வேண்டியன எல்லாம் அருளும் துலா ஸ்நானம் என்ற திவ்ய நீராடல்!



புண்ணிய பூமியான பாரத தேசம் முழுவதும் ஏராளமான புண்ணிய க்ஷேத்ரங்களும், புண்ணிய தீர்த்தங்களும் நிறைந்து காணப்படுகின்றன. இவை புறத்தூய்மை மட்டுமல்லாது உள்ளத்தையும் தூய்மையாக்கும் தெய்வாம்சத்தோடு திகழ்கின்றன. கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி ஆகியன ‘சப்த நதிகள்’ எனப் போற்றிப் புகழப்படும் புண்ணிய நதிகளாகும். இவற்றில் பக்தி சிரத்தையுடன் நீராடி, உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்திக் கொண்டு கடைப்பிடிக்க வேண்டிய புண்ணிய விரதங்கள் பலவற்றையும் முறைப்படி கடைப்பிடிப்பதால் நாம் அடையும் நற்பலன்களும் பலவாகும். ‘சப்த’ நதிகளில் காவிரி நதியே முதன்மையானது, மேன்மையானது என்று புராணங்கள் காவிரி நதியைச் சிறப்பித்துப் போற்றுகின்றன. குடகு ராஜ்யத்தில் ஸஹ்ய பர்வதம் உள்ளது. அங்கே உள்ள பிரம்மகிரி என்ற சிகரத்தின் அருகில் காவிரி தோன்றுகிறாள்.

ஒவ்வொரு வருடமும் ராகுபகவான் அமர்ந்துள்ள ராசியில் சூரிய பகவான் பிரவேசிக்கும் மாதப் பிறப்பன்று சூரியன் உதிக்கும்முன் சென்று பரிசுத்தமான காவிரி நதியில் ஸ்நானம் செய்தால், உலகத்திலுள்ள அறுபத்தாறு கோடி தீர்த்தங்களிலும் நியமத்தோடு, பக்தி சிரத்தையுடன் ஸ்நானம் செய்ததினால் உண்டாகும் நன்மைகள் கிட்டும். துலாக் காவிரியில் நீராடுபவன் அழகு, ஆயுள், ஆரோக்யம், தூய்மை, நல்ல மனைவி, நல்ல கணவன், செல்வம், கல்வி, சுகம், வலிமை, ஈகை, பிள்ளைப்பேறு, மாங்கல்யப் பேறு, தீர்க்க சுமங்கலிப் பேறு, சுகானுபவம், எழுத்துத் திறமை, பேச்சுத் திறமை, பாட்டு, நாட்டியம் போன்ற கலைத் திறமை, நல்லெண்ணம், நல்வாக்கு முதலியவை உண்டாகி பேரோடும் புகழோடும் வாழ்வாங்கு வாழ்வான் என்று புராணங்களும் சாஸ்திரங்களும் உறுதியாகக் கூறுகின்றன.

ஒரு சமயம் சிவபெருமான் பார்வதி தேவியுடன் அழகுமிகுந்த வனம் ஒன்றில் உலாவி வரலானார். அப்போது பார்வதி அந்த வனத்தின் செழிப்பையும் அங்கு எவ்வித பேதமும் இல்லாமல் உலவி வரும் மிருகங்களையும் கண்டு அதிசயித்தபடி சுற்றிப் பார்த்துக் கொண்டே வந்தாள். மேலே வானத்தை நோக்கிய பார்வதி அங்கு பலவிதமாக, பலவண்ணங்களில் அழகு மிளிரப் பறக்கும் ஏராளமான பறவைகளைக் கண்டு ஆச்சர்யப்பட்டு, ‘‘சுவாமி, இதோ மேலே பாருங்கள். லட்சோப லட்சம் பறவைகள், மிகுந்த வனப்புடைய வண்ண வண்ணப் பறவைகள், கண்ணைக் கவரும் வண்ணம் பறந்து செல்கின்றனவே. இவையெல்லாம் எங்கே போகின்றன, அந்த விபரத்தைச் சொல்லுங்கள்’’ என்றாள்.

