ஆடி மாதத்தில் சுபநிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டுமா?



தெளிவு பெறு ஓம்

- சுந்தரபெருமாள், வில்லிவாக்கம்.

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்யக்கூடாது என்ற தவறான கருத்து நிலவுகிறது. ஆடி மாதத்தில் குலதெய்வத்தின் கோயிலுக்குக் குடும்பத்துடன் செல்லும் பழக்கம் உடையவர்கள் அந்த மாதத்தில் சுபநிகழ்ச்சியைத் தவிர்த்தனர். திருமணம் முடிந்த கையோடு தம்பதியரை பிரிக்க வேண்டியிருக்குமே என்பதால் திருமணத்தையும் தவிர்த்தனர். அதேநேரத்தில் க்ருஹப்ரவேசம், வேறு வீடு குடி போதல், புதிய வீடு, நிலம் வாங்குதல், திருமண நிச்சயதார்த்தம், வளைகாப்பு சீமந்தம் செய்தல் முதலானவற்றை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆடியில் வாஸ்து புருஷனே நித்திரை விடுவதால் தாராளமாக வீடுகுடி போகலாம். ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களில் மட்டுமே வீடு குடிபோவதைத் தவிர்க்க வேண்டும் என்றுரைக்கிறது ஜோதிட சாஸ்திரம். ஆடி மாதத்தில் தாராளமாகசுபநிகழ்ச்சிகளை மேற்கொள்ளலாம்.

பிரம்ம முகூர்த்தம் பற்றி விளக்கமாகச்சொல்லுங்கள்?
- எஸ். குமாரசுப்ரமணியம், பண்ருட்டி.
விடியலுக்கு முன்பான அதிகாலை நேரத்தை பிரம்ம முகூர்த்தம் என்று நாம் சொல்கிறோம். சூரியஉதயத்திற்கு முன் வருகின்ற மூன்றே முக்கால் நாழிகை அதாவது, அதிகாலை நான்கரை மணி முதல் ஆறு மணிவரையிலான ஒன்றரை மணி நேரமே பிரம்ம முகூர்த்தம், இந்த நேரத்தில்சுபநிகழ்ச்சிகளை நடத்துவதில் எந்த தோஷமும் அண்டாது, என்று செவிவழியாக ஒரு தகவல் பரப்பப்பட்டுள்ளது. பிரம்மா தன் படைப்புத்தொழிலைச் செய்யும் நேரமிது என்பதால் இந்த நேரத்தில் எந்தக் குற்றமும் காண இயலாது, அதனாலேயே இது பிரம்ம முகூர்த்தம் என்று பெயர் பெற்றது என்று சொல்வோரும் உண்டு. ஆனால், இந்த செய்திகளுக்கு ஜோதிட அறிவியலில் எந்த ஆதாரமும் கிடையாது. வாழ்வில் தாங்கள் கண்ட அனுபவத்தை வைத்து நம் முன்னோர்கள் அவ்வாறு சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம்.

அதிகாலையில் ஊரில் இருக்கும் மாடுகள் அனைத்தும் மேய்ச்சலுக்குச் செல்லும். அவ்வாறு மேய்ச்சலுக்காக நூற்றுக்கணக்கான மாடுகள் செல்லும்போது அவற்றின் கால் குளம்பு பட்டு ஊரெங்கும் புழுதி பறக்கும். இந்த நேரத்தை ‘கோதூளி லக்னம்’ என்று ஜோதிடர்கள் குறிப்பிடுவார்கள். ஊரெங்கும் புழுதி மண்டலமாகக் காட்சியளிக்கும்போது நவகிரஹங்களின் கதிர்வீச்சு அந்தப் பகுதியைத் தாக்காது. நாம் தெய்வமாக வணங்கும் பசுவின் கால் பட்ட தூசியில் இருந்து வெளிப்படும் புழுதி தீயக்கோள்களின் கதிர்வீச்சிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.

