சுவாசிப்பதைப்போல இயற்றப்பட வேண்டியதுதான் கர்மா!



பகவத் கீதை - 55

எல்லாமே பரந்தாமன்தான், எதுவுமே அவருக்காகத்தான் என்ற எண்ணம் தோன்றும்போது சுயம் எங்கிருந்து வரும்? புலன் உணர்வு எப்படித் தெரியும்? நாமாக நாமில்லாதபோது எல்லோருமே நாராயண ஸ்வரூபம்தானே! துரதிருஷ்டவசமாக நம்முடைய சுயம் பிறரைச் சார்ந்திருக்கிறது. ஆமாம், நாம் பெரும்பாலும் பிறருக்காகவே வாழ்கிறோம். நம் உடலை மறைக்கத்தான் உடையென்றாலும், அதையும் அலங்காரமாகத்தான் செய்துகொள்கிறோம். ஆழ்ந்து யோசித்தோமானால் அந்த அலங்காரம் நமக்குத் தேவையில்லாதது, அனாவசியம் என்பது புரியும். ஆனாலும் அலங்காரம் செய்துகொள்கிறோம். எதிர்ப்படுபவர் நம் அலங்காரத் தோற்றத்தைக் கண்டு வியந்து புருவம் உயர்த்தவேண்டும், நம்மிடம் அந்த ஆடை எங்கே வாங்கியது என்று கேட்கவேண்டும், ‘உனக்கு மிகவும் பொருத்தமாக, அழகாக இருக்கிறது’ என்று சொல்லவேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கிறோம். அதேசமயம் அவர்கள் அப்படி நம்மை கவனிக்காவிட்டால், நம்மைப் புறக்கணித்தால், நாம் துவண்டும் போகிறோம்.

ஏன், அவர்கள் பாராட்டாவிட்டால் நம்மிட மிருந்து என்ன குறைந்துவிடப் போகிறது, பாராட்டிவிட்டால் என்ன அதிகரித்துவிடப் போகிறது? குறைவதும் அதிகரிப்பதும் நம் மன சந்தோஷம்/துக்கம்தானே தவிர வேறு எதுவும் இல்லை என்பதுதானே யதார்த்தம்? அப்படி ஒரு மனநிலையை ஏன் வளர்த்துக்கொள்ள வேண்டும்? பாராட்டோ, இகழ்ச்சியோ எதுவும்
நம் மனசுக்குள் இறங்காதவரை நாம் லேசாகத்தான் இருக்கிறோம். இந்த லேசான நிலைதான் நாம் பரந்தாமனுடன் ஒன்றிவிடுவது. வேடிக்கையாகச் சொல்வார்கள், மனசும், மனிபர்ஸும் ஒன்றுதான். சில்லரைகளை இறக்கிவைத்துவிட்டால், இரண்டுமே லேசாகிவிடும்! உண்மைதானே! ஆகவே இப்படிப்பட்ட நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை, எந்த விரக்தியும்  இல்லை. எல்லாம் அவனுடையதே, அவனுக்குரியதே என்று பகவானிடம் அர்ப்பணித்துவிட்டால், இப்படி மனம் லேசாவது எளிதில் சாத்தியமாகும். ஒரு கட்டத்திலிருந்து அடுத்த உயர்வுக்குச் செல்லவேண்டியதுதான் வாழ்க்கையின் இலக் கணம். அந்த உயர்வு எது, எப்படி என்று யோசிக்கும்போதுதான் சுயம் குறுக்கிடுகிறது. இறைவனுடன் ஒன்றிவிடுவதான உயர்வு, வயதைப் பொறுத்தது என்று நாம் கற்பனை செய்துகொள்வதால்தான், அந்த ‘வயது’வரை நாம் பல்வேறு எதிர்மறை குணங்களை, உயர்வுகளோடு சேர்த்து வளர்த்துக்கொள்ளும் கட்டாயத்துக்கு ஆட்படுகிறோம்.
 