பரமேஸ்வரனும், ‘‘தேவி, வானத்தில் பறக்கும் பல வண்ணப் பறவைகள் யாவும் எல்லா உலகங்களிலுமுள்ள தீர்த்தங்களே என்பதை அறிந்து கொள். அந்தத் தீர்த்தங்கள் யாவும் தம்மைவிட உயர்ந்த தீர்த்தத்தில் குளித்து ஸ்நானம் செய்து தம் பாவங்களைப் போக்கிக் கொண்டு நம் எதிரில் வருகின்றன. இவை அனைத்தும் வருடாவருடம் ஐப்பசி மாதத்தில் காவிரியில் சென்று நீராடி விட்டு, தம் பாவங்களை போக்கி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.’’ என்றார்.

அப்போது அப்பறவைகள் அங்கே சிவபெருமானும் பார்வதியும் எழுந்தருளியிருப்பது கண்டு தங்களின் உண்மை உருவத்தை அடைந்து தேவதைகளாக அவர்கள் முன்னே வந்து வணங்கி நின்றன.‘‘சுவாமி, ஐப்பசித் திங்களில் துலா காவிரி ஸ்நானம் செய்த பலனால் தங்களைக் கண்டு தரிசிக்கும் பேறு பெற்றோம். தங்களது அருளை நாளும் வேண்டி நிற்கிறோம்.’’ என்றனர் தீர்த்த தேவதைகள். அவர்களின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான் ‘‘அவ்வாறே அருள் செய்தோம்’’ என்று கூறிவிட்டு உமையுடன் கைலாயம் சென்றார். அங்கு சென்றவுடன் பார்வதியும், ‘‘சுவாமி, துலா காவிரியின் மகத்துவத்தை அறிய மிக ஆவல் கொண்டுள்ளேன். அதனைக் கூறுங்கள்’’ என்றாள். ‘‘தேவி, இவ்பூலகில் அறுபத்தாறு கோடித் தீர்த்தங்கள் உள்ளன. அவை அனைத்துமே என்னிடம் வரம் பெற்று சிறந்து விளங்கி வருகின்றன. அவை அனைத்திலும் மூழ்கியவர்களுக்கு அவர்களது எண்ணங்களை எண்ணிய வண்ணம் நிறைவேற்றி உடனுக்குடன் பலன் அளிப்பதில் காவிரி தீர்த்தமானது மிகவும் உயர்ந்தது. அப்படிப்பட்ட காவிரியின் பெருமைகளை எவராலும் உரைக்க முடியாது. உத்தர கங்கையானது எல்லாத் தீர்த்தங்களிலும் மேலானது போல், தட்சிண கங்கை என்று புகழ் பெற்று விளங்கும் காவிரியும் மேலானதே. காவிரி தீர்த்தமானது தொட்டவரையும், உண்டவரையும் தூய்மை செய்யவல்லது. தன்னிடம் வந்து நீராடி வேண்டுபவர்கள், அவர்கள் கேட்பதைத் தாராளமாகக் கொடுக்கக்கூடிய காமதேனுவைப் போலவும், உலகில் உள்ள அனைத்து தீர்த்தங்களின் பாவங்களையும் ஒழிக்கத்தக்கதாகவும் காவிரியானவள் நதி ரூபமாக வெளிப்பட்டாள்.

