‘‘இப்படி அற்புதமாக தானம் செய்பவனை நான் கண்டதேயில்லை!’’



மகாபாரதம்

காம்ய வனத்தில் பதினோறாவது வருடத்தை மிகுந்த வேதனையோடு பஞ்சபாண்டவர்கள் கழித்து வந்தார்கள். ஆனால் அமைதியாக வாழ்ந்தார்கள். இத்தனை கஷ்டங்களுக்கும் காரணம் தானே என்று அவ்வப்போது யுதிஷ்டிரர் என்று அழைக்கப்படும் தருமர் அடிக்கடி புலம்பினாலும் தங்கள் தமையனைப் பற்றி எந்தக் குறையும் சொல்லாது, அவரை சமாதானப் படுத்தியவாறும், அவரை சந்தோஷப்படுத்தப் பேசியவாறும் அவரது சகோதரர்கள் உடன் வந்தார்கள். இன்னும் சில காலங்களே இருக்கின்றன. நாம் வெகு அற்புதமாக இந்த கடினமான நேரத்தை தாண்டிவிடுவோம். யுத்தம் நிச்சயமாக வரும். அதற்குண்டான பலத்தை பெறுவதிலேயே இந்த கடினமான காலத்தை கழிப்போம். அரண்மனை சுகத்தில் இருந்தால் இவ்விதமெல்லாம் யுத்தம் செய்ய வேண்டும் என்ற நினைப்பே வந்திருக்காது.

உடம்பில் உரமே தோன்றியிருக்காது. இந்த காட்டு வாழ்க்கை கடுமையான ஒரு யுத்தத்திற்கு நம்மைத் தயார் செய்துவிட்டது. பசி, தாகம் என்று நாம் நிலைகுலைவதில்லை. தூக்கத்தை வேண்டும் என்றபோது வரவழைத்தும், வேண்டாதபோது விலக்கியும் நம்மால் தவசிகள்போல் இருக்கமுடிகிறது. இதெல்லாம் போருக்கு துணையான விஷயங்கள். வேறு யார் அறிகிறார்களோ இல்லையோ இதைப்பற்றிய தெளிவும், அறிவும் நமக்கு வந்துவிட்டது. இது மிகப்பெரிய விஷயம் என்று தங்களைத் தாங்களே பேசி உற்சாகப்படுத்திக் கொண்டார்கள். தருமரின் காதுபட இவ்வாறு பேச, தருமர் மெல்லியதாய் சிரித்துக் கொண்டார்.

அவர்கள் பேசுவது உண்மைதானெனினும் ஒரு க்ஷத்திரிய வம்சத்தில் உயர்ந்த குலத்தில், சகல சௌபாக்கியங்களோடு பிறந்துவிட்டு அதை நன்கு அனுபவித்துவிட்டு சட்டென்று அவற்றையெல்லாம் துறந்து வனவாசிகளைப்போல காட்டில் வாழும் நிலைமை வந்ததே என்னால்தானே என்ற ஏக்கத்தை, துக்கத்தை தருமரால் தவிர்க்கவே முடியவில்லை. அப்படி அவர்கள் அலைந்து கொண்டிருந்தபோது சத்யவதியின் மகனான வியாசர் வந்தார். தன்னுடைய பேரப்பிள்ளைகள், சூழ்ச்சியின் காரணமாக வனத்திற்கு அனுப்பப்பட்டு அங்கே கடுமையான வாழ்க்கையை கடைப்பிடிப்பதை பார்த்து மனம் வருந்தினார். வியாசரை வரவேற்று கால் அலம்பி, குடிக்க ஜலம் கொடுத்து, முதுகை ஈரத்துணியால் துடைத்துவிட்டு, முகம் துடைத்து, பசியாற உணவு கொடுத்து, மறுபடியும் நீர் கொடுத்து கண்மூடி அமர்ந்திருப்பவரைப் பார்த்து விசிறினார் தருமர்.

