ஏழைக்குச் செய்யும் சேவையே இறைவனுக்கு செய்யும் பூஜை!



மன இருள் அகற்றும் ஞானஒளி 23

ஆன்மிகம் என்றால் இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே என்பதுதான். ரணமாகிப்போன மனித உள்ளங்களுக்கு மருந்து போடுவதுதான் உண்மையான இறைவழிபாடு. நம்முள் படிந்திருக்கும் மனமாசுகளை நீக்கி பேரொளி திகழச் செய்த புரட்சித் துறவி விவேகானந்தர் வாழ்க்கையில் எவ்வளவோ முற்போக்கான,சுவராஸ்யமான சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

அவற்றில் ஓர் அற்புத சம்பவம்: பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரால் ஆட்கொள்ளப்பட்டு துறவியான பின்னர் தனது சிஷ்யர்களுடன் கொல்கொத்தா மாநகரிலிருந்து காசிக்கு யாத்திரையாகப் புறப்பட்டார் சுவாமிஜி. வழியில் ஒரு கிராமத்தில் ஒரு கோயில் வாயிலில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட சிலர் வருவோர் போவோரிடம் பிச்சை கேட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்தார். மனம் வேதனையில் துடித்தது. சிஷ்யர்களிடம், யாத்திரை வழிச்செலவுக்கு வைத்துள்ள தொகையை எல்லோரும் தருமாறு அன்புக் கட்டளையிட்டார்.

சிஷ்யர்களுக்குக் குழப்பம். ‘காசி யாத்திரையே இப்பொழுதுதானே ஆரம்பித்தது...’ என்று யோசித்தார்கள். ஆனாலும் தம்மிடம் இருந்த பணத்தைக் கொடுத்தார்கள். அதை வாங்கிக்கொண்ட விவேகானந்தர் அங்கு நோயாலும், பசியாலும், குளிராலும் வாடி வதங்கிப்போய் இருக்கும் மக்களுக்கு உணவும், உடையும், மருந்தும் வாங்கிவரச் சொன்னார். உடனே அவரது சிஷ்யர்கள் அவ்வாறே எல்லாப் பொருட்களையும் வாங்கி வந்தனர். விவேகானந்தர் தொழுநோயால் பாதிக்கப்பட்ட அந்த மக்களை அருகில் இருந்த குளத்தில் குளிக்கச் செய்தார். சிஷ்யர்களைக் கொண்டு அவர்களின் உடலில் உள்ள புண்களுக்கு மருந்திட்டு, பிறகு புதிய உடைகளை அணிய வைத்தார். பின்னர் அவர்களுக்குப் பலவகையான உணவுப் பொருள்களையும் வழங்கி மகிழ்ந்தார்.

பிறகு, சுவாமி விவேகானந்தர் சிஷ்யர்களிடம், ‘நாம் மீண்டும் கொல்கொத்தாவுக்குச் செல்வோம்’ என்றார். இதைக்கேட்ட சிஷ்யர்கள் திடுக்குற்றனர். ‘சுவாமிஜி, காசி யாத்திரை செல்லவே வந்தோம். பாதியில் திரும்பச் சொல்கிறீர்களே ஏன்?’’ என்று கேட்டனர். ‘நோயாலும், பசியாலும், குளிராலும் துயரப்படும் இம்மக்களுக்குச் செய்த சேவைமூலம் நாம் இறைவனை தரிசித்த பயனை அடைந்துவிட்டோம். மக்கள் சேவையே மகேசன் சேவை. இதுவே அவனுக்கு  நாம் செய்யும் பூஜை’ என்று சுவாமி அருள் முகத்துடன் கருணை ததும்ப பதிலளித்தார்.

சிஷ்யர்களும் அகம் குளிர, முகம் மலர சுவாமிஜியுடன் மீண்டும் கொல்கத்தா திரும்பினர். காசியில் வீற்றிருப்பவளே அன்னபூரணிதானே! அவள் விருப்பத்திற்கேற்பவேதானே இந்தச் செயலும் நடந்திருக்கிறது!  அபிராமி அந்தாதியில் ஓர் அற்புதமான பதிகம்: ‘உடைத்தனை வஞ்சப் பிறவியைஉள்ளம் உருகும் அன்புபடைத்தனை பத்ம பதயுகம்சூடும் பணி எனக்கே அடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை அந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே’.

இதன் பொருள்: பேரழகியே! பாவ வினைகளை அனுபவிக்கிற பிறவி மீண்டும் வராமல் தடுத்தாய், இல்லை இல்லை உடைத்தாய். என் உள்ளத்தில் அன்பு நீரை சுரக்கச் செய்தாய். உன்னை வணங்குகிற பெரும்பேற்றை எனக்கு அளித்தாய். இதையெல்லாம்விட மிகப்பெரிய விஷயமாக ஒன்றைச் சொல்கிறார் அபிராமி பட்டர். அது, ‘நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை’ என்றதுதான். அதாவது, மனம் தூய்மையானதாக இருக்க வேண்டும். ஆழ்வார் பெருமக்கள் சொல்வார்களே. ‘மனமாசு தீரும் அருவினையும் சாரா,’ என்று, அதைப்போல தூய்மையான பளிங்கு நீர்போல மனம்  இருக்க வேண்டும்.

