நேரில் வந்து அவிர்பாகம் ஏற்ற அரன்!



அருணகிரி உலா- 34

- சித்ரா மூர்த்தி

கந்தன்குடிக்கு மிக அருகிலுள்ள ஒரு திருத்தலம், ‘அம்பல்’ என்று இன்றழைக்கப்படும் அம்பர் பெருந்திருக்கோயில். மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் பூந்தோட்டம் எனும் ஊரிலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ளது. தல வரலாறு கந்தன்குடிக்கும் இதற்கும் சற்று ஒரே மாதிரியாகவே அமைந்துள்ளது. அம்பன், அம்பரன் எனும் இரு அசுரர்களை அழிக்க வேண்டி தேவர்கள் சிவபெருமானிடம் தஞ்சமடைந்தனர்.

இறைவன், அருகிலுள்ள பார்வதியைக் குறிப்பால் நோக்க, காளி அவதாரமானாள். காளி ஒரு அழகிய கன்னி உருவில் சென்றபோது, அசுரர்கள் அவளை ஒரு சாதாரணப் பெண் என்று நினைத்தனர். அப்பெண்ணிற்காக அவர்களிடையே சண்டை மூண்டது. காளி அவர்களுடன் போர்செய்து அசுரர்களைக் கொன்றாள். கோயில் உள்சுற்றில் காளி கோயில் உள்ளது. அசுரர்களைக் கொன்ற பாவம் தீர, காளிசிவனைப் பூசித்தாள்.

அரிசிலாற்றங்கரையில் அமைந்துள்ள அம்பர் திருக்கோயில், கோச்செங்கட்சோழனால் நிர்மாணிக்கப்பட்ட, யானை ஏற முடியாத மாடக்கோயிலாக சிறு குன்றின் மேல் விளங்குகிறது. இதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது சம்பந்தப் பெருமான் பாடியுள்ள பதிகம் (சம்பந்தரும் அப்பர் பெருமானும் ஒன்றாக இருந்து இறைவனை வணங்கிய தலம் அம்பர் என்பர்.) ‘‘எரிதர அனல் கையில் ஏந்தி எல்லில் நரிதிரி கானிடை நட்டம் ஆடுவர் அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க்குரிசில் செங்கண்ணவன் கோயில் சேர்வரேசங்கணி குழையினர், சாமம் பாடுவர், வெங்கனல் கனல் தர வீசி ஆடுவர் அங்கணி விழவமர் அம்பர் மாநகர்ச்செங்கணல் இறை செய்த கோயில் சேர்வரே’’ தலவிருட்சமான புன்னாக மரத்தின் கீழ், சோழன் பிரதிஷ்டை செய்த புன்னை வனநாதர் வீற்றிருக்கிறார். இத்தலம் மிகப் பழமையானது.

திவாகரத்தில் ஒளவை பாடிய அம்பர்ச் சேந்தன் என்றதில் கூறப்பட்டதும், ‘தண்ணீரும் காவிரியே, தார்வேந்தன் சோழனே, மண்ணாவதும், சோழ மண்டலமே, பெண்ணாவாள் அம்பர்ச் சிலம்பி, அரவிந்தமே மலராம், செம்பொறி சிலம்பே சிலம்பு’ என்ற தனிப் பாடலில் சொல்லப்பட்டதும் இத்தலமேயாம், என்கிறார் உ.வே.சா. அவர்கள். தஞ்சாவூர் கல்வெட்டுகளில் அம்பர் என்ற ஊர்ப் பெயர் அதிகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்.