எல்லாப் புராணங்களும் காவிரி நதிக்கு ஓர் சிறப்பைச் சொல்வது வழக்கம். ‘‘எல்லா நதிகளிலும் மக்கள் நீராடித் தங்கள் பாவத்தைப் போக்கிக் கொள்கிறார்கள். அப்படி மக்கள் விட்டுச் செல்லும் பாவங்களை எல்லா நதிகளும் காவிரியை அடைந்து போக்கிக் கொண்டு தூய்மை பெறுகின்றன’’ என்று பிரம்ம வைவர்த்த புராணமும், துலா மகாத்மியமும் எடுத்துக் கூறுகின்றன.குடகு என்ற காவிரியின் உற்பத்தி ஸ்தானத்தில் உலகிலுள்ள சகல புண்ணிய தீர்த்தங்களும் ஒன்று சேர்வதால் ஐப்பசி (துலா மாதம்) மாதப் பிறப்புக்கு ஸ்நானம் செய்ய மக்கள் பெரும் திரளாக அங்கே கூடுகிறார்கள். காதோலை, கருகமணி முதலிய மங்கலப் பொருட்களை நீரிலிட்டு காவிரியைப் பூஜிக்கிறார்கள். ‘துலா மாஸ ஸ்நானம்’ இங்கே விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அதே போல் மாயூரம் என்னும் மயிலாடுதுறையில் ஐப்பசி மாதக் கடைசி நாள் ‘கடைமுகம்’ விசேஷம். சங்கமத்தில் ஆடி அமாவாசை விசேஷம். ஆலயங்களில் ஆண்டுதோறும் பத்து நாள் பிரம்மோத்சவம் விழா கொண்டாடுகிறார்கள். ஆனால் காவிரியில் ஐப்பசி மாதப் பிறப்பு முதல் கடைமுகம் வரை முப்பது நாளும் உற்சவம்தான். அப்படித்தான் காவிரிதீரவாசிகள் துலா ஸ்நானம் செய்து காவிரி அன்னையை வழிபட்டு உள்ளும் புறமும் தூய்மை பெறுகிறார்கள்.

தமிழ்நாட்டில் பவானி, கொடுமுடி, மோகனூர், மாயனூர், குளித்தலை, திருப்பராய்த்துறை, திருவரங்கம், திருவையாறு, தஞ்சாவூர், சுவாமி மலை, கும்பகோணம், மாயூரம், பூம்புகார் முதலிய தீர்த்தக்கரைகளில் துலா ஸ்நானம் சிறப்பாக நடைபெறுகிறது. இத்துறைகளில் மிகவும் முக்கியமான திருத்தலமாகக் கூறப்படுவது நாகை மாவட்டத்தில் உள்ள மாயூரம் எனும் மயிலாடுதுறை துலாக்கட்டம் ஆகும். இந்த மயிலாடுதுறையில் கோயில் கொண்டுள்ளவர் அருள்மிகு மயூரநாதர். அம்பாள் பெயர் அபயாம்பிகை. அம்பாள் மயில் வடிவில் வழிபட்ட தலம். மயில் வடிவம் கொண்டு ஆடிய தாண்டவம் ‘கெளரி தாண்டவம்’ எனப்படும். இதனால் இந்தத் தலம் ‘கெளரீ மாயூரம்’ என்று அழைக்கப்பட்டது. தல விருட்சமாக மாமரமும், வன்னி மரமும் உள்ளன. தல தீர்த்தங்களாக பிரம்ம தீர்த்தம், ரிஷப தீர்த்தம், காவிரி தீர்த்தம் ஆகியவை உள்ளன.