ஆனால், அப்படி இருக்க முடிகிறதா? இது மில்லியன் டாலர் கேள்வி. பலருக்கும் மனம் குப்பைத்தொட்டிபோல் காட்சியளிக்கிறது. தேவையற்ற பொருட்களை அதில் போட்டு வைக்கிறோம். இந்த நிலையை மாற்றி, ‘தாயே, அபிராமி! உன் கருணை வெள்ளத்தால் என அகஇருள் அடித்துச் செல்லப்பட்டு என் இல்லமும் உள்ளமும் தூய்மையாகி விட்டது’ என்று அபிராமி அம்மையின் கால்களைப் பிடித்துக்கொண்டு கதறுகிறார். இருட்டான அறையில் ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தால் எப்படி இருள் அகன்று வெளிச்சம் பாயுமோ அப்படி நம் அக இருட்டுப் போக, பெரிய அகல்விளக்கையே ஏற்றி வைத்திருக்கிறார் அபிராமி பட்டர்.

பொதுவாகவே மனிதர்களில் பலர் தன்னால்தான் எல்லாம் நடக்கிறது என்று இறுமாப்பு கொள்கின்றனர். ‘நான்’, ‘என்னால்தான்’ என்று ஆணவப் பெருமூச்சு விட்டபடிஇருக்கின்றனர். ஆனால் உண்மை என்ன? இதற்கு பதில் சொல்கிறார் சுவாமி சித்பவனாந்தர்: ‘எனது ஆணவத்தை ஒதுக்கி வைத்துவிட்டு இறைவா, உன்னை நான் வணங்குவேனாக!’ கோபுரத்தைத் தாம்தான் சுமந்து கொண்டிருப்பதாக அதில் செதுக்கப்பட்டிருக்கும் பொம்மைகள் நினைத்துகொண்டிருக்கின்றன. ஆனால், உண்மை அதற்கு நேர்மாறானது.

அந்த பொம்மைகளைப்போல உலகில் எத்தனையோ காரியங்களைத் தான் செய்வதாக, தான் தாங்குவதாக மனிதன் எண்ணுகிறான். ஆனால், தன்னிலும் மிக்கதொரு சக்தி தன்னைத் தாங்கிக்கொண்டிருக்கிறது என்பதனை அவன் அறிந்துகொள்வதில்லை என்று கண்ணாடி மாதிரி நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறார், இறைவனின் திருவடியையே மிகவும் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட தாயுமானவர்.

அவர் நமக்கெல்லாம் பாடம் நடத்துவதுபோல் ஒன்றைச் சொல்கிறார்:
என் செயினும் என் பெறினும்
என் இறைவா ஏழை யான்
நின் செயல் என்று உள்ளும்
நினைவு வரக் காண்பேனோ?
தாயுமானசுவாமியே அந்த தயாபரனிடம் சரண் அடைகிறபோது, பலவீனங்களுக்கு உட்பட்டு சம்சார சாகரத்தில் சிக்கி உழலும் நாம் எல்லாம் எம்மாத்திரம்! அவள் தாள் பற்றுவோம் தரணி புகழ சந்தோஷமாக வாழ்வோம்!

- ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

தாமரை மீது முருகன்
விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கத்தில் பசுபதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள ‘வெற்றி முருகன் சந்நதி’ வித்தியாசமானது. இங்கு அருள்புரியும் முருகப்பெருமான், தாமரை மலர்மீது அமர்ந்து ஒரு கரத்தில் வஜ்ரம் கொண்டுள்ளார். வஜ்ராயுதம் இருப்பதால் சக்தியின் அம்சமும், தாமரை மலர்மீது அமர்ந்துள்ளதால் கலைமகள் அம்சமும் கொண்டு திகழ்கிறார். இவரை வழிபட வீரத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கலாம் என்பர்.

சடாரி சாத்தப்படும் முருகன் கோயில்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுக்காவில் அமைந்துள்ளது குன்னத்தூர். இங்கு முருகனை வழிபட நூறு படிகள் ஏறிச் செல்லவேண்டும். சிரித்த முகத்துடன், கையில் தண்டம் ஏந்தி பக்தர்களுக்கு தண்டபாணியாக அருளாசி வழங்குகிறார். இங்கு பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கியதும், பெருமாள் கோயில்களைப்போல சடாரி சாத்தி வாழ்த்துகிறார்கள். இந்த சடாரி அருகிலுள்ள சுனையில் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. திருவண்ணாமலை மற்றும் ஆரணியிலிருந்து போளூர் செல்லும் பேருந்துகளில் சென்று ஆர்.குன்னத்தூரில் இறங்கி அரை கி.மீ. நடந்தால் கோயிலை அடையலாம்.

- டி.ஆர்.பரிமளரங்கன்