பரந்தாமன் சொரூபத்துடன் ஐக்கியமாவோம்!



பகவத் கீதை - 49

துறவு என்பது என்ன? ‘கிட்டாதாயின் வெட்டென மற’ என்று ஒரு பழமொழி இருக்கிறதே அந்த உணர்வுதான் துறவா? அதாவது, தான் முயற்சித்தும் தனக்குக் கிட்டாமல் போய்விட்ட ஒரு பொருளை ‘சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்’ என்ற விட்டேற்றியான உணர்வில் விட்டொழிப்பதுதான் துறவா? அப்படியானால் அது, ஏதோ கிடைக்கப்போவதற்காக அதுவரை மேற்கொண்ட முயற்சிகளை அவமானப்படுத்துவதுபோலதானே? ஆகவே, துறவு என்பது தனக்கென எதுவும் வேண்டாததாகிய நிர்ச்சலனமான மனோநிலை என்பதுதான் சரி. தன்னுடையது என்று அதுவரை கருதிவந்தவை எதுவுமே தனக்குரியதல்ல என்றறியும் பக்குவம்தான் அந்த மனோநிலை.

இந்த உணர்வும் எப்போது வரும்? தன்மீதே தான் சொந்தம் கொண்டாட விரும்பாதபோது வரும். அதாவது குறிப்பிட்ட நாள்வரை உயிர் நிலைத்திருக்க இறைவன் அருளியிருக்கும் வெறும் கூடுதான் இந்த உடல் என்ற எண்ணம் ஏற்படும்போது வரும். இறைவனே அளித்தக் கூடுதான் என்றாலும், அதில் ஐம்புலன்களையும் பொருத்தியே அவர் அளித்திருக்கிறார் என்றாலும், அந்தப் புலன்களின் அலைக்கழிப்புக்கு ஆட்படாமல், சிலநாள் வாழ்க்கையிலும் பரந்தாமனையே ஆவிர்பவித்துக்கொண்டோமானால் நாம் பவித்திரமடைகிறோம், பரந்தாமனின் சொரூபமாகவே ஆகிவிடுகிறோம். கிருஷ்ணன் சொல்கிறார்: ‘மறுபிறவி இல்லாதோர் என்னை அடைந்துவிடுகிறார்கள். அவர்கள் என்னுடன் ஐக்கியமாகிவிடுகிறார்கள்.’

பரமாத்மாவுக்கு ஏது சொரூபம், எது சொரூபம்? இந்த பிரபஞ்சமே அவர்தான் என்று சொல்லலாமா? அதுதான் சரியாக இருக்கும். ஏனென்றால் அதுதான் எல்லையற்றது. ஆறுகள் எல்லாம் கலக்கக்கூடிய அளவுக்குக் கடல் பெரியது என்ற ஒப்புமையை பரந்தாமனுக்கு நேராக்க முடியாது. ஆறுகள் கடலில் கலக்கின்றன என்ற உண்மைபோல மறுபிறவி இல்லாதோர் அவருடன் ஐக்கியமாகிறார்கள் என்ற நடைமுறையை வேண்டுமானால் ஒப்பிடலாமே தவிர, இந்த உலகத்தின் ஒரு பகுதியான சிறு கடலை அவரது பரந்த சொரூபத்துடன் ஒப்பிடமுடியாது.

கோடானுகோடி நட்சத்திரங்கள், சூரியன்கள், நிலவுகள் எல்லாம் சேர்ந்த ஒரு பெருவெளிதானே பிரபஞ்சம்? இது எல்லை காணமுடியாதது என்றால் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதாகவா அர்த்தம்? அல்லது மனித கணக்கீட்டுக்கு அடங்காதப் பெருங்கணக்கா? இன்றும் வானில் நட்சத்திரங்களாக ஜொலிக்கும் துருவன், அருந்ததி எல்லாம் இப்படி பரமாத்மா என்ற பிரபஞ்சத்துடன் ஐக்கியமானவர்கள்தானோ! மறுபிறவி இல்லாதோர் என்னோடு சேர்ந்துவிடுகிறார்கள் என்ற பரந்தாமனின் கருத்துக்கு இவர்கள் இருவரும் உதாரணங்களாகத் திகழ்கிறார்களோ?