எனவே இந்த கோதூளி லக்னத்தின்போது, அதாவது, பசுமாடு மேய்ச்சலுக்கு செல்லும் நேரத்தில் செய்யும் சுபநிகழ்ச்சிகளில் எந்தக் குறையும் உண்டாகாது என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாக இருந்தது. நூற்றுக்கணக்கான பசுமாடுகள் மேய்ச்சலுக்குச் செல்வதெல்லாம் தற்காலத்தில் கிராமப்புறத்தில் கூட சாத்தியமில்லாதபோது, கோதூளி லக்னத்தைக் கணக்கிட முடிவதில்லை. ஆக, தற்போது பிரம்ம முகூர்த்தம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் அதிகாலைப் பொழுதுகூட குறையுள்ளதாக அமைய வாய்ப்பு உள்ளது. சுபநிகழ்ச்சிகளுக்கான நேரத்தைக் கணக்கிடும்போது பிரம்ம முகூர்த்தம் சிறப்பான பலனைத் தரும் என்று பொதுவாக கணக்கில் கொள்ளாமல், கிரஹங்களின் சஞ்சாரத்தைக் கொண்டு லக்னத்தைக் கணக்கிட்டு சுபநிகழ்ச்சிகளைத் துவக்குவதே சாலச்சிறந்தது.


இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை பிரித்து வைப்பார்கள்? படித்தவர்கள் மத்தியிலும் பரவியிருக்கும் இந்தப் பழக்கத்தினை மாற்ற முடியாதா?
- சுந்தரராமன், சோழிங்கநல்லூர்.

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை பிரித்து வைக்கும் பழக்கத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு பிரித்து வைப்பதன் காரணத்தை தெளிவாகத் தெரிந்துகொண்டால் இந்த சந்தேகம் எழாது. ஆடி மாதம் என்றவுடன் புதுமணத் தம்பதியரை பிரித்து வைக்க வேண்டும் என்பதே நம் மனதில் தோன்றுகிறது. ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும், அச்சமயம் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதனால் பிறக்கும் பிள்ளைக்கும், பிரசவித்த தாய்க்கும் உடல் நலம் கெடும், அதனால்தான் புதுமணத் தம்பதியர் பிரித்து வைக்கப்படுகிறார்கள் என்று சொல்வோரும் உண்டு. இன்னும் ஒரு சிலர் சித்திரையில் பிள்ளை பிறந்தால் தகப்பனுக்கு ஆகாது என்று மூட நம்பிக்கையையும் பரப்பி வைத்திருக்கிறார்கள்.

ஏன் திருமணமான முதல் வருட ஆடியில் மட்டும்தான் கருத்தரிக்க வேண்டுமா என்ன? இரண்டாவது வருட ஆடியில் கருத்தரிக்க வாய்ப்பில்லையா? அல்லது இரண்டாவது குழந்தைதான் ஆடியில் கருத்தரிக்காதா? அப்படியென்றால் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் மனைவியை பிறந்த வீட்டிற்கு அனுப்ப வேண்டுமா? மணமக்களை இணைத்து வைக்கத்தான் சீர் செய்வார்கள்; பெண்ணை மட்டும் தனியாக தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு பிறந்த வீட்டார் சீர் வேறு வைக்க வேண்டுமா, இது என்ன முரண்பாடு, என்பது போன்ற கேள்விகளும் நம் மனதில் எழாமல் இல்லை.

ஆடி மாதத்தின் சிறப்புகளை ஜோதிடவியல் ரீதியாகக் காண்போம். கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் என்பதால் இதற்கு கடக மாதம் என்று பெயர். அதாவது, தகப்பனைக் குறிக்கும் சூரியன், தாயாரைக் குறிக்கும் சந்திரனின் சொந்த வீடான கடகத்தில் இணையும் மாதம் இது. சூரியனின் பிரத்யதிதேவதை, பசுபதி எனப்படும் ஈஸ்வரன். சந்திரனின் பிரத்யதிதேவதை, கௌரி எனப்படும் அம்பிகை. இறைவன் அம்பிகையின் இல்லத்தை நாடிச் செல்லும் காலம். ஆன்மிக ரீதியாக நோக்கினால் தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற சக்தியோடு சிவம் இணையும் காலமிது என்பதால் பெண் என்கிற சக்தி ஆடி மாதத்தில் மிகவும் மகத்துவம் பெறுகிறாள்.

