குறள் காட்டும் நெருப்பு!



குரலின் குரல் 83

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களில் ஒன்று நெருப்பு. சுடர்வீசும் இந்த நெருப்பு, இலக்கிய உலகில் நிரந்தரமாய்ச் சுடர் வீசிக் கொண்டிருக்கும் வள்ளுவரையும் கவர்ந்திருக்கிறது. தாம் எழுதிய திருக்குறளில் பற்பல குறட்பாக்களில் நெருப்பைப் பற்றிக் குறிப்பிடுகிறார், அவர். பல இடங்களில் தீ என்ற சொல்லாலும் ஓர் இடத்தில் நெருப்பு என்ற சொல்லாலும் அக்னி பற்றிப் பேசுகிறார்.

"தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு! (அடக்கமுடைமை": குறள் எண் - 129)

தீயினால் ஒரு புண் ஏற்பட்டால் அது உள்ளாறும். ஆனால், கடும் சொல்லால் ஏற்பட்ட வடு ஆறவே ஆறாது.
 
"வினைப்பகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்". (வினைசெயல்வகை: குறள் எண் 674)

செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டில் மிச்சம் இருந்தால் அவை நெருப்பின் மிச்சம்போல வளர்ந்து அழிக்கும். எனவே அவற்றை முழுமையாக அழித்துவிட வேண்டும்.

"அகலாது அணுகாது தீக்காய்வார் போல
இகல்வேந்தர் சேர்ந்தொழுகு வார்."  (மன்னரைச் சேர்ந்தொழுகல்: குறள் எண் 691)

மன்னரைச் சேர்ந்து வாழ்பவர் அவரை அதிகம் விலகாமலும் அதே நேரம் அதிகம் நெருங்காமலும் நெருப்பில் குளிர் காய்வதுபோல இருக்க வேண்டும்.

"களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று". (கள்ளுண்ணாமை: குறள் எண் - 929)

போதைப் பொருளைப் பயன்படுத்துபவனை அதன் தீமைகளைச் சொல்லித் திருத்த முயல்வது, நீரில் மூழ்கியவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவதைப் போல்தான்.

"நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்?" (புணர்ச்சி மகிழ்தல்: குறள் எண் 104)

விலகிச் சென்றால் சுடுவதும் அருகே சென்றால் குளிர்ச்சியுடன் இருப்பதுமான விந்தையான நெருப்பை எங்கே பெற்றாள் இவள் எனத் தலைவன் தலைவியைக் குறித்து வியக்கிறான்.

"நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது." (நல்குரவு: குறள் எண் 1049)

நெருப்பில் படுத்துக் கூட உறங்கிவிடலாம். ஆனால் வறுமையில் உறங்குவது என்பது அரிதானது.....வள்ளுவத்தில் மட்டுமல்ல, நம் ஆன்மிகத்திலும் நெருப்புக்கு முக்கிய இடம் இருக்கிறது. நம் இல்லங்களிலும்  ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுகிறோமே? அப்படி நாம் வழிபடுவது ஜோதி வடிவான நெருப்பைத்தான். அம்மனுக்கு அக்கினிச் சட்டி ஏந்தியும், தீக்குண்டத்தில் நடந்து தீமிதி நிகழ்த்தியும் வேண்டுதல் நிறைவேற்றும் வழக்கம் இன்றளவும் நீடிக்கிறது.

தீ இல்லாமல் வேள்வி செய்ய இயலாது. `வேள்வித் தீ’ என்பது பிரபல எழுத்தாளர் அமரர் எம்.வி. வெங்கட்ராம் எழுதிய புகழ்பெற்ற நாவலின் தலைப்பு. யாகங்களைப் பற்றி நம் புராணங்கள் நிறையப் பேசுகின்றன. எல்லா யாகங்களிலும் தீ வளர்க்கப்படுகிறது. தீயே ஆன்மிகத்தின் ஆதாரம். ராமனும் லட்சுமணனும் விஸ்வாமித்திரரது யாகத்தைக் காக்கவே அவருடன் செல்கிறார்கள். வேள்வித் தீயில் மாரீசன், சுபாகு ஆகிய அரக்கர்கள் மாமிசத்தை வீசியெறிய அது நெருப்பில் விழாமல் அம்பால் தடுத்து எதிரிகள் மேலும் அம்பெய்கிறார்கள். சுபாகு அந்தக் கணையால் இறக்கிறான். ஆனால், மாரீசன் கணைக்கு அஞ்சிக் கடலில் மூழ்கித் தப்பித்துக் கொள்கிறான்.

