அமாவாசை நாளில் மகாலட்சுமி பூஜை செய்யலாமா?



?சிவாலயங்களில் தரும் விபூதியை வீட்டிற்கு எடுத்துக்கொண்டு வரலாமா?- இரா. வைரமுத்து, இராயபுரம்.
அவசியம் கொண்டு வர வேண்டும். ‘சிவன் சொத்து குல நாசம், எனவே சிவாலயத்தில் இருந்து வரும்போது கையில் எதையும் கொண்டு வரக்கூடாது ’என்று சொல்லப்படும் விதி விபூதிக்குப் பொருந்தாது. விபூதி மாத்திரமல்ல, பிரசாதமாக வழங்கப்படுகின்ற பொருட்கள் எல்லாவற்றையும் வீட்டிற்குக் கொண்டு வரலாம். அதிலும் சிவாலயங்களில் தரும் விபூதி பிரசாதத்தை வீட்டிற்குக் கொண்டு வந்து குடும்பத்தினர் எல்லோருக்கும் அவசியம் தரவேண்டும். மீதமிருக்கும் விபூதியை வீட்டில் நாம் வைத்திருக்கும் விபூதி பாத்திரத்தில் கலந்துவிட வேண்டும். இறைவனின் அருட்பிரசாதமான விபூதியை வீட்டிற்கு எடுத்துக்கொண்டு வருவது சரியே.

?மனைவிக்கு கணவன் திதி கொடுக்காதபோது மகன்கள் கொடுக்கலாமா?- கே.விஸ்வநாத், அல்சூர்.
வயிற்றில் பிறந்த வாரிசு இருக்கும்போது மனைவிக்கு கணவன் திதி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தாலி கட்டிய கணவனை விட பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளைக்குத்தான் கர்ம அதிகாரம் உண்டு என்று சாஸ்திரம் அறுதியிட்டுச் சொல்கிறது. ஒரு தாய்க்கு அவர் பெற்ற பிள்ளைதான் கர்மாவினைச் செய்ய வேண்டுமே தவிர, தாலி கட்டிய கணவன் அல்ல. வாரிசு யாரும் இல்லாத பட்சத்தில்தான் மனைவிக்கு கணவன் கர்மாவினைச் செய்ய முடியும். இறந்தவர்களின் வாரிசு உயிருடன் இருக்கும்போது, அவர்களுக்குத்தான் முழு கர்ம அதிகாரமும் சென்று சேரும். மகன்களுக்குத்தான் முழு உரிமையும் என்பதால் அவர்கள்தான் தம் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமையினைச் செய்ய வேண்டும்.
அப்பொழுதுதான் வம்சம் தழைக்கும்.

?வீட்டில் எத்தனை வருடங்களுக்கு ஒருமுறை கணபதி ஹோமம் செய்யலாம்?- ஜெயசூர்யா, கண்ணமங்கலம்.
தினசரி வீட்டில் கணபதி ஹோமம் செய்வோரும் உண்டு. இத்தனை நாட்களுக்கு ஒருமுறைதான் வீட்டில் கணபதி ஹோமம் செய்ய வேண்டும் என்ற கணக்கு ஏதும் கிடையாது. அவரவர் வசதிக்கேற்ப செய்து கொள்ளலாம். வாரத்திற்கு ஒரு முறை, மாதம் இரு முறை, சங்கடஹர சதுர்த்தி நாள், மூன்று மாதத்திற்கு ஒரு முறை, வருடம் இரு முறை, வருடந்தோறும் பிறந்தநாள், திருமண நாள் என்று முக்கியமான விசேஷ நாட்களில் செய்தல் என்று அவரவர் தங்கள் சௌகரியப்படி எப்போது வேண்டுமானாலும் கணபதி ஹோமம் செய்யலாம். குறைந்த பட்சம் வருடத்துக்கு ஒருமுறையாவது வீட்டில் கணபதி ஹோமம் செய்வது நல்லது. இதற்கு என தனியாக கால இடைவெளி ஏதும் கிடையாது.

