ஆடிக் கிருத்திகை, அழகன் தரிசனம்!



மெ(ம)கா முருகன்

பச்சைமலை முருகன்கோயில் கோபிச்செட்டிபாளையத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் 41 அடி உயரமும், 21 அடி அகலமும் கொண்ட மிக பிரமாண்டமான முருகன் சிலை உள்ளது. சுமார் 1600 அடி உயரம் கொண்ட இந்த மலையின் மீது இந்த முருகன் சிலை அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும். இந்தக் கோயில் கட்டுவதற்காக மலை அடிவாரத்திலிருந்து கட்டுமானத்திற்குத் தேவையான கல், மண், சிமெண்ட், தண்ணீர் ஆகியவற்றை பக்தர்களே சுமந்து சென்று சேர்ப்பித்து திருப்பணி செய்ததாகக் கூறப்படுகிறது. தமிழகத்தின் மெகா முருகன் இவர் என்று போற்றப்படுகிறார்.

பெண்கள் வழிபடாத முருகன்

திருச்சி-கோவை நெடுஞ்சாலையில் வீரகுமாரசாமி தலத்தில் அமைந்துள்ள கோயிலில் எழுந்தருளியுள்ள முருகன் வித்தியாசமானவர். இவர் கால்களில் பாதக்குறடு அணிந்து உடலில் கவசம் பூண்டுள்ளார். இடுப்பில் கச்சை, உடைவாள், குத்துவாள், கையில் சூலாயுதம், காலச்சக்கரம் தரித்துள்ளார். வீரத்தோற்றத்தில் அவர் கன்னி குமாரனாகக் காட்சி தருவதால் பெண்கள் இவரை வழிபடுவதில்லை. இங்குவரும் பெண் பக்தர்கள் மூலவரான இவரை தரிசிக்காமல் சப்த கன்னியரை மட்டும் வழிபட்டுச் செல்வது வழக்கம்.

அமர்ந்த நிலையில் முருகன்

நாகை மாவட்டம் குற்றாலம் அருகில் உள்ள திருமங்கலம் திருத்தலத்தில் அமைந்துள்ள சிவாலயத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள முருகன் சிற்பத்தைக் காணலாம். 4 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட இந்த முருகன், வலதுகாலை மடித்தும், இடதுகாலை தொங்கவிட்டும், தியானகோலத்தில் காணப்படுகிறார். கிரீட மகுடம், கழுத்தணி, சூலம் போன்ற தொங்கலணியுடனனும், அபயகரத்துடனும் காட்சி தருகிறார். இது ஓர் அற்புதமான தரிசனம் என்பர்.

முருகன் கோயிலில் சடாரி

பஞ்சவேல் முருகன் கோயில் பல்லடம் மலைப்பாளையம் அருகில் உள்ளது. நடுவில் ஒரு வேலும் அதைச்சுற்றி நான்கு வேல்களும் நடப்பட்டிருக்கின்றன. நடுவிலிருக்கும் வேலை தரையிலிருந்து பெயர்த்து எடுக்க முடியாது. இந்த ஐந்து வேல்களுக்கும் தினமும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐந்து வேல்கள் இருப்பதால் இக்கோயிலை பஞ்ச வேல்முருகன் கோயில் என்று போற்றுகிறார்கள்.

- டி.ஆர்.பரிமளரங்கன்