பின்னாளில் பொன்மானாக உருமாறி வந்து ராமனை சீதையை விட்டு வெகுதொலைவு இழுத்துச் சென்றவன் இப்படி அன்று தப்பிப் பிழைத்த மாரீசனே. பகைமை கொண்டவர்களை முழுவதுமாக அழிக்காமல் மிச்சம் வைத்தால் அவர்கள் பிறிதொரு காலத்தில் பெருந்தொல்லை தருவார்கள் என வள்ளுவம் உள்ளிட்ட பல நீதி நூல்கள் சொல்வதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள ராமாயண சம்பவம் இது.
 
துனி என்கிற நெருப்பு பற்றி விவேகானந்தரது சரிதம் பேசுகிறது. வேள்வித் தீ போல் நெருப்பு மூட்டி, அதில் தீய உணர்வுகளையெல்லாம் இட்டுப் பொசுக்கித் தூய்மையடைவதாக ஒரு சடங்கு உண்டு. துனி நெருப்பில் தீயவற்றை தம் சக துறவியரோடு போட்டுப் பொசுக்கி விவேகானந்தர் தூய்மையடைந்ததை அவர் வரலாறு குறிப்பிடுகிறது. துனி நெருப்பு மனத்தின் மாசுகளைப் பொசுக்கும் என்பது நம்பிக்கை.
 
ஷீரடி பாபா துனிநெருப்பை நாள்தோறும் வளர்த்து வந்தார். அவர் ஸித்தி அடைந்த பின்னரும் அந்த நெருப்பு அணையாமல் காப்பாற்றப்படுகிறது. அந்த துனி நெருப்பிலிருந்து கிடைக்கும் புனிதச் சாம்பல் `உதி’ என்ற பெயரில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. வள்ளலார் வடலூரில் பசிப்பிணி அகற்ற ஏற்றிய நெருப்பு இன்றளவும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.   
 
கண்ணகி இடது மார்பைத் திருகி எறிந்து மதுரையை நெருப்பால் எரித்தாள் என்கிறது சிலப்பதிகாரம். `இட முலை கையால் திருகி` என்று எழுதுகிறார் இளங்கோ அடிகள். இடது புறம் உள்ளது இதயம். அவளது இதயக் குமுறலின் உஷ்ணம் வெளிப்பட்டு மதுரை பற்றி எரிந்தது என்று அந்நிகழ்வையே ஓர் உருவகமாகக் கொண்டும் பொருள் கொள்ளலாம். கண்ணகியையும் இந்நிகழ்வையும் மையப் பொருளாக வைத்து `கொங்கைத் தீ` என்ற தலைப்பில் ஒரு நாடகத்தை எழுதியிருக்கிறார் பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி. சிலப்பதிகாரத்தில் பாதிக்கப்பட்ட கண்ணகி மதுரை மீது தீக்கடவுளை ஏவுகிறாள். நான் யாரையெல்லாம் எரிக்கட்டும் எனத் தீக்கடவுள் வினவ, கண்ணகி சொல்லும் பதில் இது:

பார்ப்பார் அறவோர் பசு பத்தினிப் பெண்டிர்
மூத்தோர் குழவி எனுமிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்க!’

பார்ப்பனர்களையும் அறவோரையும் பசுக்களையும் பத்தினிப் பெண்களையும் முதியவர்களையும் குழந்தைகளையும் விட்டுவிட்டுக் கெட்டவர்களைத் தீ எரிக்கட்டும் என்பதே கண்ணகி தீக்கடவுளுக்கு இட்ட ஆணை. யாரையெல்லாம் தீக்கடவுள் எரிக்காது விலக்க வேண்டும் எனச் சொல்லும் கண்ணகி,  அவளின் வாழ்வு பாதிக்கப்படக் காரணமாக இருந்த பொற்கொல்லனை எரிக்க வேண்டும் என ஏன் குறிப்பிடவில்லை என்ற கேள்வி எழுகிறது. கெட்டவர்களை எரிக்க வேண்டும் எனக் கண்ணகி சொன்னாளே? அந்தக் கெட்டவர் கூட்டத்தில் அவனும் ஒருவனாவதால் அவன் எரிக்கப்படுவான் என்பதே இக்கேள்விக்கான பதில்.  பிரகாசிக்கும் தீ பாரதியாரைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது.

"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
   அங்கொரு காட்டிலோர் பொந்திடை
வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
   வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!"

என அக்கினியின் பெருமையைச் சொல்லி எக்காளமிடுகிறார் அவர். தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத் தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா!’ என்கிறார்.

"புகைநடுவினில் தீயிருப்பதைப் பூமியில் கண்டோமே
பகைநடுவினில் அன்புருவான நம்
பரமன் வாழ்கிறான்!"

