பாசக்காரப் பிள்ளை இந்த பாலமுருகன்!



தஞ்சை-பெருமகளூர்

பொதுவாக ஓர் ஆலயம் என்றால் முகப்பில் ஒரு கோபுரமோ அல்லது மண்டபமோ இருக்கும். ஆனால் ஓட்டுக் கூரை போன்ற அமைப்புடன் கூடிய ஒரு ஆலயம் திருச்சி பெருமகளுரில் உள்ளது. ஸ்ரீபால சுப்பிரமணிய சுவாமி அருள்பாலிக்கும் ஆலயம் இது. ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முன்னே ஓடுகளால் வேயப்பட்ட மண்டபத்தை கடந்ததும் மகா மண்டபம் உள்ளது. அடுத்து கொடி மரம், பீடம், மயில் ஆகியனவற்றைக் கடந்து அடுத்துள்ள அர்த்த மண்டபம் நுழைவாயிலின் இடதுபுறம் நாகர் பிள்ளையார் திருமேனிகளை தரிசிக்கலாம். அடுத்துள்ள கருவறையில் முருகன், பால சுப்பிரமணிய சுவாமி என்ற திருநாமத்துடன் தனித்து நின்ற கோலத்தில் கையில் வேலுடன் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கின்றார். மாதக் கார்த்திகை, பங்குனி உத்திரம், சஷ்டி, விசாகம் போன்ற நாட்களில் இறைவனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திர நாளன்று ஆலயத்திற்கு முன் சொக்கப்பனை திருவிழா, பெருந்திரளான பக்தர்கள் குழுமியிருக்க சிறப்புடன் நடைபெறும். பங்குனி மாதத்தில் இறைவனுக்கு 13 நாட்கள் உற்சவம் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழா மயில், ஆடு, யாளி, அன்னபட்சி, யானை, ரிஷபம், குதிரை என அடுத்தடுத்து வாகனங்களில் தினசரி முருகப்பெருமாள் தன் துணைவியருடன் வீதியுலா வருவார். ஒன்பதாம் நாள் தேர்த் திருவிழா பிரமாண்டமாகக் களை கட்டும். அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்தும் பக்தர்கள் பெருமளவில் குழுமியிருக்க, திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். பத்தாம் நாள் தீர்த்த விழாவும், பதினோராம் நாள் தெப்ப உற்சவமும் வெகு விமரிசையாக நடைபெறும். நிறைவாக பதின்மூன்றாம் நாள் விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா பூரணமடைகிறது.  தினமும் இரண்டு கால புஜை இவ்வாலயத்தில் நடக்கிறது. காலை 7 முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 முதல் இரவு 7 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

இங்கு கோயில்கொண்டிருக்கும் பால முருகனை இறைவனாகத் துதிப்பதோடு, தங்கள் வீட்டு பிள்ளையாக நேசிக்கிறார்கள் பக்தர்கள். ஏதேனும் பிரச்னையில் வீட்டிலுள்ள
சிறுவர்களிடமும் சிலசமயம் யோசனை கேட்கிறோமே, அந்த பாச உணர்வை இந்தக் கோயிலில் பக்தர்கள் வெளிப்படுத்துவதை நெகிழ்ச்சியுடன் கவனிக்கலாம். அவர்களுக்கு அரிய யோசனைகளையும், உத்திகளையும் உணர்த்தி அவர்களைப் பிரச்னைகளிலிருந்து விடுவிப்பதில் இந்த முருகன், பக்தர் ஒவ்வொருவர் குடும்பத்திலும் தலைமகனாக விளங்குகிறான் என்றால் அது மிகையில்லை. தஞ்சை மாவட்டம் பேராவூரணி பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது பெருமகளுர்.
                               

- திருச்சி சி.செல்வி