அந்த ஒருவர் யார்?



மனிதன் அறிவுப்பலம் உடையவனே அன்றி உடற்பலம் இல்லாதவன். யானை, காண்டாமிருகம், சிங்கம் முதலிய விலங்குகள் மனிதனை  விட அதிக உடல் வலிமை உடையவை. ஆனாலும் அவை மனிதனால் அடக்கப் பெற்று அவன் ஏவும்படியெல்லாம் செய்கின்றன.மனிதர்கள் யாவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. உடல் வலிமையிலும் சரி, அறிவுத்திறத்திலும் சரி, ஒருவருக்கொருவர் வேறுபட்டே  இருக்கிறார்கள். பலம் இல்லாதவன் பலம் உள்ளவர்களை நண்பர்களாக்கிக் கொண்டு அவர்களால் நலம் பெறுகிறான்.

அறிவில் தாழ்ந்தவன் அறிவுடையவர்களைச் சேர்ந்து விளக்கம் அடைகிறான்.சார்பினால் வலிமை பெறும் தந்திரத்தை மனிதன் கற்றுக்  கொண்டிருக்கிறான். அவனால் மிக வேகமாக ஓட முடியாது. ஆனால், வேகமாக ஓடும் குதிரையின் மேல் ஏறி வேகமாகச் செல்கிறான்.  ஐம்பெரும் பூதங்களையே தன் அறிவு வன்மையினால் செயற்படுத்திப் பெரிய செயல்களைச் செய்கிறான்.

தன்னுடைய அறிவுவன்மையால் மனிதன் செய்து வரும் அற்புதங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. அவனால் பறக்க முடியாது.  ஆனாலும் ஆகாய விமானத்தை அறிவுத் திறத்தினால் அமைத்துக் கொண்டு பறக்கிறான். கப்பலில் ஏறிக் கடலின் ஆழத்தில் பயணம்  செய்கிறான். இயல்பாகத் தன்னால் செய்ய முடியாமல் இருப்பினும் மற்றவற்றை இயக்கி வியக்கத்தக்க செயல்களைச் செய்கிறான்.இவ்வாறு தன்னினும் ஆற்றல்மிக்க பொருட்களைச் செயல்படுத்தக் கற்றுக் கொண்டதனால் பெரிய பெரிய காரியங்களைச் சாதிக்கிறான்.

மண்ணை வசப்படுத்தினவனை விட நீரை வசப்படுத்தினவன் அதிக ஆற்றல் பெறுகிறான். இப்படியே பஞ்சபூதங்களையும் வசப்படுத்தியவன்  ேபராற்றல் பெற்றுப் பல பல செயற்கரியசெயல்களைச் செய்கிறான்.உலகில் உள்ள பஞ்சபூதங்களை வசப்படுத்துவதனால் இவ்வளவு அரிய  செயல்களைச் செய்யும் ஆற்றல் பெற்றவன், மிக்க வலிமை பெறுகிறான். எல்லாப் பொருட்களையும் தன் வசப்படுத்தி ஆளும் வகை தெரிந்த  மனிதன் உலகில் மற்ற எல்லாப் பிராணிகளை விடவும் சிறந்தவனாக விளங்குகிறான். சாமான்ய மனிதனை விட அறிவுமிக்கவன் அந்த  அறிவாற்றலால் அவனை விடச் சிறந்த செயல்களைச் செய்ய முடிகிறது.

இப்படிப் பூதங்களையும் பிற பொருட்களையும் வசப்படுத்தி அற்புதங்களை ஆற்றும் மனிதன் இவற்றை விடப் பெரிய அற்புதத்தைச் செய்யும்  இயல்பும் பெற்றிருக்கிறான். ஆனால், அந்தத் துறையில் பெரும்பாலோர் ஈடுபடுவதில்லை.எல்லாப் பொருட்களையும் விடச் சிறந்த பொருள்  எதுவோ அதற்குப் பரம்பொருள் என்று பெயர். பரப்பிரம்மம், கடவுள், தெய்வம் என்று பொதுவகையாகவும், சிவபெருமான், திருமால்,  அன்னை பராசக்தி, முருகன் என்று சிறப்பு வகையாகவும் அந்தப் பரம்பொருளைக் கூறுவார்கள்.

அந்த மேலான பொருளோடு தமமுடைய முயற்சியால் தொடர்பு பெற்றவர்கள் எல்லாவற்றையும்விடப் பெரிய அற்புதத்தைச் செய்ய  வல்லவராகிறார்கள்.எவ்வளவு வல்லமை பெற்றவராக இருந்தாலும் இந்த வாழ்வின் இறுதியில் இறந்து போகிறார்கள். அற்புதங்களைச்  சாதித்த விஞ்ஞானியும் மரணத்தை வெல்ல முடிவதில்லை. மரணத்தை எண்ணும்போது யாவருமே அஞ்சுகிறார்கள்.

