அபூர்வ ஸ்லோகம்



தாயே, உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்!

பொதுவாகவே அமாவாசை நாளை நம் முன்னோர்களை நினைவுகூரும் நாளாக நாம் கடைபிடித்து வருகிறோம். அந்தவகையில் தை  அமாவாசை (இந்த வருடம் 8.2.2016 அன்று) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சூரியனின் உத்திராயணப் பயணம் ஆரம்பிக்கும்போது வரும்  முதல் அமாவாசை என்பதாலேயே இந்த முக்கியத்துவம். நீத்தார்கடன் என்ற, நம் முன்னோர்களுக்கு நன்றி தெரிவிக்கும் இந்தப் புனித நாளில்  ஆதிசங்கரர் அருளிய ‘மாத்ரு பஞ்சகம்’ ஸ்லோகங்களைப் படித்து நம் மூதாதையரை, குறிப்பாக தாய், பாட்டி, கொள்ளுப்பாட்டி முதலான  மாதாக்களின் மேன்மையை நினைவுகூர்வோம்; அவர்களது ஆசியைப் பெறுவோம்.

பாரத கலாசாரப்படி ஒருவன் துறவியாகிறான் என்றால், அவன் தன்னுடைய உற்றம், சுற்றம், சொத்து, சுகம் எல்லாவற்றையும்  துறப்பவனாகவே இருக்கிறான். ஆனால், அவன் தன் தாய்ப் பாசத்திடமிருந்து மட்டும் துறவு கொள்ள வேண்டியதில்லை என்பது ஒரு  விதிவிலக்காக அமைந்திருக்கிறது. இந்தவகை துறவை ஸ்ரீஆதிசங்கரரும், மகான் பட்டினத்தாரும் மேற்கொண்டிருக்கிறார்கள் என்பது நமது  ஆன்மிக சரித்திரம். ஆதிசங்கரர் கேரளத்தைச் சேர்ந்த காலடியில் பிறந்து, தன் காலடியால் இந்த பாரத தேசம் முழுவதையும் மூன்று முறை  சுற்றி வந்து, ஹிந்து மதத்தை ஆறு பகுதிகளுக்குள் ஒருங்கிணைத்து, நான்கு மடங்களை  நிறுவி, 32 வயதில் இவ்வுலக வாழ்க்கையைத்  துறந்தவர்.
 
பட்டினத்தார் செல்வச் செழிப்புமிக்கக் குடும்பத்தில் பிறந்து, மிகப் பெரிய வணிகராக வளர்ந்து, ஒரே நாளில் ‘காதறுந்த ஊசியும் வாராது  காண் கடை வழிக்கே’ என்று சொந்த மகனே அறிவுறுத்த, தன் உடைமைகள், சொத்து, மனைவி மக்கள் என்று அனைத்தையும் துறந்துவிட்டு  கோவணாண்டியாக இறை தரிசனத்தைத் தேடி புறப்பட்டுவிட்டவர்.  இந்த இருவரும் எல்லாப் பற்றுகளையும் துறந்தாலும், தமது  அன்னையின் மேலுள்ள தொப்புள்கொடி பாசத்தை மட்டும் அறுக்க இயலாதவர்களாக இருந்தது வியப்புக்குரியது. தாயைவிட்டு தொலைதூரம்  சென்றுவிட்டாலும், அந்தத் தாய்க்குச் செய்யவேண்டிய ஈமக்கிரியைகளைத் தாமே இயற்றி, தம் துறவுக்குப் புது அறம் சேர்த்தார்கள்.

ஆதிசங்கரர் ஆபத்ஸன்யாஸம் எடுத்துக்கொள்ள நேர்ந்தபோது தன் மகன் எப்படியாகிலும் உயிருடன் இருந்தால் போதும், மரணத்தின்  வாயினின்றும் முதலையின் வாயினின்றும் அவன் மீண்டால் போதும், சன்னியாசம் காரணமாக அவனை தினந்தோறும் பார்க்கக்கூடிய  வாய்ப்பு தனக்குக் கிடைக்காவிட்டாலும், எங்கேனும் ஓரிடத்தில் அவன் சௌக்கியமாக இருக்கிறான் என்ற நினைவே தனக்குப் பெரிய  நிம்மதி என எண்ணி தாயார் சங்கரனை ஸன்யாஸம் எடுத்துக்கொள்ள அனுமதித்தார். அந்தச் சமயத்தில் ப்ரைஷோச்சாரண மந்திரத்தைக் கூறி  ஆபத்ஸன்யாஸம் எடுத்துக் கொண்ட பகவத்பாதாள், தான் எங்கிருந்தாலும் நலமுடன் வாழவேண்டும் என்ற தாய்மை உணர்வுக்கு  மதிப்பளிக்கும் வகையில் அன்னையின் வயோதிக கட்டத்தில் அல்லது அவரது உயிர் பிரியும் நிலையில் அன்னையின் ஈமச்சடங்குகளை,  அவளுடைய ஒரே மகன் என்ற உரிமையில் தான் கட்டாயம் வந்து அவள் விருப்பத்தை நிறைவேற்றுவேன் என்று உறுதி கூறினார். இந்தத் தன்  முடிவுக்குத் தான் ஏற்றிருக்கும் சன்யாசம் ஒரு தடையாக இருக்காது என்றும் அவர் உறுதியளித்தார்.
 