ஐம்பதடி உயரமுள்ள மூன்று நிலை ராஜகோபுரம் கடந்து விசாலமான முற்றத்திற்கு வருகிறோம். கொடிமரம், விநாயகர், பலிபீடம் ஆகியவற்றை வணங்கி வரும்போது நந்தி தேவரின் மிகப்பெரிய சுதைச் சிற்பத்தைக் காணலாம். இடப்பக்கத்திலுள்ள கிணற்றின் அருகில் பிரம்மன் பூஜை செய்த லிங்கம் உள்ளது. அன்ன வடிவிற் சென்று சிவபெருமானின் முடியைக் கண்டதாகக் கூறப் பொய் சாட்சியுடன் வந்த பிரம்மனை அதே வடிவத்துடன் விளங்கும்படி சாபமிட்டார் இறைவன். அச்சாபம் நீங்க இத்தலத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து பிரம்மன் பூஜித்ததால் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் எனப்படுகிறார். தீர்த்தம் ‘அன்னமாம் பொய்கை’ என அழைக்கப்படுகிறது. ‘அன்னமாம் பொய்கை சூழ் அம்பரானை’ என்று நாகையில் நாவுக்கரசர் பாடுகிறார்.

மூலவர் கிழக்கு நோக்கி குடிகொண்டுள்ளார். படிகள் தெற்கு முகமாக உள்ளன. படி ஏறிச்செல்வதற்கு முன் கிழக்கு மதிற்சுவர் மாடத்திலுள்ள தல விநாயகரான படிக்காசு விநாயகரைக் காணலாம். ஒரு பஞ்ச காலத்தில் பொருளில்லாமல் வருத்தமுற்ற நந்தன் என்கிற அரசனுக்கு நாள்தோறும் படிக்காசு அருளியமையால், விநாயகருக்குப் படிக்காசுப் பிள்ளையார் எனும் திருநாமம் அமைந்தது. இச்சந்நதியில் மூன்று விநாயக மூர்த்தங்கள் உள்ளன. இடப்புறம் சோமாசிமாற நாயனார் மனைவி சுசீலையுடன் வீற்றிருக்கிறார்.

பிராகாரத்தில் விநாயகர், சுப்ரமணியர், மஹாலட்சுமி, ஜம்புகேஸ்வரர், பைரவர் ஆகியோர் உள்ளனர். அம்பாள் சுகந்த குந்தளாம்பிகை தனிச் சந்நதியில் கிழக்கு நோக்கி நிற்கிறார். சந்நதிக்கு வெளியே ஆடிப்பூர அம்மன் சந்நதியும் பள்ளியறையும் உள்ளன. சந்நதி வாசலில் சனி பகவான் உள்ளார். முருகப் பெருமான் ஒரு திருமுகமும் நான்கு கரங்களும் கொண்டு கிழக்கு நோக்கி தேவியருடன் வீற்றிருக்கிறார். அருணகிரியார் இத்தலத்தில் ஒரு திருப்புகழ் பாடியுள்ளார்:

‘‘சோதி மந்திரம் போதகம் பரவு
ஞானகம் பரந்தே இருந்த வெளி
தோடலர்ந்த பொன் பூவிருந்த இடமுங்கொளாமல்
சூது பந்தயம் பேசி, அஞ்சுவகை
சாதி விண்பறிந்தோடு கண்டர், மிகு
தோதகம் பரிந்தாடு சிந்துபரி கந்துபாயும்
வீதி மண்டலம் பூணமர்ந்து சுழி
கோலமண்டி நின்றாடி இன்பவகை
வேணுமென்று கண்சோர ஐம்புலனொடுங்குபோதில்
வேதியன் புரிந்தேடு கண்டளவில்
ஓடி வெஞ் சுடுங்காடணைந்து சுட
வீழ்கி வெந்துகுந்திடும் இந்த இடர் என்று போமோ’’
- இது பாடலின் முற்பகுதி.