?இறந்தவர் வீட்டில் எத்தனை நாளைக்கு சுபகாரியங்கள் செய்யக்கூடாது? கோயிலுக்கு எத்தனை நாள் கழித்துச் செல்ல வேண்டும்?- பொன். நடேசன், சின்னஅய்யம்பாளையம்.
ஒரு வருடம்வரை வீட்டில் பண்டிகைகளைக் கொண்டாடுவது கூடாது. இறந்தவர் உயிருடன் இருக்கும்போது செய்யப்பட்ட நிச்சயதார்த்தத்திற்கு உரிய திருமணங்களை குறிப்பிட்ட தேதியில் செய்யலாம். அதிலும் இறந்த ஒரு பக்ஷத்திற்குள், அதாவது 15 நாட்களுக்குள் வந்தால், நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை வேறு நாளுக்குத்தான் தள்ளி வைக்க வேண்டும். வீட்டில் வயதிற்கு வந்த பெண் திருமணத்திற்காக காத்திருக்கும் பட்சத்தில் இறந்தவர் வீட்டில் பெண்ணின் திருமணத்தை ஒரு வருடத்திற்குள் நடத்துவதை சாஸ்திரம் அனுமதிக்கிறது. அதேபோல, இறந்தவரின் மகனுக்கு தலைதிவசம் வருவதற்குள் திருமணம் செய்துகொள்ளும் அதிகாரமும் உண்டு. இதுபோன்ற அவசியம் செய்தாக வேண்டும் என்ற நிகழ்வுகளைத் தவிர, இதர சுப நிகழ்ச்சிகள் அதாவது குழந்தைக்கு மொட்டை அடித்தல், காது குத்துதல், கிரஹப்ரவேசம் செய்தல் முதலானவற்றை தலைதிவசம் ஆன பின்புதான் செய்ய வேண்டும். இறந்தவரின் வீட்டில் உள்ள உறுப்பினர்கள் ஒரு பக்ஷம் அதாவது 15 நாட்கள் கழித்து கோயிலுக்குச் செல்லலாம். கர்மா செய்த பிள்ளை மாத்திரம் ஒரு வருட காலத்திற்கு கோயிலுக்குள் கொடிகம்பத்தினைக் கடந்து உள்ளே செல்லுதல் கூடாது. த்வஜஸ்தம்பம் என்று அழைக்கப்படும் கொடிக்கம்பம் இல்லாத, அதாவது பிரஹ்மோற்சவம் நடைபெறாத கோயிலுக்குள் அந்த மகன் 15 நாட்கள் கழித்துச் சென்று வரலாம். அதில் தவறில்லை.

?நவகிரஹங்களை வழிபட என்ன மந்திரத்தைச் சொல்ல வேண்டும் ? நவகிரஹ காயத்ரியை பாராயணம் செய்தால் போதுமா?- எஸ்.எஸ்,வாசன், தென்எலப்பாக்கம். முறையாக உபதேசம் பெறாதவர்கள் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி பாராயணம் செய்ய இயலாது. ஆண்-பெண் பேதமின்றி எல்லோரும் எளிதாக நவகிரஹங்களை வழிபட கீழ்காணும் ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடலாம். ஸ்லோகத்தைத் தவறின்றி உச்சரிக்கக் கற்றுக்கொண்டால் மட்டும் போதும். ஸ்லோக பூர்வமாக வழிபட தனியாக உபதேசம் பெற வேண்டிய அவசியம் இல்லை.

சூரியன்  
“ஜபாகுஸூம சங்காஸம் காச்யபேயம்மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்னம் ப்ரணதோச்மி திவாகரம்”

சந்திரன் 
“ததிசங்க துஷாராபம் க்ஷீரோதார்ணவ ஸம்பவம்
நமாமி சசிநம் சோமம் சம்போர் மகுட பூஷணம்”

செவ்வாய்
“தரணி கர்ப்ப சம்பூதம் வித்யுத் காந்தி ஸமப்ரபம்
குமாரம் சக்தி ஹஸ்தம் ச மங்களம் ப்ரண மாம்யஹம்”

புதன் 
“ப்ரியங்கு காலிகாஸ்யாமம் ரூபேணா ப்ரதிமம் புதம்
சௌம்யம் சௌம்ய குணாபேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம்”

வியாழன்
“தேவானாஞ்ச ரிஷீநாஞ்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
பக்திபூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ் பதிம்”

சுக்கிரன்
“ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யாநாம் பரமம்குரும்
சர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரண மாம்யஹம்”