புராணங்களில் ஆடி மாதம் என்பது பார்வதிதேவி தவமிருந்து இறைவனோடு இணைந்த காலமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆடித்தபசு என்ற பெயரில் புகழ்பெற்ற சிவாலயங்களில் இத்திருவிழா நடக்கக் காண்கிறோம். இவ்வாறு ஆடி மாதத்தில்தான் அம்பிகை தவமிருந்து இறைவனோடு இணைந்தாள் என்பதை முதலில் நம் நினைவில் நிறுத்திக் கொள்வோம். ஏதேனும் அற்ப விஷயத்திற்காக தம்பதியருக்குள் பிரிவினை உண்டானாலும் மனைவி, கணவனையே தெய்வமாக பாவிக்க வேண்டும், கணவனும் மனைவியின் மனநிலையைப் புரிந்துகொண்டு, கருத்து வேறுபாட்டினை மறந்து தன் இல்லாளை நாடிச் செல்லவேண்டும் என்பதே புராணங்கள் நமக்குச் சொல்லும் கருத்து.

புதிதாகத் திருமணமாகிச் சென்ற பெண்ணை அம்பிகைக்கு உகந்த இந்த ஆடி மாதத்தில் தம் இல்லத்திற்கு அழைத்து வந்து பெண்ணின் தாய், அவளுக்கு விரதங்களையும், பூஜைமுறைகளையும் சொல்லித் தரவேண்டும். மணப்பெண், இந்த ஒரு மாதம் முழுவதும் தாய்வீட்டில் தங்கி சாஸ்திர சம்பிரதாயங்களைக்கற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே ஆடி மாதத்தில் புதுமணப் பெண்ணை பிறந்த வீட்டிற்கு சீர்வைத்து அழைத்துச் சென்றனர். திருமணத்திற்கு முன்னரே இவற்றையெல்லாம் சொல்லித் தந்தால் விளையாட்டுப்பருவத்தில் இருக்கும் பெண்கள் அதனை ஏற்றுக் கொள்வார்களா?

திருமணம் முடிந்து இல்லதரசியான பின்னர்தானே பொறுப்பு வரும்! இறைவனே அம்பிகையை நாடிச்சென்று இணையும் இந்த ஆடி மாதத்தில் தம்பதியரை பிரித்து வைப்பதுஎன்பது அவர்கள் ஒன்று சேரக்கூடாது என்பதற்காக அல்ல; காலமெல்லாம் இணைபிரியாமல் வாழும் கலையைக் கற்றுத்தருவதற்காக. கணவனின் நலனே தன் நலன் என மனைவியும், மனைவியின் துணையே தன் பலம் எனக் கணவனும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக. இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை பிரித்து வைப்பது மூடநம்பிக்கை என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். நமது இந்து மத சம்பிரதாயங்கள் அனைத்திற்கும் அர்த்தமுண்டு என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த சான்று என்றால் அதுமிகையில்லை.

தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும்போது இவற்றைத்தான் காண வேண்டும் என்ற வரைமுறை உள்ளதா?
- த. சந்திரமோகன், சேலம்.

தாமரை புஷ்பம், பொன், தீபம், கண்ணாடி, சூரியன், தணல், சந்தனம், கடல், வயல், சிவலிங்கம், கோபுரம், மேகம் சூழ்ந்த மலை, கன்றுடன்கூடிய பசு, தனது வலதுகை, மனைவி, மிருதங்கம், கருங்குரங்கு ஆகியவை தூங்கி எழுந்தவுடன் பார்க்கத்தக்கவை என பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதி இரவில் தூங்கி அதிகாலையில் எழுபவர்களுக்கு மட்டும் பொருந்துமே தவிர, மற்ற நேரங்களில் உறங்கி எழும்போது பொருந்தாது!

மற்ற ஏழு கிரஹங்களை விட ராகு-கேது என்ற நிழல் கிரஹங்கள் அதிக பாதிப்பு அளிக்கக் கூடியவையா?
- விஜயா ராமலிங்கம், விழுப்புரம்.

நிச்சயமாக. முதலில் கிரஹங்கள் எவ்வாறு தனி மனிதனின் மீது தன் தாக்கத்தினைஏற்படுத்துகின்றன என்பதைப் புரிந்துகொள்வோம். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய உண்மைக் கோள்களான ஏழு கிரஹங்களுக்கும் தனித்தனியே சிறப்பு குணங்கள் உண்டு. இந்த கிரஹங்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சானது ஒவ்வொரு மனிதனின் ஜாதகத்திற்கு ஏற்ப அவன்மீது தனது தாக்கத்தினை உண்டாக்குகிறது. உதாரணத்திற்கு சந்திர கிரஹத்தை எடுத்துக் கொள்வோம்.