இந்த மரியாதைகளை ஏற்றுக்கொண்ட வியாசர் மெல்ல கண்விழித்து, ‘தருமபுத்திரா, அருகே அமர்ந்து கொள்’ என்று இடம் காட்டினார். தருமபுத்திரர் அவர் காலடியில் அமர்ந்துகொள்ள, மற்ற சகோதரர்களும், திரௌபதியும் உடன் அமர்ந்து கொண்டார்கள். ‘‘மனிதனுக்கு உலகத்தில் துக்கமும், சந்தோஷமும் மாறிமாறி ஏற்படுகின்றன. சுகத்தை அமைதியாக அனுபவித்தலும், துக்கம் பற்றி குறைகூறாமல் இருத்தலும் சத்தியமானவர்களின் வாடிக்கை. பஞ்சணையைப் பற்றிய பெருத்த சந்தோஷமோ, வெறும் தரையில் படுக்கவேண்டிய நிர்பந்தம் பற்றிய புலம்பலோ அவர்களிடம் இருப்பதில்லை. எல்லாம் தெய்வ சித்தமாகவே நடைபெறுகிறது. ஒரு உழவன் ஏர் உழுது நெல் விதைக்கிறான். அதனாலேயே பயிர் விளைந்து விடுவதில்லை. காற்றும், மழையும், வெய்யிலும், பூச்சிகள் வராவண்ணம் பறவைகள் காப்பதும், எலிகளின் தொந்தரவு இல்லாது காட்டுப் பூனைகள் நடமாடுவதும் பயிர் வளர உதவி செய்கின்றன. அந்த தானியம் உழவன் விதைத்தாலும் ஒரு தெய்வத்தின் அனுக்கிரகம் போலத்தான் அவனுக்கு கிடைக்கிறது. நான் உழுது பயிரிட்டது என்று அந்த உழவன் நினைப்பதில்லை. இது கடவுள் கொடுத்தது, அவருக்கு இவ்வளவு பங்கு என்று நல்ல உழவன் நினைக்கிறான்.

‘‘இதை ஆழ்ந்து யோசித்துப் பார்க்க வேண்டும். தன் முதுகை தானே தட்டிக்கொண்டு திரிவதில் புத்திசாலித்தனம் இல்லை. நெல் அவன் விதைக்காவிட்டால் முளைத்திருக்குமா என்பது தவறான தர்க்கம். ஒரு நியதியை பின்பற்றித்தான் ஆகவேண்டும். விளைவது என்பது கடவுள் அருள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது மிகமிக சூட்சுமமான விஷயம். முட்டாள்களுக்கு இது புரியாது. உலகத்தில் இதுபோன்ற பல்வேறு சுக துக்க விஷயங்களை புரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் செய்வது எளிதானது. எல்லா மனிதரும் தவம் செய்ய வேண்டும். ஆன்மிகம் இன்னாருக்கு மட்டுமே உரித்தானது அல்ல. ‘‘மகாராஜா தருமபுத்திரனே, சத்தியம், எளிமை, கோபமின்மை, தேவ அதிதிகளுக்கு அளித்து பிறகு அன்னம் ஏற்றல், புலனடக்கம், மனஅடக்கம், மற்றவர்களிடம் குறைபாராமை, இம்சை ெசய்யாமல் இருத்தல், உள்ளத்தை புனிதமாக வைத்தல், புலன்கள் அனைத்தையும் வசப்படுத்துதல் இந்த நல்ல குணங்கள் தவம் செய்ய உதவி செய்யும்.

அதர்மத்தில் ருசி உள்ளவர்கள் மூடர்கள். அவர்கள் பசி, பட்சி யோனியில் பிறக்கிறார்கள். மனிதனைக் காட்டிலும் கஷ்டம் அளிக்கின்ற வாழ்க்கையை வாழ்கிறார்கள். என்னைவிட சுதந்திரமாய் பறவை இருக்கிறதே என்பவன் பறவையை பார்த்திராதவன். என்னைவிட இந்த நாய் நன்றாக வாழ்கிறதே என்று நினைப்பவன் அந்த மிருகத்தோடு கவனம் இல்லாதவன். உலகத்தில் செய்யும் கர்மத்தின் பலன் பரலோகத்திலும் எதிரொலிக்கிறது. அதனால் உடலை தவத்தில், நியமங்களை கடைபிடிப்பதில் ஈடுபடுத்த வேண்டும்.  ‘‘ஒரு விருந்தாளி வந்தால் கோபம் இல்லாமல் அவரை வரவேற்று உங்களிடம் இருக்கின்ற உணவை அவருக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும்.