அதனாலேயே கடமைகளை நிறைவேற்றுவது என்பதை, நாம் அந்தக் கடமையில் ஆதாயத்தைத் தேட முயற்சிக்கும் நடவடிக்கைகளாகவே  மேற்கொண்டுவிட்டோம். படிப்பது என்ற கர்மா, அறிவை வளர்த்துக்கொள்ளதான் என்பதைவிட, எதிர்காலத்தில் நல்ல வேலையில் அமர்ந்து நிறைய சம்பாதிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன்தான் மேற்கொள்ளப்படுகிறது. அடுத்தடுத்த வளர்ச்சி நிலைகளும் அப்படியே. ஏதோ ஒரு எதிர்பார்ப்பு அல்லது ஏக்கம். எல்லாவற்றையும்விட ‘எதிர்காலம் என்னவாகுமோ’ என்ற பயம்! எல்லாமே நிச்சயமற்றதாக இருக்கும்போது இந்த கற்பனை பயம் மட்டும் நிச்சயமானதாகப் படிந்துவிடுகிறது! இந்த பயத்துக்குக் காரணம், முக்கியமாக நம்பிக்கையின்மை. அதாவது, சொந்தத் தகுதியின்மீது நம்பிக்கையின்மை. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேற முடியாதோ என்ற நம்பிக்கையின்மை. எல்லாவற்றிற்கும் மேலாக, நம்மை இறைவன் கைவிட்டு விடுவானோ என்ற நம்பிக்கையின்மை!
‘உன் கர்மாக்களைச் செய்துகொண்டே இரு, பிற அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று பரந்தாமன் பலவாறாக அறிவுறுத்தியும், பயம்! இதனால்தான் ஞானிகள் கர்மாக்களை
இயற்றுவது மட்டுமே தம் பணி என்று எந்த சலனத்துக்கும் ஆட்படாமல் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

நிராசீர்யதசித்தாத்மா த்யக்தஸர்வபரிக்ரஹசாரீரம் கேவலம் கர்ம குர்வன்னாப்னோதிகில்பிஷம் (4:21) ‘‘சரீரத்தால் வினையாற்றுபவன் பாவத்தை அடைவதில்லை. அது எப்படி? அவன் ஆசையற்றவனாக இருப்பான், மனதை அலையவிடாதவனாக இருப்பான், உடலைத் தன் விருப்பம்போல செயல்பட விடாதிருப்பான், தன் உடைமைகளில் எந்த அக்கறையும் கொள்ளாதவனாக இருப்பான் - இத்தகையவன் தன் உடலால் வினைகளை மேற்கொள்பவன், கொஞ்சமும் பாவம் அடையாதவனாகவே இருப்பான்!’’ எந்த ஒரு செயலை நம் உடல் மேற்கொள்கிறதோ அந்தச் செயலில் முழுமையாக ஈடுபடுபவன் தெளிவுடன் இருப்பான், அதனாலேயே அவனை எந்தப் பாவமும் அண்டாது. வாகனம் ஓட்டிச் செல்கிறான் ஒருவன். அவனுடைய பரிபூரணமான கவனம் வாகனம் ஓட்டுவதிலேயே நிலைத்திருக்கவேண்டும். சாலை விதிகளை அனுசரிப்பதும், நிதான வேகத்தில் வாகனத்தை செலுத்துவதும், பிற வாகனங்களுக்கு எந்தவகையிலும், எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதிருப்பதும் வாகனம் ஓட்டுவதாகிய செயலின் பரிபூரண நிலை.

