மகாபாரதம்



பகவானையே யோசிக்க வைத்த பராக்கிரமசாலி!

ராஜசுய யாகம் பற்றி கிருஷ்ணர் பேசத் தொடங்கியவுடன் அங்கிருப்போர்கள் அனைவரும் மிகவும் ஆர்வமானார்கள். ‘‘இந்த உலகத்தினுடைய  தலைவன் நானே என்று எவனொருவன் தைரியத்தோடு நிற்கிறானோ அவனே அந்த யாகம் செய்ய வல்லவன். அப்படிப்பட்ட நிலையை  அவன் அடைய வேண்டுமென்றால் உலகம் முழுவதும் சுற்றி அங்குள்ள மன்னர்களை அவன் ஜெயித்து அவர்களிடமிருந்து காணிக்கைகள்  பெற்றுவர வேண்டும். அவர்கள் அவனுக்கு அடி தொழுபவர்களாக இருக்க வேண்டும். அந்த கம்பீர தலைவன்தான் ராஜசுய யாகம்  செய்வதற்கு தகுதி உடையவன். அப்படிப்பட்ட மன்னனுக்கு சாம்ராட் என்று பெயர்.

சாம்ராட் ஆக வேண்டுமென்றால் துரியோதனர், பீஷ்மர், துேராணர், அஸ்வத்தாமா, கிருபாச்சாரியார், கர்ணன், சிசுபாலன், ருக்மி, ஏகவல்லன்,  த்ருமன், சுவேதன், சைப்யன், சகுனி ஆகிய வீரர்களை வெல்லாமல் எப்படி ராஜசுய யாகம் செய்ய முடியும்? ஆனால்,  இந்த வீரர்கள்  அத்தனை பேரும் தங்களுடைய கௌரவம் கருதி, உங்கள் மேல் வைத்திருக்கும் அன்பை கருதி உங்களோடு சண்டையிடமாட்டார்கள்.  ஆனால் உங்களை சாம்ராட் என்று ஏற்றுக்கொள்வார்கள். ராஜசுய யாகம் செய்ய ஒத்துழைப்பு தருவார்கள். ஆனால், ஜராசந்தன் என்கிற அரசன்  மட்டும் அவ்விதம் செய்ய மாட்டான். பரதகண்டத்தின் மத்திய பாகத்தை ஆட்சி செய்கின்ற ஜராசந்தன் உயிரோடு இருக்கும்வரையில்  உங்களால் ராஜசுய யாகத்தை செய்து முடிக்க முடியாது. அவன் பரமசிவனை கடும் தவத்தால் சந்தோஷப்படுத்தி பல அஸ்திரங்களை பெற்று உலகின் பல மன்னர்களை ஜெயித்து அவர்களை சிறையில் அடைத்து வைத்திருக்கிறான். நூறு அரசர்களை கொன்று மிகப்பெரிய யாகம்  செய்யப்போகிறான். எண்பத்தாறு அரசர்களை அவன் கைது செய்துவிட்டான்.

இன்னும் பதினாலு அரசர்கள் இருக்கிறார்கள். அந்த பதினாலு அரசர்கள் சேர்ந்ததும் அவன் அந்த யாகத்தை தொடர்வான். உண்மையில்  ஜராசந்தனை எதிர்க்க, எனக்கும், பலராமருக்கும் கூட வலுவில்லை. நாங்கள் ஜராசந்தனுக்கு பயந்துதான் துவாரகாபுரிக்கு போய்விட்டோம்.  ராஜசுய யாகம் நடத்த விரும்பினால் அந்த மன்னர்களை விடுவித்து ஜராசந்தனை கொல்லவும் வேண்டும். ஜராசந்தனை வதைக்க முடியுமா  என்பதைப்பற்றி இந்த சபை யோசனை செய்யட்டும்’’ என்று  கிருஷ்ணர் சொன்னார்.