“என் அம்மையே, நீங்கள் எப்போது நினைத்தாலும், அது பகலோ, இரவோ, இரண்டுக்கும் நடுவான பொழுதோ எப்போதாக  வேண்டுமானாலும் இருக்கட்டும், நீங்கள் பிரக்ஞையுடன் இருந்தாலும், பிரக்ஞை இழந்த நிலையில் இருப்பினும்,அல்லது  துயருற்றிருந்தாலும், என்னை நீங்கள் நினைத்த மாத்திரத்தில் மற்ற எல்லா பணிகளையும் விட்டுவிட்டு உன்னிடம் வருவேன். நீங்கள் உயிர்  நீத்தால் உங்கள் இறுதிக் கடன்களை நானே செய்வேன். நீங்கள் என்னை நம்பலாம்,’ என்று கூறினார். ஆதிசங்கரர். அதேபோல, சிருங்கேரியில்  அவர் முகாமிட்டிருந்தபோது தனது அன்னைக்கு இறுதிக்காலம் நெருங்கிவிட்டது என்று உணர்ந்து உடனடியாகக் காலடி திரும்பினார்.தன் மகிமையால் தேவலோக விமானத்தில், வேத வாக்கியங்கள் ஒலிக்க, தன் தாயைப் புண்ய லோகத்திற்கு, மோட்ச பதத்திற்கு  அனுப்பிவைக்க வந்தார்.

ஆனால், காலடி ஊரில் இருந்த பழமைவாதிகள் ‘ஒரு சந்நியாசி தன் தாயாரேயானாலும் அவருடைய வீட்டுக்குள் நுழைய  அனுமதிக்கவில்லை. ஆனால், தாயோடு ஒரு மகவுக்கு ஏற்பட்ட உறவு, துறவினால் அழிக்க முடியாதது என்று கூறிய ஆதிசங்கரர் தன்னுடைய  காவி உடையை நீக்கிவிட்டு, அன்னைக்குப் பணிவிடை செய்தார். பிரம்மத்தை உணர்ந்த ஞானி தன்னுடைய மகன் என்பதை உணர்ந்திருந்த  அந்த அன்னை ஆர்யாம்பாள், ஆதிசங்கரரிடம் தனக்கு பிரம்ம ஞானத்தைப் போதிக்க வேண்டும் என்று உயிர் பிரியும் தருவாயில் கேட்டாள்.  உடனே சிவ புஜங்கம் மற்றும் விஷ்ணு புஜங்கம் ஆகிய ஸ்லோகங்களை ஆதிசங்கரர் பாடினார். அதைக் கேட்டுக் கொண்டே அந்தத் தாயின்  உயிர் பிரிந்தது.

பிறகு ஆதிசங்கரர் தன் தாயின் பூத உடலுக்கு, ஊரார் மற்றும் உறவினரின் எதிர்ப்புக்கிடையே, தனது வீட்டுப் பின்புறமிருந்த வாழை  மட்டைகளை அடுக்கித் தன் யோகத் தீயினால் ஸம்ஸ்காரம் செய்தார். பிறகு தன் தாய் தனக்குச் செய்தவற்றையெல்லாம் நினைத்து அடங்காத்  துயருற்றவராக பின்வரும் ஐந்து ஸ்லோகங்களைப் பாடினார். ‘மாத்ரு பஞ்சகம்’ என்ற இத்துதி உலகப் புகழ் பெற்றது.

