தீபாவளி கொண்டாட்டம், திருமகள் தரிசனம்!



திருத்தேவனார்தொகை
இந்த திவ்யதேசத்தில் எம்பெருமான் தெய்வநாயகனாக அருள்பாலிக்கிறார். மா தவம் இயற்றினாலும் காணற்கரிய இந்தப் பெருமான், எளிய பக்தர்களின் உள்ளக் கிடக்கையை நிறைவேற்றும் பொருட்டு, மாதவப் பெருமாள் என்ற திருநாமத்துடன் உற்சவராக திருக்காட்சி நல்குகிறார். பாற்கடலிலிருந்து தோன்றியவள் என்பதால், தாயார் மூலவர், கடல் மகள் நாச்சியார் என்றழைக்கப்படுகிறார். தாயார் உற்சவருக்கு மாதவ நாயகி என்ற திருப்பெயர். தான் துர்வாசருக்குப் பிரசாதமாக அளித்த பாரிஜாத மாலையை அவமதித்தவனானாலும், இந்திரனுக்கு எல்லா வளங்களையும் வழங்கிய பேரன்பு மிக்க இந்தத் தாயார், தம் முன் வந்து நிற்கும் பக்தர் அனைவரது எல்லா நியாயமான கோரிக்கைகளையும் நிறைவேற்றி மகிழ்விக்கிறார். சீர்காழி-திருவெண்காடு சாலையில் திருவாலி தலத்துக்கு மிக அருகே உள்ளது திருத்தேவனார்த்தொகை என்ற கீழச்சாலை. ஆட்டோ, வாடகைக்கார் வசதி உண்டு.
கோயில் தொடர்புக்கு: 04364-237690.

ஆடுதுறை
தான் காதலித்து மணந்த, நந்தக முனிவரின் மகளான உஷை மீது சில அரச குலத்தவர்கள் உண்டாக்கிய அவதூறை நம்பி, அவளை விரட்டிவிட்டான் சந்திரகுல மன்னனான விஸ்வஜித். அந்தப் பாவத்தால் செல்வம் அழிந்து, தொழுநோயும் பீடிக்க, மனைவிக்கு செய்த துரோகத்துக்குப் பிராயசித்தம் தேட அவளை நாடிப் போனான். அவன் துயரைக் கண்ட துறவி ஒருவர், ‘நீ திருக்கூடலூர் எம்பெருமானை வணங்கு; உன் மனைவி உன்னைச் சேருவாள்’ என்று ஆறுதல் அளித்தார். அதன்படியே அவன் பெருமாளின் பாதம் பற்ற, விரைவில் தன் நோய் நீங்கியதோடு, மனைவியையும் அடைந்து மகிழ்ந்தான். இந்தப் பெருமாளுக்கு கோயில் எழுப்பி தேர் வடிவமைத்துக் கொடுத்ததன் மூலம் தன் நன்றியை வெளிப்படுத்தினான் அவன். அந்தத் தேர் ‘அம்பரீஷன் ரதம்’ என்றே வழங்கப்பட்டு, ராணி மங்கம்மாளால் புனரமைக்கப்பட்டது.

இந்தத் தேர் சுமார் 70 வருடங்களுக்கு முன்புவரை வீதிகளில் திருவுலா வந்திருக்கிறது. இப்படி பிரிந்த தம்பதியைச் சேர்த்து வைத்த இந்தப் பெருமாள், இன்றளவும் அந்தப் பேரருளை பக்தர்களுக்கு நல்கி வருகிறார். மன வேற்றுமையால் பிரிந்த தம்பதி இந்தப் பெருமாளுக்கு வெண்ணெயையும், கல்கண்டையும் நிவேதனமாக சமர்ப்பித்து, பிறகு அவற்றை கோயிலுக்கு வரும் குழந்தைகளுக்கு விநியோகித்தால், மன ஒற்றுமை ஏற்பட்டு அவர்கள் மீண்டும் இணைவது, இப்போதும் நடந்து வருகிறது. இந்தப் பரிகாரத்தை இவர்கள் வாரம் ஒருநாள் வீதம் பதினாறு வாரங்களுக்கு மேற்கொள்கிறார்கள். கும்பகோணம்-பாபநாசம் பாதையில் திருவையாறு செல்லும் வழியில் உள்ளது ஆடுதுறை பெருமாள் கோயில். கும்பகோணத்திலிருந்தும், பாபநாசத்திலிருந்தும் பேருந்து, ஆட்டோ, வாடகைக்கார் வசதிகள் உண்டு. கோயில் தொடர்புக்கு: 9344303809; 9843665315.

