உள்ளத்தில் ஒளி ஏற்றுவோம்!



அகல் தீபங்கள் ஒளிரட்டும் -மனிதர்
அகத்தில் தூய்மை, வாய்மை பரவட்டும்
அரசியல் தத்துவம் நிலைக்கட்டும் -அதன்
அடிப்படையில் அகிலம் இயங்கட்டும்!
அறுசுவை உணவு பரிமாறி -அதில்
அரசியல் நெய் ஊற்றி -கொள்கையில்
அன்பு பெரிதென ஏற்றி -மண்ணில்
மக்களாட்சி மகிமை புரியட்டும்!
நீதி தவறாத செங்கோல்  ஏழைகள்
அநீதிக்கு எதிராக வாளாகட்டும் -மோசடி
நயவஞ்சகரை தண்டிக்கும் வேலாகட்டும்!
நன்மையுற உழைப்பவர்க்கு மந்திர கோலாகட்டும்!
முடியாண்டவர் காலத்தில் நாட்டில்
மன்னருக்கு மேல் பெரியவரில்லை!
மக்களாட்சி தத்துவத்தில்
சட்டத்துக்கு மேல் பெரியவரில்லை!
சாட்சிகள் வேண்டுமானால்
சட்டத்தை ஏமாற்றட்டும்
மனசாட்சி உள்ளவர்கள்
சத்தியத்தை காக்கட்டும்!
வாதத்தில் கூட தீவிரம்
காட்டாத இந்தியாவில் தலைதூக்கும்

தீவிரவாதத்தை தடுக்க மீண்டும்
கண்ணன் பிறந்து சங்கநாதம் முழங்கட்டும்!
மனதை அரைத்தால் எண்ணம் மணக்கும்!
எண்ணம் மணந்தால் செயல்கள் சிறக்கும்!
செயல்கள் சிறந்தால் பெருமை வளரும்!
பெருமை வளர்ந்தால் உறவு சேரும்!
உறவு சேர்ந்தால் காதல் கனியும்!
காதல் கனிந்தால் வாழ்க்கை இனிக்கும்!
எத்தனை உடலை எரிக்க
துணையானேன் என்று
விறகு கர்வம் கொண்டதுண்டா!
எத்தனை உடலை சாம்பல்
செய்தேன் என்று தீ
பெருமை பேசியதுண்டா!
விறகாய், தீயாய் இரு
நீ நீயாய் இரு!
கண்ணன் திருவடி நிழலில் இரு!
சத்திய தேனீயாய் இரு!
மனதை வானமாக்கு
கீதையை வேதமாக்கு!
பேதை மனம் மேதையாகும்
கனிகள் குலுங்கும் சோலையாகும்!


- விஷ்ணுதாசன்