அவர் உண்டபிறகே உண்ண வேண்டும். கோபிக்காதவனும், மற்றவரிடம் தோஷம் பாராதவனும் எளிதாக சொர்க்கத்தை அடைகிறான். கோபத்தை அடைத்து வைப்பவன் ஒருபொழுதும் துயரத்தை எதிர்கொள்வதில் தவறுவதில்லை. மனதை தன் வசப்படுத்தியவன் மற்றவர் செல்வத்தைப் பற்றி தாபப்படுவதேயில்லை. புலன்களை வென்ற மனிதன் ஒருபொழுதும் தீய பழக்கங்களில் சிக்குவதேயில்லை. தீய பழக்கங்களில் சிக்காதவனுக்கு இகலோகத்திலும், பரலோகத்திலும் மிகுந்த சுகம் கிடைக்கிறது. சுகம் என்பது அமைதியாக இருத்தல்.’’

‘‘தருமம், தானம் என்று இரண்டு விஷயங்களை சொல்கிறீர்கள். தருமத்துடன் வாழ்வது முக்கியமா, தானம் செய்வது முக்கியமா, இரண்டில் கடினமானது எது?’’ என்று யுதிஷ்டிரர் மிக மெல்லிய குரலில் வியாசரை நோக்கிக் கேட்டார். ‘‘மிகச் சிறந்த கேள்வி. அறிவிற்கேற்றபடி இதை புரிந்து கொண்டு பேசுகிறாய். விஷயங்களையும் மனதில் ஸ்வீகரித்து ஆவலுடன்கேட்கிறாய்.

சம்பாதித்தல் உலகத்தில் தர்மம் என்று சொல்லப்படுகிறது. அது எளிதல்ல. பசுக்களை மேய்த்தும், கடும் வெயிலில் நிலத்தை உழுது பண்படுத்தி, விதைத்து காத்திருந்தும், களிமண்ணில் செங்கல் செய்து வீடுகட்டி, கூரைவேய்ந்து அதில் சம்பாதித்தும், உயிரை துச்சமென மதித்து கடலுக்குள் மூழ்கி முத்துகளை கொண்டுவந்து கொடுத்தும், பெரும் மலை, பாலைவனங்களில் அலைந்தும், தங்கத்தை வெட்ட பூமியில் சுரங்கம் தோண்டியும் மனிதர்கள் பெரும் தவிப்பு தவிக்கிறார்கள். போராடுகிறார்கள். அப்படி போராடி சம்பாதித்த செல்வத்தை தானமாகத் தருவது என்பது எளிதான விஷயமே அல்ல. தானத்தைவிட கடினமான காரியம் இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. கடமையினால் தானம் செய்பவனை அந்த தானம் பெரும் பயத்திலிருந்து காப்பாற்றுவதில்லை. அவனை உலகம் கனிவாகப் பார்ப்பதில்லை.

முன்னே சிரித்தும் பின்னே பழித்தும் பேசுகிறார்கள். ‘‘முத்கலரிஷி என்பவர் ஒரு த்ரோண நெல்லை தானம் செய்து மிகப் பெரிய பயன் பெற்றார். ஒரு த்ரோணம் என்பது பதினாலு சேர். யார் முத்கலர்? அவர் செய்த தானம் என்ன? எப்படி ஒரு த்ரோண தானியம் மிகப்பெரிய செல்வத்தை கொண்டு வந்து கொடுத்தது? முத்கலர், க்ஷீல மற்றும் உஞ்ச என்னும் விரதத்தை கைக்கொண்டு அதன் மூலம் வாழ்பவர். க்ஷீல என்றால் அறுவடையான களத்தில் சிதறிய தானியங்களை எடுப்பது.

உஞ்சல என்றால் கடைக்குப்போகும் சமயத்தில் விழுகின்ற தானியங்களை, வைக்கோலிலிருந்து பிரித்து எடுக்கும்போது சிதறும் தானியங்களைப் பொறுக்கி எடுப்பது. யாரிடமும் யாசகம் கேட்காமல் மற்றவர் கீழே போட்ட தானியங்களை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு தான் உண்டு பெருமளவு சேர்த்து வைத்துவிடுவார்.