திருவெள்ளியங்குடி
வனவாசம் மேற்கொண்ட ராமன், சித்திர கூடத்தில் ஏகாந்தமாக மனைவி சீதை மடிமீது தலை கிடத்தி சயனித்திருந்தார். அதே சமயம் அவளுடைய எழிலையும் அநாகரீகமாக ரசித்துக்கொண்டிருந்தான் இந்திரனின் மகனான ஜயந்தன். தான் ஜயந்தனாக வந்தால் எங்கே அகப்பட்டுவிடுவோமோ என்று அஞ்சி ஒரு காகமாக உருவெடுத்து, சீதையின் அழகால் உன்மத்தம் கொண்டு, அவள் மேனியையே தன் அலகால் தீண்டும் அளவுக்கு அவன் காமுகனாக இருந்தான்.

இந்திரனின் பிள்ளையல்லவா!
தன் மடியில் படுத்திருக்கும் கணவரின் உறக்கத்துக்கு இடையூறு ஏற்பட்டுவிடக்கூடாதே என்ற அச்சத்தில் சீதையும் எவ்வளவோ பொறுமை காத்தாள். ஆனால், காகத்தின் சேட்டையால் அவள் உடலிலிருந்து உதிரம் பீறிட்டு ராமன் மீது தெளித்தது. அந்த அசாதாரண சூழ்நிலையால் திடுக்கிட்டு கண் விழித்தான் ராமன். அவனெதிரிலேயே ஜயந்த காகம் சீதையைத் துன்புறுத்திக்கொண்டிருந்தது. உடனே அங்கிருந்து விலகிச் சென்று தன் வில்லையும் அம்பையும் எடுத்துவரப் போதிய அவகாசம் இல்லை. அந்தக் கொடியவனை உடனேயே, அந்தக் கணத்திலேயே தண்டிக்கவேண்டும் என்று தீர்மானித்த ராமன், உடனே பக்கத்தில் விளைந்திருந்த ஒரு தர்ப்பைப் புல்லைப் பிடுங்கினான். தன் கை விரல்களை வில்லாக வளைத்தான். புல்லை அம்பாக்கினான். காகத்தை நோக்கி ஏவினான். கூர் அம்பாக அந்த புல் காகத்தின் உயிர்கொள்ளப் பாய, பயந்து பறந்தோடியது காகம். அதனை விடாமல் துரத்திச் சென்று விரட்டியடித்தது புல் அம்பு. இப்படி கைவிரல்களையே வில்லாக்கி வளைத்து கோலம் காட்டியதால் கோலவில்லி ராமனானார்.

மூலவர் இரு திருக்கரங்களுடன் சயனக் கோலத்தில் கருணை ததும்ப காட்சி தருகிறார். சுதைச் சிற்பமோ என்று வியக்கும் வண்ணம் பச்சை வண்ண மேனியனாகத் திகழ்கிறார். இதனாலேயே இவரை மரகதப் பெருமாள் என்றும் அழைக்கிறார்கள். பக்தர் வாழ்க்கை வண்ணமயமாகப் பொலிய வைக்கும் பிரான் இவர். தாயார் மரகதவல்லி, பிராகாரத்தில் தனிச் சந்நதியில், தன் உற்சவ மூர்த்தத்துடன் பேரருள் புரிகிறாள். நல்ல திருமண வாழ்க்கைக்கும், அந்த வாழ்க்கை மணம் பரப்பி நீடித்து நிலைத்திருக்கவும் தாயார் ஆசி வழங்குகிறாள். கும்பகோணம்-அணைக்கரை வழியில் சோழபுரம் மற்றும் திருப்பனந்தாளிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது செங்கனூர். இங்கிருந்து ஒரு கி.மீ. சென்றால் திருவெள்ளியங்குடி கோயிலை அடையலாம். கும்பகோணத்திலிருந்து பேருந்து, ஆட்டோ, வாடகைக்கார் வசதிகள் உண்டு. கோயில் தொடர்புக்கு: 0435-2943152; 9443396212; 9345794354.

