உள்ள(த்)தைச் சொல்கிறோம்



திக்குமுக்காட வைக்கிறீர்கள்!

‘பகவத் கீதை’ பற்றியபெரிய புத்தகம் படிக்கும்போது பல விஷயங்கள் சரியாகப் புரியவில்லை. அதனாலேயே தொடர்ந்து முழுவதும் படிக்க முடியவில்லை. ஆனால் நம் ஆன்மிகம் இதழில் வெளியாகும் பகவத் கீதை தொடர் அதன் எளிமையான நடையினால் கீதையின் சாராம்சத்தை எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது. குறிப்பாக ‘ஆசையின் மரணத்தில்தான் அடக்கம் உயிர் பெறுகிறது’ என்ற சென்ற அத்தியாயத்தின் தலைப்பு இலக்கியபூர்வமானது.
- எம்.லோகநாதன், சிகரலப்பள்ளி-635104.

காளிதாசனும், திருஞான சம்பந்தரும் கல்லாமலேயே ஞானம் பெற்றதை குறளின் குரல் இனிமையாக எடுத்துக்காட்டியது. பெரியோர்களும், மகான்களும் இயற்றிய பாராயண ஸ்லோகங்களை இயம்புவதால் இறைவனின் ஞானத்தை பெறமுடியும் என்ற உண்மையும் விளங்கியது.
- கே.ஆர்.எஸ். சம்பத், திருச்சி - 620017.

‘புனித யாத்திரை புறப்படுவோம்’ புதிய பகுதி சூப்பர். சுற்றுலா செல்லுதல், ஊர் சுற்றுதல், யாத்திரை மேற்கொள்ளுதல் என எந்தவகையான பயணமானாலும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை குதூகலப்படுவது இயல்பு. அதிலும் ஆன்மிக யாத்திரை என்றால் கசக்குமா என்ன? புதிய பகுதிகளை எந்த முன்னறிவிப்பும் இன்றி அளித்து வாசகர்களைத் திக்குமுக்காடவைக்கிறீர்கள். 
- பாபு கிருஷ்ணராஜ், கோவை -2.

‘ஆன்மிக பயணமிது... ஆனந்த பயணமிது’ படித்து ரசித்து, ருசித்தேன். ஆன்மிக அனல் சுட்ட மனதில் வேர்க்கடலை தோலாய் பற்றுகள் பிரியும் என்ற வரிகளைப் படித்ததும் கண்களில் நீர் துளிர்த்தது. சப்த கயிலாய தலங்களுக்குச் சந்தோஷப் பயணம் என்பது இறைவன் கொடுத்த கொடைதான்.
- சு. இலக்குமணசுவாமி, மதுரை-6.

யாத்திரை பக்தி ஸ்பெஷலாக மலர்ந்த சென்ற இதழில் நவகிரக தலங்கள், பஞ்ச ஆரண்ய தலங்கள் மற்றும் சப்த கயிலாய தலங்களின் மகிமைகளை படித்ததும் அந்தந்தத் தலங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவல் பெருகுகிறது. ஆன்மிகம் இதழ், பக்தியைப் பரப்புவதில் தனித்தன்மையும், தரமும் கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
- கே.விஸ்வநாத், பெங்களூர்-8.

சென்னை மாநகரின் சுற்றுப்புறங்களில் அமைந்துள்ள நவகிரக தலங்களான கொளப்பாக்கம், சோமங்கலம், பூவிருந்தவல்லி, கோவூர், போரூர், மாங்காடு, பொழிச்சலூர், குன்றத்தூர், கெடுகம்பாக்கம் ஆகியன குறித்த தகவல்கள் நவகிரக தரிசனத்தினை விரும்பும் சென்னை வாசிகளுக்கு வழிகாட்டியாக அமைந்திருந்தன.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

பொறுப்பாசிரியர், தன் தலையங்கம் மூலமாக வாழ்க்கைக்குத் தேவையான வைரவரிகளை எழுதிவருவது வெகு சிறப்பு. என் போன்ற வாசகர்களுக்குச் சரியான வழிகாட்டி என்பதை மறுக்கவே முடியாது.
- எஸ்.எஸ்.வாசன். தென் எலப்பாக்கம்.

யாத்திரைத் திருத்தலங்களுக்கு அழைத்துச்சென்ற கட்டுரைத் தொகுப்புகள் ஆனந்தமான ஒரு ஆன்மிகப் பயண அனுபவமாக இருந்தது.
- அயன்புரம் த.சத்தியநாராயணன், பட்டாபிராம்,

ஆன்மிகம் பலன் யாத்திரை பக்தி ஸ்பெஷல் படிக்கப் படிக்க வியப்பாகவே இருந்தது. நகரத்திற்குள் நவகிரக தலங்கள் தரிசனம் இவ்வளவு நாட்களாக தெரியாமல் இருந்து விட்டதே என்று ஏக்கமே ஏற்பட்டது. பழமையான தலங்களை நெஞ்சில் பதிய வைத்த ஆன்மிகம் இதழிற்கு கோடி கோடி நன்றிகள்.
- வா.மீனாவாசன். சென்னாவரம்.

திருக்கருகாவூரில் பிள்ளை வரமும், திரு அவளிவநல்லூரில் சாட்சி சொல்லும் தலமாகவும்,ஹரிதாரமங்கலம் பிரம்ம விஷ்ணு கர்வம் தீர்த்த தலமாகவும் ஆலங்குடி ஆலம் உண்டானைக் காப்பாற்றிய தலமாகவும் திருக்கொள்ளமுதூர் பெருவெள்ளத்தில் அடியார்களைக் காப்பாற்றிய அதிசயங்கள் மிகுந்த இடமாகவும், ஆக பஞ்சாரண்யத் தலங்கள் அதியற்புதத் தலங்களாகத் தங்கள் ஆன்மிகம் இதழ் மூலம் பரிணமித்தன.
- முனைவர், இராம.கண்ணன், திருநெல்வேலி.

தெளிவு பெறு ஓம் பகுதியில் புரட்டாசி மாதத்தை மட்டும் பெருமாளுக்கு உகந்த மாதமாக சொல்வதன் காரணம் என்ன எனும் கேள்விக்கு சொல்லப்பட்ட பதில் புதியது, நாங்கள் இதுவரைகேள்விப்படாதது. 
- வா. ஹரிராம்.சிவராம். வந்தவாசி.