மனதை வாகனம் ஓட்டுவதில் செலுத்தாமல் குறிப்பிட்ட இடத்திற்கு வாகனத்தில் போய்ச் சென்றுவிட்ட பிறகு, அடுத்து மேற்கொள்ளவேண்டிய செயலைப் பற்றி இப்போதே நினைத்துக்கொண்டு செல்வது வாகனம் ஓட்டுவதாகிய கர்மாவை முழுமையாகச் செய்வதாகாது. எதிலும் அவசரம், எதிர்பார்ப்பு, ஏக்கம், பொறாமை, சுய அனுதாபம், சொந்தத் தகுதி பற்றிய தவறான உயர் மதிப்பீடு, பிறர் யோசனைகளை ஏற்றுக்கொள்ள விரும்பாத ஈகோ, விமரிசனங்களை சகித்துக்கொள்ள முடியாத ஆத்திரம்… எல்லாமே கர்மாவை இயல்பாகச் செய்யவிடாமல் தடுப்பவை.
இதற்கு முக்கிய காரணம், செய்யும் கர்மாவில் நாம் முழுமையாக ஈடுபடாததுதான். அரவிந்த அன்னை சொல்வார்கள்: ‘ஆத்மார்த்தமான ஈடுபாட்டைக் காட்டும் எந்தச் செயலும் பூரணத்துவம் பெறும். உதாரணமாக, குளிப்பதாகிய செயலில் குளிப்பதைத் தவிர வேறு எந்த சிந்தனையிலும் மனம் நாட்டம் கொள்ளக்கூடாது. குளித்துவிட்டு பூஜை செய்யவேண்டுமே, அதற்குப் பிறகு காலை உணவை எடுத்துக்கொள்ள வேண்டுமே, பின்னர் அலுவலகம் புறப்படவேண்டுமே என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தால், குளியல் முழுமை பெறாது. குளியலுக்கு சம்பந்தமே இல்லாத பிற எண்ணங்களின் தாக்கத்தால், இந்தச் செயல் சரிவர மேற்கொள்ள முடியாததாகிறது! ‘அரைகுறைக் குளியல்’ என்ற நிறைவற்ற கர்மாவாகிவிடுகிறது!’

முழு ஈடுபாட்டுடன் செய்யப்படும் ஒவ்வொரு செயலுமே ஒரு தியானத்துக்கு ஒப்பானதாகிறது என்கிறார் அன்னை. ‘செய்வன திருந்தச் செய்’ என்ற நம் மூதுரையும் இதைத்தான் வலியுறுத்துகிறது. திருந்தச் செய்யவேண்டுமென்றால் அதற்கு எந்த இடையூறும் இருக்கக்கூடாதே! ஒரே செயலை மறுபடியும் செய்ய நேருமானால் அதற்கு ஏதேனும் இடையூறுதானே
காரணமாகிறது? நாம் திட்டமிடுவதில் வல்லவர்கள். இன்ன நேரத்துக்கு சாப்பாடு, இன்ன நேரத்துக்குத் தூக்கம், இன்ன நேரத்துக்கு அலுவலகப் பணி என்று திட்டமிட்டுக்கொள்கிறோம். இந்தத் திட்டமிடுதலே பழக்கமுமாகிவிடுகிறது. அதனாலேயே கண்கள் கடிகாரத்தைப் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன.  சாப்பாட்டையே எடுத்துக்கொள்வோம். காலை, மதியம், மாலை, இரவு என்று வேளைகளை வகுத்துக்கொண்டு சாப்பிட்டுப் பழகிவிட்டோமானால் அந்தந்த வேளையில் தானாகப் பசியெடுக்கிறது! அதாவது பசி என்ற உணர்வை அந்த நேரம் மிகச் சரியாக உணர்த்துகிறது.