யோகத்தால் அடையும் ஜோதி ஒளிமண்டபம், அனுக்கிரகத்தால் அடையக்கூடிய ஞானாகாசம், புண்ணியத்தால் அடையும் தேவருலகம் போன்ற மேலான பதவிகளை அடைவதற்கான முயற்சியை மேற்கொள்வேனில்லை. ஐம்புலன்களின் வஞ்சகப் பிடியில் கடற்குதிரை முழுப் பாய்ச்சல் பாய்வது போல் செல்லும் வீதிவட்டத்தில் சிக்கிக் கொண்டுள்ளேன். அலங்காரங்களை நிறைய அனுபவித்து, இன்ப வகைகளே வேண்டும் என்ற எண்ணத்தால் தளர்கிறேன். இறுதியில் ஐம்புலன்களும் ஒடுங்குகின்ற அச்சமயத்தில், பிரம்மன் அனுப்பிய சீட்டைப் பார்த்த அளவில் உயிர் பிரிந்து ஓட, கொடிய சுடுகாட்டைச் சேர்ந்து உடலைச் சுட்டெரிக்க, அது வெந்து சாம்பலாகிச் சிதறிப் போகும் இந்த வருத்தம் என்று ஒழியுமோ? (இனிப் பிறவி வேண்டாம்) என்று பாடியுள்ளார்.

இனிப் பாடலின் பிற்பகுதியைக் காண்போம்:
‘‘ஆதிமண்டலம் சேரவும், பரம
சோம மண்டலம் கூடவும், பதும
வாளன் மண்டலம் சாரவும் சுழி படர்ந்த தோகை
ஆழி மண்டலம் தாவி அண்ட முதலான
மண்டலம் தேடி ஒன்ற அதோ
முகான மண்டலம் சேடனங்கணயில்
கொண்டுலாவிச்
சூதர் மண்டலம் தூளெழுந்து பொடி
யாகி, விண்பறந்தோட மண்டியொரு
சூரியன் திரண்டோட கண்டு நகை கொண்டவேலா!
சோடை கொண்டுளம் கான மங்கை மய
லாடி இந்திரன் தேவர் வந்து தொழ
ேசாழ மண்டலம் சாரும் அம்பர் வளர் தம்பிரானே!’’
(ஆதி மண்டலம் = சூரிய மண்டலம்
சோம மண்டலம் = சந்திர மண்டலம்
பதுமவாளன் மண்டலம் = பிரமனது உலகம்
ஆழி மண்டலம் = கடல் வட்டம்
அண்ட முதலான மண்டலம் =  அண்டங்களாம் பிரதேசங்கள்
அதோ முகான மண்டலம் = பாதாள லோகம்
சூதர் மண்டலம் = சூரியர்களின் மண்டலங்கள்
சோழ மண்டலம் = சோழ நாடு)

சூரிய மண்டலங்களோடு சந்திர மண்டலம் ஒன்று சேரவும், பிரம்மனது உலகம் அங்கு கூடவும், கண் போன்ற வளைவுகள் படர்ந்துள்ள தோகையை உடைய உன் மயில், கடல் வட்டத்தைக் கடந்துள்ள பிரதேசங்களைத் தாண்டியும், பாதாளத்திலுள்ள ஆதிசேடனைக் கொத்தியும் உலாவுகின்றது. அதனால் சூரியர்களின் மண்டலங்கள் தூளாகி விண்ணில் பறந்தோட, அவை தம்மை நெருங்கி வரும்போது ஒவ்வொரு சூரியனும் உருண்டும் புரண்டும் ஓடுவதைக் கண்டு சிரித்து விளையாடிய வேலவனே!

உள்ளத்தில் விருப்பமுடன் காட்டுமங்கை வள்ளி மீது மோகம் கொண்டு விளையாடி, இந்திரன் முதலான தேவர்கள் வந்து தொழ, சோழ மண்டலத்தைச் சார்ந்த அம்பர் எனும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே!’’ என்கிறது அம்பர் திருப்புகழ். படிகள் ஏறிச்சென்றால் ‘சோமாஸ்கந்தர் சந்நதியையும் மறுபுறம் விநாயகர், பாலசுப்ரமணியன், கோச்செங்கட்சோழன், பிரம்மா, சரஸ்வதி, ஞானசம்பந்தர் மற்றும் அப்பர் ஆகியோரையும் தரிசிக்கலாம்.

