வளம் பெருக்கி, நலம் சேர்க்கும் வர்காரி யாத்திரை!மகாராஷ்டிரா-பண்டரிபுரம்

‘ஆடி ஏகாதசியன்று லட்சோபலட்சம் பக்தர்கள் பண்டரிபுர விட்டலனை தரிசிக்கச் செல்லும் மகத்தான நீண்ட பயணம்தான் ‘‘வர்காரி யாத்திரை.’’ பாரத தேசத்தில் நெடுங்காலமாக இருந்து வந்த யாக, யக்ஞ, தபஸ் போன்ற கடினமான முறைகளினால் பகவானை அடையலாம் என்ற கருத்து, பிற்காலத்தில், பாமர மக்களுக்கு அனுசரிக்க மிகவும் கடினமாகத் தோன்றியது. ‘‘நேரடியாக பகவானைப் புகழ்ந்து, பாடி பக்தி செலுத்தியும் பகவானை அடையலாம்’’ என்று சிலர் சொல்ல ஆரம்பித்து, அதன்படி நடத்திக் காட்டவும் செய்தார்கள். இதுவே ஒரு ‘பக்தி இயக்கமாக’ வளர ஆரம்பித்தது.

வட பாரத தேசமெங்கும் இந்த ‘பக்தி இயக்கம்’ வெகு வேகமாகப் பரவி பிரபலமாயிற்று. ஜெயதேவர், நாமதேவர், ஞானதேவர், சோபன்தேவ். சிரங்தேவ், துளசி தாஸர், கபீர்தாஸர், கூர்ம தாஸர், விஷ்ணுதாஸர், சூர்தாஸர், ரோயிதாஸர், ராமதாஸர், மாதவதாஸர், மச்சேந்திர நாத், சலந்தர்நாத், கோரக்நாத், ஏக்நாத், கோரகும்பர், ராகாகுமார், பரமான்ந்தசோகா, ஜகமித்ரி நாகா, நிவர்த்தி சாது சாவ்தா மாலி, முக்தா பாயி, ஜாரா பாயி, மீராபாய், கங்காபாய், நரஹரி, சஜன்கா சாய், துக்காராம் என்று ஏராளமானோர் தோன்றி இந்த இயக்கத்தை வளர்த்தார்கள். இவர்கள் எல்லோரும் தங்களை மறந்து ஆடிப்பாடி பக்தியில் திளைத்ததால் மக்களால் பெரிதும் போற்றப்படலானார்கள்.

பாரத தேசத்தில் இப்படிப்பட்ட பக்தமாமணிகள் 700 பேருக்கும் மேல் தோன்றி பக்தி இயக்கத்தை வளர்த்தார்கள். தமிழ்நாட்டில் முருகப்பெருமான், ஆந்திராவில் பெருமாள், ஒடிஸாவில் ஜகந்நாதர் என வழிபடுப்படுவதுபோல, மகாராஷ்டிரத்தில் லட்சோப லட்சம் பேர் வழிபடும் தெய்வம், பண்டரிபுரம் பாண்டுரங்கன். ‘‘ஜே ஜே விட்டலா, ஜெயஹரி விட்டலா, பாண்டு ரங்க விட்டலா, பண்டரி நாத விட்டலா’’ என்ற உள்ளத்தை ஈர்க்கும் பஜனைப் பாடல்வரிகளைக் கேட்காதவர்கள் யானேும் இருப்பார்களா? பரந்தாமன் தன் இரண்டு திருக்கரங்களையும் இடுப்பின் இரு பக்கங்களிலும் வைத்துக்கொண்டு கிழக்குநோக்கி நின்ற திருக்கோலத்தில் அற்புதமாகக் காட்சி கொடுக்கும் திருத்தலம்தான் பண்டரிபுரம். பண்டரிபுரம் என்கிற ஊரில் இப்படி இறைவன் நிற்பதால் இங்கே அவருக்குப் பண்டரிநாதன் என்று பெயர் ‘ஈட்’ என்ற செங்கல் மீது நிற்பதால் ‘இடோபா’ என்று ெபயர்.

‘நீ வந்து வரம் கேட்கிறவரை இங்கேயே நிற்பேன்’ என்று பக்தன் புண்டரீகனுக்குச் சொன்னதால் புண்டரீக வரதன் என்று பெயர். இந்த இடோபாவே இன்று பிரசித்திபெற்ற பண்டரிவிட்டலாகி, ‘‘ஜெய் ஜெய் விட்டல’ ‘பாண்டுரங்கவிட்டல’ என்று மகாராஷ்டிரமெங்கும் மக்களின் நாவில் நர்த்தனமிடுகிறான். ‘‘விட்டல, விட்டல!’’ என்று பாடிக் குதித்துக் குதித்தே தங்கள் வாழ்நாள் முழுவதையும் பண்டரிபுரத்தில் கழித்தவர்கள் அநேகம் பேர். அவர்களுடைய ஏராளமான அதிஷ்டானங்களே சந்திரபாகா நதியை அடைத்துக் கொண்டிருக்கின்றன.

