வொண்டி மிட்டா



கோரியதை நிறைவேற்றும் கோதண்டராமர்

கோயில்கள் ஒருகாலத்தில் பிரபலமாய் இருந்து, பிறகு மதிப்பு இழந்து வெறும் நினைவுச் சின்னங்களாக மாறிவிடுவது உண்டு. அப்படியொரு  கோயிலை ஆந்திராவின் கடப்பா ஜில்லாவில் ராஜம்பெட் அருகிலுள்ள வொண்டிமிட்டா என்ற ஊரில் காணலாம். கடப்பாவிலிருந்து 25வது  கிலோ மீட்டரில் இந்தக்கோயில் அமைந்துள்ளது. மூலவர், கோதண்டராமஸ்வாமி. 450 ஆண்டுகள் பழமையான கோயில். வொண்டிடு,  மிட்டுடு என்ற இரு ராமபக்தர்கள் ஒரே நாளில் கட்டிய கோயில் என்ற பெருமை இதற்கு உண்டு.  கோயிலைக்கட்டுவதற்காகத் தங்கள்  உடல், பொருள் அனைத்தையும், ஈந்த இவர்கள் கோயில் முடிந்ததும் ஆவியையும் அர்ப்பணித்துவிட்டார்கள். இவர்களுக்கு இந்தக் கோயில்  வாசலில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ராமாயணத்திற்கும் இந்த இடத்திற்கும் தொடர்பு உண்டு. கிஷ்கிந்தா காண்ட நிகழ்வுகள் அனைத்தும் இங்கு நடந்ததாக கூறப்படுகிறது.

இந்திய தொல்பொருள் அமைச்சகம், இந்தியாவின் பழைய நினைவுச் சின்னங்களில் சிறந்த ஒன்று என இந்தக் கோயிலுக்கு அங்கீகாரம்  வழங்கியுள்ளது. இந்த கோயிலின் மத்தியரங்கம், 32 தூண்களால் மிக அழகாக கட்டப்பட்டுள்ளது.அன்னமாச்சார்யா இந்த ராமனின் சிறந்த  பக்தர்.ஜம்பு நந்தா என்பவர்தான் ராமர் சிலையை இங்கு பிரதிஷ்டை செய்ததாக ஒரு தகவல் கூறுகிறது. ராமர், சீதை, லட்சுமணர் மூவரும்  ஒரு பாறையில் செதுக்கப்பட்ட சிற்பங்களாகக் காட்சியளிக்கின்றனர். வேண்டியதையெல்லாம் நிறைவேற்றி சந்தோஷம் அருள்வார் இந்த  வொண்டி மிட்டா கோதண்டராமர் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.இந்த காட்டில் ராமர், சீதை, லட்சுமணர் வசித்து வந்தபோது,  தண்ணீர் கிடைக்காமல், ராமரும், சீதையும் தாகமுற்று, கஷ்டப்பட்டதை பார்த்த லட்சுமணன் பூமியை நோக்கி, தன் அம்பை செலுத்த, நீர்  ஊற்று ஒன்று மேலெழுந்தது. அவர்களுடைய தாகத்தை தீர்த்ததுடன், அந்த ஊற்றுநீர் இருகுளங்களாக தேங்கி நின்றதாம். அவை ராமர் தீர்த்தம், லட்சுமண தீர்த்தம் என அழைக்கப்படுகின்றன.
 
தற்போது தெலுங்கானா மாநிலத்திலுள்ள பத்ராசலம் கோயிலில் ராமபக்தரான ஆஞ்சநேயருக்கும் இடம் உண்டு. ஆனால், ஆந்திர  மாநிலத்திலுள்ள இந்த வொண்டி மிட்டா கோயிலில் ஆஞ்சநேயர் கிடையாது. இந்த குறையை நீக்க ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்யப்  போகின்றனர்.பொதுவாக கோயிலில் சீதாராம கல்யாணம் காலை வேளையில் நடக்கும். ஆனால், வொண்டி மிட்டாவில் இரவுதான் நடத்தப்படுகிறது..

- ராஜி ராதா