இவற்றில் முக்கியமானது காவிரி தீர்த்தம் ஆகும். இங்கே துலா மாதமாகிய ஐப்பசி மாதத்தில் ‘துலா நீராடுதல்’ மிகவும் சிறப்பான ஒன்றாகும். ஐப்பசி மாத இறுதி நாளான ‘கடை முழுக்கு’ நாளன்று இங்குள்ள எல்லாக் கோயில்களிலும் உள்ள மூர்த்திகளும் உலாவாக எழுந்தருளி வந்து மயூரநாதரோடு தீர்த்தம் கொடுக்கும் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. துலா மாதமாகிய ஐப்பசி மாதத்தில் அறுபத்தாறு கோடி நதிகளும் காவிரியில் கலப்பதால் இந்த மாதத்தில் காவிரி தீர்த்தத்தில் நீராடுவது, மிகுந்த புண்ணியம் சேர்க்கும். அனைத்து பாவங்களும் அகலும். ஐப்பசி மாத காவிரி தீர்த்த நீராடல் ஏழு தலைமுறை பாவத்தையும் போக்கும் என்று சாஸ்திரங்களும், புராணங்களும் விரிவாக எடுத்துக் கூறுகின்றன. முடவன் ஒருவன் ஐப்பசி மாதத்தில் காவிரியில் மூழ்கி நீராட வர இயலாமல், கார்த்திகை முதல் தேதி நீராட, அவனுக்கு மோட்சம் கிடைத்தது. எனவே கார்த்திகை மாதம் முதல் நாளன்று மூழ்கி நீராடுபவர்களுக்கும், அந்தப் புண்ணியம் உண்டு. கார்த்திகை மாத முதல் தேதி நீராடலை ‘முடவன் முழுக்கு’ என்று அழைக்கிறார்கள். இங்கே காவிரித் துறையில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி ஆலயம் உள்ளது. ‘உத்ரமாயூரம்’ என்ற வள்ளலார் கோயில் ஆற்றின் வடகரையில் உள்ளது. இங்கே மேதா தட்சிணாமூர்த்தி ரிஷப தேவருக்கு உபதேசிக்கும் மூர்த்தியாக யோகாசனத்தில் அமர்ந்து ஞானமுத்திரையுடன் சிறப்பாகக் காட்சி தருகிறார்.

‘ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது’ என்ற பெருமையுடனும் காசிக்குச் சமமானதாகவும் உள்ளது மயிலாடுதுறை திருத்தலம். ஹரிஹர பிரம்மாதிகளால் பூஜிக்கப்பட்ட தலம். எப்பொழுதும் வேத கோஷம் நிறைந்த தலம் என்று அப்பராலும், ஞானசம்பந்தராலும் பாடப்பெற்றது ஆகும். தென்திசையில் அபயாம்பிகை சமேத மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் பழம்பெருமை வாய்ந்த புராதனக் கோயிலாகும். பெரும் புண்ணியம் செய்த தம்பதியரான நாத சர்மாவும், அனவித்யா தேவியும் பகவானிடத்தில் ஜோதி ரூபமாக ஐக்கியமானதும் குதம்பைச் சித்தர் சித்தியடைந்ததும், வித்யா உபாசகர் நல்லத்துக்குடி கிருஷ்ண சுவாமி ஐயர் அபயாம்பிகையின் திருச்சந்நதியில் கலந்ததும் ஆகிய பல பெருமைகளைப் பெற்றது, ‘மாயூரம்’ என்று
வழங்கப்பெறும் மயிலாடுதுறை திருத்தலம் ஆகும்.

அன்னை பராசக்தி மயில் வடிவத்தில் பகவானைப் பூஜித்த இந்தத் தலத்தை ‘கெளரீ மாயூரம்’ என்று புகழ்ந்து கூறுகிறார்கள். காவிரியின் வடகரையில் அமைந்துள்ள உத்தர மாயூர ஸ்தலத்தில் ஆதியில் கண்வ மகரிஷி ஆசிரமம் அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். அநேக சீடர்களுடன் தங்கியிருந்து, தவ வாழ்க்கை மேற்கொண்ட அவர் தினமும் காவிரியில் நீராடி ஞான வேள்வியை இயற்றி வரலானார். அவ்வாறு அவர் வாழ்ந்து வரும் நாளில் தம் சீடர்களுடன் காசியாத்திரையை மேற்கொண்டார். அதன்படி நீண்ட தூரம் நடந்து சென்று வரும் நாளில், வழியில் ஐந்து கன்னிப் பெண்கள் பரிதாபமான கோலத்தில் புலைச்சியர் உருவத்தில் எதிர்ப்பட்டனர். அவர்களைக் கண்டவுடன் கண்வ மகரிஷி, தம் சீடர்களுடன் சிறிது விலகிச் சென்றார். அவருடைய செய்கையைக் கண்ட புலைச்சியர்கள் ‘கல கல’வென்று சிரிக்கலாயினர். அதைக் கண்டு கோபமுற்ற கண்வ மகரிஷி அவர்களைப் பார்த்து சிரித்ததற்கான காரணத்தையும் அவர்களைப் பற்றிய வரலாற்றையும் கூறுமாறு கேட்டார்.