பணத்தைப் பெற்றவன் வறுமைக்கு அஞ்சுவதில்லை. அறிவை உடையவன் அறியாமைக்கு அஞ்சுவதில்லை. உடல் வலிமையை உடையவன்  மெலிவுடையவர்களுக்கு அஞ்சுவதில்லை. ஆனால், இத்தனை பேர்களும் மரணத்துக்கு அஞ்சுவார்கள்.‘‘சாதலின் இன்னாத தில்லை’’ என்பது  வள்ளுவர் வாக்கு. அந்த மரணத்தையும் வெல்லும் ஆற்றலை மனிதன் பெறலாம். அதற்குரிய உபாயத்தை அறிந்து செயல் செய்தால்  மரணமிலாப் பெருவாழ்வைப் பெறலாம்.

இந்த உடம்போடே என்றும் வாழ்வது மரணம் இலாப் பெருவாழ்வு ஆகாது. இனிப் பிறந்து இறந்து வாழ்வதை எவன் போக்கிக்  கொள்கிறானோ அவனே மரணம் இலாப் பெருவாழ்வை அடைகிறான். அத்தகையவன் இந்த உடம்பை விட்ட பிறகு இனி என்றும் பிறவாத  மேல்நிலையை அடைகிறான். மற்றவர்களே மீண்டும் பிறக்கிறார்கள்; ‘பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றார்கள்.’

மரண பயம் இல்லாமல் வாழ முடியுமா?‘‘மரணப்ர மாதம் நமக்கு இல்லையாம்’’ என்பது அருணகிரியார் திருவாக்கு. உடம்பைப் பெற்றவன்  மரணம் அடைவது இயற்கை. அவ்வாறு இந்த உடம்பை நீத்து மரணம் அடைந்த உயிர் இனிப் பிறவாத தன்மையை எய்தினால் மரணமிலாப்  பெருவாழ்வில் என்றும் நிலைத்து நின்று இன்பம் அடைகிறது. அவ்வாறுள்ள நிலைமையை அடைந்தவர்கள் மரணத்துக்கு அஞ்சுவதில்லை.

‘‘சந்ததமும் வேதமொழி யாதொன்று
பற்றினது தான்வந்து முற்று மெனலால்
சகமீ திருந்தாலும் மரணம்உண் டென்பதைச்
சதாநிஷ்டர் நினைவ தில்லை’’

- என்று தாயுமானவர் சொல்கிறார்.

மரணத்திற்கே அஞ்சாதவர்கள் வேறு எதற்கு அஞ்சுவார்கள்?

அச்சம் இல்லாத அந்த நிலையைப் பெற்றவர்கள் யார்? யார் பிறப்பு இறப்பின்றி உள்ளானோ அந்தப் பரம்பொருளின் சார்பு பெற்று,  அவனோடு ஒட்டி உறவாடி இணைந்து, அருள் வலிமை பெற்றவர்கள் எதற்கும் அஞ்சாத நிைலயை அடைவார்கள்.அப்பர் சுவாமிகள்  அவ்வாறு அச்சத்தைத் தவிர்த்த பெருவீரர். மரணம் இல்லாதவனைச் சார்ந்தமையால் அந்த வீரம் அவருக்கு உண்டாயிற்று. அதை அவர்  சொல்கிறார். திருவதிகை வீரட்டானம் என்னும் திருத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு அவனுடைய அருள்வலிமையைப் பெற்றவர்  அவர். அவனுடைய தமர்களாகிய அடியார் கூட்டத்தில் ஒருவராகி விட்டவர். ஆகவே, அவர் எதற்கும் அஞ்சாத திண்ணிய நெஞ்சம்  உடையவரானார்.

அவர் சொல்வதைக் கேட்கலாம்:
‘‘நாம் ஒப்பற்ற ஒருவருடைய தமருள் ஒருவராகி விட்டோம். ஆதலால் நாம் எதற்கும் அஞ்ச மாட்டோம். நாம் அஞ்சும்படி  இனி  வரப்போகிறது யாதும் இல்லை’’ என்கிறார். ‘‘மரணம் வருமே! அதற்கு அஞ்ச மாட்டீர்களோ?’’ என்று கேட்டால், ‘‘நாம் அஞ்சும்படி  வரப்போகிறது யாதும் இல்லை’’ என்று மிடுக்கோடு சொல்கிறார்.