இவர்கள் தவிர சப்தரிஷிகள், கோட்டு உருவங்களாக அனுமானிக்கப்படும் நட்சத்திரத் தொகுதிகள் எல்லாமே பிரபஞ்சம் என்ற கிருஷ்ணனின் சரீரத்தோடு சங்கமித்துவிட்டவைதானோ? நாம் கண்களால் எண்ணிவிட முடியாத அளவில் மினுக்கிக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் எல்லாம், பூமியில் பிறந்து, மறுபிறவி இல்லாத வரம் பெற்று பகவானோடு ஒன்றிவிட்டவர்கள்தானோ? பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தை இப்படியும் விளக்கலாம்: நாம் பார்க்கும் சூரியன் ஒன்றுதான் என்று நாம் கருதியிருக்கிறோம். ஆனால் இதைப்போன்ற, இதைவிடவும் மிக பிரமாண்டமான சூரியன்கள் ஒளிவிட்டுக்கொண்டுதான்இருக்கின்றன.

ஒன்றைத் தவிர பிற எதுவும் நம் கண்களுக்குத் தெரியவில்லை என்பதால் வேறு சூரியன் இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். நம் கண்ணுக்குத் தெரிந்த சூரியனைவிட மிகவும் பெரிதானதாக, மிகவும் உஷ்ணம் வாய்ந்ததாக, மிகவும் பிரகாசமானதாக எத்தனையோ சூரியன்கள் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கலாம். பூமிகோளிலிருந்து நாம் ஒரு சூரியனைப் பார்ப்பதுபோல வேறு கிரகங்களிலிருந்து பார்க்கக்கூடுமானால் அந்த சூரியன்கள் தெரியலாம்! ஆக இத்தகைய பிரமாண்ட பிரபஞ்சமே பகவானின் சரீரம்.

அதாவது நாடுகளும், மக்களுமாய் வாழும் இந்த பூமியைப்போலவே வேற்று கிரகங்களுக்கும், அங்கு இருக்கக்கூடிய நாடுகளுக்கும், மக்களுக்கும்கூட பரந்தாமன் அருள்புரிகிறார் என்று அர்த்தம். யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவபஜாம்யஹம் மம வர்த்மானுவர்தந்தே மனுஷ்யா பார்த்த ஸர்வச ‘‘என்னை யார் எப்படியெல்லாம் வழிபடுகிறார்களோ, அவர்களுக்கு அப்படியெல்லாம் நான் அருள்புரிகிறேன். இதைப் புரிந்துகொண்டவர்கள் என்னை முழுமையாகப் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். நான் காட்டும் வழியை அனுசரித்துச் செல்கிறார்கள்.’’ ஒரு குறிப்பிட்ட பகுதி பூமியை எடுத்துக்கொள்வோம்.

அதில் ஓரிடத்தில் மாங்கன்றை நடுகிறோம், இன்னொரு பக்கத்தில் மலர்ச்செடி பதிக்கிறோம், வேறொரு பகுதியில் தென்னங்கன்றை நடுகிறோம். காலஓட்டத்தில் அந்தந்தப் பயிர்கள் அதனதன் பலனைத் தருகின்றன. மாங்கன்று மரமாகி மாங்கனிகள் தர, பூச்செடி பூத்துக் குலுங்க, தென்னை மரம் தேங்காய் வழங்குகிறது. இத்தனைக்கும் இந்தச் செடி, கன்றுகளுக்கிடையே சில அடிகள்தான் இடைவெளி. மாங்கனியைத் தரும் மாமரம், தனக்குத் தேவையான சத்தை பூமியிலிருந்து உறிஞ்சிக்கொள்கிறது. அதேபோலதான் மலர்ச்செடியும், தென்னைமரமும். அதாவது என்ன விதைக்கப்பட்டதோ அதுவே விளைகிறது.