நல்ல போஜனம் என்பது அவருக்கு பதினைந்து நாளைக்கு ஒருமுறைதான் கிடைத்தது. கைப்பிடி அரிசியை தினந்தோறும் உண்டுவிட்டு மற்றவற்றை சேர்த்துவைத்து அந்த அரிசியை பொங்கி மற்ற வெஞ்சனங்கள் வைத்து உண்ணுகின்ற வாய்ப்பு அவருக்கு பதினைந்து நாள்களுக்கு ஒருமுறைதான் கிடைத்தது. அவருடையமனைவியும், மகனும் இதற்கு ஒத்துழைத்தார்கள். இவர் நோக்கத்தை புரிந்து கொண்டார்கள். இவ்விதம் வாழ்வது உன்னதம் என்பதை அறிந்து அவரை பின்தொடர்ந்தார்கள். ‘‘பதினைந்து நாளைக்கு ஒருமுறை பொங்கிய உணவை உண்பதற்கு முன்பு அதிதிகள் யாரேனும் வந்தால் அவர்களுக்கு கொடுப்பது என்பது அவர்களுடைய வழக்கமாக இருந்தது.

ஒரு பானை சோறு பொங்கியதும் அதை வந்த அதிதிகளுக்கு பரிமாறுவார்கள். அவருடைய தான மகிமையை கேட்டு ஐந்து, பத்து, இருபது, நாற்பது என்று ஒவ்வொரு பதினைந்தாவது நாளிலும் அதிகம்பேர் வரத்துவங்கினார்கள். ஆனால் ஒரு பானையிலிருந்தே சகலருக்கும் அவருடைய தவ மகிமையால் உணவு கொடுக்கமுடிந்தது. அந்த உணவு மிக ருசியாக இருந்தது. உண்டவர்கள் அவரை வணங்கியும், வாழ்த்தியும் கொண்டாடினார்கள். ‘‘இதைக் கேட்ட துர்வாசர் ஒருமுறை தானும் அங்குபோய் சாப்பிட வேண்டும் என்று தீர்மானம் செய்து உருமாறி, பித்து பிடித்தவர் போல, மூளை பிழன்றவர் போல நடந்துகொண்டு உங்கள் வீட்டில் உணவுக்காக வந்திருக்கிறேன் என்று உரத்த குரலில் சொல்ல, அவரை வரவேற்று அமரச் செய்யும்போது, அங்கு போடப்பட்ட அத்தனை உணவையும் போடு போடு போடு என்று கேட்டு உண்டுவிட்டார். சிறிதுகூட மிச்சம் இல்லாமல் நகர்ந்துவிட்டார்.

முத்கலர் கோபமடையவேயில்லை. மறுபடியும் வரச்சொல்லி கை கூப்பினார். ‘‘அடுத்த பதினைந்து நாள் பொறுத்து மறுபடியும் துர்வாசர் வந்து முத்கலருக்கும் அவர் குடும்பத்துக்கும் உணவு மீதம் வைக்காமல், சகலமும் உண்டு தீர்த்தார். அப்பொழுதும் முத்கலர் ஒன்றும் சொல்லவில்லை. மறுபடியும் வரச்சொல்லி கைகூப்பி வேண்டினார். ஆறுமுறை இவ்விதம் வந்தும் முத்கலரோ, அவர் மனைவியோ, அவர் குழந்தையோ எந்த முகச்சுளிப்பும் காட்டவில்லை.

இப்படிக் கொடுக்க முடிந்ததே என்ற சந்தோஷம்தான் அவரிடம் இருந்தது. துர்வாசர் திகைத்துப் போனார். ‘இதைவிட அற்புதமான தானம் செய்தவனை நான் இந்த உலகத்தில் கண்டதேயில்லை. என் தவ வலிமையால் நீர் உடலோடு சொர்க்கம் போகின்ற யோக்கியதையை உமக்கு அளிக்கின்றேன். போய் வாரும்’ என்று சொல்ல, அந்த க்ஷணமே அழகிய விமானமும், அதில் ஒரு தேவதூதனும் வந்தார்கள். தேவதூதன் விமானத்தில் ஏறச் சொல்லி வேண்டினான்.