அழகானநதிக்கரையில் இறங்கிப் போனால் அடுத்தடுத்து சின்னச் சின்ன கட்டிடங்களாக இந்த அதிஷ்டானங்கள் உட்கார்ந்திருக்கின்றன. வாழ்நாள் முழுவதும் ‘விட்டல, விட்டல’ என்று ஆடிப்பாடி குதித்த அத்தனைபேரும் கடைசியில் இங்கே மண்ணோடு மண்ணாகத்தான் மறைந்திருக்கிறார்கள். மகாராஷ்டர மாநிலத்தின் மிக முக்கியமான திருத்தலங்களில் ஒன்றான பண்டரிபுரம், சென்னையிலிருந்து மும்பை செல்லும் ரயில் மார்க்கத்திலும் ஷோலாப்பூரிலிருந்து 70 கிலோமீட்டர் தூரத்தில் பீமா நதிக்கரையில் அமைந்துள்ளது. இது ஒரு புனித க்ஷேத்திரம். பீமாநதி, சந்திரப்பிறை போல அவ்வூரைச் சுற்றி வருவதால் ‘சந்திர பாகா’ என்றழைக்கப்படுகிறது. நதிக்கரையிலும், நதியின் நடுவில் காணப்படும் மணல் திட்டிலும் பல கோயில்கள் எழுந்துள்ளன. பீமா நதிக்கரையிலிருந்து சற்றுத் தொலைவில் பக்தன் புண்டரீகரின் ‘சமாதி கோயில்’ ஒன்றுள்ளது.  அங்கு முக்கிய வழிபாடு சிவலிங்கத்திற்குத்தான்.

பக்தர்கள் புனித சந்திரபாகா நதியில் நீராடிவிட்டு ‘மகாதுவார்’ வழியாக ஊருக்குள் நுழைவது வழக்கம். தீர்த்தக் கட்டங்களிலிருந்து கோயிலுக்குச் செல்லும் வழியில் இருபக்கங்களிலும் ஏராளமான கடைகள் உள்ளன. விட்டலன் கோயிலின் சிகரம் ஐந்து அடுக்குகள் கொண்டது. மொத்தம் எட்டு வாயில்கள் உள்ளன. வடக்கில் மூன்றும், கிழக்கில் மூன்றும், தெற்கில் ஒன்றும், மேற்கில் ஒன்றுமாக அமைந்துள்ளன. கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கு வாயில் வழியாக வெளியே வரவேண்டும். கீழ் நுழைவாயில் மராட்டிய மக்களின் குருவான நாமதேவர் பெயரால் அழைக்கப்படுகிறது. அதை அடைய பன்னிரண்டு படிகள் உள்ளன.

முதல் படியின் அருகே நாமதேவரின் பித்தளை கவசமிட்ட மார்பளவு திருவுருவம் காணப்படுகிறது. இவருக்கு எதிரேயுள்ள மற்றொரு கல் சமாதி, மற்றொரு விட்டல் பக்தரும், தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவருமான ‘சோகா மேளா’வுடையது. இவ்விரண்டையும் பக்தர்கள் வழிபடுகிறார்கள். உள்ளே சென்றால் மகா கணபதி, இடதுபுறம் எழுந்தருளியிருக்கிறார். பெரிய விசாலமான பரப்பளவு உள்ள நாற்கட்ட முற்றம் உள்ளது. அங்கு மூன்று தீப ஸ்தம்பங்களும், இரண்டு பெரியோர்களின் சமாதிகளும் இருக்கின்றன. அங்கேயே கருடபகவானும், ஆஞ்சநேயரும் எழுந்தருளியிருக்கின்றனர். அங்குள்ள பின்புறச் சுவரில் உள்ள மூன்று வாயில்களில் நடுவாயில் பித்தளைத் தகடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அதன் இருபக்கங்களிலும் ஜெயன், விஜயன் எனும் துவார பாலகர்கள் உள்ளனர். வாயிலின் இரண்டாவது பக்க மண்டபத்தில் செந்தூர வண்ணத்தில் கணபதியும் தாமரை, அட்சமாலை, புத்தகம் தாங்கிய கருங்கல்லினாலான சரஸ்வதி தேவியும் எழுந்தருளியுள்ளனர். நடுவாயிலிலிருந்து பதினாறு தூண்கள் கொண்ட ‘சோலா கம்பா’ என்ற மண்டபத்தின் கூரை முகடுகளில் தசாவதாரம் மற்றும் கிருஷ்ண லீலைகள் பற்றிய காட்சிகள் எழிலுற சித்திரிக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் சின்னப் பிறைகளில் காசி விஸ்வநாதர், ராமலட்சுமணர், கால பைரவர், தத்தாத்ரேயர் ஆகியோர் உள்ளனர்.