கிருஷ்ணருடைய இந்தப் பேச்சு தருமருக்கு கலவரத்தை கொடுத்தது. ‘‘பிரம்மலோகத்தை அடைவதற்கு ஒரு உபாயமாக ராஜசுய யாகத்தை  சொல்கிறீர்கள். நான் இதை நம்பவில்லை. மனம், புலன்களின் அடக்கத்தையே எல்லாவற்றுக்கும் உத்தமமானதாக நான் கருதுகிறேன்.  அதனாலேயே ஒரு மனிதனுக்கு நன்மை உண்டாகும். ராஜசுய யாகம் துவங்கி முழுமைஅடைந்தாலும் பிரம்ம லோகத்தை அடைய முடியாது.  நீங்களே ஜராசந்தனைப்பற்றி பயப்படுகிறபோது நான் என்ன செய்ய முடியும்? நான் உங்களையே நம்பிக் கொண்டிருக்கிறேன். அவன்  உங்களைவிட பலசாலி என்றால் நான் அல்லது பீமன் அல்லது அர்ஜுனனால் அவன் கொல்லப்பட முடியுமா? நீங்களே முடிவற்ற சக்தி என்று  நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் இப்படிப் பேசும்போது என் மனம் கவலையடைகிறதே’’ என்று சொன்னார்.

தருமபுத்திரர் கவலையடைந்ததும் பீமன் தன் இருக்கையிலிருந்து எழுந்தான். சபைக்கு நடுவே வந்தான். ‘‘எந்த முயற்சியும் செய்யாமல்  இப்படி ஆரம்பத்திலேயே கவலைப்படுவது எந்த விதத்தில் நியாயம்? நல்ல உபாயத்தாலும், கடுமையான உழைப்பாலும், நீதியாலும்  போரிடுகிறவன் நிச்சயம் வெற்றி பெறுவான். கிருஷ்ணரிடம் நீதி இருக்கிறது. என்னிடம் பலம் இருக்கிறது. அர்ஜுனனிடம் வெல்லும் சக்தி  இருக்கிறது. நாங்கள் மூன்று பேரும் அக்னிகளாக ஒரு யாகத்தை வெற்றி பெறச் செய்வதுபோல ஜராசந்தனை ஜெயித்து விடுவோம். வெற்றி  பாண்டவர்களுக்குத்தான் என்பது இப்பொழுது தீர்மானமாகியிருக்கிறது.

‘‘சாம்ராட் ஆவதுதான் முக்கியமான விஷயம் என்கிறபோது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சாம்ராட் ஆகிறார்கள். கார்த்த  வீர்யார்ஜுனனும், பகீரதனும் தங்கள் தவவலிமையால் சாம்ராட் ஆனார்கள். மாந்தாதா வெல்லத் தக்கவர்களை வென்று சாம்ராட் ஆனார்.  மருத் மன்னர் தன்னுடைய செழுமையின் பிரபாவத்தால் சாம்ராட் ஆகியிருந்தார். ஆனால், நீங்கள் சாம்ராட் ஆவதற்கு இடைஞ்சலாக  ஜராசந்தன் இருக்கிறான். அவனை வெற்றி பெற்றே ஆகவேண்டும்.

நீங்கள் சாம்ராட் ஆவது ஒரு பக்கம் இருக்கட்டும். ஜராசந்தன் என்கிற ஒரு முரடன் பல மன்னர்களைக் கொன்று பல ஜனங்களை துன்புறுத்தி  அவன் தன்னை மிகப்பெரிய மன்னனாக நினைத்துக் கொண்டிருக்கிறபொழுது அந்த அகங்காரத்தை, கொழுப்பை அடக்க வேண்டாமா?  அவனை தட்டிக்கேட்க வேண்டாமா? அந்த அநியாயத்தை உதறி எடுக்க வேண்டாமா? அப்படியே ஒரு வீரன் போரில் ஈடுபட்டு ஜெயிக்க  முடியாமல் போனாலும் அவனும் உன்னதமான பதவியைத்தான் அடைகிறான். ஜராசந்தனை வெல்பவன் நிச்சயமாய் சாம்ராட் ஆவான்.  எனவே, எந்த தயக்கமும் இன்றி ராஜசுய யாகம் செய்யத் தயாராகுங்கள்.  ஜராசந்தனை வெல்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள். இரண்டு தம்பிகள்  இருக்க உங்களுடைய தயக்கம் கொஞ்சம் வியப்பை கொடுக்கிறது,’’ என்று சொல்லி நிறுத்தினான்.