‘‘அந்த ஒருவர் யார்?’’ என்று நாம் கேட்கிறோம்.‘‘சொல்கிறோம். நிதானமாகக் கேளுங்கள். நீங்களும் அவரை அடைந்து இந்த நிலையை  அடையலாம். அதனால் விளக்கமாக அங்க அடையாளங்களுடன் அவரைப் பற்றிச் சொல்கிறோம். கேளுங்கள்’’ என்கிறார்.‘‘இப்படி யார்  சொல்லப் போகிறார்கள்? தயை செய்து சொல்லுங்கள்; கேட்கலாம்’’ என்கிறோம்.‘‘அவர் நீங்கள் கண்டு தரிசிக்கும் படியான  திருக்கோலத்தோடு எழுந்தருளியிருக்கிறார். அந்தக் கோலத்தைச் சொல்லட்டுமா?’’‘‘சொல்லுங்கள். கேட்டுப் பயன் பெறுகிறோம்’’ என்று  பவ்யமாகச் சொல்கிறோம்.

அவர் விளக்கமாகச் சொல்லப் புகுகிறார்: செல்வர்கள் மார்பில் சந்தனம் பூசிக் கொள்வார்கள். அவர் திருநீற்றையே வெண்மையான சந்தனக்  குழம்பாகப் பூசியிருக்கிறார்.‘சுண்ணவெண் சந்தனச் சாந்தும்’- அவரை இனம் கண்டு கொள்வது எளிது. அவர் தம் திருமுடிமேல் சுடர்விடும் சந்திரனைச் சூடியிருக்கிறார். அரிய ரத்தினங்களைச் செல்வர்கள் சூளாமணியாக அணிவார்கள். அந்தச் செல்வரோ சுடர்த் திங்கட் சூளாமணியை உடையவர்.

‘சுடர்த்திங்கட் சூளா மணியும்’


- எல்லாரும் பட்டும் பீதாம்பரமும் அணிவார்கள். அவற்றையெல்லாம் மற்றச் செல்வர்கள் உடுக்கட்டும் என்று வழங்கி விட்டு அவர்  தோலையே தம் உடையாகப் புனைந்திருக்கிறார். இடையில் யானைத் தோலையும் மேலே புலித்தோலையும் உடையாக உடையவர் அவர்.

‘வண்ண உரிவை உடையும்’


- இந்தத் தோல்களைக் கொண்டு, ‘‘இவர் என்ன, இப்படிக் ேதாலாண்டியாக இருக்கிறாரே! இவருக்கு வேறு உடை இல்லையா? ஒருகால்  தம்முடைய அழகற்ற உருவத்தை மறைக்க இவற்றைப் பயன்படுத்துகிறாரோ?’’ என்று எண்ணக் கூடாது. அவர் வண்ணம் பவள வண்ணம்.  பார்க்கப் பார்க்க எழில் மிகுந்து வளர்ந்து தோன்றும் பவள நிறம் அது.

‘வளரும் பவள நிறமும்’

- மற்றச் செல்வர்களைப் போல அவரும் வாகனத்தில் வருவார். மற்றவர்கள் குதிரையும் யானையும் வாகனமாகக் கொண்டு வருவார்கள்.  அவர் காளை மாட்டையே தம் வாகனமாகக் கொண்டவர்; தருமத்தையே விடையாகக் கொண்டு ஊர்பவர். அது மிக்க பெருமையையும்,  வலிமையையும் உடையது; அவரை நம்பினவர்களுக்கு அரணாக நிற்பது.

‘அண்ணல் அரண் முரண் ஏறும்’

- அவர் அணியும் அணிகலன் எது தெரியுமா? பொன்னும் நவமணிகளும் பிறர் பூணக் கொடுத்துவிட்டு நஞ்சுமிழும் நாகத்தையே தம்  திருமார்பில் அணிந்திருக்கிறார், படையும் நடுங்கும் பாம்பு அவர் திருமார்பில் அடங்கி ஒடுங்கி அணிகலனாகப் பளபளக்கிறது.

‘அகலம் வளாய அரவும்’

- இத்தகைய பெருமானே அடியவர்களுக்கு அருள் செய்யும் பொருட்டுக் கெடில ஆற்றின் கரையில் திருவதிகையில் எழுந்தருளியிருக்கிறார். திண்ணிய நல்ல கெடிலப் புனலைத்  தமக்குரிய அபிடேக நீராகக் கொண்டவர் அவர்.