பதினாறு தூண்களில் இரண்டாவது வரிசையில் உள்ள இரண்டாவது தூண் தங்கம், வெள்ளிக்கவசங்களால் மின்னுகிறது. பக்தர்கள் அதைத் தழுவி காசுகளை காணிக்கையாக்குகின்றனர். அதில் காணப்படும் விஷ்ணுவின் உருவம் இந்த மண்டபம் உருவாக்குவதற்கு முன்பு கருட ஸ்தம்பத்தில் விட்டலின் முன்னால் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மண்டபத்தின் அருகே ‘செளகம்பா’ என்ற நாலுகால் மண்டபம் உள்ளது. தெற்கில் உள்ள இந்த யானை வாசல் வழியாகத்தான் அர்ச்சகர்கள் அதிக எண்ணிக்கையில் செல்கிறார்கள். அதன் வடபுறம் வெள்ளிக் கட்டில் உள்ள சயன அறை உள்ளது.

கர்ப்பகிருகத்தில் நான்கடி உயரமுள்ள கல்பீடத்தின் மேல் கருங்கல்லினாலான சுமார் மூன்றரை அடி உயரமுள்ள பாண்டு ரங்கவிட்டலன் அருள்பாலிக்கிறார். தலையில் சிவலிங்கமும், கழுத்தில் கெளஸ்துப மாலையும், பட்டுப் பீதாம்பரமும் தரித்துள்ளார். தலையில் உள்ள சிவலிங்கம் ஒரு தலைப்பாகை போலவும், கிரீடம் போலவும் அமைந்திருக்கின்றது. காதுகளில் பெரிய மகர குண்டலங்கள் பளிச்சிடுகின்றன. இடதுகையில் சங்கும், வலது கையில் தாமரைத் தண்டும், ஏந்தி இரு கரங்களையும் இடுப்பில் ஊன்றி கல்லின் மேல் நிற்கிறார்.

தோமாலை சேவை, விஸ்வரூப தரிசனம், பூலங்கி சேவை என்றெல்லாம் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு விசேஷ தரிசனம் இருப்பது போலவே இந்த விட்டலனின் கோயிலிலும் ஒரு விசேஷ தரிசனம் இருக்கிறது. அது மிகவும் வித்தியாசமானது.  இந்த தரிசனத்திற்கு ‘பாத ஸ்பரிச தரிசனம்’ என்று பெயர். பக்தர்கள் இந்த கோயிலில் மட்டும்தான் கருவறைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். விட்டலனின் கருவறைக்குள், விக்கிரகம் நிற்கும் மேடை அருகில் பக்தர்கள் போகலாம். சாதி, இன, பேதம், ஏற்றத் தாழ்வு ஏதும் கிடையாது. பாமர ரஞ்சகனான விட்டலனின் சந்நதியில் கட்டுப்பாடு ஏதும் கிடையாது. விட்டலனை நெருங்கி நின்றுதரிசிக்கலாம். மேடையடியில் குனிந்து, அவனுடைய திருவடிகளில் தலைபடும்படி வைத்து நமஸ்கரித்துத் தொழவேண்டும். விட்டலனுடைய பாதஸ்பரிசம் பக்தர்களுக்கு தரப்படுகிறது. இதுவே ‘பாத ஸ்பரிச தரிசனம்’.

இந்த தரிசனத்திற்குப் போகிறவர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். நீங்கள் தலைதாழ்த்த தயங்கினாலோ, பின் வாங்கினாலோ பக்கத்தில் உள்ள பண்டாக்கள் விடமாட்டார்கள் ‘ஆ... ஊ...’ என்று கத்தி உங்களை பலவந்தமாக இழுத்து, தலையை சுவாமியின் திருவடிகளில் அழுத்திவிடுவார்கள். அவர்கள் இழுப்பதும் தள்ளுவதும் முரட்டுத்தனமாக இருக்கும். பலருக்கு மண்டை உடையும் பாக்கியமும் உண்டு! இப்படி விட்டலனை தரிசிக்க யாருக்கும் உரிமை உண்டு. யார் வேண்டுமானாலும் விட்டலனின் திருவடியைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ளலாம். ஆனால் இங்கிருக்கும் பண்டாக்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எதையெதையோ செய்வதாகவும், செய்ததாகவும் சொல்லிப் பலவழிகளிலும் பணத்தைப் பிடுங்க முயற்சிப்பார்கள்.

இந்த நிலையில், நிரந்தரமாக பண்டரிபுரத்தில் குடியிருக்க வேண்டிய இந்த விட்டலன் அடிக்கடி இடம் மாறியதாக தெரிகிறது. ஒருமுறை விஜய நகரத்து அரசர் கிருஷ்ண தேவராயர், விட்டலன் விக்கிரகத்தை தனது நாட்டிற்கு எடுத்துச் சென்றுவிட்டார். ஏகநாத் என்ற மகானின் கொள்ளுப் பாட்டனாரான பானுதாஸ் என்ற பக்தர் தனது பக்தியின் சக்தியால் விட்டலனைத் திரும்பவும் பண்டரிபுரத்துக்குக் கொண்டு வந்ததாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. விட்டல் பண்டரிபுரம் திரும்பிய இந்த வைபவத்தை இன்றும் ஒவ்வொரு ஏகாதசியன்றும் பண்டரிபுரத்தில் விசேஷமாகக் கொண்டாடுகிறார்கள்.

