திருமூலர் மந்திர ரகசியம்



ஞானமெனும் சிவானந்த சித்தி

இறையருள் வாய்க்காதவர் யாரும் இல்லை. ஒரு சிலர் அதை உணர்ந்து செயல்படுகிறார்கள். பலரோ, அதை அறியாமல் ஏமாந்து போய் அல்லது மறந்து போய் அல்லல்படுகிறார்கள்.
இது நல்லது, இது கெட்டது எனத் தெரிகிறது. ஆனால், நல்லதைக் கடைப்பிடிக்க முடியாமலும், கெட்டதை நீக்க முடியாமலும் கஷ்டப்படுகிறோம். விளைவு? சொல்லவே வேண்டாம். மீளமுடியாமல் அல்லல் சேற்றில் ஆழ்ந்து போகிறோம். உதாரணமாக, ஏதாவது ஓர் ஊருக்குப்போக நினைக்கிறோம். வழியும் தெரியும். வாகனப் போக்குவரத்துகளும் தெரியும். இருந்தாலும் யாராவது ஒருவர் வந்து, ‘‘இந்த ரூட்ட விட, நாம் புதுசா ஒரு ரூட்டு கண்டு புடிச்சிருக்கேன். அதுல போனாக்க, தூரமும் கம்மி. நேரமும் காசும் மிச்சம்’’ என்றவுடன், நமக்குப் பழக்கமே இல்லாத, தெரியாத புதுவழியில் போய் திண்டாடுவோம்.

அனுபவமில்லாதவர்கள் சொல்லும் வழிமுறைகளைக் கேட்பதை விட, நம்மிடம் அன்பு கொண்ட அனுபவசாலிகள் சொல்லும் நல்வழியைப் பின்பற்றலாம் அல்லவா? திருமூலர் சொல்கிறார், காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும் கோணாத போகமும் கூடாத கூட்டமும் நாணாத நாணமும் நாத அந்தப் போதமும் காணாய் என வந்து காட்டினன் நந்தியே. கருத்து : கண்கொண்டு காணாத காட்சியும், காதுகளால் கேட்டு அறியாத ஞான உபதேசமும், பிரியாத சிவானந்த சித்தியும், கூடிப் பிரியாத கூட்டமும், சொல்ல வெட்கப்படாத சுகமும், திருவடிப்பேறான சிவஞானமும், ‘காண்க நீ’ எனக் காட்டி அருளினான் சிவபெருமான். ஆழ்ந்த கருத்துள்ள அபூர்வமான பாடல் இது. இதன் விளக்கத்தைப் பார்க்கும் முன், கண்ணனைப் பற்றிய ஒரு கதையைப் பார்த்து விட்டு வரலாம். இப்பாடலின் விளக்கம் எளிமையாகப் புரியும்.  ஒருசமயம் அர்ஜுனன் கண்ணனிடம், ‘அது எப்படி? இது எப்படி?’ என கேள்வி மேல் கேள்விகளாகக் கேட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு பொறுமையாகப் பதில் கூறிக்கொண்டு வந்த கண்ணன், ‘‘இது ஏன்? அது ஏன்?’’ என்றெல்லாம் கேள்வி கேட்டுப் பதில் பெற்று, ‘‘நீ எதை அடையப் போகிறாய்? வா என்னுடன்! சில உண்மைகளை உனக்கு உணர்த்துகிறேன்’’ என்றார்.

‘‘சரி!’’ என்று அர்ஜுனன் புறப்பட, இருவருமாக அந்தண கோலத்தில் சென்றார்கள். போகும் வழியில் பெரும் செல்வந்தர் ஒருவரின் மாளிகை இருந்தது. இருவருமாக உள்ளே நுழைந்து, மாளிகை உரிமையாளரான செல்வந்தரிடம் யாசகம் கேட்டார்கள். செல்வந்தரோ, ‘‘எதுவும் கிடையாது. முதலில் வெளியே செல்லுங்கள்!’’ எனக் கடிந்து கூறி விரட்டினார். அர்ஜுனனுக்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் கண்ணன் பொறுமை இழக்கவில்லை. மாறாக, ‘‘ஐயா! யாசகம் கேட்டு வந்த எங்களை இப்படிச் சீறிப் பாய்ந்து விரட்டும் நீங்கள் மேன்மேலும் வளம் பெறுவீராக!’’ என்று வாழ்த்தி விட்டுப் போனார். அவர்களின் பயணம் அடுத்ததாக, ஓர் ஏழையின் வீட்டில் நின்றது. ஒரே ஒரு பசு மாடு மட்டும் வைத்துக் கொண்டு, அதன் மூலம் கிடைப்பதை வைத்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த அந்த ஏழை, அந்தணர் இருவர் தன் குடிசைத் தேடி வந்திருப்பதைப் பார்த்து மனமகிழ்ந்தார்.