சனி 
“நீலாஞ்சன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸநைஷ்சரம்”

ராகு
“அர்த்தகாயம் மஹாவீர்யம் சந்த்ராதித்ய விமர்த்தனம்
சிம்ஹிகா கர்ப்ப சம்பூதம் தம் ராகும் ப்ரண மாம்யஹம்”

கேது
 “பலாஸ புஷ்ப ஸங்காசம் தாரகா க்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்”

மேற்கண்ட ஸ்லோகங்களைப் பாராயணம் செய்வதால் நவகிரஹ வழிபாட்டைக் குறையின்றி செய்ய முடியும். ?65 வயதுள்ள என் நண்பர் இருமுடி கட்டி சபரிமலைக்குச் செல்வார். ஆனால் உள்ளூரில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்குச் செல்லமாட்டார். ‘என் மனம் இடம் கொடுக்கவில்லை’ என்று காரணம் சொல்கிறார். இது சரியா? - மோகன்ராம், கோவிலம்பாக்கம். இது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. சபரிமலையின் சாந்நித்தியத்தின் பால் அதீத நம்பிக்கை கொண்டுள்ள உங்கள் நண்பர் சொல்லும் காரணம் அவரைப் பொறுத்த மட்டில் சரியே. முறையாக விரதம் இருந்து இருமுடி கட்டிக்கொண்டு பதினெட்டு படி ஏறி சாஸ்தாவை தரிசிப்பதில் கிடைக்கும் ஆனந்தம் அவருக்கு உள்ளூரில் உள்ள ஆலயத்தில் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆகவே அவரது எண்ணத்தில் குறை காண இயலாது.

?தர்ப்பைப் புல்லின் மகத்துவம் என்ன?
- மணிகண்டன், நெல்லிக்குப்பம்.
தர்ப்பைப்புல் இயற்கையில் அதிக வீரியம், உஷ்ணம் கொண்டது. உலோகத்தில் தாமிரம் போல தர்ப்பைப்புல் தாவர வகைகளில் அதிக சக்தி கொண்டது. தாமிரம் மின்சாரத்தை வேகமாக கடத்துவது போல, தர்ப்பைப்புல் ஒலி அலைகளை உள்வாங்குவது அல்லது கடத்துகின்ற திறனை உடையது. டெக்னிகலாக சொல்வதென்றால் ஏரியல் டவர் போன்று தர்ப்பைப் புல் செயல்படுகிறது. சில இடங்களில் டிரான்ஸ்மீட்டர் ஆகவும், சில இடங்களில் ரிசீவர் ஆகவும் இந்த தர்ப்பைபுல்கள் செயல்படுகின்றன. அதனால்தான் தர்ப்பைபுல்லை இந்து மத சடங்குகளில் பயன்படுத்துகிறார்கள். சுபம், அசுபம் ஆகிய இரண்டு நிகழ்வுகளிலும் தர்ப்பையை பயன்படுத்த வேண்டும். கலசம் வைத்து பூஜை செய்யும்போது தர்ப்பைப் புல்லினால் ஆன கூர்ச்சத்தை கலசத்தில் செருகி வைத்திருப்பார்கள். வேதியர் சொல்லும் மந்திர ஒலி அலைகளை உள்வாங்கி கலசத்தில் வைக்கப்பட்டிருக்கும் நீருக்குள் கடத்துகின்ற பணியைச் செய்கிறது தர்ப்பைப்புல். அதேபோன்று செயலைச் செய்கின்ற எஜமானனும் தர்ப்பைப் புல்லினால் செய்யப்பட்ட பவித்ரம் அணிந்து செய்வதே பலனைத் தரும்.