முத்கலர் விமானத்தை வியப்போடு பார்த்தார். சுற்றி வந்தார். ‘‘அப்பா, இது என்ன? இது எங்கே போகிறது?’’ என்று கேட்டார். ‘‘இது தேவலோகத்து விமானம். உங்களை தேவலோகத்திற்கு அழைத்துப் போக நான் வந்திருக்கிறேன்’’ என்று அவன் பணிவோடு சொன்னான். ‘‘தேவலோகத்தில் உண்டான நிறை என்ன, குறை என்ன, எனக்கு அதை சொல்லப்பா?’’ என்று முத்கலர் எந்த சந்தோஷமும் இல்லாமல், வெறுப்பும் இல்லாமல் அமைதியாக எதிரொலித்தார். ‘‘இந்த அமைதியைக் கண்டு துர்வாசர் திகைத்தார். ராட்டப்பட்டபோதும், பரிசினை வழங்கியபோதும் மௌனமாக அதற்கு எதிரொலித்தல் என்பது மிக பக்குவப்பட்டவர்களுக்கே வரும். ஆசையை முற்றிலும் கடந்தவராதலால் அவருக்கு இந்த மனோநிலை இருந்தது. ஆசை முற்றிலும் கடக்க தவ வாழ்க்கை அவருக்கு உதவியது.

சஞ்சலமான மனதை தடுப்பது மிகவும் கடினமாகும். மனமும், இந்திரியமும் ஒருமுகப்படுவதே தவம் என்று சொல்லப்படுகிறது. முத்கலர் அந்த விமானத்தைச் சுற்றி வரும்போது அவருக்கு அருகிலேயே இணையாக அந்த தேவதூதனும் நடந்து வந்தான். ‘‘நண்பனே, நான் உன்னிடம் விளையாடவில்லை. சத்புருஷர்கள் ஏழடி ஒன்றாக செல்லும்போதே அவர்களிடையே நட்பு உண்டாகிறது என்பது சான்றோர்களின் வாக்கு. அந்த நட்பை முன்வைத்து உன்னிடம் இந்த வினாவை கேட்கிறேன். எனக்கு சத்தியமானதும், நன்மை தருவதுமான இந்த விடையை தயக்கமின்றி கூறு. உன்னுடைய பேச்சை கேட்டு அதற்குப் பிறகு நான் என்ன செய்வது என்று தீர்மானிக்கிறேன்’’ என்று அமைதியாக பேசினார்.

துர்வாசருக்கு இந்த அமைதி இன்னும் திகைப்பை கொடுத்தது. அந்த பேச்சு வியப்பை ஏற்படுத்தியது. ‘‘சொர்க்கத்திற்கு போகும் வழி உத்தமமானது. புலன டக்கமும், மன அடக்கமும் உள்ளவர்கள் பொறாமையற்றவர், தான தர்ம பாராயணர், போர்க்களத்தில் பிரசித்தமான சூர வீரமனிதர் ஆகிய புண்ணியவான்கள் அந்த லோகத்திற்கு வருகிறார்கள். யாருக்கும் பசி, தாகம் உண்டாவதில்லை. மனதில் துயரம் ஏற்படுவதில்லை. வெப்பம், குளிர்ச்சி என்ற கஷ்டங்கள் அங்கு இல்லை. எந்த பயமும் அங்கில்லை. அங்கு அருவருக்கத்தக்கதோ, அசுபமானதோ எந்த பொருளும் கிடையாது. சொர்க்கத்தில் உள்ள சரீரம் விந்தினால் உருவானதல்ல. அதற்கு ரத்தம், எலும்பு, தசைகள் இல்லை. அந்த சரீரிகள் மல, மூத்ரதாரிகள் இல்லை. அவர்கள் உடம்பிலிருந்து துர்கந்தங்கள் வராது.

