பக்தித் தமிழ்



பெருமகிழ்ச்சி பொங்கச் செய்யும் பரமன்

என்.சொக்கன்

அம்பிகை ஐயனை நோக்கித் தவம்செய்துகொண்டிருந்தாள். சிவபெருமானை மதிக்காமல் தக்கன் ஒரு யாகம் செய்தான். அந்த யாகத்துக்கு  அம்பிகை சென்றுவந்த காரணத்தால், அண்ணலுக்கு வருத்தம். ஆகவே, அவரது அன்பை வேண்டி அம்மை தவம் செய்தாள்.பெண்ணை பாகமாகக்கொண்ட பரமன் அவரை நீண்டநேரம் காக்கவைக்கவில்லை, அன்னையின் தவத்தை ஏற்றுக்கொண்டான், மீண்டும்  அவளைத் தன்னருகே சேர்த்தருளினான்.

அப்போது, பரமசிவன் அம்மையைத் ‘தன்(ம்) காதலி’ என்று அன்போடு அழைத்தார். இதனால் அம்மைக்குத் ‘தம்காதலியம்பாள்’ என்ற  திருப்பெயர் அமைந்தது. திருப்பாசூர் என்ற திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் அம்பாளை இந்தப் பெயரால் மக்கள் போற்றிக்  குறைதீர்க்கின்றனர்.திருஞானசம்பந்தரும் அம்மையை இதே பெயரால்அழைக்கிறார்:‘பொங்குஆடுஅரவும் புனலும் சடைமேல் பொலிவுஎய்தக்  கொங்குஆர் கொன்றைசூடி என்உள்ளம் குளிர்வித்தார், தம்காதலியும் தானும் வாழும் ஊர்போலும் பைங்கான் முல்லை பல்அரும்புஈனும்  பாசூரே.’கோபத்தோடு பொங்கி எழுகின்ற பாம்பையும் கங்கையாற்றையும் சடைமேல் சிறப்பாகச் சூடிய பெருமான், தேன்நிறைந்த  கொன்றைமலர்களை மாலையாகக் கட்டிச் சூடியிருக்கிறார். இந்தத் திருக்கோலத்தைப் பார்க்கும்போது என்னுடைய உள்ளம் குளிர்கிறது. அந்தச் சிவபெருமானும், அவருடைய ‘தம்காதலி’யான பார்வதியம்மையும் பக்தர்களைக் காக்க எழுந்தருளியிருக்கும் ஊர், பசுமையான  காடுகளில் முல்லை அரும்புகள் பூக்கின்ற திருப்பாசூர்!திருஞானசம்பந்தரைப்போலவே, சிவபெருமானை எண்ணி உள்ளம் குளிர்ந்த  இன்னொரு அருட்பாவலர், வள்ளலார்.

சிவன் தனக்கு இன்னும் எவ்வாறெல்லாம் அருள்செய்தார் என்று சொல்கிறார் அவர்:

‘மெய்தழைய, உள்ளம்குளிர்ந்து, உவகைமாறாது மென்மேல் கலந்துபொங்க, விச்சைஅறிவுஓங்க, என் இச்சை அறிவு அனுபவம் விளங்க,  அறிவு அறிவதாகி, உய்தழைவு அளித்து, எல்லாம் வல்ல சித்துதந்து, உவட்டாது உள்ஊறிஊறி ஊற்று எழுந்து, என்னையும் தான்ஆக்கி,  என்னுளே உள்ளபடி உள்ளஅமுதே.’சிவபெருமானே, நீ என் உடலைத்  தழைக்கச் செய்தாய், உள்ளத்தைக் குளிர்வித்தாய், எனக்குள் தோன்றும்  மகிழ்ச்சி மாறாதபடி மேலும் கலந்து பொங்கச் செய்தாய், கற்றுக்கொண்ட தன்மூலம் எனக்குக் கிடைத்த அறிவை மேம்படச்செய்தாய்,  அத்துடன் என்னுடைய இயற்கையான அறிவும் அனுபவமும் கலந்து விளங்கச் செய்தாய், அறிவை அறியச்செய்தாய், உய்கின்ற வழியைக்  காட்டினாய், எல்லாம்வல்ல சித்தினைத் தந்தாய், எனக்குள் திகட்டாத இனிப்பாகத் தொடர்ந்து ஊறினாய், என்னையும் தானாக்கிக்கொண்டாய்,  என்னுள் அமுதமாக எழுந்தருளியிருக்கிறாய்!இறைவனை எத்தனையோ கோயில்களில் காணலாம், ஆனால், அதற்குமேலாக, அவன் நமக்குள்  இருப்பதைக் காணவேண்டும். அதனை உணராவிட்டால், கோயில்களில் அவன் நமக்குத் தென்பட மாட்டான். கவிமணி  தேசிகவிநாயகம்பிள்ளை ஒரு பாடலில் இதனை அழகாகச் சொல்கிறார்.ஒரு பெண், கோயிலுக்குச் செல்கிறாள். அங்கே இறைவனைக்  காணவில்லையே என்று தன் தோழியிடம் கேட்கிறாள்:

‘கோவில்முழுதும்கண்டேன், உயர்
கோபுரம் ஏறிக் கண்டேன்,
தேவாதிதேவனை யான், தோழி,
தேடியும் கண்டிலனே!’
கோயிலில் வேறு என்னவெல்லாம் பார்த்தாய்?
‘தெப்பக்குளம் கண்டேன், சுற்றித்
தேர்ஓடும் வீதி கண்டேன்,
எய்ப்பில் வைப்பாம் அவனைத் தோழி
ஏழையான் கண்டிலனே.
சிற்பச்சிலை கண்டேன், நல்ல
சித்திரவேலை கண்டேன்,
அற்புத மூர்த்தியினைத் தோழி
அங்குஎங்கும் கண்டிலனே.
பொன்னும் மணியும் கண்டேன், வாசம்
பொங்குபூமாலை கண்டேன்,
என்அப்பன் எம்பிரானைத் தோழி
இன்னும்யான் கண்டிலனே.
தூபம் இடுதல் கண்டேன், தீபம்
சுற்றியெடுத்தல் கண்டேன்,
ஆபத்தில் காப்பானைத் தோழி,
அங்கேயான் கண்டிலனே.’
சரி, இந்தக் கோயில்களிலெல்லாம் காணவில்லை,
‘கோயில்’ என்றே பெருமையாகச் சொல்லப்படும் தில்லையிலேனும்
பெருமானைக் கண்டாயா?
‘தில்லைப்பதியும்கண்டேன், அங்குச்
சிற்றம்பலமும்கண்டேன்,
கல்லைக்கனிசெய்வோனைத் தோழி,
கண்களால் கண்டிலனே.’
இதைக்கேட்ட தோழி, சிரித்துக்கொண்டே விளக்குகிறாள்:
‘கண்ணுக்கு இனிய  கண்டு, மனத்தைக்
காட்டில் அலையவிட்டு,
பண்ணிடும் பூசையாலே,தோழி,
பயன்ஒன்றும் இல்லையடி!
உள்ளத்தில் உள்ளானடி, அதுநீ
உணரவேண்டுமடி,
உள்ளத்தில் காண்பாயெனில், கோயில்
உள்ளேயும் காண்பாயடி!’
கவிஞர் இப்படிச் சொன்னதும்,
கண்களுக்கு வருத்தம். ‘பெருமானைக் காண்பதுதானே எங்கள் பிறவியின் நோக்கமே, நீங்கள் அவரை உணர்வினால் காணத்தொடங்கிவிட்டால்  நாங்கள் என்ன ஆவோம்?’

