‘‘இன்னும் ஒரு வரம் தருகிறேன், கேள்!”



மகாபாரதம் - 72

காலங்கள் நகர்ந்தன. பருவங்கள் மாறின. இன்னும் சில நாட்களே சத்தியவான் உயிரோடு இருப்பான் என்று தெரிந்து அவள் இடையறாது இறை வணக்கத்தில் ஈடுபட்டாள். அவள் கவலையை த்ருத்யும்னன் உணர்ந்து கொண்டான். விவரம் கேட்டான். அவள் இம்மாதிரி என்று சொன்னதும் அவன் வருத்தப்பட்டான். “இதற்காகத்தான் இவனை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று சொன்னேன். நீயாக வந்து இந்த வனத்தில் வாழ்ந்து கடைசியில் இந்த வாழ்க்கையும் நிலைபெறாது தவிக்கப் போகிறாய். எந்தக் கடவுள் உன்னை காப்பாற்றும் என்று தெரியவில்லை’’ என்று அழுதான். “இன்று முதல் நான் உணவு உண்ண மாட்டேன். இன்று முதல் நான் உட்காரமாட்டேன். படுக்க மாட்டேன். நான் எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும். நான் தூங்கும் நேரத்தில் என் கணவன் இறந்து விடக்கூடாது என்பதால் உண்ணாமல், உறங்காமல் இருக்கப் போகிறேன். எப்பொழுதும் நின்று கொண்டே இருக்கப் போகிறேன்” என்று சொல்ல, அவளுடைய மாமனாரான த்ருத்யும்னன் மிகுந்த வேதனை அடைந்தான்.

சாவித்திரி ஒரு ஸ்தம்பம் போல குடிசை வாசலில் நின்றிருந்தாள். எல்லா தெய்வங்களையும் வேண்டியபடி இருந்தாள். புருஷனை எப்படி காப்பாற்றுவது என்ற சிந்தனையில் இருந்தாள். புருஷனுக்கு இதைச் சொல்லக் கூடாது என்ற திடத்திலும் இருந்தாள். அந்த குறிப்பிட்ட நாள் வந்தது. சத்தியவான் மிக உற்சாகமாக கிளம்பினான். “பழங்கள் தீர்ந்து விட்டன. விறகும் தேவைப்படுகிறது. எனவே காய்களும், பழங்களும் பறித்து வர நான் வனத்தின் பக்கம் போகிறேன். நீ தாய், தந்தையரை பார்த்துக் கொள்’’ என்று அவன் சொல்ல, “இல்லை நானும் வருகிறேன். இங்கு வந்து நான் வனங்களை பார்த்ததேயில்லை. சுற்றியதேயில்லை. உங்களோடு செல்ல விரும்புகின்றேன். என் மாமனார் அதற்கு அனுமதி தர வேண்டும்” என்று சால்வ தேசத்து அரசனிடம் கை கூப்பினாள் சாவித்திரி. “இந்த வீட்டிற்கு வந்து நீ என்னிடம் எதுவுமே கேட்டதில்லை மருமகளே. இப்பொழுதுதான் முதன் முதலாக கேட்கிறாய். தாராளமாக போய் வா. உன் புருஷன் கூடவே இரு” என்று ஆசிர்வதித்தார் மாமனார்.

