சக்கராப்பள்ளி



சாதிக்க வைப்பார் சக்கரவாகேஸ்வரர்

பிரம்மனும், திருமாலும் தங்களில் யார் பெரியவர் என்ற சர்ச்சையில் இறங்கினர். பிரச்னைக்குத் தீர்வு காண சிவனை நாடினர். தனது திருமுடி  தரிசனத்தை முதலில் காண்பவரே பெரியவர் ஆவார் என அவர்களுக்குள் போட்டியை அறிவித்தார். அதற்கு உடன்பட்டு சக்கரவாகப் பறவை  உருவில் பிரம்மன் திருமுடியை தரிசிக்க வானில் பறந்தார். திருமாலும் வராக அவதாரம் எடுத்து திருவடியினை தரிசிக்க பூமிக்குள் சென்றார். ஈசனின் திருவடியை தஞ்சமடைந்தால், அவரே தன் திருமுடி தரிசனம் நல்க வழிகாட்டுவார் என்ற நம்பிக்கை திருமாலுக்கு!
 
இறுதியில், திருமுடியை தரிசித்ததாக தாழம்பூவின் பொய் சாட்சியோடு பொய் உரைத்ததால் பிரம்மன் சிவனால் சபிக்கப்பட்டார்.  திருவடிகளைத் தேடிச் சென்ற திருமால் திருவடி தரிசனம் கண்டு அதை தொழும் வேளையில், சிவபெருமான் அவரை நோக்கிக் குனிய,  அப்போது திருமுடியை தரிசித்ததால் சிவபெருமானால் பெரியவர் அவரே என்று அறிவிக்கப்பட்டார். அதோடு ஒரு வரமும் கேட்டுப் பெற்றார் திருமால். சலந்திரன் என்னும் கொடியவனை வதம் செய்ய எண்ணினார் சிவபெருமான். ஆனால், அவனோ நேரடியாக  கயிலாயத்திற்கே போர் புரிய வந்துவிட்டான். அவனது ஆணவத்தை அடக்க முதியவர் வேடம் தரித்து எதிர்கொண்டு தடுத்தார் ஈசன். ‘‘நான் மூன்று லோகங்களில் வாழ்பவர்களையும் வென்று விட்டேன். இப்பொழுது சிவனையும் வென்று இந்த கைலாயத்தையும் கைப்பற்ற  வந்துள்ளேன். நீ எட்டிப் போ’’ என கூறினான் சலந்திரன். உடனே முதியவர், தரையில் தன் கால் விரலால் ஒரு வட்டம் வரைந்து,  ‘‘முடிந்தால் இந்த வட்டத்தைக் கையில் எடு. பிறகு நீ சிவனை வெல்லப் போகலாம்’’ என்றார்.
 
‘‘என்னால் ஆகாததா என்ன?’’ என்று ஏளனமாகக் கேட்டு அந்த வட்டத்தைப் பெயர்த்து எடுத்து தன் தலைமீதே வைத்துக் கொண்டான். உடனே  அந்த வட்டம் ஆயிரம் கூரான ஆரங்கள் படைத்த சக்ராயுதமாகி அவன் உடலைக் கிழித்து வதம் செய்தது. சிவனிடம் இருந்த அந்த  சக்ராயுதத்தையே திருமால் வரமாக் கேட்டார்.இந்த வரமும் திருமாலுக்கு சுலபமாகக் கிட்டிவிடவில்லை. பல்லாண்டுகளாகதினமும் ஆயிரம்  தாமரை மலர்களால் சிவனை அர்ச்சித்து வழிபட்டார். ஒருநாள் 999 தாமரைகளே கிடைக்க, குறைந்த ஒரு மலருக்கு பதிலாக தன்னுடைய  கண்ணையே பறித்து அர்ச்சித்து, சிவனின் அருளுக்குப் பாத்திரமான பிறகுதான் சக்ராயுதம் அவருக்குக் கிடைத்தது. இச்சம்பவம் நிகழ்ந்த  தலமே சக்கராப்பள்ளி.

அருள்மிகு சக்கரவாகேஸ்வரர் என இறைவன் திருப்பெயர் பெற்றார். ‘‘வண் சக்கரம் மால் உறைப்பால் அடிப் போற்றிக் கொடுத்த பள்ளி’’ என  தேவாரம் போற்றிப் புகழ்ந்துள்ளது. சக்கரவாகேஸ்வரர் கோயிலின் வடபுறத்தில் பிரம்ம கோஷ்டத்திற்கு மேலே சக்கரவாகப் பறவையும்  வராகமும் புடைப்புச் சிற்பங்களாக இத்தல புராணத்தைச் சுருக்கமாக விளக்குகின்றன.இத்தலத்து அம்பிகை, தெய்வநாயகி. திருமாலின்  அழுக்கிலிருந்து தோன்றிய மது, கைடபர் என்னும் கொடிய அரக்கர்கள், அசுர பலம் பெற்று தேவலோகத்தைக் கைப்பற்றி தேவர்களை  விரட்டியடித்தனர். தேவர்கள் அஞ்சி ஓடிவந்து தேவநாயகியிடம் தஞ்சமடைந்தார்கள். மது, கைடபரை வதம் செய்ய முடிவெடுத்த தேவநாயகி  உக்கிரரூபமான  பிரத்யங்கரா தேவியாக உருவெடுத்து அந்த அரக்கர்களின் உடலுக்குள் மாயசக்தியாகப் புகுந்தாள். திருமாலுக்கு சரிசமமாகப்  போரிட்ட அவர்கள் தாங்கள் திருமாலைவிட பலசாலி எனக்காட்ட ‘‘என்ன வரம் வேண்டும் கேள். எதற்காக வீணாகப் போராடுகின்றாய்?’’  என்று அவரிடமே கேட்க வைத்தாள் அம்பிகை. ‘‘உங்களைக் கொல்ல வரம் வேண்டும்’’ என்று கேட்டு அவர்கள் சம்ஹாரத்தை திருமால்  சுலபமாக முடிக்க உதவினாள். தேவர்களுக்கு அவர்களது தேவ உலகத்தையும், பதவிகளையும் திரும்பப் பெற உதவியதால் தேவநாயகி  ஆனாள்.