‘‘அதுமட்டுமில்லை தருமரே, பரசுராமர் அவதாரத்திற்குப் பிறகு இந்த பரதகண்டத்தில் வலிமை மிக்க க்ஷத்ரியர்கள் பலரும் கொல்லப்பட்டு  விட்டார்கள். இப்போது இருக்கின்ற க்ஷத்ரியர்கள் தரத்தில் தாழ்ந்தவர்கள். இவர்களை வெல்வது எளிதுதான். வெல்ல முடியாதவர்கள் என்று  யாரும் இங்கே இப்போது இல்லை. அம்மாதிரி இருந்தவர்கள் பரசுராமரால் கொல்லப்பட்டு விட்டார்கள். எனவே, நீங்கள் தைரியமாக  போரில் ஈடுபடலாம்’’ என்று உற்சாகப்படுத்தினான்.

சபையில் தன் இருக்கையை விட்டு அர்ஜுனன் எழுந்தான். ‘‘கிடைத்தற்கறிய வில்லும், அஸ்திரங்களும் அக்னியின் மூலம் எனக்கு  கிடைத்திருக்கின்றன. மிகச்சிறந்த விஷயங்களை கையில் தரித்துக்கொண்டு நான் வெறுமே இருப்பது வீண் வாழ்க்கை என்று கருதுகிறேன்.  இவை எனக்குக் கிடைத்திருப்பதே பகைவரை வெல்வதற்குத்தான். உங்களுக்கு உதவி செய்யத்தான். குறையற்ற ஒரு க்ஷத்ரியனாக இருக்க  விரும்பு கின்றேன். எல்லா குணங்களும் நிறைந்திருந்தாலும் பலமற்றவன் என்ன செய்வான்? அவனுக்கு என்ன புகழ் கிடைக்கும்? எனவே  மிகுந்த பலசாலிதான் முக்கியம். அவன் குணசாலியாகவும் இருப்பதே சிறப்பு. ராஜசுய யாக வெற்றிக்காக ஜராசந்தனை அடித்து  சிறைப்பட்டுள்ள மன்னர்களை காப்பாற்ற வேண்டியது நம்முடைய கடமையாகிறது. இதைவிட வேறு எதற்காக நாம் பிறந்திருக்கிறோம்?  எதற்காக இந்த அஸ்திரங்கள்? ஒருவேளை நாம் இந்த யாகத்தை துவக்காமல் இருந்தால், ஜராசந்தனை போருக்கு அழைக்காமல் இருந்தால்  பாக்கியிருக்கின்ற பதினாலு பேரில் நாமும் சேர்க்கப்பட்டு விடுவோம். வெகு நிச்சயம்  ஜராசந்தன் நம்மை நோக்கி வருவான். அப்படி அவன்  வருவதற்கு முன்பே நாம் துணிந்து இறங்கினால் நம்மைக்கண்டு அவன் பயப்படக்கூடும்.’’

ஆனால், எவருடைய வீரமான பேச்சும் தருமருக்கு சமாதானம் ஆகவில்லை. ‘‘கிருஷ்ணா, எல்லாம் வல்ல நீரே அவனைக் கண்டு  பயப்படுகிறீர்கள் என்றால் அந்த  ஜராசந்தன் யார்? இவ்வளவு பலம் அவனுக்கு எப்படி வந்தது? அவனைக் கண்டு பயந்து நீங்கள்  துவாரகாவிற்கு ஓடியதாகச் சொல்கிறீர்கள். துவாரகாபுரியை நீங்கள் நிர்மாணித்ததே ஜராசந்தனின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க வேண்டும்  என்பதற்காகத்தான் என்றும் சொன்னீர்கள். ஆச்சரியமாக இருக்கிறது. அவன் அவ்வளவு பலசாலியா? நீங்கள் பயப்படும் வண்ணமா? எனக்கு  புரியவேயில்லை.’’

