உள்ள(த்)தைச் சொல்கிறோம்



தெலங்கானாவில் நடைபெறும் போனாலு திருவிழா பற்றியும், அதன் வரலாற்றையும்  வாசகர்களுக்கு விவரித்திருந்தீர்கள். வித்தியாசமான பக்தி பிரசாதம் இது. தமிழக கோயில்களை பற்றி மட்டுமல்லாமல் அண்டை மற்றும் வெளி மாநில  கோயில்களின் சிறப்புகளை வழங்குவதால் நமது ஆன்மிகம் தேசிய அளவில் பக்தி மணம்
பரப்புகிறது என்பதே உண்மை.
- பாபு கிருஷ்ணராஜ், கோவை -2.

“மகனை அளவில்லாமல் உண்ணவைத்து அழகு பார்த்தவள் தாய். வயோதிக காலத்தில் அவள் உண்ண அழகு பார்க்கவேண்டியவன் மகன்” என்ற கவிஞர் கண்ணதாசனின் (அர்த்தமுள்ள இந்து மதம்) வரிகள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை.
- எம்.லோகநாதன், சிகரலப்பள்ளி. 635104.

ஏற்றம் தருவார் ராகு, ஞானம் தருவார் கேது என்று ஆறுதல் வார்த்தை கூறி ராகு-கேது பெயர்ச்சிப் பலன்களை வெளியிட்டு நிம்மதி ஏற்படுத்திவிட்டீர்கள். ராகு, கேது மீது இனி பயமில்லை. நன்றி!
- அயன்புரம் த.சத்தியநாராயணன்.

நவகிரகங்களில் தென்மேற்கில் ராகுவும் வடமேற்கில் கேதுவும் காட்சி தருவது இயல்பு. இவர்களைத் தேடிப்பிடித்து அருகருகே நிற்க வைத்து அட்டையில் தரிசிக்க வைத்தது. ராகு -கேது பெயர்ச்சி பூஜைக்கு ஒரு சிறந்த படம் (ஃப்ரேம் போட்டாச்சு) கிடைத்து விட்ட மகிழ்ச்சி. கிடைத்தற்கரிய பொக்கிஷம்.
- சிம்மவாஹினி. வியாசர்பாடி.

பிறவித் துன்பம் போக்கும் பரந்தாமன், ஜனார்த்தனன் என்ற பெயரில் அமர்ந்து அருட்பாலிக்கும் வர்க்கலையின் வளமான வரலாற்றுப் பின்புலத்தை தங்கள் பத்திரிகையின் வாயிலாக அறிய முடிந்தது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் சிறப்பு பெற்றது. மேலும் படைப்புக் கடவுளான பிரம்மதேவனின், கட்டுக்கடங்காத ஆணவத்தை அழித்த தலம் இது என்பது
கூடுதல் சிறப்பு.
- முனைவர். இராம.கண்ணன், திருநெல்வேலி.

தம்பதியருக்கிடையே மனஸ்தாபம் என்பது சர்வ சாதாரணமாகி வரும் இன்றைய சூழலிற்கு மிகுந்த மன ஆறுதலைத் தருவதாக அமைந்திருந்தது தம்பதிகள் குறை தீர்க்கும் தம்பதி தெய்வங்கள் கட்டுரை. ராகு-கேது பக்தி ஸ்பெஷலின் முகப்பினை அலங்கரித்திருந்த ராகு-கேது வண்ணப்படம், கிளாஸிக்.
-இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

பெருமகிழ்ச்சி தரும் போனாலு திருவிழா கட்டுரை, திருவிழாவை நேரில் கண்டு களித்த பக்தி அனுபவத்தைத் தந்தது. ராகு-கேது தோஷ பரிகாரத்தலங்கள் தகவல்கள் மிகவும் பயனுடையதாய் இருந்தது. கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள், திருவிசநல்லூர் கோயில் கட்டுரை என பல அரிய செய்திகள் மனதுக்கு இதமளித்தன.
- சு.இலக்குமணசுவாமி, மதுரை.

ராகு-கேது சிறப்பிதழில் அபூர்வ ஸ்லோகம் பகுதியில் ராகு த்யானம், ராகு காயத்ரி, ராகு துதி, ராகு ஸ்தோத்திரம் என அற்புதமான ஸ்தோத்திரங்களையும், அவர்களை வழிபட்டால் ஏற்படும் பயன்களையும் குறிப்பிட்டு ராகு, கேது படங்களுடன் வெளியிட்டிருப்பது வாசகர்கள்மீது தாங்கள் கொண்டிருக்கும் அக்கறையை
வெளிப்படுத்தியது.
- கே.சிவகுமார், சீர்காழி.

பச்சிளம் குழந்தைகளுக்கு சோறூட்டும் போதே புராண, இதிகாசக் கதைகளையும் சேர்த்து ஊட்டி, சற்றே வளர்ந்ததும் ஆன்மிக நூல்களைக் கொடுத்து அவர்களைப் படிக்கவைத்து அவர்களை பக்திமான்களாக எளிதில் ஆக்கமுடியும் என்பதைத் ‘தெளிவு பெறுஓம்’ மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி.
- விஜயலக்ஷ்மி ரவீந்திரன், ஈரோடு.

‘இதயத் துடிப்பும் இறைவன் கவனிப்பும்’ - கடவுளிடம் மிகவும் பாசமான, அன்பான நெருக்கத்தை ஏற்படுத்தியது. ராகு-கேது ஸ்லோகங்கள், கல்வெட்டு சொல்லும் கோயில்கள், அருணகிரி உலா என பல ஆன்மிக படைப்புகள் மனதுக்கு நிம்மதி அளிக்கின்றன. 
- இரா.வைரமுத்து. ராயபுரம்.

விளங்க வைப்பது(அறிவியல்) விஞ்ஞானம், மெய் சிலிர்க்க வைத்து மெய்தனை (உண்மையை) உணர்த்துவது ஆன்மிக உணர்வு ததும்பும் மெய்ஞானம். கிரகங்களின் உண்மை நிலையை ஆற்றலை குறிப்பாக சனீஸ்வரரின் மகிமையை தாங்கள் வெளியிட்டிருந்த அருணகிரி உலா கட்டுரையில் அமெரிக்க செயற்கைக்கோள் திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தின் மேற்பகுதியில் மூன்று விநாடிகள் ஸ்தம்பித்து செயலிழப்பதை படித்து வியந்தேன்.
- கே. ஜகன்நாதன். சேலம்.