இறை அருளிருக்க ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டுமோ?



திருமுறைக் கதைகள்

உடம்பில் கடுமையான நோய் வந்து மருத்துவரிடம் ஒருவர் காட்டுகிறார். நோயாளியைப் பரிசோதித்த மருத்துவர், அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறார். அறுவை சிகிச்சைக்காக மருத்துவர் புண்ணைக் கீறும்பொழுது நோயாளிக்கு வலி ஏற்படும். ஆனால், இந்த வலி தெரியாமலிருக்க மருத்துவர், அவருக்கு அந்தப் பகுதி மரத்துப்போக மருந்து கொடுப்பார். இதனால் அந்தச் சமயத்தில்   வேதனை  தெரிவதில்லை. நோயாளி உயிரோடு இருக்கும் பொழுதே அவர் உறுப்புகளை வலிதெரியாமல் அறுக்கமுடிகிறது.
உலகில் பிறந்த யாவரும் ஊழினால் இயக்கப்படுகிறார்கள் என்பது அறிந்ததே! எப்படிப்பட்டவரானாலும் ஊழ்வினை  தன் வலிமையைக் காட்டிவிடும்.

அதனை  ஒருவராலும் மாற்றவே முடியாது. ஆனால் அதனால் உண்டாகும் துன்பங்களை உணர முடியாத நிலையைப் பெற முடியும்! நோயாளிக்கு வலி தெரியாது இருக்க எங்ஙனம் மரத்தல் மருந்து உதவுகிறதோ அதுபோல அறிவுள்ள மக்களுக்கு இறைவன் திருவருள் உதவுகிறது. ஊழினால் வரும் துன்பங்கள், இறைவனை எப்போதும் நினைப்பவர்களுக்கு உறைப்பதில்லை. மற்றவர்களெல்லாம் ஊழ் வினைக்கு அஞ்சுவார்கள். ஆனால் இறைவனுடைய மெய்யன்பர்கள் அதற்கு ஒருகாலும் அஞ்சுவதில்லை. சாதாரணமாக கத்தியால் காயம் உண்டானால், வலியால் துடித்துப்போகும் ஒருவன், அதே மருத்துவர் கத்தியால் அறுக்கும்போது வேதனை தெரியாமல் கிடக்கிறான். அதுபோல இறைவனின் அருள் பெறாதபோது சிறிய இன்னல்களையெல்லாம் கண்டு அஞ்சுபவனே, இறைவன்பால் அன்புடையவனாகியபின் அவன் அருளைப்பெற்று, எது வந்தாலும் அஞ்சாமலும், வேதனையுறாமலும் வாழ்வான்.

 இறைவன் அருளைப்பெற்ற அன்பர்கள், ஊழ்வினை வந்தால் என்ன, நான் எதற்கும் அஞ்சேன் என்று சொல்வார்கள். இத்தகைய  நிலையை  அடைந்தவர் திருநாவுக்கரசர். ஒருநாள் ஒரு அன்பர் அவரிடம், “சுவாமி! தாங்கள் ஊழ்வினைக்கு என்றும் அஞ்சமாட்டீர்களா?” என்று கேட்டார். “மாட்டேன். இந்த உலகில் யான் வாழும்வரை என்னை ஊழ்வினை வந்து துன்புறுத்தும் என்பதை நன்கு அறிவேன். அதனால் என்ன? வந்துவிட்டுப் போகட்டுமே, எனக்குச் சிறிதும் கவலை இல்லை” என்று பதில் கூறினார் திருநாவுக்கரசர்.