அது மட்டுமல்ல! தேடி வந்த இருவருக்கும் முடிந்த வரை உபசாரம் செய்து, தன்னிடம் இருந்த பசும்பாலை அவர்கள் இருவருக்குமாக அளித்தார். அர்ஜுனனும் கண்ணனும், அந்தப் பாலை வாங்கி அருந்தினார்கள். புறப்படும் போது கண்ணன், ‘அந்த ஏழையிடம் இருக்கும் ஒற்றைப் பசுவும் இறக்கட்டும்’ என ஆசி கூறி விட்டுச் சென்றார். அர்ஜுனனுக்குப் பெரும் திகைப்பு. ‘‘கண்ணா! என்ன இது? இனிமையாக ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் நம்மை விரட்டியடித்த அந்தப் பணக்காரனுக்கு, வளம் பெருக ஆசீர்வதித்தாய். அன்போடு வரவேற்று பால் தந்த இந்த ஏழைக்கோ, இருக்கும் ஒற்றை மாடும் போகட்டும் என ஆசி கூறுகிறாய். உன்னை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை’’ என்றான்.

மெள்ள சிரித்த கண்ணன், ‘‘அர்ஜுனா! தெய்வச் செயலை, உலக இயக்கத்தைப் உன்னால் புரிந்து கொள்ள முடியாது. அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்த, அந்த செல்வந்தனுக்கு செல்வம் மேன்மேலும் பெருக வாழ்த்தினேன். காரணம் என்ன? ‘மேன் மேலும் பெருகும் செல்வ போகங்களிலேயே திளைத்து, தன் வாழ்வைத் தானே கெடுத்துக் கொள்வான் அவன். அடுத்து நன்றாக வரவேற்று உபசாரம் செய்த இந்த ஏழைக்கு, ஏன் இவ்வாறு கூறினேன்? இவனுக்கு இருந்த ஒரே ஒரு தொடுப்பு. இவனிடம் இருக்கும் மாடுதான். அது போய்விட்டால், இவன் என்னிடம் வந்து விடுவான். அதற்காகவே, இவனுக்கு இவ்வாறு கூறினேன். சரி. வா போகலாம்’’ என்று கண்ணன் திரும்ப, கண்களில் வியப்போடு பின் தொடர்ந்தான், அர்ஜுனன்.

தெய்வ நியதியைத் தெய்வமே உணர்த்தினாலொழிய, வேறு வழியில்லை. இதைத் தான் ‘அவன் அருளாலே அவன்தாள் வணங்கி’ என மிகமிகச் சுருக்கமாகக் கூறினார், மாணிக்கவாசகர். இதை மனதில் பதிய வைத்துக்கொண்டு, திருமூலர் சொல்வதைப் பார்க்கலாம். பாடலின் தொடக்கம் ‘காணாத கண்’ - ஒவ்வொன்றையும் பார்க்கும்போது, அதனுடைய வடிவம், நிறம், பலன் என்பதெல்லாம் முன்வந்து நிற்கின்றனவே தவிர, அவற்றில் இருக்கும் தெய்வத்தன்மை கண்ணில்படவில்லையே. இதை எனக்குக் காட்டி உணர்வித்தார் சிவபெருமான்’’ என்கிறார் திருமூலர். அடுத்து ‘கேளாத கேள்வி’ இன்று வரை பாடல்கள், பேச்சுகள் என ஏராளமாகக் கேட்டிருக்கிறோம். பலன் என்ன என்று பார்த்தால்... பூஜ்யம்தான். கேட்டவை எல்லாம் காதுகளின் வழியாக மனதில் புகுந்து, ஏற்கனவே கலங்கி இருக்கும் மனதை மேலும் கலக்குகின்றனவே! தெரிந்ததுதானே இது. பலவற்றையும் கேட்ட காது, இதுவரை கேட்காத தெய்வ (குரு) உபதேசத்தைக் கேட்க, மனது தெளிவு பெறுகிறது. இந்நிலையைச் சிவபெருமான் எனக்கு அருளினார்’’ என்கிறார் திருமூலர்.