இறப்பு முதலான அசுப காரியத்திற்கு ஒரு தர்ப்பையாலும், சுபநிகழ்வுகளில் 2 தர்ப்பையாலும், சிராத்தம் முதலான பித்ரு கர்மாக்களுக்கு 3 தர்ப்பையாலும், இறைவழிபாட்டின் போது
5 தர்ப்பையாலும், சாந்தி கர்மாக்களில் 6 தர்ப்பைகளாலும் பவித்ரம் எனும் மோதிரத்தை அணிந்து அந்தந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். வலது கை மோதிர விரலில் பவித்திரம் அணிந்து கொள்ள வேண்டும். தர்ப்பை மிகவும் புனிதத் தன்மை வாய்ந்தது என்பதால்தான் கிரஹண காலங்களில் உணவு பண்டங்களில் தர்ப்பையைப் போட்டு வைப்பது பழக்கத்தில் இருக்கிறது. நவகிரஹங்களில் ராகுவிற்கு உரிய சமித்து ஆக அறுகம்புல்லையும், கேதுவிற்கு உரிய சமித்து ஆக தர்ப்பையையும் பயன்படுத்துகிறார்கள். இத்தகைய காரணங்களால்தான் தர்ப்பைப்புல் இல்லாமல் இந்து மத சடங்குகள் எதுவும் செய்யப்படுவதில்லை.

?மேல்நோக்குநாள், கீழ்நோக்குநாள், சமநோக்கு நாள் என்று காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளதே.. இதன் பொருள் என்ன?- ராம்மோகன், சென்னை-54.
ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களை ஊர்த்வமுக நட்சத்திரங்கள் என்று சொல்வார்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களை மேல்நோக்கு நாள் என்று குறிப்பிடுவர். இந்த நாட்களில் மேல்நோக்கி வளர வேண்டிய மதில்சுவர், பந்தல், கொடிமரம், மாடிப்படி அமைத்தல், தளம் ஒட்டுதல் போன்ற பணிகளைத் துவக்குவர். அதே போல் நெல், கேழ்வரகு, வாழை, கரும்பு முதலானவற்றைப் பயிரிடவும், தேக்கு, மா, பலா போன்ற மரங்களை நடுவதற்கும் உகந்த நாட்கள் என்று சொல்வார்கள். பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களை அதோமுக நட்சத்திரங்கள் என்று சொல்வார்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களை கீழ்நோக்குநாள் என்று குறிப்பிடுவர்.

இந்த நாட்களில் குளம், கிணறு, ஏரி போன்ற நீர்நிலைகளை வெட்டுதல், தூர்வாருதல், களஞ்சியம், வேலி ஆகியவற்றை அமைத்தல், மஞ்சள், வேர்க்கடலை, கிழங்கு வகைகள் போன்ற பூமிக்கு அடியில் விளையும் தாவரங்களுக்காக விதைத்தல் ஆகிய செயல்களை மேற்கொள்வார்கள். அஸ்வினி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களை த்ரியக்முக நட்சத்திரங்கள் என்று சொல்வார்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களை சமநோக்கு நாள் என்று குறிப்பிடுவர். இந்த நாட்களில் யானை, குதிரை, ஒட்டகம், எருமை, கழுதை, காளை போன்ற நாற்கால் பிராணிகளை வாங்குதல், தேர் முதலான வாகனங்களை உருவாக்குதல், ஏற்றம் இறைத்தல், உழவு உழுதல், வாசக்கால் வைத்தல், தூண்கள் நடுதல் முதலானவற்றை மேற்கொள்ளலாம் என்று சொல்வார்கள். அதாவது, மேல்நோக்கி வளர வேண்டிய செயல்களை மேல்நோக்கு நாளிலும், பூமிக்குக் கீழே செய்யப்படுகின்ற செயல்களை கீழ்நோக்கு நாளிலும், சமதளத்தில் செய்ய வேண்டிய பணிகளை சமநோக்கு நாளிலும் செய்வது நல்லது என்று நம் முன்னோர்கள் கணித்து வைத்திருக்கிறார்கள்.

?வீட்டின் எந்த திசையில் கிணறு தோண்ட வேண்டும்?
- குமாரசுப்ரமணியன், திருவதிகை.
பொதுவாக ஒரு மனையின் வடகிழக்கு திசையில் கிணறு தோண்ட வேண்டும். அந்த திசையில் சௌகரியப்படாவிட்டால் வடக்கு திசையில் தோண்டலாம். தற்காலத்தில் கிணறு தோண்டுவது வழக்கத்தில் இல்லாவிட்டாலும், போர் போடுதல் (ஆழ்துளை கிணறு), கீழ்நிலை நீர்தேக்கத் தொட்டி (சம்ப்) முதலானவற்றை அமைப்பதற்கும் இதே திசைகளையே பயன்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் தென்கிழக்கு திசை, மனையின் மையப்பகுதி ஆகியவற்றில் இவற்றை அமைக்கக் கூடாது.