துவார பாலகர்களையும், விநாயகரையும் வணங்கி சிறிய வாசல் வழியாகச் சென்று மூலவரைத் தரிசிக்கிறோம். அவருக்குப் பின்னால் கருவறையினுள் சோமாஸ்கந்தரும் உள்ளார். ெவளியே வலப்புறம் நடராஜர் சபை உள்ளது. கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி, விநாயகர், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும் வணங்குகிறோம். ஐயப்ப சந்நதி ஒன்று கோயிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. துர்க்கை, சண்டிகேஸ்வரரை வணங்கி வெளியே வருகிறோம்.

அறுபத்து மூவருள் ஒருவரான சோமாசிமாற நாயனார் அவதரித்த திருத்தலம் இது. எக்குலத்தவராயினும் சிவனடியார்கள் என்றால் பேதம் பாராட்டாது தொண்டு செய்து வந்தவர் அவர். தான் செய்யும் சோம யாகத்தின் அவிர்பாகத்தை சிவபெருமானே வந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார்.

அதற்கு முன் சுந்தரரது நட்பைப் பெற விரும்பி அவருக்கு விருப்பமான தூதுவளைக் கீரையைத் தினமும் பரவையார் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இவ்வாறு கீரை கொடுத்தனுப்புபவரைப் பார்க்க விரும்பி சுந்தரர் அம்பர் வந்தபோது, சோமாசிமாறனார் அவரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். சுந்தரர் இறைவனிடம் பரிந்துரைத்தபோது, அவர், வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தன்று யாக ஹவிஸ்ஸை வாங்கிக் கொள்ள வருவதாகவாக்களித்தார்.

சிவபெருமானே நேரில் வரவிருப்பதால் வேத விற்பன்னர்கள் பலர் ஒன்றுகூடி யாகத்தைச் சிறப்பாக நடத்தினர். சிவபெருமான் நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாக்கி, தோளில் இறந்த கன்று ஒன்றினை சுமந்து, வெட்டியானாக உருமாறி வந்தார். பார்வதியாரின் தலையில் ஒரு மதுக்குடம் இருந்தது. குழந்தைகளான விநாயகரும், முருகனும் கீழ்சாதிப் பிள்ளைகள் போன்ற தோற்றத்துடன் வந்தனர். யாகத்தில் ஏதோ தவறு நேர்ந்துவிட்டது என்று எண்ணி பதறி ஓடிவிட்டனர் ேவத விற்பன்னர்கள்.

மிகவும் அஞ்சி நின்ற மாறனார்க்கு, விநாயகர் வந்திருப்பது சிவபெருமானே என்று குறிப்பால் உணர்த்தினார். அச்சம் நீங்கிய அவர், வெட்டியானாக வந்துள்ள தியாகராஜருக்கு அவிர்பாகம் அளித்து வணங்கினார். இறைவன் பார்வதி சமேதராக குழந்தைகளுடன் காட்சி அளித்து சோமாசிமாறரை ஆசிர்வதித்தார். (இந்நிகழ்ச்சி பெரியபுராணத்தில் குறிப்பிடப்படவில்லை.)

அம்பரிலிருந்து, மிக அருகிலுள்ள திருமாகாளம் கோயிலுக்குச் செல்கிறோம். இவ்விரண்டு தலங்களுக்குமிடையில்தான் சாலை ஓரத்தில் சோமாசிமாறனார் யாகம் செய்த தலம் உள்ளது. யாகம் நடத்தப்பட்ட மண்டபம் ‘பண்டாரவாடை திருமாளம்’ எனப்படுகிறது. நாயனாரது பயத்தை நீக்கிய விநாயகர், ‘அச்சம் தீர்த்த விநாயகர்’ எனப்படுகிறார். இறைவனுடன் வந்த பார்வதியாரது தலையில் இருந்த குடத்திலிருந்து கள் பொங்கிய இடம் ‘கொங்குராய நல்லூர்’ (முன்பு கொங்குசாராய நல்லூர் எனப்பட்டது) என்றும், இறைவன் சுமந்து வந்த பறை தானாக அடித்துக் கொண்ட இடம் ‘அடியக்க மங்கலம்’ என்றும் அழைக்கப்படுகின்றன. யாக உற்சவம், ஐதீகமாக வைகாசி ஆயில்யத்தில் நடைபெறுகிறது. அன்று தியாகராஜர் ெவட்டியான் கோலத்திலும், காட்சி தந்த நாயகர் கோலத்திலுமாக எழுந்தருளுகின்றார். பதறி ஓடிய வேத விற்பன்னர்களுக்கு மறுநாள் மக நட்சத்திரத்தன்று காட்சி தரும் நிகழ்ச்சியும் விழாவில் கொண்டாடப்படுகிறது.

