செவ்வாய் தோஷம் நீக்கும் நரசிம்மர்



ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் பூர்ண அவதாரங்களான ராமர், கிருஷ்ணர் அவதாரங்களை அடுத்து மிகவும் போற்றப்படும் அவதாரம் ஸ்ரீநரசிம்ம அவதாரம் ஆகும். இந்தியா முழுவதும் குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் எண்ணற்ற நரசிம்மர்  ஆலயங்கள் உள்ளன. நரசிம்மர் திருவுருவங்களில் உக்ர நரசிம்மர், யோக நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், பிரஹலாத வரத நரசிம்மர் என்று  பலவகை இருந்தாலும் பெரும்பாலா ன ஆலயங்களில் ஸ்ரீமஹாலட்சுமியை தன்  இடது மடியில் அமர்த்தி சாந்தமாக அருள்பாலிக்கும்  ஸ்ரீலட்சுமிநரசிம்மரே காணப்படுகிறார். வைணவ ஆலயங்களிலுள்ள ஸ்ரீசுதர்ஸன மூர்த்தியின் பின்புறம் நான்கு கரங்களில் சுதர்ஸன சக்கரத்தை  ஏந்தியிருக்கும் யோகநரசிம்மரை தரிசிக்கலாம்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள மிகப் பிரபலமான நரசிம்மத்தலம், ஒன்பது நரசிம்மர் ஆலயங்களைக் கொண்ட அஹோபிலமாகும். மேலும்.  வேதாத்ரி யோகானந்த நரசிம்மர், மங்களகிரி பானகாலா நரசிம்மர், அந்தர்வேதி லட்சுமி நரசிம்மர், சிம்ஹாசலம் வராஹ நரசிம்மர், கதிரி  லட்சுமி நரசிம்மர், மட்டபல்லி நரசிம்மர் போன்ற ஆலயங்கள் புராணப் பெருமையும், வரலாற்றுச் சிறப்பும் கொண்ட முக்கியமான  நரசிம்மர் ஆலயங்களாகும்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம் நகர் மாவட்டத்திலுள்ள தர்மபுரி இன்னொரு முக்கியமான நரசிம்மத் தலமாகும். இங்குள்ள  ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மசுவாமி ஆலயத்தில், இரு கருவறைகளில் நரசிம்மர் யோகநரசிம்மராகவும் உக்ரநரசிம்மராகவும் தனித்தனியாக  எழுந்தருளியிருப்பது தனிச்சிறப்பாகும். பொதுவாக யோக நரசிம்மர் அருகில் தாயார் அமைவதில்லை. ஆனால், இங்கு யோகநரசிம்மர்  அருகில் ஸ்ரீமஹாலட்சுமி அமர்ந்திருக்க, இவர் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் என்று போற்றப்படுகிறார். இதுபோன்ற அமைப்பு இந்தியாவில் இந்த  ஆலயத்தில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த ஆலய வளாகத்தில் யமதர்மராஜனுக்கும், பிரம்மாவுக்கும்  தனித்தனியே சந்நதிகள் உள்ளன.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் அஹோபிலம், யாதகிரிகுட்டா, மால்யாத்ரி, சிம்ஹாசலம், தர்மபுரி, வேதாத்ரி, அந்தர்வேதி,  மங்களகிரி மற்றும் பெஞ்சுலகோனா ஆகிய முக்கியமான நவநரசிம்மத் தலங்களில் ஒன்றாக இந்த தர்மபுரி திகழ்கிறது. அன்றாடம்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தரும் இந்த தலத்தில், இரணியனைக் கொன்ற பின் தன் உக்கிரம் தணியும் பொருட்டு  ஸ்ரீநரசிம்மர் வந்து தங்கியதாக தலபுராணம் தெரிவிக்கிறது. கோபம் தணிந்து, யோக முத்திரையில் தன்னை மறந்த யோகநரசிம்மர் கோலத்தில்  இங்கு நரசிம்மர் காட்சிதர, அவருடைய இடப்புறம் ஸ்ரீமஹாலட்சுமி அமர்ந்து அருட்பாலிக்கிறாள்.