அவர்கள் அவரை வணங்கி ‘நாங்கள் கங்கை, யமுனை, நர்மதா, சிந்து, கோதாவரி என்னும் புண்ணிய நதிகள் ஆவோம்!’’ என்று கூறினார்கள். கண்வர் அவர்களை நோக்கி, ‘‘அப்படியா? ஏன் இந்த அவல நிலைக்கு ஆளானீர்கள்?’’ என்று வியப்பு மேலிட கேட்டார். அவர்களும் கண்வ மகரிஷியை நோக்கி, ‘‘சுவாமி, காசியில் எங்களுக்கு எதிர்பாராத விதமாக அநேக பாவங்களும் பிரம்மஹத்தி போன்ற தோஷங்களும் சம்பவித்ததால் எங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது. நாங்களும் காசி விஸ்வநாதரிடம் சென்று தோஷ நிவர்த்தி எவ்வாறு ஏற்படும் என்று கேட்டு வேண்டி நின்றோம். அதற்கு அவர் எங்களை கெளரீ மாயூரம் சென்று ரிஷப தீர்த்தக்கட்டத்தில் காவிரியில் நீராடி தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வந்தால் எங்கள் தோஷம் நீங்கி பழைய நல்ல வடிவத்தைப் பெறுவோம். எங்கள் பாவங்கள் அனைத்தும் விலகும் என்று அருள்புரிந்தார். அதன்படி நாங்கள் யாவரும் அங்கு போய்க் கொண்டிருக்கிறோம்!’’ என்று தங்கள் வரலாற்றைக் கூறி முடித்தார்கள். கண்வ மகரிஷி அவர்களை கூறியதைக் கேட்டு வியப்பு மேலிட்டவராக, தாம் செல்ல வேண்டிய காசிப் பயணத்தைக் கைவிட்டு அவர்களுடன் மாயூரம் நோக்கித் திரும்பலானார். ஐந்து கன்னியரும் மாயூரம் தலத்தில்  ஐப்பசி மாதம் அமாவாசை தினம் முதல் ரிஷப தீர்த்தத்தில் புனித நீராடி தட்சிணாமூர்த்தியை வணங்கி வழிபட்டு நல்ல கதி அடைந்து தம் இருப்பிடம் நோக்கிச் சென்றனர். கங்காதேவியுடன் வந்த கண்வ மகரிஷியும் தம் சீடர்களுடன் பல வருடங்கள் காவிரியில் புனித நீராடி தன் ஆசிரமத்திலேயே சிவலிங்க பிரதிஷ்டை செய்து, ஜீவன் முக்தராக ஆனதாக இந்த தலவரலாறு கூறுகின்றது.

இப்படி மாயூரம் திருத்தலத்தில் காவிரியில் புனித நீராடி, மயூர நாதரையும், அம்மையாரையும் தரிசித்தவனுக்கு மறுபிறவி என்பது கிடையாது. மாயூரக் காவிரியானது அதில் மூழ்கினவருக்கு முக்தியும், மோட்சமும் அளிக்கவல்லது. ‘மூர்த்தி, தலம், தீர்த்தம்’ என்னும் முக்கியமான மூன்றிலும் சிறந்து விளங்குவது மாயூரம் என்பது ஆன்றோரின் கருத்தாகும். இப்பிறவி எடுத்ததில் மகிழ்ந்தாலும், இவற்றை நாம் அறிந்து கொள்ளும் திறன் இருந்தாலும், அறிந்த பின் ஒரு முறையேனும் மாயூரத்தில் துலாக் காவிரி ஸ்நானம் செய்து, மயூரநாதரையும், அம்மையாரையும் தரிசித்து தானம் பல செய்து, ‘இனி ஒரு பிறவி வேண்டாம்’ என்று மனமாற வேண்டி கண்மூடி தியானிப்பதே சிறந்த பாக்கியமாகும். துலா மாதத்தில் காவிரியில் புனித நீராடி நிறைய தான தருமங்கள் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. துலா மாதத்தில் கொடுக்கப்படும் ஒரு தாம்பூலத்தின் மதிப்பை விவரிக்க இயலாது. அப்படியிருக்க அதுசமயம் செய்யும் அன்னதானமும், வஸ்திர தானமும், பூமி தானமும், தீர்த்த தானமும், தீப தானமும் செய்தால் அதனால் கிட்டும் பெரும் பயன்களைப் பற்றிச் சொல்ல வார்த்தைகளே இல்லை.