ஒரு காலத்தில் மிகச் சிறிய சந்நதியாக இருந்த விட்டலன் மற்றும் ருக்மாயி சந்நதிகள் பெரிய கோயிலாக மாறியதற்கு காரணமானவர் நிஜாம் மன்னரின் அமைச்சரான சந்துலால். சபாமண்டபத்தை அடுத்து ருக்குமாயியின் சயன அறை உள்ளது. மூன்றடி உயரமுள்ள ருக்குமாயி, வெள்ளிப்பூச்சு கொண்ட பிராவளியோடு காட்சியளிக்கிறார். கர்நாடக பாணியில் அமைந்த அன்னைக்கு ஆடை ஆபரணங்கள மராத்திய மரபை ஒட்டி அணிவிக்கப்பட்டுள்ளன. பக்கத்தில் சத்தியபாமாவிற்கும் ராதாவிற்கும் தனிக் கோயில்கள் உள்ளன. பாண்டுரங்கனின் கோயிலில் உள்ள தெற்குப் பிராகாரத்தில் ஒரு பிரமாண்டமான மரம் நிற்கிறது.

பச்சைப் பசேலென்ற அம்மரத்தின் இலைகள் சூரிய ஒளியில் பளபளக்கின்றன. பண்டரிபுரம் கோயிலுக்கு வருகிற ஒவ்வொரு மராட்டியரும் இந்த மரத்தைப் புனிதமாகக் கருதி தொட்டு தரிசித்து, நமஸ்கரித்து கண்ணில் ஒற்றிக் கொள்ளாமல் போவதில்லை. அதன் இலைகள் அக்கோயில் பிரசாதமாகவே போற்றப்படுகின்றன. கானா பத்ரை என்ற விட்டலனின் பக்தைதான் இப்படி வளர்ந்து இங்கே நிழல் தந்து கொண்டிருக்கிறாள் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் இதை வழிபடுகிறார்கள். பண்டரிநாதன் கோயில் எப்போதும் தூய்மையாகவும் தெய்வ சாந்நித்யத்துடனும் விளங்குகிறது. ஆலய பிராகாரத்திலே அடிக்கடி கதாகாலட்சேபங்கள் நடைபெறுகின்றன. ஏராளமான பக்தர்கள் மெய்மறந்து அதைக் கேட்கிறார்கள்.

இப்போது பக்தர்கள் விட்டலனின் கோயிலிலுக்குள் ‘நாமதேவ் பயாரி’ வாசல் வழியாக உள்ளே நுழைந்து ‘பச்சிம் துவார்’ எனப்படும். மேற்கு வாசல் வழியாக வெளியே வருகிறார்கள். ஒவ்வொருவரும் இப்படித்தான் தரிசனம் செய்ய வேண்டுமாம். இந்த விட்டலனின் கோயிலுக்குள் அழகிய சந்நதிகள் கொண்ட 26 சிறிய கோயில்கள் இருக்கின்றன. இவற்றில் முதலில் இருப்பது ‘நாமதேவ் பயாரி’. அதன்பிறகு வரிசையாக கணேஷ் மந்திர், தத்தா மந்திர், கருட மந்திர், மாருதி மந்திர், சௌரங்கி தேவி மந்திர், கருடகும்பம், நரசிம்ம மந்திர், ஏகமுக தத்தாத்ரேயர் மந்திர், ராமேஸ்வர லிங்க மந்திர், காலபைரவ மந்திர், லட்சுமி-நாராயணர் மந்திர், காசி விஸ்வநாதர் மந்திர், கணபதி மந்திர், சத்யபாமா மந்திர், ராதிகா மந்திர், சித்தி விநாயகர் மந்திர், மகாலட்சுமி மந்திர், வேங்கடேஸ்வரர் மந்திர், கானாபத்ரா மந்திர், அம்பாபாய் மந்திர், சனிதேவ் மந்திர், நாகநாத் மந்திர், குப்தலில் மந்திர், கண்டோபா மந்திர், கணநாதர் மந்திர் ஆகியன உள்ளன. ருக்மணி-சத்ய பாமா கோயிலிலிருந்து வெளியே வரும்போது விட்டலனின் கருவறைக் கோபுரத்தின் அழகைக் கண்டுகளிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

சந்திரபாகா நதியின் வடகரையில் விட்டலனின் ஆலயம் இருக்கிறது. தென் கரையில் சற்று தூரத்தில் சக்குபாய் என்ற பக்தையின் கோயில் உள்ளது. அங்கே அவள் மாவு அரைத்த ‘கல் எந்திரம்’ இன்றும் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருக்கிறது. இங்கே சந்திரபாகா நதியின் நடுவிலே வரிசையாக பக்த சிரோன்மணிகளின் சமாதிக் கோயில்கள் நிறைந்து இருக்கின்றன. தடுக்கி விழுந்தால் ஒரு பக்தரின் சமாதி மீதுதான் விழ வேண்டும்.