தருமருடைய இந்தப் பேச்சை கேட்டதும் கிருஷ்ணர் தொண்டையை செருமிக்கொண்டு  ஜராசந்தனைப் பற்றி விவரிக்கலானார்: வளம்  பொருந்திய மகத தேசத்தில் பிருகதத்தன் என்ற ஒரு மன்னர் ஆட்சி செய்து வந்தார். கல்வி கேள்விகளில் சிறந்தவர். யாகங்கள் செய்வதில்  ஆர்வம் உள்ளவர். மனம் அடக்கி, புலன் அடக்கி கூர்மையாக அக்னி மூலம் தேவர்களை வணங்குகிறபோது, தானும் தன் மக்களும், தன்  தேசமும் ஆசிர்வதிக்கப்பட்டதை அவர் உணர்ந்திருந்தார். தொடர்ந்து பல்வேறு விதமான ஹோமங்களை செய்து நகரத்தை வளப்படுத்தினார். மழை பெய்வதற்கும், மழை நிற்பதற்கும், பயிர் வளர்வதற்கும், பூச்சிகள் தாக்காது இருப்பதற்கும், நன்கு அறுவடை நடப்பதற்கும், பூக்கள்  மலர்வதற்கும் அவர் வேண்டுதல்கள் நிகழ்த்தினார். மக்களுக்காகவே நிறைய ஹோமங்கள் செய்தார். இப்படிப்பட்ட மன்னர்கள் கிடைப்பது  அரிது.

அவருக்கு அப்பொழுது காசியில் மன்னராக இருந்த காசிராஜன் தன்னுடைய இரண்டு மகள்களை பிருகதத்தனுக்கு கன்னிகாதானமாகக்  கொடுத்தார். அந்த இரண்டு பெண்களிடமும், ‘உங்கள் இருவரையும் நான் சமமாகவே நடத்துவேன். பேதம் காட்ட மாட்டேன்’ என்று  எடுத்தவுடனேயே சத்தியம் செய்தார் பிருகதத்தன். மிக சந்தோஷமாக வாழ்ந்தார். சிற்றின்பத்தின் செளகரியங்களையெல்லாம் உணர்ந்த பிறகும்  அவருக்கு புத்திர பாக்கியம் ஏற்படவில்லை. புத்திர பாக்கியம் இல்லையெனில் இவ்வித இன்பங்களுக்கெல்லாம் எந்த அர்த்தமுமில்லை  என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. எனவே, மெல்லிய வருத்தம் பற்றிக்கொண்டது. புத்திர காமேஷ்டி போன்ற யாகங்கள் செய்தும்  அதனால் அவர் பலன் பெறவில்லை.

வேறு என்ன செய்வது என்ற திகைப்பில் இருந்தபோது, சண்டகௌசிக முனிவர் என்பவர் தவத்தை முடித்து அவர் ஊரின் எல்லையில் ஒரு  மரத்தடியில் விஸ்ராந்தியாக அமர்ந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு தன் மனைவிமாருடன் அங்கு போய் நமஸ்கரித்தான். ‘‘உங்களுக்கு என்ன  வேண்டும். சகலமும் செய்ய சித்தமாயிருக்கிறேன்’’ என்று பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தான். அந்த முனிவருக்கு மன்னனுடைய  அடக்கமும், மரியாதையும், பண்பான பேச்சும் மிகவும் சந்தோஷத்தை கொடுத்தன. ‘‘எனக்கு ஒன்றும் வேண்டாமப்பா. உனக்கு என்ன  வேண்டும் கேள்’’ என்று சொல்ல, அதற்காகவே காத்திருந்ததுபோல மன்னன் தனக்கு குழந்தை இல்லையென்றும், புத்திர காேமஷ்டி  யாகங்கள் செய்தும் எந்த பலிதமும் ஏற்படவில்லை என்றும் வருத்தத்தோடு சொன்னார். ‘‘என்னுடைய பித்ருக்கள் என்னுடைய  குழந்தைகளுக்காக ஏங்கியிருக்கிறார்கள்.