சாவித்திரியும், சத்தியவானும் கைகோத்துக் கொண்டு மலர்கள் நிறைந்த அந்த வனப்பகுதியில் நடந்தார்கள். பழங்களும், காய்களும் சேகரித்தார்கள். கூடைகளில் நிரப்பிக் கொண்டார்கள். அவன் காய்ந்த மரத்தை வெட்டி சாய்த்து விறகுகளாக கோடாலியால் துண்டு செய்தான். வெட்டுகிறபோது அவனுக்கு அதிகம் வியர்த்தது. சட்டென்று நின்று தரையை பார்த்தான். தலை வலிக்கிறது என்றான். ஏதோ சிரமமாக இருக்கிறதே என்று தள்ளாடினான். சாவித்திரி அவனை அருகே படுக்க வைத்து அவன் தலையை தன் மடியில் வைத்துக் கொண்டாள். மெல்ல பிடித்து விட்டாள். எதிரே ஒரு உருவம் தோன்றியது. மிகுந்த தேஜஸுடன் அந்த கருத்த நிற உருவம் அரசரைப் போல அலங்கரித்து அவள் எதிரே எருமைகடாவில் வந்தது. எமதர்மராஜா என்பதை புரிந்து கொண்டாள். கை கூப்பினாள். “நீங்கள் யார்? எதற்கு இங்கு வந்திருக்கிறீர்கள். மிகுந்த தேஜஸ்வியோடு ஒரு தேவனைப் போல இருக்கிறீர்களே. உங்கள் வருகைக்கு என்ன காரணம்?” என்று கேட்டாள்.

“அடடே, உன் கண்ணுக்கு நான் தெரிகிறேனா? அப்படியானால் நீ பெண்களில் சிறந்தவள். உயர்ந்த பத்தினி. பூஜா விதிகளில் தேர்ந்தவள். நல்லது. படுத்துக் கொண்டிருப்பது உன் புருஷன்தானே. சத்தியவான் தானே. அவன் உயிரை எடுத்துப் போவதற்கு எமதர்மன் நான் வந்திருக்கிறேன்.” “மனித உயிர்களை எடுத்துப் போக நீங்கள் தூதுவர்களை அனுப்புவீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்களே வந்திருக்கிறீர்களே. ஆச்சரியமாக இருக்கிறது” சாவித்திரி கூப்பிய கைகளை பிரிக்காமல் பணிவோடு பேசினாள். “பெண்ணே, தொடர்ந்து நீ பேசுவது ஆச்சர்யமாக இருக்கிறது. அது உன்னுடைய பலத்தை காட்டுகிறது. சத்தியவான் தருமவான். குணவான். ஒழுக்க சீலமுடையவன். உயர்ந்த ஆத்மாக்களை நானே நேரே கவர்ந்து வருவது வழக்கம். இதோ, அவனுடைய ஆயுள் முடிந்தது” என்று தன் கை பாசத்தை வீச, அது அவன் உயிரை உடலிலிருந்து பிரித்தது. வெளியே இழுத்தது. கட்டை விரல் உயரமே உள்ள அவன் ஆவி பிரிந்தது. அந்த பாசத்தில் சிக்கி எமதர்மனுக்கு அருகே போயிற்று.

சாவித்திரி புருஷன் தலையை கீழே வைத்தாள். அவன் முககாந்தி குறைவதும், மூச்சு நிற்பதும், இருதய துடிப்பு அமைதியாவதும் அவள் உணர்ந்து கொண்டாள். எமதர்ம ராஜன் முன்னே செல்ல, பாசகயிற்றால் கட்டப்பட்ட சத்தியவானின் ஜீவன் பின்னே போயிற்று. சாவித்திரி பின் தொடர்ந்தாள். விரத நியமங்களால், பூஜா விதிகளால் தன்னை உயர்நிலைக்கு கொண்டு போயிருந்த சாவித்திரியால் அவ்விதம் செய்ய முடிந்தது. “சாவித்திரி, இதென்ன ஆச்சரியம். என்னை எப்படி உன்னால் பின் தொடர முடிந்தது. ஆனாலும் இவ்விதம் செய்யலாகாது. நீ உன் கணவருக்குண்டான கடைசி கடன்களை செய்து பூமியில் கடன் இல்லாதவளாக மாறு. எங்களுக்கு பின்னே வருவதை நிறுத்து. நீ பூமியில் இன்னும் இருக்க வேண்டியவள். எனவே, பின் தொடராதே” என்று சொன்னார்.