‘திண்ணன் கெடிலப் புனலும் உடையார்’

-  அத்தகைய பெருமானுக்கு உறவானவர் யாம், ஆதலால் நாம் அஞ்சும் பொருள் யாதும் இல்லை. இனிமேல் அஞ்சும்படி வரத்தக்க  பொருள் ஒன்றும் இல்லை’’ என்று உறுதியோடு சொல்கிறார்.

‘உடையார் ஒருவர் தமர்நாம்;
அஞ்சுவது யாது ஒன்றும் இல்லை;
அஞ்ச வருவதும் இல்லை.’

- உலகிலுள்ள வலிய பொருட்களின் சார்பு பெற்றவர்கள் பலவற்றுக்கு அஞ்சுவதில்லை. எல்லாம் வல்ல எம்பெருமானுடைய துணையைப்  பெற்றவர்களுக்கு நிகழ்காலத்திலும் அச்சம் இல்லை; வரும் காலத்திலும் அச்சம் இராது. அவர்கள் அஞ்சும்படி வரத்தக்கது யாதுமே இல்லை.இந்தத் திண்ணிய நிலை எல்லோருக்கும் வருமா? அதற்குரிய வகையில் முயன்றால் நிச்சயமாக வரும்.

‘கண்ணவெண் சந்தனச் சாந்தும்
சுடர்த்திங்கட் சூளா மணியும்
வண்ண உரிவை உடையும்
வளரும் பவள நிறமும்
அண்ணல் அரண்முரண் ஏறும்
அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலும்
உடையார் ஒருவர் தமர்நாம்;
அஞ்சுவதி யாதொன்றும் இல்லை;
அஞ்ச வருவதும் இல்லை.’

- திருநீறாகிய வெண்மையான சந்தனப் பூச்சையும், ஒளியையுடைய சந்திரனாகிய முடியில் அணியும் மணியையும், நிறம் பெற்ற தோலாகிய  உடையையும், பார்க்கப் பார்க்கப் புதியதாகத் தோன்றி வளரும் பவளத் திருமேனியையும், பெருமையையும் அன்பர்களுக்குப் பாதுகாப்பாகிய  இயல்பையும் வலிமையையும் உடைய இடப வாகனத்தையும், திருமார்பில் அணிகலனாகத் தோன்றும் பாம்பையும், திண்மையும் நன்மையும்  உடைய கெடில ஆற்றையும் உடையவராகிய சிவபெருமானுடைய அடியார் யாம்;  ஆதலால் நாம் அஞ்சும் பொருள் யாது ஒன்றும் இல்லை;  இனி அஞ்சும்படி வரப்போவது யாெதான்றும் இல்லை.

இறைவன் அடியார்களுக்கு எதனாலும் அச்சம் இல்லை என்பது கருத்து.நான்காம் திருமுறையில் இரண்டாவது திருப்பதிகத்தில் வரும்  முதற்பாட்டு இது.

- வாகீசகலாநிதி கி.வா.ஜகந்நாதன்
அவர்கள் எழுதிய ‘அப்பர் தேவார அமுது’ நூலிலிருந்து.

மந்திரங்கள் என்றால் என்ன?

மந்திரங்கள் என்று சொல்லப்படுபவை ஒலிக்கூட்டங்களாகும். ஒலிக்கூட்டங்கள் எப்படி மந்திரங்கள் என்ற சிறப்பைப் பெறுகின்றன என்று  சிந்திக்க வேண்டும். உதாரணமாக ‘நமசிவாய’ என்ற ஒரு சக்திவாய்ந்த மந்திரத்தை எடுத்துக்கொள்வோமேயானால் அந்தச் சொல்லின்  பொருளைச் சிந்திக்க வேண்டும். ‘சிவனை வணங்குகிறேன்’ என்ற பொருளையுடையது நமசிவாய என்ற சொல். சாதாரண குழந்தைகூடப் புரிந்துகொள்ளக்கூடிய ‘சிவனை வணங்குகிறேன்’ என்ற இரண்டு சொற்கள் எப்படி சக்தி வாய்ந்த மந்திரமாக மாறின என்பதை ஆழ்ந்து  பார்க்க வேண்டும்.

நம்முடைய முன்னோர்கள், பெரியவர்கள், ஞானிகள், தபசிகள், ரிஷிகள் முதலானவர்கள் நிறைமொழி பேசுபவர்களாக இருந்தார்கள்.  தொல்காப்பியனார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மந்திரங்களைப் பற்றி ஆராய்ந்து மிகச் சிறந்த கருத்து ஒன்றை வெளியிடுகின்றார். ‘நிறைமொழி மாந்தர்’ என்று இந்தப் பெரியவர்களுக்குப் பெயர் வைக்கிறார்.