அடுத்து ‘கோணாத போகமும்’ பிரிதல் இல்லாத சிவானந்த சித்தியும் என்பது பொருள். பற்பலவிதமான போகங்களை அனுபவிக்கிறோம். எத்தனை அனுபவித்தும் திருப்தி இல்லை. மேலும்... மேலும்... வேட்டையாடிக் கொண்டிருக்கிறோம். ஒன்று முடிந்ததும் அடுத்ததைத் தேடி ஓடுகிறோம். அது முடிந்ததும் அடுத்தது. இப்படியே போய்க் கொண்டிருக்கின்றோமே தவிர, நிறைவு என்பது இல்லை. ‘‘இந்நிலையை மாற்றினார் சிவபெருமான். அவர் தன்னையே எனக்குத் தந்தார். அதன்பின் ஆஹா! யான் அடைந்த ஆனந்தத்தை என்னவென்று சொல்வேன்’’ என்கிறார், திருமூலர். ஆனந்தம் எனும் சொல் மிகவும் ஆழமானது. இன்பம் - துன்பம்; சுகம் - துக்கம்; பகல் - இரவு எனப் பலவற்றிற்கும் எதிர்ச்சொற்கள் உண்டு. ஆனால், ஆனந்தம் என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல் கிடையாது. ஆனந்தம், அதிசய ஆனந்தம், நிரதிசய ஆனந்தம் என மேன்மேலும் ஆனந்தம் உயருமே தவிர, ஆனந்தம் என்பது ஒருபோதும் குறைவுபடாது. அப்படிப்பட்ட தெய்வீக அனுபவத்தையே ‘கோணாத போகம்’ எனக் குறிப்பிடுகிறார் திருமூலர்.

அடுத்து ‘கூடாத கூட்டமும்’ - கூடிப் பிரியாத கூட்டம். இந்த ஒன்று மட்டும் வாய்த்தால் போதும். மிகமிக எளிமையாக உயர்ந்து விடலாம். நம்மைச் சுற்றிக் கூடியிருக்கும் கூட்டம், எந்த நேரத்திலும் பிரிந்து விடக்கூடிய கூட்டம். அதை அறியாமல் - உணராமல், ‘நம்மைச் சுற்றியிருப்பவர்கள் நம்மைப் பாதுகாத்து விடுவார்கள்’ என எண்ணுகிறோம். பிரச்னை என ஒன்று வரும்போது, கல்லெறிந்தவுடன் காக்காய் கூட்டம் கலைவதைப்போல, நம்மைச் சுற்றியிருக்கும் கூட்டம் அப்படியே சொல்லாமல் கொள்ளாமல் விலகிப்போய் விடுகிறது. அதேசமயம் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் நற்குணசாலிகளாக இருந்தால், எந்த நிலையிலும் நம்மை விட்டுப் பிரிய மாட்டார்கள். நம் துன்பத்தை முனைந்து தீர்ப்பார்கள். நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று.

- எனும் ஔவையார் வாக்கிற்கேற்ப, நல்லவர்களின் உறவு ஒருபோதும் நம்மை விட்டுப் பிரியாது. பிரிந்தாலல்லவா மறுபடியும் வந்து கூடும்! ‘‘நல்லடியார்களின் கூட்டத்தைச் சிவபெருமான் எனக்கு அருள்செய்தார்’’ என்கிறார் திருமூலர்.அடுத்து ‘நாணாத நாணம்’ என்கிறார் திருமூலர். இது என்ன? நாணமற்ற தன்மையைச் சொல்லி, நாணமுள்ள தன்மையையும் கூறுகிறாரே என்றால்... இறைவனைப் பற்றிப் பாட; சொல்ல; துதிக்க; ஆலயம் சென்று வழிபட; இறையருள் தகவல்களைக் கேட்க நாணம் கூடாது. பிரச்னையே இங்குதான். தெய்வத்தைப் பற்றிச் சொல்லவோ, ஆலயம் சென்று வழிபாடு செய்யவோ இயலாமல், நம்மை நாணம் பிடுங்கித் தின்கிறது. இது கூடாது என்பதையே ‘நாணமற்ற’ எனும் சொல்லால் திருமூலர் கூறுகிறார். அதே சமயம், ‘‘நான் இந்தக் கோயிலுக்குப் போனேனாக்கும். இப்படிப் பாடினேனாக்கும். கோயிலுக்கு இதையெல்லாம் செய்தேன் நான்’’ என்று சொல்ல வெட்கப்பட வேண்டுமாம்.

‘‘இப்படிப்பட்ட நிலையைச் சிவபெருமான் எனக்கு அருள் செய்தார்’’ என்கிறார் திருமூலர். ‘‘இவ்வளவும் எனக்கு அருள் செய்த சிவபெருமான், தம் திருவடிப்பேறான சிவஞானத்தையும் அளித்தருளினார்’’ எனப் பாடலை முடிக்கிறார் திருமூலர். அதுவும் கடைசி ஒரு சில சொற்களில் ‘வந்து காட்டினன்’ என்னும் திருமூலர் சொற்கள், சிவபெருமானின் எளிவந்த தன்மையைக் காட்டும். சிவபெருமான் தாமே வந்து காட்டினார் எனும் திருமூலர் வாக்குப்படி, நல்லதை உணர்வோம்! தெய்வம் தானேவந்து அருள் செய்யும்!

- பி.என்.பரசுராமன்