அந்தக் கண்களுக்கு வள்ளலார் பதில் சொல்கிறார், ‘கவலைப்படாதீர்கள், நீங்கள் பார்ப்பதற்கும் பல விஷயங்கள் இருக்கின்றன!’நாங்கள்  தெருவில் நடந்துச்செல்லும்போது, நெற்றியில் திருநீறு அணியாத புலையர்கள் எதிரில் வருவார்கள், அவர்களைக் காணாமல், நெருங்காமல்  நாங்கள் விலகிவிடுவோம்.சிறிதுநேரத்தில், உடல் முழுக்கத் திருநீறு பூசிய அடியவர்கள் வருவார்கள், அவர்களை நாங்கள் நின்று காண்போம்.  எங்கள் கண்களிடம், ‘உங்களுடைய கடமை இதுதான், இந்த அன்பர்களைப் பாருங்கள்’ என்று சொல்வோம்.அதாவது, மனத்தின் கடமை,  மாதேவனை உணர்வது, கண்களின் கடமை, அவன்மீது அன்புசெலுத்தும் அடியவர்களைக் காண்பது:

‘போற்றி நீறுஇடாப் புலையரைக் கண்டால்,
போக,போக, நீர் புலம்இழந்துஅவமே,
நீற்றின்மேனியர்தங்களைக் கண்டால்,
நிற்க,நிற்க, அந்நிமலரைக் காண்க,
சாற்றின் நல்நெறி ஈதுகாண், கண்காள்,
தமனியப் பெரும்தனுஎடுத்து எயிலைக்
காற்றிநின்ற நம் கண்நுதல் கரும்பைக்
கைலைஆளனைக் காணுதற்பொருட்டே.’

பொன்னாலான மலையை வில்லாக எடுத்து, பகைவர்களின் முப்புரங்களையும் அழித்தவன், நெற்றியிலே கண்ணுடைய கரும்பு, கயிலையை  ஆள்பவன், அந்தப் பெருமானைக் காணும் வழி என்ன தெரியுமா?கண்களே, நீறுஅணிந்த பக்தர்களை மனம்நிறையக் காணுங்கள், நீறுஅணியாத  புலையர்களைவிட்டு விலகுங்கள், அதுவே நல்லநெறி!அப்படியானால், மனத்தின் நெறி என்ன?அதனை அஷ்டப்பிரபந்தத்தில் ஒரு பாடலில்  பிள்ளைப்பெருமாள்ஐயங்கார் சொல்கிறார்: ‘இரையை மாற்றவேண்டும்.’இரை என்றால் உணவு, சாப்பாட்டை மாற்றுவதுதானா மனத்தின்  நெறி?தென்னிந்திய உணவுக்குப்பதில் வடஇந்திய உணவுவகைகளை வெளுத்துக்கட்டவேண்டும் என்பது அர்த்தமில்லை. மனத்தின் இரை,  அதாவது, மனத்தால் கட்டுப்படுத்தப்படுகிற ஐம்புலன்களின் உணவை மாற்றவேண்டும்.இப்போது அந்த ஐம்புலன்களும் எதையெதையோ  பார்த்துக்கொண்டிருக்கின்றன, எதையெதையோ கேட்டுக்கொண்டிருக்கின்றன, எதையெதையோ சுவைத்துக்கொண்டிருக்கின்றன,  இதையெல்லாம் மாற்றவேண்டும், அவை இறைவனைமட்டும்தான் நினைக்க வேண்டும், வேறெந்த கவனச்சிதறல்களும் இல்லாமல்  பக்திமார்க்கத்தில் செல்லவேண்டும் என்று அழகரை வேண்டுகிறார் பிள்ளைப்பெருமாள்ஐயங்கார்:

‘உரைமாற்றம் உண்டு, என் பொறிஐந்தும்
உன்னிடத்துஅன்றி உண்ணும்
இரைமாற்றம் வேண்டும், இதுவே
என் விண்ணப்பம், என்அப்பனே,
உரைமாற்று அளவுஅற்றபொன்
உடுத்தாய், அம்புஅடைத்து இலங்கை
வரைமாற்றலரைச் செற்றாய்,
அழகா, கருமாணிக்கமே.’