முந்தைய உணவு செரித்ததா இல்லையா என்பதில் அக்கறை இல்லை, இந்த வேளைக்கு உணவு தேவை, அவ்வளவுதான்! இந்தப் பசி உணர்வை ஒத்திப்போட முடியாதபடி பழக்கம் நம்மைக் கட்டிப்போட்டுவிடுகிறது. ‘அடடே நேரமாயிட்டுதே, சாப்பாட்டு நேரம்…’ என்றெல்லாம் யோசிக்கத் தோன்றிவிடுகிறது; தப்பிய அந்த நேரத்தில் செய்துகொண்டிருக்கும் வேலையும் அரைகுறையாகிப் போய்விடுகிறது. (சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே வாசனையை நுகராமல், ருசியை உணராமல் ஆன்ட்ராய்ட் ஃபோனில் ‘வாட்ஸ் ஆப்’ பார்த்துக்கொண்டே சாப்பிடுவதாகிய அந்த கர்மாவை நிறைவேற்றுபவர்கள் இப்போது அதிகமாகி விட்டார்கள்!) வயது காரணமாக உடல் தளர்வடைந்தாலும், பழக்கம் காரணமாக உணவை ருசிப்பதில் மோகம் குறைவதில்லை. அதாவது, அப்படி உணவு அருந்துவது அந்த வயதான உடல் நிலைக்கு ஒவ்வாதது என்று தெரிந்திருந்தும்; அதனால் பாதிப்பு ஏற்பட்ட பிறகும்!
‘எங்கேயோ பராக்கு பார்த்துண்டு சாப்பிடாதே, சாப்பாடு உடம்பிலே ஒட்டாது’ என்று நம் முதியவர்கள் நம்மைக் கண்டித்ததுண்டு. நாம் உண்ணும் உணவிலேயே நாம் முழு கவனம் செலுத்தவேண்டும் என்ற பாசம் மிகுந்த கண்டிப்பு அது. அதனால் நாம் சிறப்பான  உடல்நலத்தைப் பெற வேண்டுமே என்ற அக்கறை மிகுந்த கண்டிப்பு அது. ஐம்புலன்களையும் ஒருங்கே ஒரே பணியில் குவிக்கவேண்டும் என்ற தியானப் பயிற்சி அது.

 ‘நொறுங்கத் தின்றால் நூறு வயசு’ என்ற நம் முன்னோர்களின் இன்னொரு அறிவுரையும் இந்த ‘தியான’த்தை உள்ளடக்கியதுதான். நிதானமாக நன்கு மென்று தின்னும்போது நம் பற்கள், நாக்கை சேதப்படுத்திவிடாமல் பார்த்துக்கொள்ள முடிகிறது. அவ்வாறு நொறுங்கத் தின்னப்படுபவை எளிதில் ஜீரணமாகின்றன. அவ்வாறு ஜீரணமாகும் உணவு சத்தாகி, நம் ரத்தத்தோடு கலந்து நமக்கு திடமான உடல் சக்தியைக் கொடுக்கிறது. இவையெல்லாவற்றையும்விட, நொறுங்கத் தின்னும் அந்த நேரத்தில் வேறு சிந்தனை எதுவும் எழாமல் இருக்கிறது. அதனாலேயே இந்த கர்மாவை நம்மால் பூரணமாகச் செய்ய முடிகிறது! ஆக, எந்தச் செயலைச் செய்தாலும் அதிலேயே முழுமையாக ஈடுபடுபவன் எந்தப் பாவத்துக்கும் ஆட்படமாட்டான். அவன்தான் அதைத் தவிர பிற எதையுமே சிந்திப்பதில்லையே, வேறு எதிலுமே அக்கறை கொள்வதில்லையே! கொஞ்சம் யதார்த்தமாக சிந்திப்போம். எங்கும் பரவியிருக்கும் காற்றை நாம் எந்த அளவுக்கு சுவாசிக்கப் பயன்படுத்துகிறோம்? அதுதான் நிறைய கிடக்கிறதே என்று நுரையீரல் வீங்க வீங்க சுவாசிக்கிறோமா, இல்லையே! அல்லது நாளைக்குக் கிடைக்காமல் போய்விடக்கூடும், அதனால் கொஞ்சமாகக் காற்றை உள்ளுக்கிழுத்துக்கொண்டு, மிச்சத்தை நாளைக்கு சேமித்து வைத்துக்கொள்வோம் என்று யோசிக்கிறோமா, இல்லையே! அது தேவைக்கு மிகைப்படவும் கூடாது; குறையவும் கூடாது.