பூமி பொதுதான். ஆனால் அது எப்படி மாமரத்துக்குத் தேவையான சத்தை அதற்குத் தருகிறது, அருகிலேயே வளரும் தென்னைமரத்துக்குத் தேவையான வேறுவகை சத்தை இதற்குத் தருகிறது, அதேபோல பூச்செடிக்கு? இந்த வேறுபாட்டு ரகசியத்தை பூமியைத் தவிர வேறு யார் அறிவார்? பூமியில் விதைக்கப்பட்ட எந்த விதையும் முளைக்கிறது என்றால் அப்படி முளைக்க அததற்குத் தேவையானதை பூமி வழங்குவதும் ரகசியம்தானே! அதுபோல கிருஷ்ணனை எப்படி வழிபடுகிறோமோ, அப்படி நமக்கு அவர் அருள் கிடைக்கிறது. அவர் பூமியைப்போலப் பரந்தவர். மாங்கன்று நட்டவருக்கு தேங்காய்ப் பலன் கிடைக்காது, தென்னைமரம் நட்டவருக்கு மலர்ப்பலன்கிடைக்காது, மலர்ச்செடி வைத்தவருக்கு மாங்கனி கிடைக்காது!

பகவானிடம் எந்தெந்தப் பக்குவத்தில் பக்தி செலுத்துகிறோமோ, அதே விகிதத்தில் அவர் அருளைப் பெறமுடியும். அதைத்தான் கிருஷ்ணன் சொல்கிறார். பக்தி செலுத்துவதாகிய இயக்கம் நம்மிடமிருந்து பகவானுக்குச் செல்கிறதென்றால், அருள் வழங்குவதாகிய இயக்கம் அவரிடமிருந்து நம்மை வந்தடைகிறது. ‘இறைவனை நோக்கி நாம் ஓரடி எடுத்துவைத்தால், இறைவன் நம்மை நோக்கி நூறு அடி எடுத்துவைக்கிறார்’ என்று சொல்வார்கள். அதாவது, பரந்தாமனுடைய கருணை அத்தகையது. இது எதிரொலிபோல.

ஒரு மலைமுகட்டுக்குச் செல்கிறோம், அங்கே அடுத்தடுத்துப் பல முகடுகளை நாம் காண்கிறோம். உரத்த குரலில் நாம் கூவினோமானால் அந்தக் குரல் நம்மை நோக்கி எதிரொலிக்கிறது. சிலசமயம் ஒருமுறை, சிலசமயம் பலமுறை! இறைவனின் இரக்கமும் இப்படிப்பட்டதுதான். நமக்குத் தேவையானவற்றை நம் தகுதிக்கேற்ப நமக்கு அருள்பவர் அவர்.

கோயிலுக்குப் போகிறோம். இறைவனை தரிசிக்கிறோம். சில நிமிடங்கள் அந்த அர்ச்சாவதாரத்தின் முன் நின்று மனம் உருகப் பிரார்த்தனை செய்கிறோம். இந்தப் பிரார்த்தனையில் நம் தேவைகளுக்கான கோரிக்கைகள் இருந்தாலும், அதையெல்லாம் இறைவன் நிறைவேற்றி வைத்துவிடுவார் என்ற நம்பிக்கை இழையோடுகிறதே அதுதான் உண்மையான பக்தி. பிறகு கோயிலை வலம் வந்து கோயில் படியில் சற்றுநேரம் அமர்ந்துகொள்கிறோம்.