இறைவனால் சபிக்கப் பெற்ற பிரம்மன் சக்கரவாகப் பறவை வடிவிலேயே பூமிக்கும் வரமுடியாமல், பிரம்ம லோகத்திற்கும் திரும்ப  முடியாமல், சதாசர்வ காலமும் சக்கரவாகேஸ்வரரையும் தேவநாயகியையும் வானில் வலம் வந்தபடி வணங்கி தன்னை மன்னித்தருள  வேண்டினார். கணவர் படும் துன்பத்தை தாங்க முடியாத பிராமியும், குங்கிலிய குண்டம் அமைத்து அதில் யாகம் வளர்த்து, தன் கணவருக்கு  சாப விமோசனம் பெற்றுத் தருமாறு தேவநாயகி அம்மனை வழிபட்டு வரம் கேட்டாள்.

சப்த மாதர்களில் ஒருவளும், தங்களது இணை தேவியுமான பிராமியின் வேண்டுதல் நிறைவேற வேண்டி, மாகேஸ்வரி, கௌமாரி,  வைஷ்ணவி, வாராகி, ஐந்த்ரீ, சாமுண்டி ஆகிய அறுவரும், தேவநாயகியை நோக்கிக் கடும் தவம் புரிந்தனர்.பெண்களுக்கு இரங்கும்  பேரருளான ேதவநாயகி, சப்த மாதர்களின் தவப் பயனாக, பிரம்மனுக்கு இறைவனிடமிருந்து சாப விமோசனம் பெற்றுத் தந்ததுடன், சப்த  மாதர்களையும் தனது சக்ரத்தில் பரிவார தேவிகளாக ஏற்றுக் கொண்டாள். எனவே, இத்தலத்தில் பங்குனி மாத சித்திரை நட்சத்திரத்தன்று  சப்தஸ்தான திருவிழா கொண்டாடப்படுகின்றது. இப்பொழுதும் பிரம்மன் மனைவி பிராமி தோற்றுவித்த குங்கிலியகுண்ட யாகம் இத்தலத்தில்  தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. பெண்கள் தங்கள் கணவருக்காக நீண்ட ஆயுள் வேண்டியும், தாலி பலம் பெறவும், எமபயம் நீங்கவும்  இந்த யாகத்தை மேற்கொள்கின்றனர். குபேரன் இத்தலத்து தெய்வத்தின் தெய்வங்களை வழிபட்டு சங்கநிதி, பதுமநிதியைப் பெற்று  குபேரலிங்கம் சென்றடைந்தான்.

சக்கரவாகேஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்மன் தேவநாயகி தெற்கு நோக்கியும் கோயில் கொண்டுள்ளனர். சூரியபகவான் தனது  வழிபாட்டினை பங்குனி மாதம் சங்கடஹர சதுர்த்தி அன்று செய்து வருகின்றார். நவகிரக சந்நதி இத்திருக்கோயிலில் இடம் பெறவில்லை.  பரிவார மற்றும் பிராகார தெய்வங்கள் பேரழகு படைத்தவை. தட்சிணாமூர்த்தியின் எழிற் கோலச் சிற்பம் சிற்பக் கலையின் உச்சமாகும்.  திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாகவும், திருஞானசம்பந்தரால் தேவாரப் பதிகமும் பெற்ற சக்கராப்பள்ளி, காவிரியின் தென்கரைத் தலங்களில்  17வது ஆகும். இத்தலத்து முருகப்பெருமான் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியருளியுள்ளார்.புராண முக்கியத்துவம் கொண்ட இத்தலம்  வரலாற்றிலும் இடம் பெற்றுள்ளது. பெண்களின் கண்கண்ட தெய்வமாகிய தேவநாயகியின் செங்கற்றளியை, கற்றளியாக எழுப்பியவர்  செம்பியன் மாதேவியார் ஆவார். மேலைநாட்டு வரலாற்று அறிஞர்கள் ‘ெசம்பியன் மாதேவி பாணி’ என்றே கருதிய கோயில்களில் இதுவும்  ஒன்று. கி.பி. 972லிருந்து கி.பி. 1001 வரை இக்கோயிலுக்குத் திருப்பணிகள் செய்தார் மாதேவியார். அறுபடை வீடுகளில் ஒன்றான  சுவாமிமலை சுவாமி திருக்கோயிலின் உப கோயில், இந்த சக்கராப்பள்ளி.இக்கோயில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அய்யம்பேட்டைக்கு  ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது.

- இறைவி