பரம்பரை தொடராவிட்டால் ஒரு மன்னன் வாழ்ந்து என்ன பிரயோஜனம்? யாருக்குத்தான் அது லாபம்? மிகப்பெரிய இந்த சோகம் என்னை  வாட்டுகிறது. இத்தனை தான தர்மங்கள் செய்தும் பலிதமில்லையே என்பதால் தானதர்மங்கள் மீது சந்தேகம் வருகிறது’’ என்று துக்கத்தோடு  பேச, தர்மத்தின் வேரையே அசைக்கின்ற மன்னனுடைய வேதனையை பார்த்து சண்டகெளசிக முனிவர் வேதனைப்பட்டார். அப்போது  சட்டென்று அவர் மடியில் ஒரு மாம்பழம் வந்து விழுந்தது. அது கிளியால் கொத்தப்படவில்லை. யாராலும் பறித்துப் போடப்படவில்லை.  எங்கிருந்தோ தெய்வீகமாக அந்தப் பழம் வந்து அவர் மடியில் விழுந்தது.

என்னுடைய தவத்திற்கு பலன் இதுதானா என்று நல்லவர் அரற்றும்போது உடனடியாக தெய்வம் பதில் சொல்கிறது. உத்தமர்களுக்கு  முன்னேதான் இது வேகமாக நடைபெறுகிறது. தெளிவாக நடைபெறுகிறது.கிடைத்த அந்தப் பழத்தை சிறிதும் தயக்கமின்றி சண்டகெளசிக  முனிவர் அந்த மன்னனுக்கு கொடுத்து, ‘இது உன் குறையை தீர்க்கும். எடுத்துப் போ’ என்று ஆசிர்வதித்தார்.அந்த மன்னன் பிருகுதத்தன் தன்  மனைவியரிடம் அந்தப் பழத்தை கொடுத்தான். அவர்கள் அதை இரண்டாக அரிந்து ஆளுக்கு ஒரு பகுதியை உண்டார்கள். கருவுற்றார்கள். கரு  நலமே வளர்ந்தது. குழந்தை பிறந்தது. ஆனால், முழுதாக இல்லாது ஒரு கால், ஒரு கை, அரை வயிறு, அரை மார்பு, அரை முகம் என்று  ஆளுக்கு ஒரு பாதியாக பிறந்தது. அவர்கள் பயந்து போய் குழந்தையை ஒரு துணியில் சுற்றி தாதியிடம் கொடுத்தார்கள். தாதிகள் அதை  வாங்கி குப்பையிலே வீசினார்கள்.

பிருகுதத்தன் அரண்மனையை ஜடா என்ற அரக்கி காவல் காத்து வந்தாள். அவளுக்கு அந்த அரண்மனையின் ஒரு பகுதியில் படம் வரைந்து  பூஜை நடைபெற்று வந்தது. மாமிச பிண்டம் குப்பைத் தொட்டியில் இருக்கவே ஜடா அதை உண்பதற்காக ஆவலோடு எடுத்தாள். இரண்டு  துண்டங்களாக இருப்பதைப் பார்த்து சந்தோஷப்பட்டாள். அவளையும் அறியாமல் அந்த இரண்டு துண்டங்களையும் இணைக்க அது ஒட்டிக்  கொண்டது. குழந்தை அழத் துவங்கியது. பெருங்குரலோடு குழந்தை அழுவதைப் பார்த்து ஜடா பயந்தாள். விடியும்வரை குழந்தையை  சமாதானப்படுத்தி விடியும் நேரத்தில் அரசரிடம் போனாள்.

‘‘உங்கள் வீட்டு குப்பைத் தொட்டியில் இருந்த குழந்தை இது. உங்கள் மனைவிமார்கள் சூலுற்றிருந்தார்கள். அவர்களுடைய குழந்தையாக  இருக்கலாம். இரண்டையும் இணைத்தபோது குழந்தை அழத் துவங்கியது. நான் சமாதானப்படுத்தினேன். இது உன் குழந்தை. உன்னுடைய  அரண்மனையில் என்னை தினந்தோறும் பூஜை செய்ததால் இதை நான் உண்ணாமல் உனக்கு பரிசாகக் கொடுக்க, ஆசைப்படுகிறேன். மாமிசம்  சாப்பிடுவது வழக்கமாயினும் இந்தக் குழந்தையை உண்ண எனக்குப் பிடிக்கவில்லை. பிள்ளை பேறு இல்லாத உனக்கு இந்தக் குழந்தை வரம்  அல்லவா. எனவே வாங்கிக் கொள்’’ என்று நீட்டினாள்.