பண்டரிபுரத்தில் விட்டலனின் கோயிலைச் சுற்றி, ஒவ்வொரு தெருவிலும் பிரசித்தி ெபற்ற ஒரு கோயில் இருக்கிறது. ஸ்டேஷன் ரோட்டிலேயே பத்மாவதி கோயில் இருக்கிறது. சின்துபாத் அருகில் லட்சுமிபாய் கோயில், ஷோலாப்பூர் ரோட்டில் அம்பாபாய் கோயில், நதிக்கரையில் புண்டரீகன் கோயில், பிரதட்சண சாலையில் ராம தேவர் - துகாராம் - காலமூர்த்தி - தம்பாதர் மாருதி கோயில்கள், நாத்செளக்கில் தியான தேவர் கோயில், ஷோலாப்பூர் ரோட்டில் வியாச நாராயணர் - ராம் பாக் - லட்சுமணன் பாக் கோயில்கள், சங்கோலா ரோடில் யாமாய் துகாய் மந்திர், சிவாஜி செளக்கில் கஜாணனன் மகராஜ் மந்திர், மாண்டி அருகில் விடோபா கோயில் என்று ஏராளமான கோயில்கள் அமைந்துள்ளன. பண்டரிபுரத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோபால் பூரும், விஷ்ணு பாதமும் கூடுதல் முக்கியத்துவம் பெற்றவை.

விட்டலன் கோயிலில் தினமும் ஐந்துகால பூஜைகள் நடைபெறுகின்றன. விடியற்காலையில் துவங்கும் சுப்ரபாத  ‘கக்கட ஆரத்தி’யைத் தொடர்ந்து பஞ்சாமிர்த பூஜை, மதியத்தில் மகா நைவேத்தியம், ‘போஷகா’ என்ற அலங்காரத்துடன் தூப ஆரத்தி, கடைசியாக ‘தேஜ் ஆரத்தி’ என்ற சயன ஆரத்தியோடு முடிகிறது. விட்டல் சயனத்தில் எழுந்தருளாமல், சயன அறைக்கும், கருவறைக்கும் இடையில் தீர்த்தம் தெளித்து கண்ணனின் பாதச் சுவடுகளும், பசுவின் குளம்புகளும் உள்ள ஒரு சிவப்பு ஜமுக்காளத்தை சயன அறைக்குள் விரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். விட்டலனின் திருவடிகளைக் கழுவி, புதிய ஆடை, அலங்காரங்களை அணிவித்து, பிரதட்சணம் செய்து பிறகு கருவறையை மூடிவிடுகிறார்கள்.

இப்படி தினசரி பூஜைகளோடு ஒவ்வொரு புதன்கிழமையும், சனிக்கிழமையும் விசேஷமான பஞ்சாமிர்த அபிஷேகமும், பூஜையும் நடக்கின்றன. நைவேத்தியத்தை உட்கொண்ட இறைவனை சயனத்தில் விடாமல் அர்ச்சகர்கள் இரவு முழுவதும் விழித்திருப்பார்கள். பாவம் விட்டலன்! பண்டரிபுரம் ஒரு புண்ணிய பூமி. பகவான் பல லீலைகள் புரிந்து பல மகான்களுக்கு நேரில் தரிசனம் கொடுத்த இடம். பண்டரிபுரத்தை பூலோக வைகுண்டம் என்று பக்தர்கள் வர்ணிக்கிறார்கள். பானுதாசரின் சீடரான வித்யாரண்ய அரசன் ராமராயனுக்குப் பகவான் பண்டரிபுரத்தை வைகுண்டமாகவே காட்டி, ராமராயரின் இஷ்டதெய்வமான பவானியும், சரஸ்வதியும் அங்கு தொண்டு செய்வதாகக் காட்டியதாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன.

பண்டரிபுரம் பாண்டுரங்கனின் லீலாவினோதங்களையும், அவனது பேரருள் கருணையையும் வார்த்தைகளால் எழுத இயலாதவை. ‘ மகா பக்த விஜயம்’ என்ற ஒப்பற்ற பக்தி நூல் விவரிப்பதுபோல எண்ணற்ற மகான்களின் வாழ்க்கையோடு பின்னப்பட்டு அவர்கள் பாத தூளிகள் பட்ட இடம் பண்டரிபுரம். இந்த எண்ணத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதங்களைத் தொட்டு ஏராளமானவர்கள் தம் கண்களில் ஒற்றிக் கொண்டு களிபேருவகை அடைகிறார்கள். பண்டரிபுரம் பாண்டுரங்க விட்டலின் வழிபாடு முதன் முதலில் கர்நாடக மாநிலத்திலிருந்துதான் ஆரம்பித்திருக்கிறது.