கங்கைக்கு நிகரான கோதாவரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள தர்மபுரியில் காசியைப் போன்றே ஏராளமான ஆலயங்கள் இருப்பதால்  இது தட்சிண காசி என்று போற்றப்படுகிறது. மேலும், பிரம்ம குண்டம், யம குண்டம், சத்யவதி குண்டம் போன்ற ஏராளமான புனித  தீர்த்தக் கட்டங்கள் இந்த ஆற்றின் கரையில் இருப்பதால் இத்தலத்தை தெலுங்கு மக்கள் “தீர்த்தராஜமு’’ என்று போற்றுகின்றனர்.

தற்போது இங்கு சிற்றாறாக ஓடிக் கொண்டிருக்கும் பத்ராநதி முற்பிறவியில் ஒரு பெண்ணாக இருந்ததாகவும், எப்போதும் மஹாவிஷ்ணுவைப்  பிரியக் கூடாது என்ற ஆர்வத்தில் அந்தப் பெண்ணே ஆறாக இந்த ஆலயத்திற்கு அருகில் ஓடிக் கொண்டிருப்பதாகவும் தலபுராணம்  தெரிவிக்கின்றது. இந்த பத்ராநதி இத்தலத்தில் கோதாவரி நதியோடு சங்கமிக்கிறது.

புராண காலத்தில் யோகிகளும் முனிவர்களும் தவம் செய்த புண்ய க்ஷேத்ரமான தர்மபுரியில் அக்காலத்தில் இப்பகுதியை ஆண்டு வந்த  நரசிம்ம பக்தனாகத் திகழ்ந்த தர்மவர்மன் நரசிம்மர் தனக்கு சாந்த நரசிம்மராகக் காட்சி தரவேண்டும் என்று மஹாவிஷ்ணுவையும்,  பிரம்மாவையும் நோக்கித் தவம் செய்ததாகவும், பிரம்மாவின் அருளால் நரசிம்மர் மன்னனுக்கு சாந்த நரசிம்மராகக் காட்சி கொடுத்ததாகவும்  ஐதீகம். மன்னன் பெயரிலேயே இப்பகுதி தர்மபுரி என்ற பெயரைப் பெற்றுள்ளது. மேலும், இத்தலத்தில் ஏராளமான தர்ம காரியங்கள்  நடைபெற்றதாலும், யமதர்மராஜன் இங்கு நரசிம்மரை வழிபட்டதாலும் இந்த ஊர் தர்மபுரி ஆயிற்று என்றும் கூறப்படுவதுண்டு.

ஐதராபாத் சுபேதரராக இருந்த ரஸ்தம் தில்கான் என்பவர் ஔரங்கசீப் உதவியோடு இங்கிருந்த நரசிம்மர் ஆலயத்தை மசூதியாக மாற்றியதாகத்  தெரிகிறது. அப்போது இருந்த ஆலயம் பாத நரசிம்மசுவாமி ஆலயம் என்றும், பின்னர், 1448ம் ஆண்டு மீண்டும் புதிதாக அமைக்கப்பட்ட  நரசிம்மர் ஆலயம் கோத்தா லக்ஷ்மிநரசிம்மசுவாமி ஆலயம் என்றும் அழைக்கப்படுகின்றன.

பக்தர்கள் கோதாவரி ஆற்றில் புனித நீராடி ஆற்றின் கரையில் உள்ள இத்தலத்தின் க்ஷேத்ர பாலகரான அனுமனை வழிபட்டு பிறகு நரசிம்மர்  ஆலயத்திற்குச் செல்கின்றனர். நரசிம்மர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் ஆறடி உயர பிரம்மாவை வழிபட்ட பின்னர் பக்தர்கள் முதலில்  யோக நரசிம்மரையும், அடுத்ததாக உக்கிர நரசிம்மரையும் தரிசிக்கின்றனர்.