இவ்வாறு நம் சுவாச உறுப்புகள் தாமாக, தேவைக்கு வேண்டிய காற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு, வெளியே விடுகிறதே, இந்த நிலைதான் கர்மாவை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்வது!
பார்வையில் பல காட்சிகள் படலாம், ஏதேனும் ஒன்றிரண்டில் மனம் லயிக்கலாம். காதுகளில் பல ஒலிகள் வந்து விழலாம், ஏதேனும் ஒன்றிரண்டில் மனம் லயிக்கலாம். ஆனால் சுவாசம்? அது எதற்குமே கட்டுப்படாதது. துர்நாற்றம் வீசினால் கர்சீப்பால் மூக்கை மூடிக்கொள்ளலாமே தவிர, அந்த கைக்குட்டையால் துர்நாற்றத்தை ‘வடிகட்டி’ காற்றை கட்டாயமாக உள்ளுக்கு இழுத்துக்கொள்ளத்தானே வேண்டும்! சுகந்த நறுமணமாக இருந்தால், கொஞ்சம் விரும்பி சுவாசத்தை அதிக அளவுக்கு உள்ளிழுத்துக்கொள்ளலாமே தவிர, அந்தக் காற்றை வெளியே விடமுடியாமல் இருக்க முடிகிறதா? இயல்பான சுவாசம் முரண்படும்போது அது உயிரையே நிலைகுலைய வைக்கிறதே! தான் இயற்றும் ஒவ்வொரு கர்மாவையும் இப்படி சுவாசிப்பதுபோல பாவிப்பதுதான் ஒரு ஞானியின் குணம். அவன் உடலால் கர்மா இயற்றுகிறான்; உள்ளத்தால், இந்திரியங்களால் பாதிக்கப்படாதவனாக இருக்கிறான். இதற்கு முக்கிய காரணம், அந்தக் கர்மாவைத் தன் உடல் மேற்கொண்டாலும், தான் கர்த்தா அல்ல என்பதை அவன் நிறைவாக உணர்ந்திருப்பதுதான்.

சாதனை என்றால் பிறரை பிரமிக்கச்செய்யும் சாகசமல்ல; எந்தக் குறையுமின்றி நலமாக வாழ்வதே சாதனைதான். உறக்கம் வந்தால் உறங்குவதும், பசித்தால் சாப்பிடுவதும், உணரும்போது உடல் கழிவை நீக்குவதும் சாதனைதான். ஒவ்வொரு நாளும் இப்படி இயற்கையாக வாழ முடிவதே சாதனைதான், நிம்மதிதான். இப்படி ‘சாதிக்க’ முடிந்தால் எந்தப் பிரச்னை வந்தாலும் அந்த பிரச்னையை எதிர்கொள்ள மனபலமும், உடல் பலமும் உறுதுணையாக இருக்கும். ஆக, இது சாதனைதானே! உறங்கும் நேரத்தில் உறங்க இயலாமல், பசிக்கும் நேரத்தில் சாப்பிட முடியாமல், கழிவு வெளியேற்ற இயலாமல் போவது எல்லாம் வேதனை அல்லவா? இதெல்லாம் சரீரத்துக்குத் தேவையான, அவசியமான கர்மங்கள். இவற்றை முழு நினைவோடு நிறைவேற்றுபவன் பந்தங்களில் சிக்குவதில்லை. அவசியத்துக்கு என்ன தேவையோ அதில் மட்டுமே ஈடுபடுவதால் ஏற்படும் நிறைவு இது. தேவைக்கு அதிகமாகிற எல்லாம் அனாவசிய பந்தத்துக்கு வழிவகுக்கின்றன - அஜீர்ணம் மாதிரி! ஒரு செயலை செவ்வனே முடிக்கவேண்டும் என்ற தீர்மானம் மட்டும் இருந்தால் போதும், அதன் பலன் என்ன, விளைவுகள் என்ன என்ற கற்பனையில் இறங்கிவிட்டால் அந்தச் செயல் செவ்வனே முடிவுறாது போகும். இதனால்தான் சிந்தனையைத் தன் மீது நிறுத்தி செயலை மேற்கொள் என்று பரந்தாமன் அறிவுறுத்துகிறார்.

 - பிரபுசங்கர்