ஜென்மலக்னத்தில் சந்திரன் இருக்கப் பிறந்தவர்கள் சாத்வீகமான அழகையும், அமைதியான குணத்தையும் உடையவர்களாகவும், அன்பானவர்களாகவும் இருப்பார்கள். சந்திரன் மனோகாரகன் என்பதால் மனிதனின் மனதை ஆளும் திறன் சந்திரனுக்கு உண்டு. இந்த சந்திரனோடு ராகுவோ அல்லது கேதுவோ இணையும்போது, அதாவது, சந்திரனின் கதிர்வீச்சானது ராகு அல்லது கேது ஆகிய புகை மண்டலத்தினூடே புகுந்து வெளிவரும்போது நச்சுத்தன்மை கலந்ததாக மாறிவிடுகிறது. நச்சுத்தன்மை கலந்த கதிர்வீச்சு மனிதனின் மீது விழும்போது அதன் உண்மையான பலன் மாறிவிடுகிறது.

சந்திரனோடு ராகு இணையப்பெற்றால் அடிக்கடி உணர்ச்சிவசப்படுபவர்களாகவும், கேது இணையப்பெற்றால் மிகுதியான குழப்பத்தை உடையவர்களாகவும் இருப்பார்கள். (குரு முதலான சுபகிரஹங்கள் இணையப்பெற்றால் இதன் தாக்கம் குறைந்துவிடும்.) ஆக ஒரு கிரஹம் தரும் நேரடியான பலனை இடையில் புகுந்து மாற்றும் திறன் படைத்தவை இந்த இரண்டு நிழற்கோள்கள் என்பதால் மற்ற ஏழு கிரஹங்களை விட இவை இரண்டும் பாதிப்பு அளிக்கக் கூடியவையே என்று அறுதியிட்டுக் கூறலாம். ஆனால், இந்த பாதிப்பு, ஒரு சிலருக்கு நன்மையாகக்கூட முடியும்! இதை நம் அன்றாட வாழ்வில் காண்கிறோம்.

ஒரு வேலையும் செய்யாமல் சும்மா சுற்றிக்கொண்டிருந்த ஒருவன் வாகன விபத்தில் சிக்கி ஒரு காலை இழக்கிறான், இன்ஷ்யூரன்ஸ் நிறுவனம் நஷ்ட ஈடாக பெரும்தொகையை அவனுக்கு அளிக்கிறது, கால் நன்றாக இருந்த நிலையில் வெறுமனே ஊர் சுற்றிக்கொண்டிருந்த ஒருவனுக்கு அவன் வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்க இயலாத தொகையை அந்த விபத்து அவனுக்கு வழங்கிவிடுகிறது. ஆக, இதுபோன்ற பலனை உண்டாக்குவதே இந்த நிழற்கோள்களின் பணி. இடையில் புகுந்து பலனை மாற்றிவிடுவதால் இந்த நிழற்கோள்களை பயம் கலந்த பக்தியுடன்தான் அணுக வேண்டியிருக்கிறது!

வயதுக்கு வந்த பெண்ணுக்கு ருது ஜாதகம்கணிப்பது அவசியமா?
- மல்லிகா அன்பழகன், சென்னை-78.

அவசியமில்லை. ருதுவான நேரத்தினைக் கொண்டு கணிக்கப்படும் ஜாதகத்தை வைத்து ஒரு பெண்ணின் எதிர்காலத்தை அறிந்துகொள்ள இயலாது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பிறந்த ஜாதகத்தினைக் கொண்டே அவர்களது எதிர்கால பலனை அறிய இயலும். திருமணப் பொருத்தம் பார்ப்பதற்கும் பிறந்த ஜாதகம்தான் அவசியமே தவிர, ருது ஜாதகம் அல்ல. மேலும் பெரும்பாலான பெண்களுக்கு ருதுவாகும் நேரத்தினை துல்லியமாக அறிந்துகொள்ள இயலாது. அதனைக் கொண்டு சொல்லப்படும் பலன்களும் எதிர்மறை சிந்தனைகளை உருவாக்குகிறது என்பதால் இக்காலத்தில் ருது ஜாதகத்தினைக் கணிக்க வேண்டிய அவசியமில்லை. பிறந்த ஜாதகத்தினை துல்லியமாக கணித்து வைத்தாலே போதுமானது.