திருக்கண்ணமங்கை
பாற்கடலைக் கடைந்தபோது கற்பக மரம், காமதேனு, உச்சைஸ்ரவஸ் என்ற வெண்குதிரை என்று அடுத்தடுத்து அரிய பொருட்கள் பல வெளிப்பட்டன. அவற்றை மேற்பார்வையிட்ட எம்பெருமானின் கம்பீரமான அழகுத் தோற்றம் கண்டு வியந்து நின்றாள் திருமகள். ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு தருணத்திலும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் இப்படி விதவிதமான அழகோடு பொலிந்து நிற்கும் பரந்தாமனைக் கண்டு பரவசப்பட்டாள் திருமகள். இந்தத் தோற்றத்தில் திகழும் இவரை மணம் புரிய வேண்டும் என்று விரும்பினாள். ஆனால், பகவான் அவளை கவனிக்காததுபோல சற்று அலட்சியமாகத் திரும்பிக் கொண்டதில் லேசாக வருத்தம் கொண்டாள். ‘இவரை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பது எனக்குத் தெரியும்’ என்று மனசுக்குள் சொல்லிக்கொண்ட திருமகள் நேராகப் பூவுலகில் திருக்கண்ணமங்கை திருத்தலத்துக்கு வந்த அவள், திருமாலை நோக்கிக் கடுமையான தவத்தில் ஆழ்ந்தாள். தேவியின் உள்ளக்கிடக்கையைப் புரிந்து கொண்ட வைகுண்டவாசன், உடனே புறப்பட்டு வந்து தர்சன புஷ்கரணி தீர்த்தத்தால் அவளுக்கு அபிஷேகம் செய்து தனது பட்டத்து ராணியாக்கிக்கொண்டார்.

இந்தத் திருமணத்தைக் காண முப்பத்து
முக்கோடி தேவர்களும் இத்தலத்தில் வந்து குவிந்தார்கள். அத்தனை பேருக்கும் இடம் வேண்டுமே என்ற கவலை லேசாகத் தலை காட்டியபோது, அவர்கள் அனைவரும் தேனீக்களாக உருக்கொண்டார்கள். சங்கீதமாக ரீங்கரித்து மணமக்களைச் சுற்றிச் சுற்றி வந்து அந்தத் திருமண வைபவத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள். ஆனால், அதற்குப் பிறகும் அவர்களுக்கு அந்தத் திருத்தலத்தை விட்டகல மனமில்லை. தங்களுக்காக ஒரு கூடு கட்டிக்கொண்டு தேனீக்களாக அங்கேயே வாசம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். இந்தக் கூட்டில் இவர்கள் அபிஷேகவல்லித் தாயாரின் அன்பையும், கருணையையும் தேனாக சேகரித்தார்கள், சேகரித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தானோ என்னவோ இத்தனை நூற்றாண்டுகளாகியும் அந்த சந்நதிக்கு முன்னால் அந்தத் தேனடை அப்படியே நிலைத்திருக்கிறது! கும்பகோணத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கண்ணமங்கைக் கோயில். அதாவது கும்பகோணம்-குடவாசல்-திருவாரூர் பாதையில் திருவாரூரிலிருந்து 9 கி.மீ. தொலைவு. கும்பகோணம் மற்றும் திருவாரூரிலிருந்து பேருந்து, ஆட்டோ, வாடகைக்கார் வசதிகள் உண்டு. கோயில் தொடர்புக்கு: 9865834676.