“தருமராஜனே, என் கணவர் எங்கு அழைத்துச் செல்லப்படுகிறாரோ அல்லது அவர் எங்கு செல்கிறாரோ அங்கே நானும் செல்ல வேண்டும். இதுதான் தர்மம். தவம், குருபக்தி, பதிபிரேமை போன்றவைகள் என்னுள் நிரம்பியிருக்கின்றன. மேலும் என் மீது நீங்கள் பிரியமாக பேசுவதை உணர்கிறேன். எனவே, என் பின் தொடரல் தடைபடாது. உங்களிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகின்றேன். புலன்களை வசப்படுத்தியவர்கள்தான் காட்டில் வாழ முடியும். தர்மத்தோடு இருக்க முடியும். தர்மத்தோடு இருக்க முடிந்தவர்கள்தான் உயர்ந்த உண்மையான வாழ்க்கை வாழ முடியும். புலன்கள் என் வசம் இருக்கின்றன. அதற்குக் காரணம் நான் வளர்க்கப்பட்டது. இயல்பிலேயே என்னுள் நிரம்பியது. எனவே, உங்களை பின்தொடர்வது என்பதை நிறுத்த இயலாது. என் புருஷனோடு இருப்பதுதான் என்னுடைய தர்மம். அதை எவ்வாறு நான் விட்டுக் கொடுக்க முடியும். பிறகு என் விரதங்களுக்கும், புலனடக்கத்திற்கும், தர்மத்திற்கும் என்ன அர்த்தம்” என்று கவித்துவமாக பேசினாள்.

“மிகச் சீரோடும், சிறப்போடும், அருமையான இலக்கணத்தோடும் நல்ல வாக்கியங்களை சொல்கிறாய். இம்மாதிரியான வாக்கியங்களை கேட்டு நாளாயிற்று. அழுகையும், கூக்குரலும், சபித்தலும்தான் ஒரு உயிர் பிரியும்போது என் காதுகளில் வந்து விழும். ஆனால் சாவித்திரி, இவை எதுவும் செய்யாது மிக திடமாக தொடர்ந்து வருவது மட்டுமல்லாமல், எதனால் தொடர்ந்து வர முடிகிறது என்பதையும் கவிதையைப் போல பேசுகிறாய். உனக்கு என்ன வேண்டும் கேள். ஆனால் சத்தியவான் உயிரை மட்டும் கேட்காதே.” “என் மாமனார் ராஜ்ஜியத்திலிருந்து விரட்டப்பட்டு இருக்கிறார். அவர் கண்கள் ஒளியிழந்து இருக்கின்றன. முதுமையால் வேதனைப்படுகிறார். என் மாமனாரும், மாமியாரும் மறுபடியும் பலம் பெற வேண்டும். கண் பார்வை தெரிய வேண்டும்.’’

“சாவித்திரி, உனக்கு அந்த வரத்தை தந்தேன். உன்னுடைய மாமனார் நலமாவார். தொடர்ந்து என்னோடு வருவதை நிறுத்து. உனக்கு அதிகம் சிரமம் வேண்டாம்.”
“என் புருஷன் எனக்கு அருகில் இருக்கிறபோது எனக்கு என்ன சிரமம். புருஷன் அருகில் இல்லாததுதான் சிரமமாக இருக்கும். இன்னொரு விஷயம் சொல்கிறேன் கேளுங்கள். சத்புருஷர்களின் ஒருமுறை சேர்க்கை கூட மிகவும் நல்லது. அவர்களோடு நட்பு உண்டாவது மிகச் சிறந்தது. சாதுவான புருஷர்களின் சங்கமம் ஒருபோதும் பயனின்றி போவதில்லை. ஒரு மனிதன் எப்போதும் சத்புருஷனுக்கு அருகிலேயே நிற்க வேண்டும். என் புருஷன் உத்தமமானவன். நல்லவன். அவனுக்கு அருகே இருப்பது ஒரு மனைவிக்கு சொல்ல முடியாத இன்பத்தை நிச்சயம் கொடுக்கிறது.” “புருஷனுக்கு அருகே இருப்பதே சத்சங்கம் என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறாய். இன்னும் ஏதேனும் வரம் கேள்.’’