மாத்ரு பஞ்சகம்
ஸ்தாம் தாவதியம்ப்ரஸூ தி ஸமயே துர்வார
சூலவ்யதா
நைருச்யம் தனுசோஷணம் மலமயீ சய்யாச
ஸாம்வத்ஸரீ
ஏகஸ்யாபி ந கர்ப்ப பாரபரண க்லேசஸ்ய
யஸ்யாக்ஷம:
தாதும் நிஷ்க்ருதி முன்னதோபி தனய: தஸ்யை
ஜனன்யை நம:

பொதுப் பொருள்: தனது கீர்த்தி, தான் செய்த காரியம் எதுவானாலும் இருக்கட்டும்; எனது தாயார் என்னை கர்ப்பத்தில் வைத்து ஒவ்வொரு  நிமிஷமும் என்னைத் தாங்கியபோது அவள் அடைந்த உடல் துன்பத்துக்குப் பிரதி உபகரமாக நான் ஏதாவது செய்திருக்கிறேனோ?  அதுமட்டுமா, பிரசவ சமயத்தில், தாங்கிக்கொள்ள இயலாததும், பிறரால் பங்கிட்டுக்கொள்ளவும் முடியாததுமான, அவள் அனுபவித்த  சூலைவலி என்கிற கொடுமையான ஒரு வலிக்கு நான் என்ன கைம்மாறு செய்திருக்கின்றேன்?இது மட்டுமா? என்னைப் பிரசவித்ததும், என்  உடல்நலத்தைப் பாதுகாக்க, தான் கொஞ்சமும் ருசியில்லாத உணவைச் சாப்பிட்டு ஜீவித்த அந்தத் தியாகச் செம்மலுக்கு நான் என்ன பரிகாரம்  செய்திருக்கிறேன்? தூக்கமில்லாமல், சரியான உணவு இல்லாமல் தன் உடலை இளைக்க வைத்துக்கொண்டு, என்னை அரவணைத்தபடி எனது  மலத்திலேயே படுத்துக்கொண்டு ஒரு வருஷம் என்னைக் காத்த தாயாருக்கு நான் என்ன செய்திருக்கிறேன்? தன்னைக் கஷ்டப்படுத்திக்  கொண்டு அளவற்றப் பொறுமையுடன் காப்பாற்றிய தாயாருக்கு அவளுடைய குழந்தைகள் பிரதியுபகாரம் செய்ததுண்டா? யாராலும் அந்தத்  தியாகத்துக்கு சமமாகப் பிரதியுபகாரம் செய்ய முடியாது. எனவே அம்மையே, இப்போதைக்கு என்னால் செய்ய முடிந்த ஒரே விஷயம் உமக்கு  நமஸ்காரம் செய்வதுதான்; ஏற்றுக்கொள்ளுங்கள் தாயே.

குருகுல முபஸ்ருத்ய ஸ்வப்ன காலேது     த்ருஷ்ட்வா
யதி ஸமுசித வேஷம் ப்ராவ்ருதோமாம் த்வ
முச்சை:
குருகுல மத ஸர்வம் ப்ராரு தத்தே ஸமக்ஷம்
ஸபதி சரண யோஸ்தே மாதரஸ்து ப்ரணாம:

நான் குருகுலக் கல்வியை மேற்கொண்டிருந்தபோது ஒருநாள், அம்மையே நீங்கள் தன்னை மறந்து தூங்கிவிட்டீர்கள். அந்தத் தூக்கத்தில் நான்  சன்யாசியானதுபோல் ஒரு கனவைக் கண்டு, திடுக்கிட்டு எழுந்து பதறியடித்துக்கொண்டு, அழுதவண்ணமாய் குருகுலம் வந்து கதறினீர்கள்.  அதைப் பார்த்து குருகுலவாசிகளும் கதறினார்கள், என்மீதான உங்கள் பாசத்தைக் கண்டு அவர்கள் நெக்குருகினார்களே, என் தாயே, உமக்கு  நமஸ்காரம்.

ந கஸ்தம் மாகஸ்தே மரண மையே
தோயமபி வா
ஸ்வதாவா நோ தத்தா மரண திவஸே ச்ராத்த
விதினா
ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரக மனு:
அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதர
துலாம்

அம்மையே, நீங்கள் முக்தியடையும் சமயத்தில், உங்களுக்குக் கொஞ்சம் ஜலமாவது வாயில் விட்டேனா? பிறகும் ஸ்வதா மந்திரத்தினால்  ச்ராத்தம், தர்ப்பணமாவது செய்தேனா? உங்களது முக்தி சமயத்தில் தாரக மந்திரமாவது உங்கள் காதில் ஓதினேனா? அச்சமயம் எனக்குக்  கிடைக்காததாலும், எதுவும் செய்ய அதிகாரமில்லாததாலும், சன்யாசியானதாலும் எந்த வைதீகமும் அனுஷ்டிக்க முடியாது போனதாலும்,  மனம் தவிக்கின்ற உங்களது மகனான என்னிடம் தயவுசெய்ய வேண்டுமம்மா! உங்களது கமல பாதங்களைச் சரணடைந்து
வேண்டுகின்றேன் தாயே.