இந்த ஆலய வளாகத்தில் யமதர்மராஜன் தனிச் சந்நதியில் முறுக்கிய மீசையோடும், பாசம், அங்குசம் ஏந்தி காட்சி தருகிறார். தான்  எப்போதுமே ஜீவராசிகளின் உயிர்களை அவரவர் ஆயுள் முடிந்த பிறகு கவர்ந்து செல்லவேண்டிய பொறுப்பையும் அதனால் மனவேதனையும்  கொண்டிருப்பதால் தனக்கு மனச்சாந்தி கிடைக்கும் பொருட்டு யமன் இத்தலத்திற்கு வந்து நரசிம்மரை தரிசித்து மனம் நிம்மதியடைந்ததாக  ஐதீகம். யமன் சந்நதியில் எப்போதும் கண்டா தீபம் என்ற அகண்ட விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. பக்தர்கள் இந்த அகண்ட தீபத்தில்  நல்லெண்ணெய் ஊற்றி வழிபடுகின்றனர்.

இந்தப் பிரார்த்தனையால் அகால மரண பயம் (அபம்ருத்யு பயம்)  நீங்கும் என்பது நம்பிக்கை. யமன் கோதாவரியில் நீராடிய பகுதி  யமகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. பக்தர்கள் தன்னைத் தரிசித்த பின்னர் யமனையும் தரிசித்துச் செல்ல வேண்டும். அப்போதுதான்  தன்னைத் தரிசித்த பலன் கிட்டும் என்று ஸ்ரீநரசிம்மர் அருளியதாகத் தலபுராணம் தெரிவிக்கிறது. இங்கு வந்து ஸ்ரீநரசிம்மரை தரிசித்தால்  செவ்வாய் தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் நீங்கும் என்பதால் இது விவாஹம் மற்றும் செவ்வாய் தோஷ பரிகாரத் தலமாகவும்  வழிபடப்படுகிறது.
 
தர்மபுரி ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலய வளாகத்தில் இந்திரன், குபேரன், ராமர், பலராமர், முரளி கிருஷ்ணர் மற்றும் அனுமன் சந்நதிகளும்  உள்ளன. அனுமன் எட்டு திருமேனிகளில் அருள்பாலிக்கும் அரியதலம் இது. இந்த ஆலயத்திற்கு அருகில் சிவபெருமான் தனி ஆலயத்தில்  ஸ்ரீராமலிங்கேஸ்வரராகக் காட்சி தருவதால் இத்தலம் ஹரிஹர க்ஷேத்ரமாக கருதப்படுகிறது. மேலும் 19வது நூற்றாண்டில் கட்டப்பட்ட  ஸ்ரீவேங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயமும் இங்கு உள்ளது.

இங்கு கருவறையில் எட்டு அடி உயரமான ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் முன் வலக்கை வரதஹஸ்தமாகத் திகழும்படி பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளார். இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் இந்த இரண்டு நரசிம்மர்கள் மட்டுமல்லாது ஸ்ரீவேங்கடேசப் பெருமாளின் அருளும்  கிட்டும் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கை.  தர்மபுரி ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் பங்குனி மாதம் ஒன்பது நாட்கள் நடைபெறும்  பிரம்மோற்சவத்தின்போது நரசிம்ம சுவாமி ஜாத்ரா நடைபெறுகிறது. இதில் யோக உக்ர நரசிம்மர் மற்றும் ஸ்ரீவேங்கடேசப் பெருமாளுக்கு  ஒரே நாளில் ஒரே மேடையில் திருக்கல்யாணங்கள் நடைபெறுவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். தொடர்ந்து இரவு முழுவதும்  நடைபெறும் டோலோற்சவம், தெப்போற்சவம் போன்ற உற்சவங்களிலும் திருக்கல்யாணங்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த  ஆலயத்தில் கூடுகின்றனர்.

தர்மபுரி ஸ்ரீநரசிம்மர் ஆலயம் காலை 5 முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8  மணி வரையிலும் திறந்திருக்கும்.   தெலுங்கானா மாநிலம், கரீம் நகர மாவட்டத் தலைநகரான கரீம்நகரிலிருந்து 67 கி.மீ. தொலைவிலும், ஐதராபாத்திலிருந்து 230 கி.மீ.  தொலைவிலும் தர்மபுரி ஸ்ரீயோக, உக்ர நரசிம்மசுவாமி ஆலயம் உள்ளது.

- விஜயலட்சுமி சுப்ரமணியம்