வணக்கம் நலந்தானே!



சற்றே பொறும், பிள்ளாய்!

கொஞ்சம் பெரிய மருத்துவமனை அது. நோயாளிகள் குழுமியிருக்கிறார்கள். முதலில் வந்தவர், அடுத்து வந்தவர் என்று வரிசையை நடைமுறைப்படுத்த ஒவ்வொருவருக்கும் டோக்கன் கொடுக்கப்படுகிறது. மருத்துவரோ ஒருவர்தான். அவர்தான் எல்லோருக்கும் சிகிச்சை அளிக்கவேண்டும். அப்போது திடீரென்று ஒரு குடும்பம் வருகிறது. ‘மிக அவசரம்’ என்று சொல்லி ஒரு நோயாளியை அழைத்து வந்திருக்கிறது. ‘உடனே டாக்டரைப் பார்க்கவேண்டும், காத்திருக்கவெல்லாம் முடியாது,’ என்று பரிதவிக்கிறது. இதைப் பார்த்து ஏற்கெனவே காத்திருக்கும் நோயாளிகள், குறிப்பாக பிந்தைய எண் டோக்கன் வைத்திருப்பவர்கள் முகம் சுளிக்கிறார்கள். இதனால் கூடுதல் அரைமணி நேரம் தாம் காத்திருக்கவேண்டுமே என்ற எரிச்சல். இப்போதே தாமதம், இந்த இடையூறால் இன்னும் பல நிமிடங்கள் தாமதமாகும் என்ற உண்மை இவர்களைப் பொறுமையிழக்க வைக்கிறது, ஒருசிலரைக் கடுமையாகப் பேசவும் வைக்கிறது. ‘எல்லோரும் நோயாளிகள்தானே? அவரவர் வரிசைப்படிதான் போகவேண்டும்,’ என்று சட்டம் பேசவும் அவர்கள் தயங்கவில்லை.

இங்கே மனிதாபிமானம் மறைந்து சுய அபிமானம் தலைதூக்குகிறது. காத்திருக்கும் நேரம் நீட்டிக்கப்படுவதை இவர்கள் விரும்பவில்லை. ஆனால் ஓர் உண்மையை இவர்கள் உணரத் தவறிவிடுகிறார்கள். அதாவது, இப்படி அரைமணி நேரத்தை சேமிப்பதால் தான் அரைமணி நேரம் முன்கூட்டியே உடல்நலம் தேறிவிடுவோம் என்று நினைத்துகொண்டிருக்கிறார்கள்!
Patient என்ற சொல் நோயாளி என்பதற்கான மிகப் பொறுத்தமான ஆங்கிலச் சொல். பொறுமையாக, உரிய சிகிச்சை காலம்வரை காத்திருக்க முடியாமல் அவசரப்பட்டால், நோயும் நம் உடலை விட்டு நீங்க அவசரப்படாது! நம் பொறுமையும், சகிப்புத்தன்மையும்தான் நோயை சீக்கிரம் விரட்டும் மருந்துகள்!ஆக, குறிப்பிட்ட நோய்க்குக் குறிப்பிட்ட சிகிச்சை காலம்வரை காத்திருந்தால்தான் நோய் தீரும், உடல் குணமாகும். மருத்துவமனையிலேயே பொறுமையாக இருக்க ஆரம்பிப்பதுதான் இதற்கான முதல்படி! சாலைப் போக்குவரத்தில் முந்தைய வாகனங்களை இடிக்காத குறையாக முந்தி செல்லும் ஒரு வாகன ஓட்டி, பெரும்பாலும் அடுத்த சிவப்பு சிக்னலில் காத்திருக்கவேண்டியவராகிறார்.

அவர் முந்தி வந்த வாகனங்கள் ஒவ்வொன்றாக அவரருகே வந்து நின்று அவரை ஏளனப்படுத்துகின்றன! இப்படி முந்தி வந்ததால், அவர் சாதிக்கப்போவது எதுவுமில்லை. இங்கு அவசரப்பட்டவர் இன்னும் சற்றுத் தொலைவு தள்ளி காத்திருக்க வேண்டிய வராகவே ஆகிறார். நேரம் நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லைதான். ஆனால், அதற்காக அவசரப்படும் யாராலும் நேரத்தை சேமிக்க முடியாது என்பதும் உண்மைதான். சின்னச் சின்ன விஷயங்களிலும் எப்படி பொறுமையைக் கையாள்வது? இறைவழிபாட்டின் மூலம்தான். நமக்குத் தெரிந்த பாடல்களை, ஸ்லோகங்களை நிறுத்தி நிதானமாகச் சொல்லிப் பழகிப் பாருங்கள், ஒருசில மாதங்களிலேயே பொறுமை உங்களிடம் தஞ்சமடைந்துவிடும். இப்படி நிதானமாக இறைவனுடன் ‘பேசு’வதால், அந்த நேரத்திலேயே அவர் நமக்குப் பல உத்திகளைச் சொல்லிக்கொடுப்பார். அவை நாம் சந்திக்கப்போகும் பல சிக்கல்களின் முடிச்சுகளை எளிதாக அவிழ்த்து நிம்மதி அருளக்கூடியதாகவே இருக்கும்.  ‘பொறுத்தார் பூமியாள்வார்’ என்பதற்கு இதுதான் அர்த்தம்!