“என் மாமனாருடைய ராஜ்யம் மறுபடியும் அவருக்கு கிடைக்க வேண்டும். என்னை மருமகளாக நடத்தாது, மாமனாராக அதிகாரம் பண்ணாது ஒரு குருவாக நடந்து கொண்டார். அவர் தன் தர்மத்தை கைவிடலாகாது என்கிற வரத்தை தர வேண்டும்.” “தந்தேன். அவர் ராஜ்ஜியம் அவருக்கு கிடைக்கும். அவர் இன்னும் தர்மவானாக விளங்குவார். இது சீடனால் குருவிற்கு கொடுக்கப்பட்ட வரம்.’’ “இன்னும் ஒரு விஷயம் சொல்கிறேன் எமதர்மரே, மனம் வாக்கு, செயல்களால் எந்த பிராணிக்கும் துரோகம் செய்யாது இருத்தல். அனைவரிடமும் படுதல். தானம் செய்தல் என்பவை சாதுக்களின் தர்மம். இவ்வுலக வாழ்க்கையினுடைய பக்கம் அற்ப ஆயுளுடையது. ஆனால் அறவழி நிற்கின்ற மனிதர்களை தங்களைப் போன்ற மகாத்மாக்கள், தேவர்கள் மிகுந்த இரக்கம் காட்டுவீர்கள் இல்லையா. அப்படி இரக்கம் மற்றவருக்கு காட்டுகின்ற நீங்கள் எனக்கு காட்ட மாட்டீர்களா?” “தூய்மையானவளே, தந்திரமாகவும், சாதுர்யமாகவும், அதே சமயத்தில் உண்மையும் மிக அழகாக எடுத்துச் சொல்கிறாய். நீ பேசுவது காதுக்கு குளுமையாக இருக்கிறது. இன்னும் ஒரு வரம் தருகிறேன் கேள்.”

“தருமதேவனே, என் தந்தை அஸ்வபதி ஆண் சந்ததி இல்லாதவர். ஒரு குலத்தின் சந்தான நடத்த நூறு புதல்வர்கள் அவருக்கு வேண்டும். இது நான் உங்களிடம் கேட்கும் மூன்றாவது வரம். தருமதேவரே, மேலும் ஒரு விஷயம் உங்களோடு பேச விரும்புகின்றேன். மனிதர்களுக்கு தங்கள் மீது நம்பிக்கை இல்லை. அதனால் சாதுக்கள் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். சாதுக்களின் நட்பை நாடுகிறார்கள். சாதுக்களின் நல்ல எண்ணம் அவரிடம் சேர்ந்த மனிதர்களுக்கு இதம் அளிக்கிறது. சுகம் அளிக்கிறது. கஷ்டத்திலிருந்து விடுதலை அளிக்கிறது. இந்த உலகமே சாதுக்களின் சங்கத்திற்காகத்தான் ஏங்கி இருக்கிறது. சாதாரண மனிதருக்கு மிகப் பெரிய உதவி சாதுக்களின் நட்பே. அவர்கட்கு இதுதான் உலகம். நல்லவர்களின் நட்பை பெறும்போது நல்ல குணம் உண்டாகிறது அல்லது நல்ல குணம் உண்டானவர்களுக்குத்தான் நல்லவர்களின் நட்பு வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. இது அதிகரிக்க அதிகரிக்க உலகத்தில் க்ஷேமம் இருக்கும். எது குறித்தும் கவலையில்லாமல் இருக்கும். சாதுக்களால்தான் இந்த உலகத்தின் தவிப்பை, வெம்மையை, அலையலை கட்டுப்படுத்த முடியும்.”