ஏன்? இறைவனிடம் வேண்டிக்கொண்டோமே, அதற்கு அவரிடமிருந்து வரும் பதிலை நாம் அமானுஷ்யமாக உணர்வதற்காகத்தான். ஆமாம் அவ்வாறு உட்காருவது வெறும் சம்பிரதாயமல்ல. சந்நதியில் நாம் பேச இறைவன் கேட்டதுபோல, இங்கே படியில் அமர்ந்து, இறைவன் பேச நாம் கேட்கிறோம்! உடன்வந்திருப்பவர்களுடன் எந்த வம்பும் பேசாமல் இவ்வாறு உட்கார்ந்திருக்கும்போது கண்கள் மூடி நம் உள்ளுக்குள் நாம் சென்றோமானால் கடவுள் பேசுவது நமக்குக் கேட்கும். அதாவது, நம் பிரச்னைகளுக்கு அப்போதே நமக்கு ஒரு தீர்வு தோன்றும், புது உத்தி உதிக்கும். இல்லாவிட்டாலும், மனசில் சட்டென நிம்மதி சூழும். கலக்கம் மறையும், தெளிவு பிறக்கும். இதுதான் இறைவன் நம்முடன் பேசுவதாகிய தன்மை, இது, அனுபவபூர்வமாகஉணர்ந்தவர்களுக்கு உண்மை. மாஞ்சோலைக் குயில் கூவிக்கொண்டே இருக்கிறது.

அதிகாலை வேளையில் ஊரே நிசப்தமாக இருக்கும் பொழுதில் அதன் குரலிசை நம் காதுகளையும், மனதையும் நிறைவிக்கிறது. பிறகு சந்தடி எழ எழ அல்லது நம் பணிகளில் நாம் ஆர்வம் காட்டி ஈடுபட, நமக்கு அந்தக் குயிலின் குரல் கேட்பதில்லை. இதனால் குயில் தொடர்ந்து கூவவே இல்லை என்று அர்த்தமில்லை. நமக்குக் கேட்கவில்லை, அவ்வளவுதான். இதுதான் இறைவனின் கருணை. அவர் நம்மீது காட்டும் அன்பிற்கும் அருளுக்கும் அளவே இல்லை.

அதை உணராததுதான் நம் குறை. சுற்றிச் சுழலும் இரைச்சல், சொந்த கவலைகளால் உள்மனதில் தோன்றும் கூச்சல், குழப்பம் இவற்றாலேயே நம்மால் இறைவனின் கருணைக் குரலைக் கேட்கமுடிவதில்லை. ஆனாலும்அவரைப் பின்பற்றுபவர்களாலும், அவர் வழிகாட்டலின்படி நடப்பவர்களாலும் அவருடைய குரலைக் கேட்க முடியும்.

இது எப்படி என்றால், ஒரு மந்திரத்தை உரத்துச் சொல்பவர், நாளாவட்டத்தில் அது முற்றிலும் மனப்பாடமாகிவிடுவதால், வெறும் முணுமுணுப்பாக அல்லது உதட்டசைவாக அதனை உச்சரிக்கிறார், இன்னும் பக்குவம் பெற்றபிறகு, தன் மனசுக்குள்ளேயே அந்தமந்திரத்தை உச்சரிக்கிறார். இன்னும் பக்குவம் பெற்றாரானால் அவரது மூச்சுக் காற்றே அந்த மந்திரத்தை உச்சரிக்கும்! உள்ளே போகும் மூச்சுக் காற்று ஆரோகணமாகவும், வெளியே வரும் மூச்சுக் காற்று அவரோகணமாகவும் ஒரு சங்கீத த்வனியாக அந்த மந்திரம் உச்சரிக்கப்படும்.

இதைப்போலவே இறை பக்குவம் எய்தியவன், இறைவனின் அருளைத் தன் மூச்சுக் காற்றாகவே பாவிக்கிறான். அவனே அறியாமல் எப்படி மூச்சுக் காற்று உள்ளே போய், வெளியே வருகிறதோ, அவனே அறியாமல் எப்படி இதயம் துடித்துக்கொண்டே இருக்கிறதோ, அவனே அறியாமல் எப்படி ரத்தம் அவனுடைய உடல் முழுக்கப் பாய்ந்துகொண்டிருக்கிறதோ அதேபோன்று நாமே அறியாமல் நமக்கு ரகசியமாக உதவுவதுதான் இறைவனின் கருணை.