என்பவையும் மகாகவி வாசகங்கள்.....
கணவன் இறந்ததும் தன்னைத்தானே நெருப்பில் எரித்துக் கொள்ளும் கொடிய வழக்கம் முன்பிருந்தது. தங்கள் கணவர் இறந்ததும் ராஜபுத்திர நங்கைகள் கூட்டம் கூட்டமாக நெருப்பில் இறங்கி மாண்டுபோனதைச் சரித்திரம் பதிவு செய்திருக்கிறது. இவ்விதம் உடன் கட்டையேறும் கொடிய வழக்கத்தைச் சட்டத்தின் மூலம் தடுக்கவென்றே ராஜாராம் மோகன்ராய் என்ற மகான் தோன்றினார். அந்தக் கொடிய வழக்கம் அவரால் ஒழிக்கப்பட்டது. ஒருகாலத்தில் பெண்கள் விஷயத்தில் இருந்த தவறான நெறிகளை சரிப்படுத்தியதில் ராஜாராம் மோகன்ராய் போன்ற ஆண்களுக்கும் பங்கிருந்தது என்பதே நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய பெருமிதம்.

அனுமன் தன் வாலில் வைத்த தீயைக் கொண்டு இலங்கையின் பெரும்பகுதியைத் தன் வாலாலேயே சுட்டான். `ராவணன் அனுமன் வாலில் தீ வைத்தான். அனுமன் எரித்தது இலங்கை என்னும் தீவைத் தான். என இந்த ராமாயண நிகழ்ச்சி குறித்துச் சொற்சிலம்பம் ஆடுவார் கவிஞர் வாலி.  ராவண வதத்திற்குப் பிறகு சீதை தன் தூய்மையை நிரூபிக்க அக்கினிப் பிரவேசம் செய்கிறாள். அந்த நெருப்பு அவளை ஒன்றும் செய்யவில்லை. ஆனால் பின்னாளில் துணிவெளுப்பவன் நாவினால் சுட்ட வடு, அவள் வாழ்வையே சுட்டுவிட்டது. தன்னந்தனியே கானகம் செல்கிறாள் அந்த மாதரசி.

சீதையின் அக்கினிப் பிரவேசத்திற்குக் காரணம் கற்புச் சோதனை அல்ல, வஞ்சனை மானின் பின் ராமன் போனபோது, அண்ணிக்குக் காவலிருப்பதற்காகவே அண்ணனைத் தேடிச் செல்ல லட்சுமணன் மறுக்கிறான். அப்போது, `நான் தனித்திருக்கும் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தாயா?  என்று சீதை லட்சுமணனை நாவினால் சுடுகிறாளே, அந்தக் குற்ற உணர்ச்சி அவள் மனத்தில் இருக்கிறது. அது நீங்கவே நிகழ்த்தப்பட்டது அக்கினிப் பிரவேசம் என்கிறார், பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன். திருமணம் என்ற வாழ்க்கை ஒப்பந்தத்தில் மட்டுமல்ல, எல்லாவகை ஒப்பந்தங்களிலும் அக்கினியே சாட்சியாக முன் நிறுத்தப்படுகிறது. சுக்கிரீவனும் ராமனும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதாக அக்கினியை வளர்த்து அதன்முன் தான் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள்.

நிலத்திலிருந்து சீதை தோன்றிய மாதிரி, நெருப்பிலிருந்து தோன்றியவர்களைப் பற்றியும் புராணங்கள் பேசுகின்றன. பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன் நிகழ்த்திய வேள்வித் தீயிலிருந்து தோன்றியவள் பாஞ்சாலியான திரெளபதி. மலயத்துவஜ பாண்டியனும் அவன் மனைவி காஞ்சன மாலையும் நிகழ்த்திய யாக நெருப்பிலிருந்து தோன்றியவள் பார்வதியின் அவதாரமான மீனாட்சி. திருவண்ணாமலையில் பரமசிவன் அக்கினி ரூபமாக இருக்கிறார். அதனால்தான் கார்த்திகை தினத்தன்று அங்கு மலையில் அக்கினி ஏற்றி வழிபாடு நிகழ்த்தப்படுகிறது. சிவன் நடராஜ கோலத்தில் தரிசனம் தரும் இடங்களிலெல்லாம் அவரது ஒரு கரத்தில் அக்கினி இருப்பதைக் காணலாம். பரமசிவனது நெற்றிக் கண் நெருப்பிலிருந்து உதித்தவன் கந்தக் கடவுள். நெற்றிக் கண்ணிலிருந்து தெறித்த நெருப்புப் பொறியை அக்கினி தேவனும் வாயு தேவனும் சுமந்து கங்கையில் விட, கங்கா மாதா அதைச் சரவணப் பொய்கையில் சேர்ப்பிக்கிறாள். அங்கே அந்தப் பொறி அறுமுகனாக உருவாகிறது என்பதைக் கந்த புராணம் விளக்குகிறது.