“மிக அழகாக பேசுகிறாய். உன்னோடு பேசுவது எனக்கு மிக சந்தோஷமாக இருக்கிறது. உத்தமியே, இன்னொரு வரம் கேள். இதற்கு மேல் என்னை தொடர வேண்டாம்.” “தருமராஜரே, எனக்கு பலமும், பராக்கிரமும் மிக்க நூறு புதல்வர்கள் வேண்டும். என்னுடைய கற்பின் உதவியால் அவர்களை நான் பெற வேண்டும். இந்த வரத்தை உங்களிடம் கேட்கிறேன்.” “நிச்சயம் தருகிறேன். உனக்கு நூறு புதல்வர்கள் கிடைப்பார்கள். உன் கற்பின் வலிமையால் அவர்கள் ஜொலிப்பார்கள்.’’ ‘‘நல்லவர்களின் பிரசாதத்தை ஏற்றுக் கொண்டு விட்டால் அங்கு பரோபகாரம் வந்து விடும். சுயநலத்தின் சாயல் கூட இருக்காது. பிரசாதம் ஏற்றவர்களுடைய கௌரவம் ஒரு பொழுதும் அழிவதில்லை. நல்லவர்களின் சேர்க்கைதான் மிகுந்த பலத்தை தரக்கூடியது.” “அழகியே, அற்புதமான வார்த்தையை சொல்லுகின்றாய். பிரசாதம் தான் பலம். அது பரோபகாரத்தை தரும். பரோபகாரம்தான் கௌரவம். உன்னுடைய பேச்சு கவிதையைப் போல இருக்கிறது. இலக்கண சுத்தமாக இருக்கிறது. உன்னோடு பேசுவது ஆனந்தமாக இருக்கிறது. இன்னொரு வரம் கேள்.” “நீங்கள் எனக்கு கொடுத்த நான்காவது வரத்தில் எனக்கு நூறு புதல்வர்கள் பிறப்பார்கள் என்ற வரத்தை கொடுத்தீர்கள். சத்தியவான் அல்லாது வேறு எவரையும் நான் மனதாலும் நினையேன். அவருடைய உயிரை மறுபடியும் நீங்கள் தரவேண்டும். அவரை உடலோடு கண்டு அவரோடு கூடி நான் நல்ல குழந்தைகளை பெறவேண்டும். இதற்கு உங்கள் ஆசிர்வாதம் வேண்டும். சொல் தவறாத தர்மதேவரே உங்களை பணிகிறேன். இவை அனைத்தும் இந்த உலகத்தின் நன்மையின் பொருட்டே நடக்கட்டும். எனக்காகவோ, சத்தியவானுக்காகவோ, வேறு எவருக்காகவோ இல்லாது தர்மத்தின் விளைவாக, தர்மத்தின் எதிரொலியாக என்னுடைய கூடலும், பிள்ளை பிறப்பும் நடக்கட்டும்” என்று கை கூப்பினாள்.

எமதர்மன் நெகிழ்ந்து போனான். “இப்படி கேட்க எவருக்காவது தெரியுமா. தான் சந்தோஷப்படுவதும், தனக்கு குழந்தைகள் பிறக்கின்ற கர்வமும் உலகத்தின் நன்மைக்காக என்று சொல்பவர் உண்டா. கூடலின் போதும், பிள்ளை பெறுதலின் போதும் இந்த நினைப்போடே ஒரு பெண்மணி இருந்தால் இந்த உலகத்தினுடைய மேன்மையை எவர் தடுக்க முடியும். நீ கூடலுக்கு முன்பே உன் கணவன் உன்னிடம் இல்லாது ஆவியாக போய்க் கொண்டிருக்கும் போதே இப்படி இதற்காகத்தான் கேட்கிறேன் என்கிறாயே உன்னைவிட சிறந்தவள் உண்டா. தந்தேன். நான் சத்தியவானை விடுவித்தேன். போய் வா மகளே. போய் அவனோடு சந்தோஷமாக இரு. திருப்தியுறும் வண்ணம் வாழ்க்கை நடத்து. நீ சொல்வது போல இந்த உலகத்தின் க்ஷேமத்திற்காக இடையறாது இருந்து, பிறகு வேறு உலகம் வந்து சேரு. நிச்சயம் நீ நூறு குழந்தைகள் பெற்றெடுப்பாய். உன் தந்தைக்கும் நூறு குழந்தைகள் பிறப்பார்கள். உன் தாய் மாளவியால் அவர்கள் தோன்றுவதால் மாயவான் என்ற பெயரில் அவர்கள் பிரபலமாவார்கள். உன் சத்திரிய குலம் புத்திர பௌத்ரர்களால் நிரம்பி மிகப் பெரிய கீர்த்தி பெறும்.