நிறைமொழி மாந்தர்கள் என்றால் என்ன? நாம் பேசுகின்ற குறைமொழிகளையே எடுத்துக்கொண்டு, அந்தக் குறைமொழிகளை  நிறைமொழிகளாக மாற்றுகின்ற பேராற்றல் வாய்ந்தவர்கள் அவர்கள். அப்படியானால் இந்த ஆற்றல் எங்கே இருக்கிறது? இந்தச் சொற்களிலா?  இல்லை.

சாதாரண சொற்களைத்தான் அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், அந்தச் சொற்களை எடுத்துக்கொண்டு அவர்கள் அவற்றைத்  தம்முடைய ஆற்றல்் காரணமாக, தம்முடைய சக்தி முழுவதையும் அந்தச் சொற்களில் ஏற்றி, ‘இவை மந்திரங்களாக ஆகக்கடவன்’ என்று  ஆணையிடுவதன் மூலம் அவற்றை மந்திரங்களாக மாற்றுகிறார்கள். இதனைத்தான் தொல்காப்பியனார் ‘நிறைமொழி மாந்தர் ஆணையின்  கிளந்த மறைமொழி’ என்று சொல்கிறார். இந்த ஆணையிடுதல் என்பது, குறைமொழியாக உள்ள எழுத்துக்கோவைகள், சொற்கோவைகளை,  சக்தி பெற்ற மந்திரங்களாக மாற்றுவதுதான்.

அப்படியானால் இந்தச் சொற்கள் எப்படி இந்த ஆற்றலைப் பெறுகின்றன என்று சிந்திக்க வேண்டும். எல்லாச் சொற்களுக்கும்  எழுத்துகளுக்கும் Frequencies என்று சொல்லப்படுகிற அதிர்வுகள் உண்டு. இந்த அதிர்வுகள் ஒலி சக்திகளாகும். இந்த அதிர்வுகளை எல்லா  எழுத்துகளும், சொற்களும்  பெற்றிருந்தாலும் எந்த அதிர்வுகளோடு எந்த அதிர்வுகளைச் சேர்த்தால் அவை பயன்படும் என்பதை ஆராய்ந்த  அவர்கள் அறிந்திருந்தார்கள். அப்படி அறிந்திருந்த காரணத்தினாலேதான் இந்தப் பல்வேறு எழுத்துகளை ஒன்று சேர்ப்பதன் மூலம் பல்வேறு  அதிர்வுகளை ஒன்று சேர்த்த புதியதொரு ஆற்றலை அவை பெறுமாறு செய்கின்றார்கள். அப்படி ஆற்றலைப் பெறுமாறு அவற்றைச்  செய்துவிட்ட பிறகு அவை மந்திரங்களாக மாறிவிடுகின்றன.

பல சமயங்களில் அக்ஷரங்கள் என்று சொல்லப்படுகின்ற மந்திரங்களுக்குப் பொருளே இருப்பதில்லை. ஐம், ஹ்ரீம், க்லீம் என்ற பீஜ  அக்ஷரங்கள் எவ்விதமான பொருளையும் தருவதில்லை. பொருளில்லாமல் சொற்கள் உண்டா என்று சிந்திக்க வேண்டும். பொருளில்லாமலும்  சொற்கள் இருக்கலாம். ஆனால், அவை குறைமொழி மாந்தர்களால் பேசப்படும்போது அர்த்தமற்ற ஒலிக்கூட்டங்களாக மாறிவிடுகின்றன.

 ஆனால், நிறைமொழி மாந்தர்கள் வேண்டுமென்றே குறிப்பிட்ட அதிர்வுகளை ஒன்று சேர்க்க வேண்டுமென்று நினைக்கும்பொழுது அந்த  அதிர்வுகளையுடைய எழுத்துகளை ஒன்று சேர்க்கின்றார்கள். அப்படி ஒன்று சேர்த்தபிறகு - ஹ்ரீம் என்ற மந்திரத்தை உண்டாக்கிவிட்ட பிறகு  அது அன்னையின் பூரண சக்தியைப் பெற்றமந்திரமாக இருக்கிறதே தவிர அதற்குமேல் பொருள் ஒன்றும் அதற்குத் தேவையில்லை.