 `அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை, அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை’ என்பது சரவணப் பொய்கையில் நீராடி என்ற திரைப்பாடலில் வரும் முருகனைப் பற்றிய எண்ணிலங்கார வரிகள். (இது சத்தியம் படத்தில் கண்ணதாசன் எழுதி பி.சுசீலா பாடிய பாடல்.) எந்த நெருப்பைச் சரவணப் பொய்கை குழந்தையாக உரு மாற்றியதோ அந்தச் சரவணப் பொய்கையையே முருகனின் அருள் வேண்டிப் பாடப்பெறும் பாடலில் இடம்பெறச் செய்த பெருமை கவியரசருக்கு உரியது.  நள சரிதத்திலும் நெருப்பு வருகிறது. கார்க்கோடகன் என்ற பாம்பு நெருப்பில் சிக்கிக் கொள்ள அதைக் காப்பாற்றுகிறான் சனியால் பீடிக்கப்பட்டு நாடிழந்த நளன். அந்தப் பாம்பு தன்னைக் கரத்தில் வைத்துக் கொண்டு ஒன்று இரண்டு என எண்ணியவாறு பத்தடி நடக்கச் சொல்கிறது.

அப்படி எண்ணும்போது பத்து என்பதற்குரிய தச என்ற சொல்லைச் சொல்கிறான் நளன். தச என்றால் வடமொழியில் பத்து என்றும் பொருள். கடி என்றும் பொருள். அந்தச் சொல்லைக் கடி என்பதாக வேண்டுமென்றே அர்த்தப்படுத்திக் கொண்ட பாம்பு நளனைக் கடிக்க, அதன் கொடிய விஷத்தால் அவன் உடல் கருகிக் குறுகுகிறது. நளனைப் பகைவர்கள் அடையாளம் காண இயலாமல் இருப்பதற்காக நன்றியுடன் தான் செய்த நன்மையே அது என்பதைப் பிறகு அந்தக் கார்க்கோடகப் பாம்பு விளக்குவதாக நள சரிதம் சுவாரஸ்யமாக மேலும் வளர்கிறது. மகாபாரதத்தில் காண்டவ தகன சருக்கம் என்பது புகழ்பெற்ற ஒரு பகுதி. இந்திரப் பிரஸ்தத்தைத் தலைநகராக அமைப்பதற்காக அந்தப் பிரதேசத்தில் இருந்த காண்டவம் என்ற வனத்தை கிருஷ்ணனும் அர்ஜுனனும் தீயிட்டு அழிப்பதைப் பற்றிய வரலாறு மகாபாரத இதிகாசத்தில் மிக விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தில்லி அருகே யமுனை நதியின் மேற்குப் புறத்தில் காண்டவ வனம் இருந்திருக்க வேண்டும் என்பது இன்றைய ஆராய்ச்சியாளர்களின் கூற்று.  

சூரியன் மாபெரும் நெருப்புக் கோளம். சூரிய வழிபாடென்பதும் நெருப்பு வழிபாடே. இன்றும் சூரிய வழிபாட்டை சூரிய நமஸ்காரம் என வழிபாடாகவும் உடல் பயிற்சியாகவும் சேர்த்துச் செய்பவர்கள் இருக்கிறார்கள். சிவன் சார்ந்து சைவம், விஷ்ணு சார்ந்து வைணவம், சக்தி சார்ந்து சாக்தம், கணபதியைச் சார்ந்து காணாபத்யம், முருகனைச் சார்ந்து கெளமாரம் ஆகியவற்றோடு சூரியனைச் சார்ந்து செளரம் என்பதும் நமது வழிபாட்டு நெறிகளில் ஒன்று. தொன்றுதொட்டுஇருந்து வந்த இந்த அறுவகை வழிபாட்டுப் போக்கை வகைப்படுத்தி நிலைநிறுத்தியவர் ஷண்மத ஸ்தாபகரான ஆதிசங்கரர். காயத்ரீ மந்திரம் சூரியனைப் போற்றும் மந்திரம்தான். `செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம், அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக!’ என காயத்ரி மந்திரத்தின் தமிழ் மொழிபெயர்ப்பைப் பாஞ்சாலி சபத விளக்கத்தில் தருகிறார் மகாகவி பாரதியார்.
 
நெருப்புச் சூடு மனித உடல் ஒவ்வொன்றிலும் இருக்கிறது. உயிர் இருப்பதை உணர்த்துவது அந்தச் சூடுதான். உயிர் போய்விட்டால் உடலின் சூடு நீங்கி அது குளிர்ந்து விடுகிறது. நெருப்பே உயிரின் அடையாளம். உயிரின் அடையாளமான நெருப்பைப் போற்றும் திருக்குறள் சொல்லும் கருத்துக்களை நாமும் உயிருக்குயிராய்ப் போற்றிப் பின்பற்ற வேண்டியது அவசியமல்லவா? அப்படிப் பின்பற்றினால் வாழ்வில் உயர்வது நிச்சயம் என்பதில் சந்தேகமில்லை.

 (குறள் உரைக்கும்)