அதற்கு முன்பாக வைணவத்தைப் போற்றும் வழிபாடு மகாராஷ்டிர மண்ணில் இருந்தாலும் இந்த விட்டலநாதர்தான் முதன்முதலாக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியவர். மராத்திய கவிஞரான நாமதேவர் இறைவனை ‘கன்னட விட்டலன்’ என்றே அழைக்கிறார். கி.பி. 1117-1137 காலத்தில் மைசூர் பகுதியை ஆட்சி புரிந்து வந்த ஜைன மதத்தைச் சேர்ந்த ஹொய்சால மன்னனான பிட்டிதேவனை, அப்போது அங்கு தங்கியிருந்த ராமானுஜர் வைணவ சமயத்தைத் தழுவச் செய்தார். மதம் மாறிய மன்னன், உடையவரைத் தம் குருவாக ஏற்றுக் கொண்டு விஷ்ணுவர்த்தனன் என்ற மறுபெயர் ஏற்று திருமாலுக்குத் தொண்டனாகி பல வைணவக் கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தான்.

வைணவ சமயத்தைத் தழுவிய விஷ்ணுவர்த்தனன் பக்தர் புண்டலிகன் விருப்பத்திற்கேற்ப பண்டரிபுரத்தில் பாண்டுரங்கனுக்குக் கோயில் கட்டியதை சரித்திரச் சான்றுகள் மூலம் அறியலாம். பத்ம புராணத்தில் ‘பாண்டுரங்க மாகாத்மிய’த்தில் விட்டல் பண்டரிபுரத்தில் கோயில் கொண்டதை ஒரு கதை விவரிக்கிறது. இப்படி பக்த சிரோன்மணிகளால் விட்டலனின் புகழ் நாடெங்கும் பரவியது. மன்னனைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வைணவத்தைப் பின்பற்றினார்கள். விட்டலுக்கு பக்தர்களானார்கள். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் வசிக்கும் இந்த வைணவ பக்தர்கள் ‘வர்காரிகள்’ எனப்பட்டனர்.

மகாராஷ்டிரத்தில் உள்ள இந்த வர்காரிகள் சம்பிரதாயம் தனித்தன்மை வாய்ந்தது. வர்காரிகளுக்கு பாண்டுரங்கனே கண்கண்ட தெய்வம், புனிதமான பண்டரிபுரமே வைகுண்டம். வருஷத்தில் இரண்டு தடவையாவது பண்டரிபுரம் வந்து விட்டலனை தரிசிக்காவிட்டால் அவர்களுக்கு தேகம் தரிக்காது. பெரும்பாலோர் ஏழை எளிய மக்களே. அவர்கள் ‘விடோபா, விடோபா’ என்று புலம்பிக்கொண்டே வயல்களிலும் சிறுசிறு தொழில் நிலையங்களிலும் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு விவசாயம், சிறிய கடைகண்ணிகள், கூலிவேலை ஆகிய இவையே ஜீவாதாரத் தொழில்கள். அவர்களது குறிக்கோள், பண்டரிபுரத்திற்கு வருவதும், பாண்டுரங்க விட்டலனை தரிசிப்பதுமே.

‘வர்காரி’ என்றால் யாத்திரையை நிறைவேற்றுபவர் என்று பொருள். இத்தகையப் பயணத்தை மேற்கொள்ளும்போது ஒரு வர்காரியின் ஆடை மிகவும் எளியதாக இருக்கும். கழுத்தில் துளசி மாலையோடும், கையில் கிண்ணாரத்தோடும் காவிக்கொடி ஏந்தி, பக்திப் பாடல்களை இசைத்துக் கொண்டு செல்வார்கள். வருடத்திற்கு இருமுறை ஏகாதசி நாளில் பண்டரிபுரம் போவது அவர்கள் கடமையாகிறது. பண்டரிபுரம் சென்றதும் சந்திரபாகா நதியில் நீராடி விட்டலநாதனை தரிசிப்பது வழக்கம். சாதி வேறுபாடின்றி வர்காரி சம்பிரதாயத்தில் ஈடுபட்டுள்ளோர் சுக துக்கங்களை மறந்து துறவிகள் போல் வாழ்வை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

சபரிமலை யாத்திரை போல் ஒரு குருவின் மூலமாக துளசிமாலை அணிந்து வர்காரியாக வாழ்க்கையைத் துவங்கும் அவர்களை ‘மாலாகரி’ என்றும் அழைப்பதுண்டு. ‘வர்காரி யாத்திரை’ எனும் இந்த பண்டரிபுர யாத்திரைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே அருட்தொண்டர்களின் பாதுகைகள், உருவங்கள் அடங்கிய பல்லக்குகளைத் தூக்கிக் கொண்டு நடைப்பயணமாகவோ, மாட்டு வண்டியிலோ பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டு செல்கிறார்கள். ஞானேஸ்வர், துகாராம், நிவிர்த்திநாத், ஏக்நாத் போன்ற மகான்களைக் குருவாகக் கொண்டு அவர்கள் போதித்த வழியில் வாழ்க்கை நடத்துவதே வர்காரிகளின் கொள்கையாகும்.