இந்த ஆற்றலைப் பெற்ற அந்த மந்திரங்களை ஓயாமல் திருப்பித் திருப்பிச் சொல்கின்றவர்கள், ஜபிக்கின்றவர்கள் இந்த ஆற்றலைத் தம்முள்  பெற்று விடுகின்றார்கள். ஆகவே பரம கருணையுடையவர்களாகிய நம் முன்னோர்கள் தம்முடைய பேராற்றலை இந்த ஒலிக்கூட்டங்களில்  செலுத்தி, செல்லுமாறு ஆணையிட்டு பிறகு அவற்றை நமக்குத் தந்திருக்கிறார்கள். அவற்றைத்தான் மந்திரங்கள் என்று சொல்லுகிறோம்.

இந்த மந்திரங்களை தொல்காப்பியனார் ‘மறைமொழி’ என்று சொல்லுகிறார். ஏன் மறைமொழி என்று சொல்ல வேண்டும்? சாதாரணமாகப்  பார்க்கும்போது அவற்றிலுள்ள ஆற்றல் நமக்குத் தெரிவதேயில்லை. ‘ஹ்ரீம்’ என்ற சொல்லை யாரும் உச்சரிக்கலாம். ஆனால், அதன் உள்ளே  இருக்கின்ற ஆற்றலை நாம் புரிந்துகொள்வதேயில்லை. ஆகையினால்தான் அது மறைமொழி. அப்படியானால் மறைமொழி என்றால் அதனைப்  புரிந்துகொள்ளக்கூடிய தகுதியை, சக்தியைப் பெற வேண்டும், அப்பொழுது அந்த மந்திரங்கள் பேராற்றல் பெற்றவையாக நமக்குத் தெரியும்.  இப்படிப்பட்ட சொற்களை ஒன்று சேர்ப்பதன் மூலம் மந்திரங்களைக் காண்கிறார்கள். இப்படிக் கண்ட மந்திரங்களை அவர்கள் சொற்கோவைகளாக, அதிர்வுகளின் கோவைகளாக வெளிப்படுத்தி எங்கெங்கே எவ்வப்போது தேவையோ அங்கெங்கே பயன்படுத்திக்  கொள்ளுமாறு நமக்கு வழங்கியிருக்கிறார்கள்.

திருக்கோயில்களின் அடிப்படைத் தத்துவமும் இதுதான். கோயில்களில் கருங்கல்லினாலே செய்யப்பெற்ற விக்கிரகங்கள் கருவறையில் பதிக்கப்  பெறுகின்றன. அவை சாதாரணக் கல்லினாலே செய்யப்பட்டவையே என்பதை மறந்துவிடக்கூடாது. ஆகவே அந்த விக்கிரகங்களைப்  பதிப்பதற்கு முன்னால் அவற்றுக்குரிய சக்கரங்கள் எழுதி அவற்றின் அடியிலே வைத்து மேலே விக்கிரகங்களைப் பதித்து விடுகிறார்கள்.

நம் முன்னோர்கள் ஒவ்வொரு மூர்த்திக்கும் ஒவ்வொரு சக்கரத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இது செப்புத் தகடுதான். அதில் அந்த அந்த  மூர்த்திக்குரிய கோணங்களை எழுதி, கோணங்களுக்குள் அவ்வவற்றுக்குரிய சில எழுத்துகளை எழுதியபின் அவை சக்தி வாய்ந்த சக்கரங்களாக  மாறிவிடுகின்றன. இந்தச் சக்கரங்களை அடியில் வைத்து மேலே விக்கிரகங்கள் பதிக்கப்படும்போது அந்த விக்கிரகங்கள் சக்தி பெறுகின்றன.  அந்தச் சக்தி முழுமை பெற்று விளங்குவதற்காகத்தான் குடமுழுக்கு - கும்பாபிஷேகம் என்று செய்கிறார்கள். குடமுழுக்கு செய்யும்போது  யாகசாலை அமைத்து, அதில் ஒவ்வொரு மூர்த்திக்கும் ஒரு கடம் அதாவது, குடம் வைத்து பூஜிக்கிறார்கள். கடம் என்பது சாதாரணமாக  உலோகத்திலே செய்யப்பட்ட பாத்திரம்தான். அதன் புறத்தே முப்புரி நூலினால் சுற்றி, உள்ளே நீரை நிரப்பி மேலே மாவிைல, தர்ப்பை,  தேங்காய் வைத்து மூர்த்தியை ஆவாஹனம் செய்து ஜபம் செய்வார்கள்.