திருக்கண்ணங்குடி
திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம் ஆகியவற்றுடன் இந்த திருக்கண்ணங்குடியும் சேர்ந்து பஞ்ச கிருஷ்ண தலங்களாகத் திகழ்கின்றன. கிருஷ்ணனின் பரம பக்தரான வசிஷ்டர், இந்தத் தலத்தில் வெண்ணெயைக் கைகளால் பிடித்து கிருஷ்ணர் உருவம் செய்து அதையே நாள்தோறும் பூஜித்து வந்தார். தன் உறுதியான பக்தியால் அந்த வெண்ணெய்ச் சிலை உருகாதபடி காத்தார். பலகாலங்கள் இவரது இந்த பூஜை தொடர்வதைக் கண்டு மகிழ்ந்த கிருஷ்ணன், நேரடியாக இத்தலத்துக்கு வந்தான். வசிஷ்டரை சோதிப்பதற்காக, வெண்ணெய்க் கிருஷ்ணனை அப்படியே எடுத்து விழுங்கிவிட்டு ஓட்டம் பிடித்தான். அதுகண்டு திகைத்துப்போன வசிஷ்டர் அவனைத் துரத்திக்கொண்டு ஓடினார். அவரிடம் பிடிபடாமல் ஓடிய கிருஷ்ணனை அந்தப் பகுதியில் தவம் இயற்றிக்கொண்டிருந்த மாமுனிவர்கள் தம் பக்தியால் அப்படியே கட்டிப் போட்டனர்.

அந்த பக்தி வளையத்திலிருந்து மீள முடியாத கிருஷ்ணன், அவர்கள் விருப்பம் போலவே அங்கேயே சிலையாக நின்றான். பின்னாலேயே ஓடிவந்த வசிஷ்டர் அதுதான் சமயமென்று அவன் கால்களைப் பற்றிக்கொண்டார். அந்த கிருஷ்ணன் இங்கே நிலைத்தபடியால் இந்தத் தலம்திருக்கண்ணங்குடியாயிற்று.  நின்ற கோலத்தில் திகழும் லோகநாதப் பெருமாள், கருவறையில் புன்னகை முகிழ்கிறார். இவருக்கு சியாமள மேனிப் பெருமாள் என்றும் ஒரு பெயர் உண்டு. ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக விளங்கும் இவரது பாதத்தை, சற்றே எட்டிப் பார்த்து, பட்டர் காட்டும் ஒளி உதவியுடன் தரிசிக்க முடிகிறது! இவருக்கு முன்னால் கை கட்டியபடி பவ்யமாக கருடன் காட்சியளிப்பதும் விந்தையானது. வைகுண்டத்தில் திருமால் முன்னால் கருடன் இப்படித்தான் சேவை புரிகிறாராம்!

ஏதேனும் பிரச்னை, வழக்கு என்றால் பெருமாளை இங்கு வந்து தியானித்தாலே தீர்வு கிடைத்துவிடும் என்கிறார்கள். சிக்கலான வழக்கு என்றால், பதினொரு புதன்கிழமை பெருமாளுக்கு வில்வ அர்ச்சனை செய்து நிறைவாக சர்க்கரைப் பொங்கல் நிவேதனமும் செய்தால் சுமுகமான தீர்வு கிடைக்கிறது என்கிறார்கள். தாயார் அரவிந்தவல்லி என்ற லோக நாயகி. இவர் சந்நதியில் மூலவரும், உற்சவரும் ஒரே தோற்றம் கொண்டிருப்பது அதிசயமானது. கல்லால் ஆன மூலவரைப் போலவே உலோகத்தால் ஆன உற்சவரும் அதே கண்கள், மூக்கு, வாய் என்று அச்சு எடுத்தாற்போல அமைந்திருக்கும் தோற்றம் உவகை கொள்ள வைக்கிறது. தாயார் சந்நதியைச் சுற்றிலும் அழகிய நந்தவனம் பசுமை பொங்க துலங்குகிறது. திருவாரூர்-நாகப்பட்டின பாதையில் ஆழியூர் என்று ஓர் ஊர் உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருக்கண்ணங்குடி திருக்கோயில். அதாவது திருவாரூரிலிருந்து 12 கி.மீ. திருவாரூரிலிருந்து ஆழியூருக்குப் பேருந்து வசதி உள்ளது. ஆழியூரிலிருந்து கோயிலுக்கு ஆட்டோ அமர்த்திக்கொள்ளலாம். கோயில் தொடர்புக்கு: 04366-275769.