மகான்கள் போதித்த வண்ணம் ஆண்டுக்கு இரண்டுமுறை அவர்கள் மகாராஷ்டிராமெங்கிலுமிருந்தும் கூட்டம் கூட்டமாக விட்டலனை தரிசிக்கப் புறப்பட்டுவிடுகிறார்கள். அப்படி யாத்திரை போகும்போது குருமார்களான ஞானேஸ்வரின் பல்லக்கு ஆலந்தி எனும் இடத்திலிருந்தும், துகாராமின்  பல்லக்கு, தேஹுரோடிலிருந்தும், நிவிர்த்திநாத்தின் பல்லக்கு திரும்பகேஸ்வரிலிருந்தும், ஏக்நாத்தின்  பல்லக்கு பைதானிலிருந்தும் புறப்படுகின்றன. இதேபோன்று அறுபதுக்கும் மேற்பட்ட பல்லக்குகள் பண்டரிபுரம் போய்ச்சேருகின்றன. மேலும் உள்ளூர் தெய்வங்களையும் சிறுசிறு பல்லக்குகளில் ஏற்றிக் ெகாண்டு, பஜன்கள் பாடிக்கொண்டு, இசைக் கருவிகள் ஒலிக்க விட்டலனின் நாமசங்கீர்த்தனம் முழங்கிக்கொண்டு வருவார்கள்.

குறிப்பிட்ட நாளுக்கு முன்பே பயணத்தைத் தொடங்கி பல நூறு கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து பண்டரிபுரம் அடைகிறார்கள். எறும்பு வரிசைபோல பண்டரிபுரம் செல்லும் பாதைகளிலெல்லாம் வர்காரிகள் செல்லும் அழகே அழகு. மகாராஷ்டிராவின் கிராமப் பகுதிகளில் பெரும்பாலானோர் ‘வர்காரி’கள்தான். அவர்கள் அத்தனை பேரும் ‘சுத்த சைவம்’. புலால் பற்றிப் பேச்செடுத்தாலே காதைப் பொத்திக் கொண்டுவிடுகிறார்கள். வர்காரிகள் அத்தனை பேரும் விட்டல் பக்தர்கள். தங்கள் குருவான ராமதேவர் கையால் இந்த விட்டலன் பாலும் சோறும் சாப்பிட்டான் என்பதில் தீவிர நம்பிக்கையுடையவர்கள்.

மகான் ராமதேவர், தான்ஸோட்டி-குணாபாய் தம்பதியின் புதல்வன். தினமும் நைவேத்யம் எடுத்துப் போய் பண்டரிநாதனுக்கு நிவேதித்துவிட்டு வருவது தான்ஸோட்டியின் வழக்கம். ஒருநாள் ஏதோ அவசரம் காரணமாக, மகனை அப்பணியைச் செய்ய அனுப்பிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். பாலகன் ராமதேவன் நைவேத்யத்துடன் போய் விட்டலன் முன்வைத்து ஆராதித்தான். விட்டலன் பேசாதிருக்க, ‘நீ சாப்பிட்டால்தான் நான் போவேன். நீ சாப்பிடாவிட்டால் நான் பூஜை செய்யவில்லை என்று என் அம்மா என்னை அடிப்பாள். சாப்பிடு சாப்பிடு... நீ சாப்பிடுகிறாயா! இல்லை, நான் உயிரை விடட்டுமா?’ என்று கதறியபடி விட்டலனின் காலடியில் தலையை மோதிக் கொள்ளப் போனான். உடனே விட்டலன் பிரசன்னமாகி, அவனையே ஊட்டிவிடச் சொல்லி, சோறும் பாலும் உண்டானாம். அப்படியே
ராமதேவனுக்கும் ஊட்டிவிட்டானாம்.

இதைக் கேட்ட தந்தை நம்பாமல் மறுநாளும் மகனை பூஜை செய்ய அனுப்பிவிட்டு பின்னாலேயே வந்து பார்க்க, அப்போதும் ராமதேவனின் வற்புறுத்தலுக்காக விட்டலன் தோன்றி அவன் கையால் அமுது உண்டானாம். இச்செய்தி நாடெங்கும் பரவவே ராமதேவரின் புகழ் ஓங்கியது. இப்படி விட்டலனுக்கு அமுதூட்டும் பேறுபெற்ற ராமதேவரே ‘வர்காரி’களுக்கு குரு. இவரிடம் ‘வர்காரி’கள் வைத்திருக்கும் பக்திக்கும் நம்பிக்கைக்கும் அளவே கிடையாது.