அவர்கள் அணிந்திருக்கும் மாலைகள் வாடாது. இடையறாத இன்னிசையைக் கேட்டுக்கொண்டு ஒரு ஏகாந்த சுபாவத்தில் இருப்பது சொர்க்கவாசிகளின் குணம். இவைதான் சொர்க்கத்தின் நல்ல விஷயங்கள். சொர்க்கத்தின் குற்றங்கள் என்று நான் கருதுவது இதைத்தான். இங்கு செய்கின்றகர்மத்தினுடைய பலன்கள் சொர்க்கத்தில் அனுபவிக்கப்படுகின்றன. முப்பத்துமூன்று விதமானசொர்க்கங்கள் இருக்கின்றன. இடைவிடாது தானம் செய்தவருக்கும், இடையறாது நீர் வார்த்தவருக்கும், இடையறாது பிராணிகளிடத்தில் அன்பு செய்தவருக்கும், இடையறாது வைத்தியம் செய்தவர்களுக்கும் என்று பல்வேறு சொர்க்கங்கள் இருக்கின்றன. தானத்திலேயே குறியாய் வாழ்ந்தவர்களுக்கு இம்மாதிரியான இடங்கள் மிகப்பெரிய சுகத்தைத் தருகின்றன.

ஆனால், இந்த கர்மப் பலன்கள் குறைந்துபோக ஒருநாள் சட்டென்று இந்த சொர்க்கத்திலிருந்து நேரே கீழே வரவேண்டியிருக்கிறது. அப்படி வருகையிலும் ஒரு லாபம் இருக்கிறது. அவர்கள் மறுபடியும் சொர்க்கத்திலிருந்து மனித யோனியில் பிறக்கிறார்கள். மனித யோனியில் பிறக்கிறபொழுது மறுபடியும் நல்ல கர்மாக்களை செய்து மீண்டும் சொர்க்கம் வருவதற்குண்டான வாய்ப்பு அவர்களுக்கு தரப்படுகிறது. பலன்கள் மெல்ல மெல்ல கரைந்து போவதுதான் சொர்க்கத்தினுடைய கஷ்டமான விஷயம். அந்த சொர்க்கத்திலிருந்து கீழே விழும்பொழுது ஏற்படுகின்ற பயமும், பரிதவிப்பும் விவரிக்க முடியாதவை.

இதுவே சொர்க்கத்தின் குறை’’ ‘‘இந்த சொர்க்கத்தை காட்டிலும் அற்புதமானதேவ விஷயங்கள் உண்டா?’’ ‘‘உண்டு. வைகுண்டம் என்றும், பரமபதம் என்றும் ெசால்லுகின்ற விஷ்ணுவினுடைய கட்டளைக்கு உட்பட்ட அந்த இடத்தில் ஞானவான்கள் மட்டுமே உள்ளே நுழைய முடியும் கர்மாக்களைப் பற்றி சிந்திக்காதவர்களே அந்த இடம் போகமுடியும். நல்லது செய்தல், கெட்டது செய்யாது இருத்தல் என்ற இரண்டு பிரிவுகளையும் உணராது வேறு ஒரு மனோ லயத்தில் வாழ்கிறவர்கள்தான் இந்த இடத்திற்கு வரமுடியும். ஞானத்தின் உச்சியில் இருப்பவர்கள் இங்குவந்து அவரிடம் ஐக்கியமாகிவிடுகிறார்கள். அவர்களுக்கு மறுபடியும் பிறப்பென்பது இல்லை. அது விஷ்ணுவின் இடம்’’ என்று சொல்லி நிறுத்தினார்.

‘‘தேவமைந்தனே, நீ போய் வா. எனக்கு அந்த சொர்க்கத்தில் எந்த ஈடுபாடும் இல்லை. இந்த பூமி எனக்கு சொர்க்கம் போலவே இருக்கிறது. நீ சொன்ன எல்லா விஷயங்களும் இங்கும் நடைபெறுகின்றன. எவனுக்கு ஆசையில்லையோ, எவனுக்கு கோபமில்லையோ, எவனுக்கு அடுத்தவனைப் பற்றி பொறாமையில்லையோ, எவனுக்கு தனக்கு இன்னது வேண்டும் என்ற நோக்கம் இல்லையோ, அவன் நீ சொன்னதுபோல அமைதியாகத்தான் பூமியிலும் வாழ்கிறான். அந்த வாழ்க்கைதான் என்னுடையது. விஷ்ணுவின் பதத்திற்குப் போவதற்கு என் ஞானம் எனக்கு தகுந்த நேரத்தில் உதவி செய்யட்டும்.