குறிப்பிட்ட மூர்த்திக்குரிய மந்திரங்களை, ஆசார்யனாக இருக்கிறவன் எதிரே இருந்த ஐந்து நாள் அல்லது ஏழு நாள் அல்லது மூன்று நாள்  என்ற முறையில் குறிப்பிட்ட ஆவர்த்திகள் மந்திர ஜபம் செய்வார்கள். இதனால் கடத்திலுள்ள நீர் சக்தி வாய்ந்த அந்த மூர்த்திக்குரிய எல்லா  ஆற்றலையும் பெற்றதாக ஆகிவிடுகிறது. அந்த கடத்திலுள்ள நீரை குடமுழுக்கு அன்று கர்ப்பகிருஹத்திலுள்ள மூல மூர்த்திக்கும், அந்த  மூலமூர்த்தி அமர்ந்திருக்கும் கோபுர கலசத்திற்கும் அபிஷேகம் செய்வார்கள். அதன்பிறகு அந்த மூர்த்தியை யார் சென்று வணங்கினாலும் தன்  அருள் சக்தியை அவர்களுக்கும் வழங்குகின்ற ஆற்றலை அந்த விக்கிரகம் பெற்று விடுகிறது.இதுபோல இருக்கின்ற ஒன்றை நாம்  புரிந்துகொள்ள வேண்டுமேயானால் - கார்களிலுள்ள பாட்டரி என்று சொல்கிறார்களே அவற்றை கொஞ்சம் மனத்தில் வாங்கிக்கொண்டு  பார்க்க வேண்டும். உலோகத் தகடுகள், ஆசிட், தண்ணீர் இரண்டும் கலந்த கலவையிலே அமுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அப்படி அமுக்கி  வைத்துவிட்டால் ஆற்றலைப் பெற்று விடுகிறதா? நிச்சயமாக இல்லை.

இந்த பாட்டரியை டெட் பாட்டரி என்று சொல்வார்கள். எவ்விதமான ஆற்றலும் இல்லாத பாட்டரியாக இருக்கிறது. அதை மின்சாரத்தில்்  வைத்து 40 மணி நேரம் மின்சாரத்தை அதில் ஏற்றிய பிறகு இந்த பாட்டரி முழு சக்தி வாய்ந்ததாக ஆகிவிடுகிறது. பிறகு அதன்மீது கையை  வைத்தால் நிச்சயமாக மின்சாரம் பாய்ந்து ஊறு விளைவிக்கும்.அதுபோலத்தான் கருங்கல்லினாலான சாதாரண விக்கிரகங்களாக இருந்த  உருவங்கள், குடமுழுக்கு செய்யப்படும்போது, கடங்களில் இருந்த தண்ணீரை அவற்றின் மீது ஊற்றிய பிறகு முழு சக்தி வாய்ந்த தெய்வப் படிமங்களாக மாறிவிடுகின்றன.

இன்னும் சில கோயில்களைப் பொறுத்தமட்டில் இந்த ஆற்றல் நாளுக்குநாள் வளரவேண்டுமென்ற பரம கருணையினாலே புலிப்பாணி,  போகர் போன்ற சித்தர்கள் அந்தத் திருக்கோயில்களிலேயே இருந்து தங்களுடைய ஆற்றலை அந்த விக்கிரகங்களுக்கு ஏற்றிக்கொண்டே  இருந்திருக்கிறார்கள். அப்படி இருக்கின்ற காரணத்தினால்தான் ஆயிரக்கணக்கான வருஷங்களானாலும், கோடிக்கணக்கான பக்தர்கள் சென்று  வழிபட்டாலும் அந்த ஆற்றல் குறையாமல் இருந்துகொண்டிருப்பதைக் காண்கிறோம். ஆக கும்பாபிஷேகம் செய்வது என்பது சாதாரணமாக  கருங்கல்லிலே செய்யப்பட்ட படிமத்திற்கு ஆற்றலை வழங்கி அந்த ஆற்றலை மக்களுக்குப் பயன்படுமாறு செய்வதுதான் அடிப்படை  நோக்கமாகும்.

கோபுரங்கள் இருக்கின்றன. கோபுரத்தின் மீது கலசங்கள் இருக்கின்றன.இந்தக் கலசங்களுக்குள்ளும் பலவகையான பொருட்களையிட்டு  நிரப்பி, கலசங்களை கோபுரத்தின் மீது பதித்துவிடுகிறார்கள். இந்தக் கலசங்களோடு கூடிய கோபுரம் ஸ்தூல வடிவமாக இறைவனைக்  குறிக்கிற ஒன்று என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