ராமதேவர், துகாராம், தியானேஷ்வர் ஆகிய பிரசித்தி பெற்ற மகாராஷ்டிர பக்த மாமணிகளின் பாடல்களே ‘வர்காரி’களின் உதடுகளில் சதா ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அவர்கள் காட்டிய வழியிலே வாழ்கிறோம் என்பதில் ‘வர்காரி’களுக்கு பரம சந்தோஷம், மகா திருப்தி. எடுத்ததற்கெல்லாம் ‘நாம தேவர் சொல்கிறார், துகாராம் சொல்கிறார்’ என்று ஒரு பாட்டை எடுத்துப் போட, ‘வர்காரி’கள் தவறுவதேயில்லை. பண்டரிபுரத்தில் புதன்கிழமையே விட்டலனுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. அன்று ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகின்றனர். மாதந்தோறும் வரும் ஏகாதசி நாட்களில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடுகின்றனர்.

வருடத்திற்கு இரண்டு ஏகாதசியைச் சிறப்பாக, முக்கியமாகக் கொண்டாடுகிறார்கள். ஆடி மாதத்தில் வரும் ஆஷாட ஏகாதசியும், கார்த்திகை மாத ஏகாதசியும் அத்தகையவை. இவ்விரு ஏகாதசிகளிலும் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட வர்காரிகள் பாத யாத்திரையாக வந்து விட்டலனை தரிசித்துச் செல்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் ஏகாதசி, சைத்ர ஏகாதசி நாட்களில் முக்கியமான திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

அதுதவிர தசரா, ராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி நாட்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. ஆடி, கார்த்திகை மாத ஏகாதசிகளின் போதுதான் ஆலந்தி, தேஹு போன்ற தூரதூர பிரதேசங்களிலிருந்தெல்லாம் ஆயிரக்கணக்கான பல்லக்குகளைத் தூக்கிக் கொண்டு, லட்சக்கணக்கான வர்காரிகள் வருகிறார்கள். அவர்களின் தலைகள் அன்று விட்டலனின் முன் குனிந்து ‘பாத ஸ்பரிசம்’ பெற்று மன திருப்தியுடன் திரும்பிச் செல்கின்றனர்.

லட்சோபலட்சம் வர்காரிகள் பாத யாத்திரையாக வரும்போது அவர்களை ஒவ்வொரு ஊரிலும் வரவேற்று உணவு, உறைவிடம் கொடுத்து உபசரித்து வழியனுப்பி வைக்கிறார்கள் மக்கள். வர்காரிகள் வரும் வழியெல்லாம் தண்ணீர் பந்தல்களும் அன்னதானம் செய்கிறவர்களும் நிறைந்து காணப்படுகிறார்கள். வழிச்செலவே இல்லாமல் நடைப்பயணமாகவே இம்மாதிரி பல லட்சம் பக்தர்கள் பண்டரிபுரம் வந்து விட்டலனை தரிசித்துத் திரும்புகிறார்கள்.

‘‘சந்திரபாகா நதியில் ஸ்நானம் செய்து பாண்டுரங்க விட்டலனை தரிசனம் செய்தாலே நமது குறிக்கோள் எதுவாயினும் நிறைவேறிவிடும். பிறவி கடைத்தேறிவிடும்!’’ என்பது அவர்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கை. பண்டரிபுரம் பாண்டுரங்க விட்டலும், வர்காரி சம்பிரதாயமும் மகாராஷ்டிர மக்களின் வாழ்வோடு இயைந்து, அவர்கள் பண்பிலே ஊறிவிட்ட ஒன்றாகும். பல குருமார்களின் பாதுகைகளை பல்லக்கில் சுமந்து பண்டரிபுரம் செல்லும் கடல் போன்ற மக்கள் வெள்ளம் இதை உறுதிப்படுத்துகிறது.

மராத்திய இலக்கியத்தின் பெரும்பகுதி இந்த வர்காரி பக்தர்களின் பக்தி நெறியையும் விட்டலின் பெருமைகளையும் சார்ந்தே உள்ளது. அது மட்டுமா, சாதி பேதமில்லாமல், தொழில் வேறுபாடில்லாமல் இந்த பக்திநெறி பல நூற்றாண்டுகளாக மக்களின் மனத்தில் இடம் பெற்றிருக்கிறது என்றால் அது  விட்டலின் அருள்தான்! இப்படி நடைப்பயணமாக பல நூறு கிலோமீட்டர் நடந்து, லட்சோப லட்சம் பேர் விட்டலனைக் கண்டு தரிசிக்கும் ‘வர்காரி யாத்திரை’ போல் வேறெங்கும் இல்லை, காணவும் முடியாது. இது உலக வழிபாட்டு அதிசயங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது.

- டி.எம். இரத்தினவேல்