இப்போதைக்கு நீ உன் வாகனத்தை எடுத்துக் கொண்டு போய்வா’’ என்று அவனுக்கு விடை கொடுத்தார். ‘‘துர்வாசர் திகைத்தார். இது ஒரு ஞானியினுடைய செய்கை. தருமபுத்திரா, எப்பேர்பட்ட மனிதர்களெல்லாம் இந்த பூமியில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை புரிந்துெகாள். எதற்கு இப்படி வாழ வேண்டும், எதற்கு இப்படி வருத்திக் கொள்ளவேண்டும் என்றெல்லாம் கேட்பவர்கள் இம்மை, மறுமை பற்றிய ஞானம் இல்லாதவர்கள். தான் இருக்கிற நிமிடமே மிக உயர்ந்தது, அதுவே தொடர்ந்து வருவது என்று நினைத்துக்கொண்டிருக்கும் மூடர்கள். ஏதாவது ஒருநாள் அது முடிவுக்கு வரும். வேறொரு இடத்திற்கு அந்த ஆத்மா போய்த்தான் தீரவேண்டும். வேறொரு சரீரம் எடுக்கத்தான் வேண்டும். இதை மறுப்பதால் இல்லாது போய்விடாது. இதை இல்லை என்று சொல்வது அறியாமையில்தான்.

‘‘தர்மம் செய்வது மட்டும் பிரமாதமான விஷயம் அல்ல. தர்மம் செய்வது பற்றிய அக்கறையும், சிந்தனையும் இல்லாது தன்னுடைய வாழ்வினுடைய விளைவே அப்படித்தான் என்று இருப்பதுதான் வெகு உயர்ந்த விஷயம். அப்படியும் மனிதர்கள் இருந்திருக்கிறார்கள் என்கிறபோது, நீ இப்பொழுது படுகின்ற துயரமும், இழந்ததும், பெற்றதும் எதுவும் இல்லை என்பதை அறிவாய்’’ என்று சொல்லி நிறுத்தினார். ‘‘உழவன் நிலத்தை உழுதான். விதை நட்டான். பயிர்கள் வளர்ந்து தானியங்களை ஏகமாய் விளைவித்தன.

அது தெய்வத்தின் செயல். அதேபோல நீ செய்த காரியங்கள், உன்னுடைய கர்மாக்கள் உன்னுடைய அரசை உனக்கு கொண்டு வந்து தரும். எந்த கவலையும் அற்று அமைதியாக இரு’’ என்று சொல்லி விடைபெற்றுப் போனார். வியாசர் சொன்னதை ஒட்டுமொத்தமாக யோசிக்கும்போது தருமபுத்திரருக்கு நல்லபடியான சத்விஷயங்களைப் பின்பற்றி வாழ்வது மட்டுமல்லாது, அப்படி வாழவும், அதன் பலன்களை பெறவும் தெய்வத்தின் அனுக்கிரஹம் தேவைப்படுகிறது, எனவே நல்லவனாக இருப்பது மட்டும் அல்லாது தெய்வத்தை அண்டியும் மனிதன் இருக்கவேண்டிய அவசியத்தை புரிந்து கொண்டார். அதை நிரூபிப்பதுபோல ஒரு சம்பவம் ஏற்பட்டது.

துர்வாச முனிவர் தன் பத்தாயிரம் சீடர்களோடு துரியோதனன் சபைக்கு வந்தார். துரியோதனன் பயந்து அவரை மிக மரியாதையாக வரவேற்றான். துர்வாசர் கோபமானவர். சிறிய பிசகு கண்டால்கூட கடுமையாக கண்டிப்பார், சாபமிட்டுவிடுவார். அவர் வாக்கு வன்மையானது. அவர் சொற்கள் கூர்மையானவை. உடனடியாக பலிதம் தருபவை. எனவே துர்வாசரைக் கண்டால் மற்ற முனிவர்கள்கூட அமைதியாக இருப்பது வழக்கம். ஆனால், துரியோதனன் தன் புலன்களை அடக்கி துர்வாசரை மிக மரியாதையாக வரவேற்று விருந்துக்கு அழைத்தான். அங்கு பல நாட்கள் தங்கியிருந்த துர்வாசர் அவனை பல்வேறுவிதமாக அலைக்கழித்தார்.

