பிரசாதங்கள்



-சந்திரலேகா ராமமூர்த்தி

* ஃபைபர் பான் கேக்

என்னென்ன தேவை?

கேழ்வரகு, கம்பு, சோளம் - தலா 1/2 கப், சிவப்பு அரிசி, பொடித்த வெல்லம் - தலா 1/4 கப், பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம், காய்ந்த திராட்சை - தலா 1 டேபிள்ஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை, நெய் - தேவைக்கு, தேன் - 4 டேபிள்ஸ்பூன், தேங்காய் பல் பல்லாக உடைத்தது - 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அரிசி, தானிய வகைகளை சுத்தம் செய்து 8 மணி நேரம் ஊறவைத்து மிக்சியில் மாவாக அரைக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி, மாவில் சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைக்கவும். பேரீச்சை, காய்ந்த திராட்சை, தேங்காய் துண்டுகள், உப்பு கலந்து சற்று கனமான தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் நெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து, தேனை பரவலாக ஊற்றி பரிமாறவும். குறிப்பு: இனிப்பு வேண்டாமென்றால் மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், கோஸ், பீன்ஸ், கொத்தமல்லி, பச்சைமிளகாய், மிளகு, கரகரப்பாக பொடித்த வேர்க்கடலை, தேங்காய்ப்பல் சேர்த்து காரமாக செய்யலாம்.

* பச்சைப்பட்டாணி பனீர் ரைஸ்

என்னென்ன தேவை?

பாஸ்மதி அரிசி - 2 கப், வேகவைத்த பச்சைப்பட்டாணி - 1/2 கப், பனீர் துண்டு - 1/2 கப், பச்சைமிளகாய் - 4, துருவிய இஞ்சி - சிறு துண்டு, பொடியாக நறுக்கிய  புதினா, கொத்தமல்லி - தலா 1 டேபிள்ஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2, மிளகு - 6, எண்ணெய், ெநய் - தலா 2 டீஸ்பூன், உடைத்த முந்திரி - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாஸ்மதி அரிசியை 1/2 மணி நேரம் ஊறவைத்து உதிர் உதிராக வடித்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பச்சைமிளகாய், முந்திரி, பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, இஞ்சித்துருவல், மிளகு, புதினா, கொத்தமல்லியை போட்டு நன்கு வதக்கி, பச்ைசப் பட்டாணி, உப்பு, சாதம், நெய், பனீர் சேர்த்து மெதுவாக கிளறி மூடிவைத்து சிம்மில் 1 நிமிடம் வைத்து இறக்கி பச்சடியுடன் பரிமாறவும்.

* மாவிளக்கு

எப்படிச் செய்வது?

தேவையான அளவு  பச்சரிசியை ஊறவைத்து, வடித்து, காயவைத்து அரைத்துக் கொள்ளவும். இத்துடன் ஒரு சிட்டிகை வெல்லம் கலந்து பிசைந்து விளக்கு செய்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு போடவும். இடித்த மாவில் நாட்டு சர்க்கரை, வேப்பம் இலைகள் வைத்து படைத்து பரிமாறலாம். அன்று இரவு படைப்பதற்கு, கீழ்காணுமாறு கொழுக்கட்டை செய்யலாம்.

கம்பு, தினை, ராகி கலந்த சத்துமாவுடன், சுத்தமான பனைவெல்லம் பாகு, ஒரு சிட்டிகை உப்பு, சிறிது நல்லெண்ணெய், ஏலக்காய்த்தூள், தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து, கொதிக்கும் தண்ணீரை ஊற்றி கிளறி, பிசைந்து கொழுக்கட்டைகளாக பிடித்து, ஆவியில் வேகவைத்து எடுத்து படைத்து பரிமாறவும்.

* கேழ்வரகு, கம்பு கூழ்

என்னென்ன தேவை?

கேழ்வரகு மாவு - 2 கப், உடைத்த கம்பு குருணை - 1/2 கப், தண்ணீர் - 6 கப் அல்லது தேவைக்கு, கடைந்த தயிர், மோர் - தலா 1 கப், சின்ன வெங்காயம் - 200 கிராம், பச்சைமிளகாய் - 4, உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். கம்பு குருணையை கழுவி10 நிமிடங்கள் ஊறவைத்து, 3 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 4 விசில் விட்டு வேகவிடவும். ராகிமாவை முதல்நாள் இரவே இட்லி மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும். மீதியுள்ள 3 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, புளித்த மாவை ஊற்றி, கட்டை கரண்டியால் கிளறி, உப்பு போட்டு வேகவிடவும். இந்த கலவை 3/4 பாகம் வெந்ததும், வெந்த கம்பு குருணையை சேர்த்து கிளறி, கெட்டியான களி பதத்திற்கு வந்ததும் இறக்கவும். ஆறியதும் பச்சைமிளகாய், வெங்காயம், தயிர் சேர்த்து பரிமாறவும். அல்லது மோர், தண்ணீர் சேர்த்து கரைத்து பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து கூழாக படைத்து பரிமாறலாம். குறிப்பு: முருங்கைக்கீரை பொரியல், மோர் மிளகாய், வற்றல் குழம்புடன் பரிமாறலாம்.

* கறிவேப்பிலை தொக்கு

என்னென்ன தேவை?

கறிவேப்பிலை - 1 கப், நல்லெண்ணெய் - 1/4 கப், கடுகு - 2 டீஸ்பூன், வெந்தயம் - 1/4 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 6, வெல்லம் - 1 துண்டு, பெருங்காயம் - 1/4 டீஸ்பூன், குழம்பு மிளகாய்த்தூள் - 2-3 டீஸ்பூன், புளி - சிறு எலுமிச்சை அளவு, உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மிக்சியில் கறிவேப்பிலை, உப்பு, வெல்லம், புளி, பெருங்காயம் போட்டு, சிறிது தண்ணீர் தெளித்து நன்கு விழுதாக அரைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை, வெந்தயம்  தாளித்து, மிளகாய்த்தூள், அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது ேநரம் கழித்து கடாயில் எண்ணெய் பிரிந்து ஒட்டாமல் வரும்போது இறக்கி, ஆறியதும் சுத்தமான பாட்டிலில் போட்டு வைக்கவும். சூடான சாதத்தில் கலந்து பரிமாறவும்.

* முக்கூட்டு கீரை வடை

என்னென்ன தேவை?

அரைக்கீரை அல்லது முளைக்கீரை - ஒரு பெரிய கட்டு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1 கப், மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 10, நெய் - 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் - 1/2 மூடி, உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பருப்பு வகைகளை 2 மணி நேரம் ஊறவைத்து வடித்து, மிளகு, சீரகம், காய்ந்தமிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். இத்துடன் நெய், கீரை, தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு கலந்து வடைகளாக தட்டி, சூடான எண்ணெயில் கரகரப்பாக பொரித்தெடுத்து பரிமாறவும். விரும்பினால் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கலாம்.

- படங்கள்: ஆர்.சந்திரசேகர்