?துலா ஸ்நானம் என்றால் என்ன?
- ரவிச்சந்திரன், திருச்சி-8.
ஐப்பசி மாதத்திற்கு துலாமாதம் என்று பெயர். ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் இந்த மாதத்தை துலா மாதம் என்று அழைப்பர். பஞ்சாங்கத்தில் ஐப்பசி மாத முதல் நாள் அன்று துலா ஸ்நான ஆரம்பம் என்றும் கடைசி நாளில் கடைமுகம் என்றும் குறிப்பிட்டிருப்பர். துலா மாதம் என்றழைக்கப்படும் ஐப்பசி மாதம் முழுவதும் கங்கைக்கு இணையான புண்ணிய நதியான காவேரியில் கங்கா தேவியானவள் பிரவாகிப்பதாக புராணங்கள் உரைக்கின்றன. தான் செய்த பாவங்களைக் கழிக்க எல்லோரும் கங்கையில் நீராடுகின்றனர். உலகத்தாரின் பாவ மூட்டைகளைச் சுமக்கும் கங்காதேவியானவள் அதிலிருந்து விடுபட்டு, தான் பொலிவடைய காவேரிக்கு வந்து ஸ்நானம் செய்யும் காலமே இந்த ஐப்பசி மாதம். கங்கா தேவியே தனது பாவத்தினைப் போக்கிக்கொள்ள காவேரியை நோக்கி ஓடிவருகிறாள் என்றால் நமது காவேரியின் மகத்துவத்தைச் சொல்லவும் வேண்டுமா! ஆக இந்த ஐப்பசி மாதத்தில் என்றாவது ஒருநாள் நாமும் காவேரிக்கரைக்குச் சென்று துலாஸ்நானம் செய்து கங்கை-காவேரி இரண்டிலும் ஒருசேர நீராடும் பாக்கியத்தை அடைவோம். ?தீபாவளியை ஒட்டி வரும் அமாவாசை நாளில் வட இந்தியர் பலரும் குறிப்பாக வட்டிக்கடை வைத்திருக்கும் மார்வாடிகள் மகாலட்சுமி பூஜை செய்கிறார்கள்.

அமாவாசை நாளில் மகாலட்சுமி பூஜை செய்யலாமா? முரண்பாடாக உள்ளதே..!
- ரமேஷ்குமார், ஆலந்தூர்.
ஐப்பசி மாத அமாவாசை நாளன்று வடஇந்தியர் பலரும் மகாலட்சுமி பூஜை செய்வது வழக்கம். நகைக்கடை அதிபர்கள் அன்றைய தினம் லட்சுமி குபேர பூஜை செய்து வழிபடுவார்கள். ஐப்பசி மாதத்தினை துலா மாதம் என்று குறிப்பிடுவார்கள். துலாம் லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரன் தனகாரகன் என்று போற்றப்படுபவர். இவருக்கு உரிய தேவதை மகாலக்ஷ்மி. துலாம் லக்னத்திற்கு பத்தாம் இடமாகிய தொழில் ஸ்தானத்திற்கு அதிபதி சந்திரன். பதினொன்றாம் இடமாகிய லாப ஸ்தானத்திற்கு அதிபதி சூரியன். தொழில் மற்றும் லாப ஸ்தானாதிபதிகள் இருவரும் இணைந்து துலாம் ராசியிலே சஞ்சரிக்கும் நேரம் என்பதால் செய்யும் தொழிலில் லாபம் வேண்டி இந்த நாளில் லட்சுமி குபேர பூஜையை செய்கிறார்கள். அன்றைய தினத்திலிருந்து புதிய கணக்கும் தொடங்குகிறார்கள். அன்று லட்சுமி தேவியை பூஜிக்க சகல ஐஸ்வரியங்களும் நம்மிடம் வந்து சேரும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். வட இந்தியாவில் அரசர்கள் காலம் முதலே தீபாவளி நாளன்று கஜானாவிற்கு பூஜை செய்யும் பழக்கம் இருந்திருக்கிறது.

- திருக்கோவிலூர் K.B ஹரிபிரசாத் சர்மா