உயிர் நிலைக்க, தவிர்க்க முடியாதபடி மேலே சொன்ன இயக்கங்கள் நொடி தப்பாமல் நிகழ்வதுபோல, பகவானும் நம்மை எக்கணமும் தாங்கிப் பிடித்துக்கொண்டுதான் இருக்கிறார். இறைவனுக்கு உருவம் கொடுத்து வழிபடவேண்டிய அவசியம் ஒரு ஞானிக்கு இல்லை. அவர் காணும் பொருட்களிலெல்லாம் கடவுளை உணர்கிறார். இந்தப் பக்குவம் அடையாதவர்களுக்குதான் உருவம் தேவை. ஏதேனும் அடையாளம் இல்லாவிட்டால் இவர்களுடைய பக்தி சிந்தனை தடம் மாறிப் போய்விடக்கூடும். கோயில் வெளிப் பிராகாரத்தில் ஒருவன் கால்நீட்டியபடி, சுவரில் சாய்ந்து அமர்ந்துகொண்டிருந்தான்.

ஒரு பக்திமான் பதற்றத்துடன் அவனிடம் ஓடோடி வந்து, ‘இந்தாப்பா, இப்படி கால் நீட்டிக் கொண்டிருக்கிறாயே, உன் பாதத்துக்கு நேர் எதிரே, சற்றுத் தொலைவில் சுவாமி சந்நதி இருக்கிறது பார், காலை மடக்கிக்கொள். இறைவனை அவமரியாதை செய்யாதே,’ என்றார். அமர்ந்திருந்தவன் அவரை நிமிர்ந்து பார்த்தான். ‘சுவாமி இல்லாத இடம் எது என்று சொல்லுங்கள், அந்த திசை நோக்கிக் காலை நீட்டி வைத்துக்கொள்கிறேன்,’ என்றான்! இவனுடைய இறைவழிபாட்டு முறை இப்படி! அக்பருக்கும், பீர்பாலுக்கும் ஒருமுறை சர்ச்சை வந்தது. ‘‘நான் பெரியவனா, கடவுள் பெரியவரா?’’ என்று கேட்டார் அக்பர். ‘‘நிச்சயமாக நீங்கள்தான் மன்னா,’’ என்றார் பீர்பால். பெருமையாகவே இருந்தாலும், மிகுந்தகுழப்பத்துடனும், சந்தேகத்துடனும் ‘‘அது எப்படி பீர்பால்?’’ என்று கேட்டார் அக்பர்.

‘‘உங்களுக்கு யாரையாவது பிடிக்கவில்லை என்றால் உங்களால் வெகு எளிதாக அவரை உங்கள் நாட்டை விட்டு வெளியேற்றிவிடுவீர்கள். ஆனால் கடவுளுக்கு யாரையேனும் பிடிக்காவிட்டால் அவரால் அப்படிச் செய்ய முடியாது. காரணம், இந்த பிரபஞ்சத்துக்கே அரசனான அவர் அவனை எங்கே விரட்ட முடியும்? ஆகவே அவரால் செய்ய முடியாத ஒரு செயலை செய்யக்கூடிய நீங்கள்தான் அவரைவிடப் பெரியவர்’’ என்றார் பீர்பால்!

இந்த பதிலில் ஒரு மன்னனால் தன் குடிமகனுக்கு எந்த வகையிலாவது ஊறு விளைவிக்க முடியும், ஆனால், இறைவன் தன் குழந்தைகள் அனைவரையும் பெரிதும் அரவணைத்துக் காக்கிறார் என்ற உண்மையையும் பீர்பால் அக்பருக்கு உணர்த்தினார்.  எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள், தன்னை ஒருவர் எப்படி வழிபடுகிறாரோ அதன்படி அவருக்கு அருள்புரிவதாகச் சொல்வதுதான் எத்தனை பெரிய கருணை! இவ்வளவு எளிமையான பரமாத்மாவை சிக்கெனப் பிடித்துக்கொள்வதைவிட வேறு என்ன பெரிய உபாயம் இருந்துவிடப்போகிறது?

(தொடரும்)

- பிரபுசங்கர்