‘சூழ்  உலகில் ஊழ்வினை வந்து  உற்றால் என்னே?” என்பது அவர் வாக்கு. “சாமி! எங்களுக்கு வரும் துன்பங்களுக்கு அளவே இல்லையே! சரி, தங்களுக்குத் துன்பம் இல்லாமல் இருக்க என்ன செய்தீர்கள் சாமி?” மறுபடியும் கேட்டான் அந்த அன்பன். “ஆச்சரியப்படாதே அப்பா! நானும் உங்களைப்போல  துன்பங்களால் அலைப்புண்டவன்தான். எத்தனைதான் துன்பத்தைப் போக் வேண்டுமென்று நான் முயன்றாலும் அவை என்னைவிட்டு நீங்காமலே இருந்தன. அப்படித் துறவாமல் இருந்த துன்பங்களை நான்தான் துறந்துவிட்டேன்! இப்படிப்பட்ட நிலையில் ஊழ்வினை வந்து உற்றால், எனக்கு ஒரு துன்பமும் வராது.’’

“சாமி! எப்படித் துன்பத்தைத் துறந்தீர்கள், அதைச் சொல்லுங்கள்.’’ “துன்பமே இல்லாத, இன்பமயமானவரான இறைவனை வழிபட்டேன். அவனிடம் நம் அன்பு முறுக முறுக, இந்தத் துன்பங்கள் எல்லாம் சிறிது சிறிதாக நம்மை விட்டு மெதுவாகக் கழன்று போயிற்று.” ‘‘இறைவனை வழிபடும் வழிதான்  என்ன?’’ “இறைவனை வழிபடுவது மிகச்சுலபம் அப்பா. நாள்தோறும் காலையில் எழுந்து நீரில் மூழ்கி, நறுமலர் கொய்து, இறைவன் திருவடியைப் பூசித்து, தோத்திரங்களால் வாழ்த்தி, அன்பு செய்தல் வேண்டும்.

அப்படிச் செய்தால் நம் உள்ளம் இறைவன் நினைவிலே தோய்ந்துவிடும். பின் என்ன? துன்பத்தை உணராத நிலை தானே வந்துவிடும்.’’ “ஆச்சரியமாக இருக்கிறதே! நாங்களும் இறைவனை வழிபட்டால் எங்கள் எந்த வகையான துன்பங்களும் நீங்குமா?’’ “தன்னிடம் யார் வந்து வேண்டினாலும் வாழ்த்தினாலும், அவர்களுடைய துன்பத்தை உடனே நீக்கும் தர்மமூர்த்தி அவன். இறைவனுடைய மாபெரும் பெருமைகளை உள்ளபடி உணராதவர்கள் வானவர்கள்.

இருந்தாலும் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க முயன்று, முதலில் நஞ்சு எழுந்தபோதுதான், இறைவன் நினைவுவந்து அவரிடம் உதவிக்கு ஓடினார்கள். அப்போது இறைவனும் பாராமுகமாக இல்லாது, அவர்கள்பால் கருணைபூண்டு, அந்த நஞ்சை உண்டு, மிடற்றில் வைத்து அவர்களை உய்வித்தார். அமரர்களின் பெரிய துன்பத்தையே நீக்கிய அறப்பெரும் செல்வனான சிவபெருமானுக்கு  நம்முடைய துன்பம் எம்மாத்திரம்? அவனை அடைந்தால் அவன் ‘அஞ்சேல்’ என்று கூறி குறிப்பறிந்து செயல்படுவான். அவன் திருக்கோலத்தைக் கண்டால், அஞ்சேல் என்ற கரத்தை உடையவன் அவன் என்பது புரியும்.’’

“ஐயா! அவ்வாறு கோலம்கொண்டு இறைவன் எழுந்தருளியிருப்பான் என்றால் நாங்களும் அவனை அடைந்து, நீரில் மூழ்கி, மலர்கொய்து, அவன் தாளில் இட்டு  அவன் திருக்கழலை வாழ்த்தலாமே! ஆனால், தாங்கள் சொல்லும் இறைவனின்  இருப்பிடம் கூறினால் நலமாக இருக்கும். அவன் இருக்கும் இடம் எது, சொல்லுங்கள். நாங்களும் சென்று வருவோம் அல்லவா?’’ “அவன் இல்லாத இடமே இல்லை. ஆயினும் புறக்கண்ணால் கண்டு வழிபடுவதற்கு ஏற்றபடி தேவர்களைக் காக்கும் தலைவனாகிய அந்த இறைவன், இந்த மண்ணுலகத்திலும் திவ்யமங்கள மூர்த்தியாகி, வழிபடுவர்க்கு அருள் சுரக்கிறான்.’’