விருந்துக்கு ஏற்பாடு செய் என்று சொல்லிவிட்டு வராது போய்விடுவார் நடுஇரவில் எழுப்பி உடனடியாக உணவிற்கு ஏற்பாடு செய் என்று ெசால்வார். இன்னவிதமான விருந்து ேவண்டும் என்று ஆணையிடுவார். இலையில் உட்கார்ந்த பிறகு எதற்கு இது வேண்டாம் என்று எழுந்து போய் விடுவார். அவர் என்ன செய்தாலும் பொறுத்துக்கொண்டு துரியோதனன் அமைதியாய் அவருக்கு கைங்கர்யம் செய்துவந்தான். அதனால் அவர் மிகவும் மகிழ்ந்தார். ‘‘ஒரு மன்னனுடைய அடக்கம் எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. உனக்கு என்ன வேண்டும் கேள், நான் தருகிறேன்’’ என்று துரியோதனனிடம் அன்பு பொழிந்தார்.

துரியோதனன் கபட புத்திக்காரன். ‘‘என்னை வந்து நீங்கள் ஆதரித்ததுபோல, என்னுடன் தங்கி நான் கொடுத்த விருந்தை உண்டு சந்தோஷமாகி என்னையும், என் குடும்பத்தையும் ஆசிர்வதித்தது போல, இப்பொழுது வனத்தில் சஞ்சரிக்கின்ற என் தமையனாரின் இடத்திற்கும் போய் அங்கும் விருந்துண்டு, அவரை ஆசிர்வதிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டான். துர்வாசருக்கு அந்த கபடம் தெரியவில்லை. ‘‘அதனால் என்ன, செய்தால் போயிற்று. உன் தமையனையும் ஆசிர்வதிக்கிறேன்’’ என்று சொல்லி காம்யவனத்திற்கு நேரே வந்தார்.

துர்வாசர் வருகிறார் என்ற செய்தியைக் கேட்டு தருமபுத்திரர் கவலையானார். கையில் அக்ஷயப் பாத்திரம் இருக்கிறதே என்று சொல்ல, திரௌபதி இல்லை என்று மறுத்தாள். ‘அதிலிருந்து நான் உணவு உண்டுவிட்டேன். உணவை நான் உண்டுவிட்டால் அந்த பாத்திரம் அன்றைக்கு மறுபடியும் வேலைசெய்யாது. எனவே, இப்பொழுது உச்சிப்பொழுதில் வந்திருக்கின்ற துர்வாசருக்கு நம்மால் உணவளிக்க முடியாது’ என்றாள். ஆனால், துர்வாசர் குளித்துவிட்டு விரைவில் வருவதாகச் சொல்லி, தன்னுடைய பத்தாயிரம் சீடர்களோடு நதிக்கரைக்குப் போனார். ஆழ்ந்து குளித்து, அர்க்யம் இட்டு ஜபதபங்களில் அவர்கள் ஈடுபடலானார்கள்.
(தொடரும்)

ஒரு விருந்தாளி வந்தால் கோபம் இல்லாமல் அவரை வரவேற்று உங்களிடம் இருக்கின்ற உணவை அவருக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும். அவர் உண்டபிறகே உண்ண வேண்டும். கோபிக்காதவனும், மற்றவரிடம் தோஷம் பாராதவனும் எளிதாக சொர்க்கத்தை அடைகிறான். கோபத்தை அடைத்து வைப்பவன் ஒருபொழுதும் துயரத்தை எதிர்கொள்வதில் தவறுவதில்லை. மனதை தன் வசப்படுத்தியவன் மற்றவர் செல்வத்தைப் பற்றி தாபப்படுவதேயில்லை. புலன்களை வென்ற மனிதன் ஒருபொழுதும் தீய பழக்கங்களில் சிக்குவதேயில்லை. தீய பழக்கங்களில் சிக்காதவனுக்கு இகலோகத்திலும், பரலோகத்திலும் மிகுந்த சுகம் கிடைக்கிறது. சுகம் என்பது அமைதியாக இருத்தல்.

- பாலகுமாரன்