அம்புகளை எய்து, இலங்கையில் மலைபோல் உயர்ந்துநின்ற பகைவர்களான ராவணனையும் மற்றவர்களையும் வென்றவனே, அழகனே,  கருமாணிக்கமே, உரைகல்லால் உரைத்து, ‘இது சிறந்த தங்கம்’ என்று சொல்லப்படுகிற தங்கங்களையெல்லாம்விட அருமையான தரம்வாய்ந்த  பொன்னை உடுத்தியவனே, எங்கள் தந்தையே, உன்னிடம் எங்களுக்கு ஒரு விண்ணப்பம் உள்ளது. எங்களுடைய ஐம்பொறிகளும் உன்னையே  நினைக்கவேண்டும், வேறு எந்த உணவிலும் அவற்றுக்கு ஆர்வம் வரக்கூடாது, அதற்கு அருள்செய்.புலன்கட்டுப்பாடு இல்லாவிட்டால் என்ன  ஆகும்?ஐம்புலன்களைப் பெரியோர்கள் ‘கள்வர்கள்’ என்றே குறிப்பிடுகிறார்கள். நமக்குள்ளிருந்து நம்மைத் திருடுகிறவர்கள், அவர்களுடைய  வலையில் சிக்கினால், எந்த நற்செயலிலும் ஈடுபடஇயலாது, தான், தன்சுகம் என்று துயரத்தை நோக்கிச்செல்வோம்.அதனால்தான், இந்தக்  கள்வர்களிடமிருந்து தப்பவேண்டும் என்பதே பலருடைய கோரிக்கையாக இருக்கிறது. அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடலொன்று:

‘நாமேவு குயிலாலும் மாமாரன் அயிலாலும்
நாள்தோறும் மதிகாயும் வெயிலாலும்
நார்மாதர் வசையாலும் வேய்ஊது மிசையாலும்
நாடுஆசைதரும் மோக வலைஊடே
ஏமாறி முழுநாளும் மாலாகி விருதாவிலே
வாரும் விழிமாதர் துயர்ஊடே
ஏகாமல், அழியாத மேலான பதம்மீதில்
ஏகீ உனுடன் மேவ அருள்தாராய்,
தாம்மோகமுடன்ஊறு பால்தேடி உரல்ஊடு
தான்ஏறி விளையாடும் ஒருபோதில்
தாயாக வருசோதை காணாது களவாடு
தாமோதரன், முராரி மருகோனே,
மாமாது, வனமாது, கார்மேவு சிலைமாது
மால்ஆகி விளையாடு புயவீரா,
வான்நாடு புகழ்நாடு, தேன்ஆறு புடைசூழ
மாயூரகிரிமேவு பெருமாளே.’

தாமோதரன், முராரியாகிய திருமால், கிருஷ்ணாவதாரம் எடுத்தபோது, விருப்பத்துடன் பாலைத்தேடிச்சென்றார், உரல்மீது ஏறி அதனைத்  திருடுவதுபோல் விளையாடினார். தாய் யசோதைக்குத் தெரிந்துவிடாமல் பாலைக் களவாடினார். அத்தகைய திருமாலின் மருமகனே, முருகா, லட்சுமியின் மகள் வள்ளி, காட்டில் வளர்ந்தவள், மேகம்தவழ்கின்ற மலைப்பகுதியைச் சேர்ந்தவள், அவள் உன்மீது மயக்கம்கொண்டு  காதலித்தாள், அத்தகைய வீரத்தோள்களைக் கொண்டவனே, தேவர்களும் புகழ்கின்ற, தேனாறு அருகிலே ஓடுகிற மாயூரகிரியில் எழுந்தருளி
யிருக்கும் பெருமாளே,குயில் சத்தம் எனக்கு அச்சம் தருகிறது. சிறந்த மன்மதனின் அம்புகள், தினமும் காய்கின்ற வெய்யில், அன்புள்ள  பெண்கள் சொல்லும் வசைச்சொற்கள் போன்றவை என்னை வாட்டுகின்றன. எதையெதையோ தேடிச்செல்கின்ற மோக வலையில் சிக்கித்  தவிக்கின்றேன். ஏமாந்துபோகிறேன். மயங்குகிறேன். நீண்ட கண்களைக்கொண்ட பெண்களாலே வருகின்ற துன்பத்துக்குள் வீணாகச்  சிக்கியுள்ளேன். இவ்வாறு நான் துயரப்படாதபடி காப்பாய். அழிவில்லாத, மேலான பதத்தை அடைந்து நான் உன்னைச்சேர அருள்செய்.
கன்றை ஈன்ற பசுவுக்கு, அந்தக் கன்றின்மீது எப்படிப்பட்ட அன்பு இருக்குமோ, அதேபோன்ற அன்பை இறைவன் நமக்குக் காட்டுவான்  என்கிறார் திருமூலர். அதற்கு நாம் செய்யவேண்டியது, அவனது பாதம் பணிவதுதான்:

‘கூடியும் நின்றும் தொழுது எம் இறைவனைப்
பாடிஉளேநின்று பாதம் பணிமின்கள்,
ஆடிஉளேநின்று அறிவு செய்வார்கட்கு
நீடிய ஈற்றுப் பசுஅதுஆமே.’

இறைவனை வணங்கும் பக்தர்களோடு சேர்ந்து கொள்ளுங்கள். அவன் கோயில் வாசலுக்கு வந்து நின்று தொழுது வணங்குங்கள். அவனது  புகழைப் பாடுங்கள். திருவடிகளைப் பணியுங்கள். உங்களுக்குள் ஆடுங்கள். சிந்தனையில் அவனைமட்டுமே நினையுங்கள். அப்படிச்  செய்கிறவர்களுக்கு, கன்றை ஈன்ற பசுவைப்போல் அவன் அன்புசெய்வான், அருள்செய்வான்.பக்தர்களின் கோரிக்கையெல்லாம், பரமனுடன்  கலந்துவிட வேண்டும், பிறவாநிலை வேண்டும் என்பதுதான். அதற்கு, அவனை உள்ளத்தில் நினைத்துப் போற்றினாலே போதும். அவன்  எழுந்தருளியிருக்கும் திருத்தலங்களின் பெயர் சொன்னாலே போதும்.எந்தத் திருத்தலங்களைச் சொல்லவேண்டும்?பரஞ்சோதிமுனிவர் ஒரு  பாடலில் பதினைந்து திருத்தலங்களைக் குறிப்பிடுகிறார்:

‘தில்லைவனம், காசி, திருவாரூர், மாயூரம்,முல்லைவனம், கூடல், முதுகுன்றம், நெல்லை,களர்,காஞ்சி, கழுக்குன்றம், மறைக் காடு,  அருணை, காளத்தி,வாஞ்சியம் என, முத்திவரும்.’சிதம்பரம், காசி, திருவாரூர், மாயூரம், முல்லைவனம், மதுரை, திருப்பரங்குன்றம்,  திருநெல்வேலி, திருக்களர், காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், வேதாரண்யம், திருவண்ணாமலை, காளஹஸ்தி, திருவாஞ்சியம் என்கிற  திருத்தலங்களின் பெயர் சொன்னால், முக்திநிலை கிடைக்கும்!

முக்திநிலை என்பது, எங்கேயோ தொலைவில் உள்ளது என எண்ணக்கூடாது. அப்படி நினைத்தால், நமக்கு முக்தி கிடைக்குமோ,  கிடைக்காதோ என்கிற மயக்கம் ஏற்பட்டுவிடும்.ஆகவே, வள்ளலார் தன் மனத்திடம் சொல்கிறார்:

‘சேர நெஞ்சமே, தூரம் அன்றுகாண்,
வாரம் வைத்தியேல், சாரும் முத்தியே!’

என் மனமே, இறைவனைச் சேரும் நிலை வெகுதொலைவில் இல்லை, அவன்மீது அன்புவைத்தால் போதும், முக்திநிலை கிடைக்கும்!

(தொடரும்)