முக்தாமணிஸ்த்வம் நயனம் மமேதி
ராஜேதி ஜீவேதி சிரம் ஸ¤ தத்வாம்
இக்யுக்தவத்யாஸ்தவ வாசி மாதர்
ததாம்யஹம் தண்டுல மேவசுஷ்கம்

அம்மையே, என்னைக் காணும்போதெல்லாம், ‘என் முத்தே, என் கண்ணே, என் அப்பனே, ராஜா! நீ சிரஞ்சீவியாக இருக்க வேண்டும்’ என்று  எப்பொழுதும் சொல்லி என்னிடத்தில் கருணையையும், அன்பையும், தயையும் கலந்த அம்ருத மயமான சொற்களால் என்னைச் சீராட்டி,  பாலூட்டி, தாலாட்டி என்னை வளர்த்த எனது அன்னைக்கா வாயிலே, வேகாத அரிசியைச் சமர்ப்பிப்பேன்! இதைப் பொறுக்க  முடியவில்லையே அம்மையே! உன்னைச் சரணடைகிறேன்.

அம்பேதி தாதேதி சிவேதி தஸ்மின்
ப்ரஸதி காலே யதவோச உச்சை
க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தேத்
யஹோ ஜனன்யை ரசிதோய மஞ்ஜலி:

தாயே, என்னைப் பெற்றெடுக்கும்போது பொறுக்க முடியாத வேதனை சமயத்தில் ‘அம்மா! அப்பா! சிவபெருமானே, கிருஷ்ணா, கோவிந்த,  ஹரே முகுந்தா’ என்று வலி தாங்கிக்கொள்ளும் உபாயமாக தெய்வங்களை அழைத்த என் கருணைத் தெய்வமே! என் இரு கைகளையும்  உயர்த்தி உங்களுக்கு அஞ்சலி செய்து, உங்களைச் சரணடைகின்றேன்.பெற்ற தாய்க்கு, அவளுடைய இறுதிப் பொழுதில் தன்னை  அர்ப்பணித்துக் கொண்டார் முற்றும் துறந்த சந்நியாசியான, பரமேஸ்வர அவதாரமான ஆதிசங்கரர். முற்றும் துறந்த ஒரு துறவியையே  தாயன்பானது கதறச் செய்தது என்றால் அதற்கு உன்னதமானதொரு காரணமும் உண்டு, பகவத்பாதாள், சாதாரணமான உலகத்தில் நாம்  இன்று காணும் சந்நியாசிகளைப் போன்றவர் அல்லர்.

தன் காலத்துக்குப் பின் வரக்கூடிய சந்நியாசிகளுக்கெல்லாம் வழிகாட்டத் தோன்றியவர். ‘தாயிற் சிறந்த கோயிலில்லை’ என்னும் சாஸ்திர  வாக்கியத்தை உறுதிபடுத்தத் தோன்றியவர் அவர். ஒருவன் பரம்பொருளில் லயித்த மனதினனாக சிறிது காலம் இருந்தான் என்றாலும்கூட,  அப்படிப்பட்ட சாதகன் எல்லாப் புண்ய க்ஷேத்ரங்களிலும், நதிகளிலும், குளங்களிலும் ஆங்காங்கு நீராடிய பலனையும், பூவுலகம்  அனைத்தையும் தானமாகத் தந்த பலனையும், ஆயிரம் யாகங்களைச் செய்த பலனையும், எல்லாத் தெய்வங்களையும் வழிபட்ட பலனையும்,  தன் முன்னோரை பிறவிச் சுழலினின்றும் மீட்ட பலனையும் அடைந்தவராக மூவுலகினாலும் வழிபடத்தகுந்தவராக ஆகிறான் என ‘லகுயோக  வாஸிஷ்டம்’ கூறுகிறது.

