இரவில் உலா வரும் அய்யனார்



சுக்காம்பார் கிராமத்தில் உள்ள அய்யனார் ஆலயத்தில் அருள்பாலிக்கிறார் அருங்கரை அய்யனார். 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த  ஆலயம். முகப்பைத் தாண்டியதும் மகாமண்டபமும் அடுத்து கருவறையும் உள்ளன. கருவறையில் இறைவன் அருங்கரை அய்யனார் அமர்ந்த  கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

ஆலயத்தின் முன் மிகப் பெரிய யானை, குதிரை சிலைகள் நம்மை வரவேற்கின்றன. தவிர, பெரிய அளவிலான மூன்று சூலங்களும் எதிரே  உள்ளன. மலையாள கருப்பசுவாமி இங்கு வேல் வடிவில் அருள்பாலிக்கிறார் என்கிறார்கள்.  சித்திரை வளர்பிறையில் தொடங்கி மூன்று  நாட்கள் இங்கு திருவிழா நடைபெறுகிறது. சுற்றுவட்டார கிராம மக்கள் இரண்டாயிரம் பேருக்கும் அதிகமாக வந்து இந்த விழாவில்  கலந்துகொண்டு, மகிழ்ந்து பயன்பெறுகின்றனர். திருவிழாவின் மூன்றாவது நாள் குட்டிக்குடி திருவிழா நடைபெறும்.

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிய அய்யனாருக்கு அன்று ஆடு, கோழி பலியிட்டு வேண்டுதல்களை பக்தர்கள்  நிறைவேற்றிக்கொள்வார்கள். திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களின் உணர்ச்சிபூர்வமான ஆரவாரம் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க  வைக்கும்.

இரவு நேரங்களில் அய்யனார் அந்த கிராமத்தில் மனித உருவில் நடமாடுவாராம். அதை பலர் கண்கூடாக பார்த்ததாகவும் கூறுகின்றனர்.   ‘‘ஊரின் காவல் தெய்வம் எங்கள் அய்யனார். ஊரை காக்க வேண்டியது அவரது பொறுப்பு. தனது கடமையை நிறைவேற்ற இரவில் அவர்  உலா வருவதில் என்ன வியப்பு இருக்கிறது? அவரால்தான் நாங்கள் நலமாகவும் செழிப்பாகவும் இருக்கிறோம்’’ என்கிறார்கள் அவர்கள். 
ஆலயத் திருச்சுற்றின் தென்திசையில் பராசக்தியின் சந்நதியும், எதிரே பலிபீடமும் உள்ளன.

அடுத்து சப்த கன்னியர் சந்நதி. பெண் பக்தர்கள் தங்களுக்கு நல்ல கணவன் அமைய வேண்டும், குழந்தை பேற்றினை தர வேண்டுமென  வேண்டிக் கொள்கின்றனர். புதிதாக மணமான பெண்கள், தங்கள் கணவன் பாசத்தோடும் நேசத்தோடும் நடந்து கொள்ள வேண்டுமென்கிற  கோரிக்கையை சப்த கன்னியர் முன் சமர்ப்பிக்கின்றனர். அனைவரது வேண்டுதல்களும் நிறைவேறுகின்றன. வேண்டிக் கொண்டவர்கள் சப்த  கன்னியர் சந்நதிக்கு வந்து  ஏழு கன்னியர் கரங்களிலும் வளையல்களை அணிவிக்கின்றனர். புதிய சேலை சாத்துகின்றனர். பொங்கல்  நிவேதனம் செய்து அதை பக்தர்களுக்கு வினியோகித்து மகிழ்ச்சியுடன் இல்லம் திரும்புகின்றனர். அவர்கள் நிறைந்த மனதோடு இல்லம்  திரும்புவதைக் காணும் நவக்கன்னியர் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி! ஆம்,  இந்த சப்த கன்னியரின் முகபாவம் சிரித்த நிலையில்  இருப்பது எங்கும் காண முடியாத காட்சி.

அய்யனாரின் மகாமண்டபத்தில் குழந்தை வேண்டி மணி கட்டும் பழக்கமும் பக்தர்களிடம் உள்ளது.தன்னை நம்பிய பக்தர்களின் நிம்மதியைக்  கெடுக்கும் பகைவர்களை சாட்டை கொண்டு விரட்டி அனைவரையும் நலமாய் வாழ வைக்கிறார் அருங்கரை அய்யனார். அதனால்தான் இந்த  அய்யனார் தனது கரத்தில் நீண்ட சாட்டையை சுழற்றியபடி காட்சியளிக்கிறார்.கல்லணை-திருவையாறு பேருந்து சாலையில்  கல்லணையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது சுக்காம்பார்.

- ஜெயவண்ணன்