“நன்றி சாமி! மண்ணுலகில் அவனுடைய திவ்ய மங்கள மூர்த்தத்தை எங்கு காணலாம்?’’ “ஏன், திருக்கோயில்தோறும் காணலாமே! சரி, சோழநாட்டிலுள்ள  திருவாவடுதுறையிலே அமரர் ஏறாகிய அவனை நான் கண்டு ஆனந்தமாக  தரிசித்தேன். நீங்களும் சென்று  தரிசியுங்கள். இறைவா, அஞ்சேல் என்று அருள்வாயாக என்று வேண்டிக்கொண்டு நான் தரிசித்தேன்.” “நறுமா  மலர்கொய்து  நீரில்  மூழ்கிநாள்தோறும் நின்கழலே ஏத்தி வாழ்த்தித் துறவாத துன்பம் துறந்தேன் தன்னைச்சூழுலகில் ஊழ்வினைவந்து உற்றால் என்னே?உறவாகி வானவர்கள் முற்றும் வேண்டஒலிதிரைநீர்க் கடல்நஞ்சுண்டு உய்யக் கொண்டஅறவா! அடியேனை அஞ்சேல் என்னாய்ஆவடுதண் டுறையஉறையும் அமரர் ஏறே” திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் தேவர்கள் தலைவனே! மணம் வீசும் பெரிய மலர்களைக் கொய்து நீரிலே மூழ்கித் தினந்தோறும் நின்னுடைய திருவடிகளையே துதி செய்து வாழ்த்தி, அதனால் அதுவரை நீங்காத துன்பங்களை விட்டொழித்த என்னை, இப்போது யாவரும் வினைகளைச் செய்யும் இவ்வுலகில், ஊழ்வினை வந்து அடைந்தால் எனக்கு உண்டாகும் துன்பம்தான் என்ன? தேவர்கள் இறைவனிடத்தில் உறவுடையவராய், அனைவரும் வந்துவேண்ட, ஒலிக்கின்ற அலைகளையுடைய நீர் நிரம்பிய கடலில் எழுந்த நஞ்சை உண்டு அவர்களை  உயிர் பிழைக்குமாறு செய்து அருளிய அறமே உருவான அண்ணலே! அடியேனை அஞ்சாதே என்று சொல்வாயாக.

-இந்தப் பாடல் ஆறாம் திருமுறையில், நாற்பத்து ஏழாம் பதிகத்தில் வரும் ஐந்தாவது பாடலாகும். ‘ஒலிதிரை நீர்க்கடல் நஞ்சுண்டு’ என்று ஏன் சொன்னார் அப்பர் பெருமான்? அமுதம் கடைந்தது உப்புக்கடலில் என்பது ஒரு மரபு. ‘காரூர் கடல் விடமுண்டு’ என்று சுந்தரரும், ‘தாழிதரையாகத் தண்டயிர் நீராகத் தடவரையே மத்தகத் தாமரைக்கை நோவ, ஆழி கடைந்து அமுதம் எங்களுக்கே ஈந்தாய்,’ என்று கம்பரும்  கூறுவர். மேலும், துன்பம் துறந்தேன் என்று  அவர் சொன்னாலும் அந்த நிலையில் செருக்கு அடையாமல், பின்னும் பணி பூண்டவராகி இறைவனை நோக்கி இருக்கின்றார் அப்பர் பெருமான். ஆதலால், ‘அடியேனை அஞ்சேல் என்னாய்’ என்கிறார்.  ஆவடுதுறை, சோழநாட்டில் காவிரிக்குத் தென்கரையில் உள்ளது. அம்பிகையின் பசு உருவை இறைவன் நீக்கிய தலம் ஆதலால், ‘ஆ அடுதுறை’ என்ற பெயர் பெற்றது.

- உமா பாலசுப்ரமணியன்