‘‘சாவித்திரி, இதற்கு நீ காரணம். விரத மகிமையோடும், பூஜா விதிகளோடும், தர்மத்தோடும், புலனடக்கத்தோடும் ஒரே ஒரு பெண்மணி இருந்தாலும் போதும். அந்தக் குலம் உயர்வடையும். உன்னால் உன் தந்தை குலமும், உன் குலமும் உயர்வடைந்தது. வாழ்க நீ. இதோ, சத்தியவான் எழுந்திருப்பான்’’ என்று சொல்ல, சத்தியவான் கண் விழித்தான். அமைதியாக படுத்திருந்தான். மனதால் எமனை பின் தொடர்ந்த சாவித்திரி திடுக்கிட்டு எழுந்தாள். தன் கணவனை இழுத்து வாரி அணைத்துக் கொண்டாள். “சாவித்திரி, நான் என்ன தூங்கி விட்டேனா. என்னை ஏன் எழுப்பவில்லை. என்னோடு நடந்த அந்த சியாமளா வர்ண தேவன் எங்கே?” என்று வியப்போடு கேட்டான். “அந்த சியாமள வர்ண தேவன் சாட்சாத் எமதர்மன். இப்போது அவர் சென்று விட்டார். இப்போது இரவாகி விட்டது.  “என்ன நடந்தது என்று சொல். உன்னோடு வந்ததும், கை கோர்த்து திரிந்ததும், கனிகள் எடுத்ததும், தலை வலித்ததும், உன் மடியில் படுத்ததும் ஞாபகம் வருகிறது. பிறகு அந்த தேஜஸ்வியான மனிதன் தோன்றினான். இப்பொழுது இருட்டாகி விட்டது. என்ன நடந்தது?” “எல்லாம் நாளை காலை சொல்கிறேன். நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். நெருப்பு உண்டாக்கி  விறகுகளை எரித்து இங்கு வெளிச்சம் உண்டாக்குகிறேன். நீங்கள் அமைதியாக மறுபடியும் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.”

“ஆமாம். எனக்கு தலைவலி கொஞ்சம் இருக்கிறது. ஆனால் பெற்றோரை காண விரும்புகின்றேன். இருட்டில் போக முடியாதோ’’ என்று கொஞ்சம் பதட்டமானான். “நீங்கள் அனுமதித்தால் நாளை காலை போகலாம். சேகரித்த பொருட்களை கொண்டு போக வேண்டுமல்லவா. அந்த சுமையை தூக்கிக் கொண்டு இருளில் நடப்பது கடினம்.” “இல்லை சாவித்திரி. என்னுடைய தாயும், தந்தையும் கவலைப்படுவார்கள். நான் தாமதமாக வந்ததற்கு கோபிப்பார்கள். இவ்வளவு தாமதமானதற்கு பதட்டமாக இருப்பார்கள். அவர்கள் பதட்டமாக இருப்பார்கள் என்பதே எனக்கு வேதனையாக இருக்கிறது. அவர்களுக்கு உதவியாக இல்லாமல் உபத்திரமாக இருக்கிறேனே என்று அவஸ்தை வருகிறது. என்னுடைய தூக்கத்தை நான் குறை   சோம்பலாகி விட்டேன். என்னால் இங்கு இருக்க முடியவில்லை” என்று தவித்தான். “சரி. பழக்கூடைகளை மரத்தில் மாட்டி விடலாம். உங்கள் உடல் பலவீனமாக இருக்கிறது.