ஆக ஸ்தூல வடிவமாக இருக்கிற கோபுரங்களுக்கும், உள்ளே சூக்ஷ்ம வடிவமாக இருக்கின்ற விக்கிரகங்களுக்கும் ஒருசேர ஆற்றலைத்  தருவதுதான் குடமுழுக்கு விழாவின் அடிப்படை நோக்கமாகும்.இந்தக் கோயில்களிலுள்ள படிமங்கள் நாளாவட்டத்தில் தங்களுடைய  ஆற்றலை இழக்க முடியுமா என்றால் ஓரளவு இழக்கவும் கூடும். அது எப்படி என்றால் இந்தக் கோயிலுக்கு வருகிற ஆயிரக்கணக்கானவர்கள்,  பதினாயிரக்கணக்கானவர்கள் எத்தனையோ வகையான மாறுபாடுகள், கருத்து வேறுபாடுகள், எண்ணப் போராட்டங்கள் முதலிய பாபங்கள்  நிறைந்து உள்ளே செல்வதால் நாளாவட்டத்தில் விக்கிரகங்களின் ஆற்றல் ஓரளவு குறையவும் கூடும். அதற்காகத்தான் பன்னிரண்டு  ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு செய்ய வேண்டுமென்று சொல்லுகிறார்கள்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு செய்வது என்பது ஸ்தூல, சூக்ஷ்ம வடிவங்களுக்கு ஆற்றலை மறுபடியும் வழங்க  வேண்டும் என்பதற்காகத்தான் என அறிந்துகொள்ளல் வேண்டும். ஆக திருக்கோயில்கள் குடமுழுக்கு அன்று முழு ஆற்றலைப் பெற்று  விடுகின்றன. ஸ்தூலமாக இருக்கிற கோபுரமும், சூக்ஷ்மமாக இருக்கிற விக்கிரகங்களும் ஆற்றலைப் பெறுவதற்குரிய நாள்தான் குடமுழுக்கு  நாளாகும். பலமுறை ஜபிக்கப்பட்ட மந்திரங்கள் தங்கள் ஆற்றலை நீரின் மூலம் விக்கிரகங்களுக்கு ஏற்றுகின்றன என அறிந்துகொள்ள  வேண்டும்.

நிறைமொழி மாந்தர்களால் உண்டுபண்ணப்பட்ட மந்திரங்களை தனியே வீட்டில் இருந்து ஜபித்தாலும், கோயில்களுக்குச் சென்று ஜபித்தாலும்  அதன் ஆற்றலைப் பெற முடியும். சாதாரணமாக மக்கள் இந்த மந்திரங்களை ஒருமுகப்பட்ட மனத்துடன் ஜபிக்க வேண்டுமென்று  சொல்லுவார்கள். இது எல்லோருக்கும் இயலாத காரியம். ஒருமுகப்பட்ட மனத்துடன் ஜபிக்கும்போது அவை நிறைந்த ஆற்றலைத்  தருகின்றன. பல சமயங்களில் ஒருமுகப்பட்ட மனத்துடன் ஜபிக்காவிட்டாலும் அவை பலன் தராமல் போவதில்லை. காரணம் ஒலி  அதிர்வுகள் மந்திரங்களை ஜபிக்கிறபோது உண்டாவதால், வேண்டினாலும், வேண்டாவிட்டாலும் அந்த அதிர்வுகளின் பலன் இருந்தே தீரும்.

மந்திரங்களை ஓயாமல் சொல்வதன்மூலம் இந்த ஒலி அதிர்வுகளினால் ஏற்படுகின்ற பயனைப் பெறுகின்றோம். சிலசமயங்களில் மந்திரங்களை  முழுவதுமாக உச்சரிக்கின்ற நிலை மாறி நம்மையும் அறியாமல் குறைவு, நிறைகள் ஏற்படத்தான் செய்யும். அப்படி ஏற்பட்டாலும் பலன்  குறைவதில்லை என அறிந்துகொள்ள வேண்டும். அறிந்தோ அறியாமலோ மின்சாரத்தில் கைவைத்தால் எப்படி நமக்கு அதிர்ச்சியைத்  தருகின்றதோ அதுபோல இந்த மந்திரங்களை அறிந்து கூறினாலும், அறியாமல் கூறினாலும் அந்த ஒலி அதிர்வுகள் நமக்கு ஆற்றலைத்தரத்தான்  செய்கின்றன.

செப்புத் தகட்டிலே சக்தி வாய்ந்த சக்கரங்களாக அமைவதும், கடத்திலே உள்ள நீரை சக்தி வாய்ந்ததாக மாற்றுவதும் ஓயாமல் தன்னை  ஜபிக்கின்றவர்களுக்குத் தன் முழுசக்தியைத் தருவதும் ஆக விளங்குவது மந்திரங்களாகும்.இவை நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்  மறைமொழியாம் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

- பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள் எழுதிய ‘மந்திரங்கள் என்றால் என்ன?’ புத்தகத்திலிருந்து...