனம் செய்யலாம். பெருமாளைத் தரிசித்த பின்னர் பக்தர்கள் அருகில் சென்று அங்கு ஒரு தாம்பாளத்தில் நிரப்பி வைத்துள்ள மங்கள அட்சதையை இரண்டு கரங்களால் அள்ளி பெருமாளுக்கு முன்பாக குவியலாக சமர்ப்பிக்கின்றனர். ஆலய அர்ச்சகர் பெருமாளின் திருமுகத்திற்கு அருகில் வைக்கப்பட்டுள்ள மஞ்சள் சரடை எடுத்து ஒவ்வொரு பக்தருக்கும் கையில் கட்டி விடுகிறார். அட்சதை சமர்ப்பித்து, மஞ்சள் சரடு  கட்டிக் கொள்வது இந்த ஆலயத்தின் பிரத்யேகமான ஒரு வழிபாடாக அமைந்துள்ளது. இவ்வாறு மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டால் பெருமாளின் அருளால் பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.

கண்டிச் செருவு ஸ்ரீரங்கநாதப் பெருமாள் ஆலயத்தில் சித்தரை மாதம் நடைபெறும் ரதோற்சவத்துடன் கூடிய பிரம்மோற்சவத்தின் போது சைத்ர சுக்ல அஷ்டமி, நவமி மற்றும் தசமி நாட்கள் மிக முக்கியமான விழா நாட்களாகும். இந்த  நவமி நாளன்று (ஸ்ரீ ராமநவமி நாள்) ஸ்ரீ கோதா தேவி-ஸ்ரீரங்கநாதப் பெருமாள் திருக்கல்யாணம் மிக விமரிசையாக நடைபெறுகிறது. இந்நாளில் அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவியோடு உற்சவர், ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கண்டெடுக்கப்பட்ட புற்றுக்கு அருகில் உள்ள மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். அங்கு மிகச் சிறப்பாக திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த உற்சவத்தில் கலந்து கொண்டு, நூதன வஸ்திரங்களை சமர்ப்பிக்கின்றனர். முக்கோடி ஏகாதசி, தனுர் மாதப் பிறப்பு, திருவோணம் ஆகியவை திருவிழா நாட்களாகும். இந்த ஆலயத்தில் அன்றாட பூஜைகளும்,

உற்சவங்களும் பாஞ்சராத்ர ஆகம முறையில் நடைபெறுகின்றன. குன்றின் கீழ் உள்ள கண்டிச்செருவு கிராமத்தில் கிராம தேவதைகளாக போச்சம்மா, மாரம்மா தேவியர்  எழுந்தருளியிருக்கின்றனர். இந்த ஆலயம் காலை 6 மணி முதல் இரவு 8மணி வரை பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறந்து வைக்கப்படுகிறது. மாநிலத் தலைநகரான ஹைதராபாத்திலிருந்து 25 கி.மீ தொலைவிலும், ஹயத் மண்டலத் தலைநகரிலிருந்து 8 கி.மீ தொலைவிலும் கண்டிச் செருவு கிராமம் உள்ளது.