மிகுந்த சந்தோஷத்தோடு குழந்தையை வாங்கி தன் நெஞ்சோடு பிருகுதத்தன் அணைத்துக் கொண்டான்.ஜரா என்ற அரக்கி கொடுத்ததால்  அவன் ஜராசந்தன் என்று அழைக்கப்படுகிறான். சந்தித என்றால் சேர்த்த என்று பொருள். ஜராசந்தித குழந்தை என்பதால் ஜராசந்தன் ஆனான்.  மிகுந்த பலமுடையவனாகவும், தெளிவான பார்வையுடையவனாகவும், வேகமான வளர்ச்சியுடையவனாகவும் இருந்தான். அவன்  மன்னருக்கெல்லாம் மன்னராகத் திகழ்வான் என்று சண்டகெளசிக முனிவர் அந்தக் குழந்தையை ஆசிர்வதித்தார். ஈடு இணையில்லாத வீரத்தை  கொண்டிருப்பான் என்றும் கொண்டாடினார்.

தன் மகன் வாலிப பருவம் எய்தியதும் அவனுக்கு அரசாட்சியை கொடுத்து விட்டு பிருகுதத்தன் வனவாசம் மேற்கொண்டான். பிறகு  காலகிரமத்தில் இறந்தும் போனான். தந்தை இறந்ததும் தன்னை பெரும் மன்னனாக பிரகடனப்படுத்திக் கொள்ள ஜராசந்தன் எல்லா  முயற்சிகளையும் செய்தான்.சாம்ராட்டாக ஜராசந்தன் விளங்கி விட்டான். அவனுக்கு பக்கபலமாக பல வீரர்கள் இருக்கிறார்கள். வெல்லவே  முடியாத அந்த வீரர்களையெல்லாம் துணைக்கு வைத்துக் கொண்டு, எளிதாக வெல்லக்கூடிய மன்னர்களையெல்லாம் சிறை பிடித்து  தலைகொய்ய திட்டமிட்டிருக்கிறான். இந்த பயமுறுத்தலால் பரத காண்டத்தின் மத்திய பகுதி நடுங்கிக் கொண்டிருக்கிறது. சாதாரண ஜனங்கள்  பேச்சற்றுக் கிடக்கிறார்கள். வலுவுள்ளவர்களே எதிர்க்க முயலாதபோது பொது ஜனங்கள் எப்படி அரசனை எதிர்ப்பார்கள், எப்படி  கண்டிப்பார்கள்?

‘‘நாம் பெரும் போர் நடத்த படை திரட்டிக் கொண்டு அவனை சந்திக்க வேண்டுமென்றால் அது நமக்கு நஷ்டங்களை கொடுக்கும்.  எதிரியைப் பற்றி யோசித்து முடிவு செய்ய வேண்டும் என்பது ஒரு உண்மையான விஷயமாயின் ஜராசந்தனை படைபலம் வைத்து சந்திக்காது  தனி ஒருவனாக துவந்த யுத்தத்திற்கு அவனை அழைக்க வேண்டும். அவனுடைய கோட்டைக்குள் ரகசியமாக புகுந்து அவன் மல்யுத்தம்  புரியும் நேரத்தில் சண்டை போட பிரியப்படுகிறேன் என்று சொல்லி, உள்ளே நுழைந்து அவனை அடித்து நொறுக்க வேண்டும்.  பீமசேனன்தான் அதற்கு சரியானவன்.