வெள்ளிக்கிழமை மட்டும்தான் பெண்கள் விரதம் மேற்கொள்ள வேண்டுமா?
- மீனாவாசன், சென்னாவரம்.

நிச்சயமாக இல்லை. வெள்ளிக்கிழமை மட்டும்தான் பெண்கள் விரதம் இருக்க வேண்டும் என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லை. பெண்கள் வெள்ளிக்கிழமை அன்றும், ஆண்கள் சனிக்கிழமை நாளிலும்தான் விரதம் இருக்க வேண்டும் என்று சொல்வதும் அபத்தம். விரதம் இருப்பதற்கு ஆண்பால், பெண்பால் பேதம் எதுவும் கிடையாது. கிருத்திகை, சஷ்டி, ஏகாதசி நாட்களில் இருபாலரும் விரதம் இருப்பதுபோல, எந்த நாளிலும், யார்வேண்டுமானாலும் விரதம் இருக்கலாம், தவறில்லை.

திங்கள் என்பது ஒரு கிழமையின் பெயர்தானே, இதனை மாதத்தின் பெயருடன் இணைத்து சித்திரைத் திங்கள், ஜனவரித் திங்கள் என்றெல்லாம் அழைப்பதன் காரணம் என்ன?
 - முத்துமீனா, மேலூர்.

தமிழ்மொழியில் மாதங்களைத் ‘திங்கள்’ என்று அழைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. திங்கள் என்பது கிரஹங்களில் சந்திரனைக் குறிப்பதாகும். ஒவ்வொரு மாதத்திலும் பௌர்ணமி எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ, அந்த நட்சத்திரத்தையே மாதத்தின் பெயராகக் கொண்டனர். உதாரணத்திற்கு சித்திரை மாதத்தில்சித்திரை நட்சத்திரத்திலும், வைசாகம் எனப்படும் வைகாசியில் விசாக நட்சத்திரத்திலும் என 12 மாதங்களும் பௌர்ணமி வருகின்ற நட்சத்திரத்தின் பெயரால் அழைக்கப்படுகின்றன.

இந்த மாதங்கள் பௌர்ணமி சந்திரனோடு தொடர்புடையவை என்பதால் அவற்றை ‘திங்கள்’ என்று தமிழ்ப் பெயராகச் சொல்கிறார்கள். தற்கால நடைமுறையில் ஒருசிலர் ஆங்கில மாதங்களையும்கூட ஜனவரித் திங்கள், பிப்ரவரித் திங்கள் என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள்! சித்திரை, வைகாசி போன்ற தமிழ் மாதங்களை மட்டும்தான் திங்கள் என்று சொல்ல வேண்டுமே தவிர, ஆங்கில மாதங்களையும் இதே நடைமுறையில் சொல்வது முற்றிலும் தவறு.

ராசிகளில் நெருப்பு ராசி, நீர் ராசி என்ற பிரிவினை இருப்பது உண்மைதானா?
- ராஜாராமன், கும்பகோணம்.

உண்மைதான். பன்னிரு ராசிகளில் மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்றையும் ‘நெருப்பு ராசிகள்’ என்றும், ரிஷபம், கன்னி, மகரம் ஆகியவற்றை ‘நில ராசிகள்’ என்றும், மிதுனம், துலாம், கும்பம் ஆகிய இம்மூன்றையும் ‘காற்று ராசிகள்’ என்றும், கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவற்றை ‘நீர் ராசிகள்’ என்றும் ஜோதிடர்கள் அழைக் கிறார்கள். அதற்கேற்றவாறு நெருப்பு ராசிக்காரர்கள் எளிதில் கோபப்படுபவர்களாகவும், நில ராசிக்காரர்கள் பொறுமைசாலிகளாகவும், காற்று ராசிக்காரர்கள் அலைபாயும் மனதினை உடையவர்களாகவும், நீர் ராசிக்காரர்கள் எளிதில் இளகுகின்ற மனதினைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

- திருக்கோவிலூர் K.B ஹரிபிரசாத் சர்மா