இந்த அடிப்படையில் மஹாப்ரம்ம ஞானியான ஆதிசங்கரரைப் பற்றிக் கூறவும் வேண்டுமோ! அவரைப் பெற்றெடுத்த தாய்-தந்தையின்  மகத்துவத்தை விவரிக்கதான் இயலுமோ? அதிலும் முன்னறி தெய்வமான அவரது தாயாரின் பெருமை அளப்பரியது. அவரைப் போன்றதொரு  மாமுனி தோன்றிய குலத்தின் அறுபது தலைமுறை முன்னோரும், அறுபது தலைமுறை பின்னோரும் உய்வை அடைகிறார்கள். மனுதர்ம  சாஸ்திர காலத்திலிருந்து எல்லா சாஸ்திரங்களிலும் தாயாரின் உயர்வைக் கூறுகின்ற வாக்யங்களை காண்கிறோம். மனு, ‘‘ஒரு மகன் நூறு  வருடங்கள் பாடுபட்டாலும் தன் பெற்றோருக்குத் தான் பட்ட பிறவிக் கடனைத் தீர்க்க முடியாது’’ எனக் கூறுகிறார் :

பெற்றெடுத்து, அதற்குப் பின் வளர்க்கும் போதும் தாய், தந்தை எடுத்துக் கொள்ளும் சிரமத்திற்கு ஒரு நூறாண்டு உழைத்தாலும் ஒருவன்  பிறவிக்கடன் தீர்ப்பது அரிது. சாணக்யரும் தன் நீதி சூத்திரத்தில் தாயின் பெருமையை, ‘‘தாயே தலை சிறந்த குருவாவாள்; எந்நிலையிலும்  அவள் காக்கப்பட வேண்டியவள். ஒருவனுடைய ஆத்மாவுக்கு உயிரும் உடலும் கொடுப்பவள் அவளே என சங்கர பகவத்பாதாள்  விளக்குகிறார்.கேரளத்தில் ஓர் ஆதிசங்கரர் போலவே, தமிழகத்தில் பட்டினத்தாரும் தன்னுடைய துறவுக் கோலத்தைத் துறந்து தனது தாயின்  இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்து விடுகிறார்.இவ்வுலக வாழ்க்கையில் எதிலும் சாரம் இல்லை என்றும், அணிந்திருந்த அரை வேட்டி  உள்பட எல்லாப் பந்தங்களும் சுமையாகப் போய்விட்டன என்றும் பற்றற்ற நிலையில் பாடிய பட்டினத்தாருக்கும் தனது தாயின் மரணம்  தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்துகிறது.அப்போது அவர் பாடிய பாடல்கள் கேட்பவர் நெஞ்சை உருக்கும் தன்மை கொண்டவை:
 
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யவிரு கைப்புறத்தி லேந்திக் கனகமுலை  தந்தாளை எப்பிறப்பிற் காண்பேன் இனி

- என்று பாடுகிறார் பட்டினத்தார்.

அடுத்த பாடல்களில் எப்படிப்பட்ட அன்னைக்கு தான் தீ மூட்ட நேரிட்டது என்பதை உள்ளம் உருகப் பாடுகிறார்:

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும் கட்டிலிலும் வைத்தென்னை காதலித்து முட்டச் சிறகிலிட்டு காப்பாற்றிச் சீராட்டிய  தாய்க்கோ விறகிலிட்டுத் தீ மூட்டுவேன்

- என்றெல்லாம் பாடி விட்டு, அடுத்த இரு பாடல்களில் தாயின் உடலில் தான் வாய்க்கரிசி போட நேர்ந்ததை எண்ணிக் கதறி அழுகிறார்  பட்டினத்தார்.

அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்குவரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் -ருசியுள்ள தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ மானே  என அழைத்த வாய்க்கு அள்ளி இடுவது அரிசியோ தாய்தலை மேல் கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் - மெள்ள முகமேல் முகம்வைத்து  முத்தாடி என்றன் மகனே எனஅழைத்த வாய்க்கு.மேற்கண்ட இரு பாடல்களும் ஆதிசங்கரரின் மாத்ரு பஞ்சகத்தில் வரும் நான்காவது மற்றும்  ஐந்தாவது பாடல்களை அப்படியே ஒத்திருப்பதைக் காணும்போது வியப்பாகத்தான் இருக்கிறது! இரு துறவிகளும்தான் எப்படி ஒன்றேபோல்  வருந்தியிருக்கிறார்கள்! தாயினுடைய உடல் தீப்பற்றி எரிவதைப் பார்த்து நெஞ்சு வெடித்துக் கதறுகிறார் பட்டினத்தார்:

வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை

ஆனால், ஒன்பதாவது பாடலில் நெஞ்சைப் பிளக்கும் சோகத்தைப் பிழிந்து கொடுத்த பட்டினத்து அடிகள், கடைசிப் பாடலில் சுய உணர்வு  பெற்று எழுகிறார்.வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள் நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் - பால்தெளிக்க எல்லோரும்  வாருங்கள் ஏதென்று இரங்காமல் எல்லாம் சிவமயமே யாம்.