பீமசேனன் பலத்திற்கு முன்பு ஜராசந்தனால் நிற்கவே முடியாது. தெய்வாம்சம் பொருந்திய முனிவருடைய கிருபையால் அவன் ஆடிக்  கொண்டிருக்கிறான். அதற்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.‘‘எனவே, படை எடுத்துப் போகாது நானும், அர்ஜுனனும்,  பீமனும் ஜராசந்தனின் கோட்டைக்குப் போய் அவனை நோக்கி நடக்கிறோம். பல நாட்கள் பயணப்பட்டு அவனுடைய இருப்பிடம் போய்  அவன் மல்யுத்தம் செய்கிறபோது அங்கே போய் நின்று என்னோடு சண்டை போடுகிறாயா என்று கேட்டு அவனை வலிய சண்டைக்கு  இழுத்து அடிக்க வேண்டும். இதனால் பெரும் நஷ்டங்கள் தவிர்க்கப்படும். பெரும் உயிர்க் கொலைகள் தவிர்க்கப் படும். ஜராசந்தனை  முன்னிட்டு நம்முடைய படைகளை நாம் பலி போடக்கூடாது. ஜராசந்தன் அழிந்து போனால் அவன் படையும் குலைந்து போகும். எனவே,  தனியான சண்டைதான் இதற்குச் சரி. பீமன் அதற்குத் தயாராக இருக்கிறான். ஜராசந்தனுக்கு முடிவு வந்துவிட்டது. தருமபுத்திரரே, எங்களுக்கு  விடை கொடும்.’’ என்று கிருஷ்ணர் சொன்னார்.

பல்வேறு விதமாக யோசனை செய்து பெரும் படை இழப்பை தவிர்க்க கருதியும், இப்போது அம்மாதிரி இழப்பு ஏற்பட்டால் பிற்பாடு  வேறு சிலரோடு போரிடுவதற்கு பலவீனமான படையே இருக்கும் என்று கருதியும், அப்படி பலவீனமான படை இருப்பின் மற்றவர்கள்  வந்து சண்டைக்கு இழுப்பார்கள் என்று மனதில் வைத்தும் ஜராசந்தனை நோக்கிப் போக வேண்டியது அவசியமாகிறது.அர்ஜுனன் வருகிறான்,  பீமன் வருகிறான், கிருஷ்ணன் வருகிறான் என்றால் அவன் கைது செய்யத்தான் முற்படுவானே தவிர, படைகளை அனுப்பி சிறையில்  அடைப்பானே தவிர சண்டைக்கு வரமாட்டான். அவனை சண்டைக்கு அனுப்ப அவனுடைய தளபதிகளும் விடமாட்டார்கள். எனவே,  எங்கே, எப்போது மல்யுத்தம் செய்கிறான் என்று பார்த்து அங்கே போகவேண்டும். அவன் மல்யுத்தம் செய்வதில் பிரியமுள்ளவன். மல்யுத்த  வீரர்களின் எலும்புகளை நொறுக்குவதில் ஆசையுள்ளவன். முஷ்டியை மடக்கி ரத்த விகாரமாய் முகத்தை சிதைப்பதில் விருப்பமுள்ளவன்.  அதில் பெரும் சந்தோஷமடைபவன். அந்த சந்தோஷத்தை தூண்டிவிட்டு சரியான நேரத்தில் உள்ளே நுழைந்து அவனை துவம்சம் செய்ய  வேண்டும் என்று திட்டமிடப்பட்டது.

ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜுனனும், பீமசேனனும் மகதம் நோக்கிப் பயணமானார்கள்.

‘அதுமட்டுமில்லை தருமரே, பரசுராமர் அவதாரத்திற்குப் பிறகு இந்த பரதகண்டத்தில் வலிமை மிக்க க்ஷத்ரியர்கள் பலரும் கொல்லப்பட்டு  விட்டார்கள். இப்போது இருக்கின்ற க்ஷத்ரியர்கள் தரத்தில் தாழ்ந்தவர்கள். இவர்களை வெல்வது எளிதுதான். வெல்ல முடியாதவர்கள் என்று  யாரும் இங்கே இப்போது இல்லை.

என்னுடைய தவத்திற்கு பலன் இதுதானா என்று நல்லவர் அரற்றும்போது உடனடியாக தெய்வம் பதில் சொல்கிறது. உத்தமர்களுக்கு  முன்னேதான் இது வேகமாக நடைபெறுகிறது. தெளிவாக நடைபெறுகிறது.

(தொடரும்)