மேன்மக்களே, மேன்மக்களே..!



மேன்மக்கள், மேன்மக்கள் என்று சொல்கிறோமே அவர்கள் யார்? சமுதாயத்தில் தான் ஜீவித்திருப்பதற்கான நன்றிக்கடனை செலுத்துகிறார்களே, அவர்கள்தான் மேன்மக்கள். இந்த உலகில் வாழ்வதற்கு வாய்ப்பளித்த கடவுளுக்கு நன்றி சொல்லும் அதேவேளையில் தன் வளர்ச்சிக்காகப் பல்வேறு வகைகளில் உதவிய தான் சார்ந்த சமுதாயத்திற்குத் தன்னாலியன்ற உதவி, சேவைகளைச் செய்கிறார்களே, அவர்கள்தான் மேன்மக்கள்.

அதுதானே நியாயம்? நமக்குப் பசிக்கு உணவு கொடுத்தது, குடிக்க நீர் கொடுத்தது, நாகரிகமாக உலா வருவதற்கு உடை கொடுத்தது, வசிக்க வீடு கொடுத்தது, அறிவு வளர்க்கக் கல்வி கொடுத்தது, தகுதியை மேம்படுத்திக்கொள்ள வேலை/தொழில் கொடுத்தது, வாழ்க்கையை இனிமையாக்க ஒரு துணையைக் கொடுத்தது, குடும்பத்தின் பெருமை விளங்கச் செய்யும் பிள்ளைகளுக்கும் நம்போல் மேலே சொன்ன எல்லா வசதிகளையும் கொடுத்தது, எல்லாவற்றிற்கும் மேலாக மனதில் உறுதியையும், நிம்மதியையும் வளர்க்க, பக்தி செலுத்த ஆலயங்களைக் கொடுத்தது - இந்த சமுதாயம்தானே? இந்த சமுதாயத்திற்கு நாம் என்ன பிரதி உபகாரம் செய்திருக்கிறோம்? வறியவர்களின் பசியைப் போக்கியிருக்கிறோமா, தாகத்துடன் வந்தவருக்கு நீர் கொடுத்திருக்கிறோமா, உடையற்ற ஏழைகளுக்கு ஆடைகள் அளித்திருக்கிறோமா, ஏழைப்பிள்ளைகளுக்குப் புத்தகம் வாங்கிக்கொடுத்திருக்கிறோமா? எல்லாவற்றிற்கும் மேலாக எல்லோரும் நலமாய் வாழ இறைவனிடம் பிரார்த்தனையாவது செய்துகொண்டிருக்கிறோமா?

- இப்படிச் செய்தோமானால் நாமும் ன்மக்களே! இப்படி மேன்மக்களாகத் திகழ என்ன தகுதி வேண்டும்? சிலர் சொல்வார்கள், செய்யமாட்டார்கள். ஆனால் மேன்மக்கள் செய்வார்கள், அதைப் பிறரிடம் சொல்லிக்கொள்ளமாட்டார்கள். தனக்குப் பிறர் உதவியதை சிலர் மறக்கமாட்டார்கள்; ஆனால் மேன்மக்கள்தான் பிறருக்கு உதவியதை நினைக்கமாட்டார்கள். இவைதான் மேன்மக்களின் அடிப்படைத் தகுதிகள். இந்தத் தகுதிகளுக்கு நம்மைத் தயார் செய்துகொள்வோம்.

- பிரபுசங்கர்
(பொறுப்பாசிரியர்)