உங்கள் கோடாளியை நான் எடுத்துக் கொள்கிறேன். என் மீது சாய்ந்து கொண்டு நீங்கள் வாருங்கள். இருட்டில் இடம் தேடி கண்டுபிடித்து நாம் போவோம்” என்று சொல்ல, அவர்கள் நில ஒளியில் தாங்கள் வந்த ஒவ்வொரு இடமாகப் பார்த்து நடந்தார்கள். கணவனை அருகே அழைத்து இடுப்பு சுற்றி கை போட்டு அவள் கோடாளி சுமந்து மிகுந்த கவனத்தோடு அவனை ஆசிரமத்திற்கு அழைத்துப் போனாள். அந்த ஆசிரமத்திற்கு அருகே உள்ள அந்தணர்கள் இவர்கள் வராதது கண்டு வேதனைப்பட்டிருந்தார்கள். இவர்கள் வருகையை கண்டதும் முன்னேறி வரவேற்றார்கள். அந்த நேரம் த்ருயுத்மனுக்கு பார்வை தெரிந்தது. அவன் மனைவி பலம் பெற்றாள். அவளுக்கு உடம்பில் சக்தி கூடியிருந்தது. அவள் தனக்கு ஏற்பட்ட மாற்றத்தை அந்தணர்களிடம் சொன்னாள். அந்தணர்கள் வியப்படைந்தார்கள். என்ன நடந்தது என்று அங்கு தீமூட்டி பெரிதாக்கி சுற்றி அமர்ந்து கொண்டு சத்தியவான், சாவித்திரியிடம் விசாரித்தார்கள். நடந்ததை சாவித்திரி சொல்ல, அவளை நோக்கி கைகூப்பினார்கள்.

த்ருயுத்மனை காட்டிற்கு விரட்டியவன் அகாலமாய் இறந்து போக, அந்த தேசத்து மந்திரிகள் மறுபடியும் ஒன்று கூடி த்ருத்யும்னனை நோக்கி வந்து அவனை குதிரையில் ஏற்றி சத்தியவானோடு ஊருக்கு அழைத்துப் போனார்கள். பட்டாபிஷேகம் நடத்தினார்கள். அந்த சத்திரிய குலத்தின் அஸ்வபதி மூலமாகவும், இங்கே சாவித்திரி மூலமாகவும் பலம் மிகுந்த கம்பீரமான நூறு குழந்தைகள் பிறந்தார்கள். வாழ்க்கை மிக ரம்மியமாகவும் இருந்தது. மனைவியின் தயவுதான் தன் பிறப்பு என்பதை சத்தியவான் உணர்ந்திருந்தான். மருமகளின் அன்பினால்தான் தனக்கு ராஜ்ஜியம் கிடைத்தது என்பதை மாமனார் தெரிந்திருந்தார். மாமியார் கொண்டாடினாள். என்னுடைய மகள் எனக்கு புத்திர சந்தானம் ஏற்படுத்த வரம் வாங்கி கொடுத்திருக்கிறாள் என்ற நெகிழ்ச்சியில் அவளை குலதெய்வம் போல அஸ்வபதி நடத்தினான்.

அந்த ஒரு பெண்மணியின் தவம் பல லட்சக்கணக்கான பேரை சந்தோஷப்படுத்தியது. இரண்டு ஊர்களையும் பெரும் சிறப்பில் ஆழ்த்தியது. தருமபுத்திரரே, இது ஒரு கணவன் மனைவி விஷயம் அல்ல. கணவன் மட்டும் வேண்டும் என்பதாக இல்லாது தனக்கு நூறு புத்திரர்களும், தன் தந்தைக்கு நூறு புத்திரர்கள் வேண்டும் என்று கேட்டதும் மிக கெட்டிக்காரத்தனம். தபஸ்விகளுக்கே இப்படி யோசிக்க முடியும். தபஸ் என்பது சோம்பிக் கிடப்பதல்ல. முழு தெளிவோடு துடிப்பாய் இருப்பது. சாவித்திரி அழவேயில்லை. மாறாய் செயலில் ஈடுபட்டாள். யுதிஷ்ட்ரா, தைரியம் கொள். மற்றவர்களையும் தைரியப்படுத்து’’ என்றார். காலம் தொடர்ந்து சுழன்றது.

(தொடரும்)