காவிரி க்ஷேத்திரத்தில் உள்ளவர்கள் நரக சதுர்த்தசியான தீபாவளி அன்று தலைக்கு எண்ணெயிட்டு வெந்நீரில் மங்கள ஸ்நானம் செய்து விட்டு, காவிரியில் சென்று அன்றைய தினம் நீராடி வருபவர்களைக் கண்டாலே போதுமாம். மேலும் காவிரியில் நீராட வாய்ப்பில்லாதவர்கள், தாம் வசிக்கும் இடத்தில் இருந்தபடியே ‘‘ஓம் காவிரியே நம:’’ என்று சொல்லிக் கொண்டே ஸ்நானம் செய்தாலும் புண்ணியம் உண்டாம். பத்தாயிரம் மைலுக்குஅப்பால் இருந்து கொண்டு காவிரியின் நாமத்தைச் சொல்பவருக்கே பெரும்புண்ணியம் கிடைக்கும் என்றால், காவிரியில் மூழ்கி நீராடுபவருக்கு எத்தகைய புண்ணியம் சேரும் என்பதை எண்ணும்போது இறைவனின் கருணையை வியக்காமல் இருக்க முடியாது.

காவிரியின் இருகரைகளிலும் ஏராளமான சிவ, விஷ்ணு ஆலயங்கள் இருக்கின்றன. காவிரி நதியில் ஐப்பசி எனும் துலா மாதத்தில் ஒரு நாள் மட்டும் மூழ்கி எழுந்தால் பாவங்கள் நீங்கும். புண்ணியம் சேரும், முக்தி கிடைக்கும் என்றென்னும் போது, துலா மாதம் முப்பது நாளும் விடியற்காலையில் சூரியன் உதிக்கும் முன் சென்று சங்கல்பம் செய்து கொண்டு பக்தி சிரத்தையுடன் காவிரியில் நீராடுபவர் அடைகின்ற நற்பலனை எவ்வாறு அளவிட்டுக் கூற முடியும்? துலா மாதத்தில் காவிரி ஸ்நானத்தினால் பலன் அடைந்தவர்கள் பல்லாயிரக்கணக்கானவர். மிருகங்கள், பறவையினங்கள், ஊர்வனகூட பயனடைந்துள்ளன. அரக்கர்களைக் கொன்ற தேவர்களின் பிரம்மஹத்தி போன்ற தோஷங்களும் நீங்கி, சுய உருவோடு திகழவும், நற்கதி அடைய வழிவகுத்ததாகும்.

‘‘துலா மாதத்தில் முப்பது நாளும் துலாக் காவிரி ஸ்நானம் செய்யாதவன் முதல் நாளும், கடைசி நாளும் செய்தாலே போதுமாம். பார்வையற்றோர், கால் கையிழந்தோர், நோயாளிகள், தரித்திரன், மகாபாவி ஆகியோர் நீராடாவிட்டாலும் காவிரியின் உற்பத்தியையும், மகிமைகளையும் கேட்டாலே போதும். அவர்களுக்கும் நற்கதி கிடைக்கும்’’ என்று புராணங்கள் கூறுகின்றன.

- டி.எம்.இரத்தினவேல்