இரட்டை நோக்கு நந்தி!



கன்னியாகுமரி போன்று நீலாயதாட்சியும் கன்னி என்பதால் நந்தியை அவளுக்கு காவலாக்கினார் ஈசன். ஈசன் - இறைவி இருவரையும்  பார்க்கும் வகையில் தனது வலக்கண் ஈசனையும், இடக்கண் அம்பிகையையும் தரிசிக்கும் வித்தியாசமான தோற்றத்தில் நந்தி இத்தலத்தில்  அருள்கிறார். மும்மூர்த்திகள் பாடிய தலம். இத்தல அம்பிகையின் கண்கள் கருநீலம். எனவே பெயர் நீலாயதாட்சி! கண்ணாடித் தேரில்  அம்பிகை வீதி உலா இத்தல விசேஷம்.  இத்தல இரட்டை நோக்கு நந்திக்கு அறுகம்புல் மாலை அணிவித்தபின், இறைவன், இறைவி,  நந்தியென வழிபட்டு, அபிஷேகம் ஆராதனை செய்து, (தேன் அபிஷேகம் சிறப்பு) 5 நெய் தீபங்கள், 4 சந்தனாதி தைல தீபமேற்றி வந்தால்  பிணிகள் தீரும். திருமணத்தடை நீங்கும். பிள்ளைவரம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

புண்டரீகன் எனும் பக்தர் மனித உடலோடு சொர்க்கம் செல்ல விரும்ப, அவர் தவத்தினை மெச்சி, அவரின் உடலை தன்னுள் ஆரோகணம் செய்து முக்தி தந்தார் இத்தல ஈசன். காயம் எனில் உடல், ஆரோகணம் எனில் தழுவல் எனவே இவர் காரணப்பெயரால்  காயாரோகணர் ஆனார்.

நடனமாடும் பெருமாள்

நடனமாடும் நடராஜர், நர்த்தன கண்ணன், கோபியரோடு ஆடும் கோபாலன் போன்றோரை தரிசித்திருக்கிறோம். நெல்லை, பெருங்குளத்தில்  னிவாச பெருமாள் கோயில் உள்ளது. இத்தலத்தில் அம்மசாரன் என்ற அசுரனை மாயாஜாலங்கள் செய்து, நாட்டியமாடி, மாய்த்த பெருமாள்,  மாயக்கூத்தன் என்ற பெயர் பெற்றார். இவரை பாமரர் நடனமாடும் பெருமாள் என அழைப்பர்.

குதிரை கொண்ட மாரியம்மன்

ராசிபுரம், நித்ய சுமங்கலி மாரியம்மன், நித்திய கல்யாண பெருமாள் போல பெருமை மிக்கவள். இவள் அழகே உருவானவள். திருவிழாக்  காலங்களில் மட்டும் கொடிமரம் நட்டு, பிறகு அகற்றிவிடுவது பெரும்பாலான மாரியம்மன் கோயில்களில் வழக்கம். ஆனால், இங்கு 365  நாட்களிலும் கொடிமரத்தை தரிசிக்கலாம். அம்மனின் ஊஞ்சல், அழகு! இங்கு ஒரு பெரிய குதிரை உண்டு. ஐயனார் கோயில்களில் மட்டுமே  காணப்படும் குதிரை இங்கே காணப்படுவதும் அதிசயம்தான்.

நரமுக விநாயகர்

தும்பிக்கை இல்லாத விநாயகர் சிவகங்கை, திருப்பத்தூர் அருகில் உள்ளார், கண்டர மாணிக்கம் மருதம் பிள்ளையார். அனுமனுக்கு மட்டும்  வடைமாலை இல்லை, இவருக்கும் இங்கு அது  உண்டு. தோல் நோய் போக்குவார். பிள்ளை வரம் வழங்குவார். சக்தி வாய்ந்த விநாயகர்  என பக்தர்கள் இவரை போற்றி வழிபடுகின்றனர்.

சுக்ரீஸ்வரர்!

ஊத்துக்குளி, சுக்ரீஸ்வரரை, மிளகீஸ்வரர் என்பர். இக்கோயில் சிற்பங்களுக்குப் புகழ் வாய்ந்தது. இவருக்கு மிளகு வாங்கி செலுத்துகிறேன்  என பிரார்த்தனை செய்தால் உடலில் மரு தோன்றியிருந்தால் அது விழுந்து, தழும்பே இல்லாமல் ஆகிவிடும். தீராத வினைகளை தீர்த்து  வைப்பவர். இவருக்கு துளசிமாலை சாத்தி வழிபடுகிறார்கள்.

- சு.கெளரீதரன்