மாகாளம் திருக்கோயிலுள் நுழைகிறோம். இறைவர் மாகாளேஸவரர் இறைவி பயக்ஷயாம்பிகை (பயம் தீர்ப்பவள் என்று பொருள். பட்ச நாயகி என்று தமிழில் தவறாக அழைக்கப்படுகிறது) ராஜ மாதங்கி. அசுரர்களைக் கொன்ற பாவம் தீர, காளி இறைவனைப் பூசித்த திருத்தலம். எனவே ‘மாகாளம்’ எனப்பட்டது. கிழக்கு நோக்கிய ராஜகோபுரம், ஐந்து நிலைகள் கொண்டது. பிராகாரத்தில் மோட்ச லிங்கம், காளி கோயில், சிவலோகநாதர் சந்நதி, யாகசாலை ஆகியன உள்ளன.

விசாலமான முற்றத்தின் இடப்புறம் மருதப்பர் சந்நதி, அடுத்துள்ள கோபுரம் அதிகாரநந்தி கோபுரம் எனப்படுகிறது. நேரே மூலவர் மகாகாளநாதசுவாமியைத் தரிசிக்கலாம். கருவறைக்கருகே சோமாஸ்கந்தர், நடராஜர், விநாயகர் ஆகியோர் உள்ளனர். முன்மண்டபத்தில் தியாகராஜரும், நீலோத்பலாம்பிகையும் வீற்றிருக்கின்றனர். முதற் பிராகாரத்தில் மதங்கரிஷி, அறுபத்து மூவர், வன்மீகநாதர், சோமாசிமாற நாயனார், அவர் மனைவி சுசீலை, விநாயகர், பிரம்மஹத்தி தோஷம் நீங்க இறைவனைப் பூசித்த வாசுகி ஆகியோரை வணங்கி, முருகப் பெருமான் சந்நதியை அடைகிறோம். திருவையாறைப் போன்று இங்கும் வில்ேலந்திய வேலவராக காட்சியளிக்கிறார் முருகப்பெருமான். அருணகிரிநாதர் இத்தலத்திலும் ஒரு திருப்புகழ் பாடியுள்ளார்:

‘‘பாதாள சேடன் உடல் ஆயிர பணா மகுடம்
மாமேரொடு எழுகடல் ஓதம், மலைசூரருடல்,
பாழாக தூளி விணிலே புவி வாழவிடு சுடர்வேலா
பாலாழி மீது அரவின் மேல் திருவோடே அமளி
ேசர் நீல ரூபன் வலி ராவண குழாமிரிய
பார் ஏவை ஏவிய முராரி, ஐவர் தோழன் அரி மருகோனே
மாதா, புராரி, சுகவாரி, பரை, நாரி, உமை
ஆகாச ரூபி, அபிராமி, வலமேவு சிவன்
மாடேறியாடும் ஒரு நாதன் மகிழ் போதமருள் குருநாதா
வானோர்கள், ஈசன், மயிலோடு குறமாது, மண
வாளா, குகா, ‘குமர, மாமயிலின் மீது திரு
மாதாள மாநகரில் மாலொடு அடியார் பரவு பெருமாளே’’.
(மாடேறி ஆடும் நாதன் - ரிஷபத்திலிருந்த
படியே நடமாடும் ஈசன்) என்பது அப்பாடல்.

(உலா தொடரும்)