வரும்... ஆனா, வராது!



மது... மயக்கம் என்ன?

ஆல்கஹால் பழக்கத்துக்கு முன் அப்படி ஓர் அற்புத வாழ்க்கை எனக்கு அமைந்திருந்தது!
- ஹார்வி மார்ட்டின்

மூளை, கல்லீரல், இதயம், சிறுநீரகம் என உடலின் பிரதான உறுப்புகளை மது என்னவெல்லாம் செய்யும் என்பதை நாம் அறிவோம். உறுப்புகளோடு நிறுத்துவதில்லை...  உடலுக்கு அவசியமான உயிர்ச்சத்துகளையும் விட்டு வைக்காது இந்தப் பழக்கம்!

உடலில் சேரும் ஒவ்வொரு வைட்டமினோடு மட்டுமல்ல... அதன் செயல்பாடுகளிலும் குறுக்கிடுகிறது குடி.

குடிநோயாளிகள் மற்றும் அதீதமாகக் குடிப்பவர்கள் அனைவருக்குமே, கல்லீரலில் வைட்டமின் ஏ சத்தானது மிகக்குறைவாகவே சேரும். மதுவோடு புகையும்
ஊதுபவர்களுக்கு இன்னும் மோசம்.

வைட்டமின் சி சத்தானது, குடலால் கிரகித்துக் கொள்வதையும் மது முட்டுக்கட்டை போட்டு தடுக்கும்.

தயாமின் என்கிற வைட்டமின் பி-1 உடலில் சேர்வதிலும், ஆல்கஹால் குறைபாடு உண்டாக்கும். அதோடு, அதீத குடியினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு காரணமாக,
தயாமின் ஈர்ப்பு இன்னமும் குறையும்.

தயாமின் குறைபாட்டை சாதாரணமாக எண்ண வேண்டாம்... இது மூளையின் செயல்பாட்டிலேயே பாதிப்பை ஏற்படுத்தி, சிந்தனைத்திறன், நினைவாற்றல் ஆகியவற்றையும் குலைக்கும்.

வைட்டமின் பி வகையைச் சேர்ந்த folate எனும் உயிர்ச்சத்து, உடலின் இரும்புச்சத்தைப் பாதுகாக்கிறது. ஆல்கஹால் உடலில் நுழைகையில், இந்த உயிர்ச்சத்தின் செயல்பாடுகளை நிறுத்தி, வெளியே துரத்துகிறது.

கல்லீரலில் இருந்து வெளித்தள்ளப்பட்டு, ரத்தத்தில் கலக்கிறது. ரத்தத்தில் ஃபோலெட் அதிகமானாலோ, சிறுநீரகம் அதைக் கழிவாக எண்ணி, வெளியேற்றி விடும். இதனால் சிறுநீரகங்களுக்கும் வேலை கடுமையாகும். உடலின் இரும்புச்சத்து அளவும் குறையும்.

ஆல்கஹால் வளர்சிதை மாற்றத்தின் விளைவாக ‘அசற்றலிடிகைட்டு’ (Acetaldehyde) என்ற வேதிப்பொருள் உருவாகும். இது புரதச்சத்தோடு பாதுகாப்பாக உள்ள  வைட்டமின்பி6யையும் நீக்கி விடும்.

வைட்டமின் பி12 உடலில் சேர்வதை நேரடியாகவே தடுக்கும் மது, அதோடு விடுவதில்லை. வைட்டமின்களை கிரகிக்க உதவும் காரணிகள் சுரப்பதையும் அடக்குகிறது.உடலின் உள்ளே புகும் ஆல்கஹால் என்னவெல்லாம் செய்யும் எனப் பார்த்தோம். கூடவே கன்னாபின்னாவென உள்ளே தள்ளும் நொறுக்குத்தீனிகளும் இன்ன பிற உணவுகளும் சேரும்போது அபாயம் எத்தனை மடங்கு அதிகரிக்கும்?

அதிக அளவு மது அருந்துபவர்களில் பலரும் பருமனாகவே இருக்கிறார்கள். இதற்கு மது மட்டுமே காரணம் அல்ல. அவர்கள் மதுவோடும், மதுவுக்குப் பின்னும் எடுத்துக்கொள்ளும் உணவுகளே பிரதானம். அதோடு, தொடர்ச்சியாகவோ, அதிக அளவோ மது அருந்துபவர்கள் உடல் உழைப்பில் முறையாக ஈடுபடுவதில்லை.

உடற்பயிற்சியும் செய்வதில்லை. தீனியும் உடல் உழைப்பின்மையும் சேர்ந்து, பருமனைக் கொண்டு வந்தாலும், அதற்கு மூல காரணமாக இருப்பது மதுதானே? மொத்தத்தில் இது ‘வரும்... ஆனா, வராது’ கதைதான்!

 பருமனுக்கும் ஆல்கஹாலுக்கும் உள்ள தொடர்பு பற்றி ஏராளமான மருத்துவ ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

1.கார்போஹைட்ரேட் கலோரியில் பாதிக்கு மாற்றாக ஆல்கஹால் வழங்கப்பட்டு 14 நபர்கள் 16 நாட்கள் சோதிக்கப்பட்டனர். சராசரியாக அவர்களது எடை ஒரு கிலோ
குறைந்திருந்தது.2.தினம் 30 மி.லி. ஆல்கஹால் வழங்கப்பட்டு 37 பேர் சோதிக்கப்பட்டனர்.
3 மாதங்களுக்குப் பிறகு இவர்களில் 15 பேர் பழைய எடையைப் பராமரிப்பதற்கு, கூடுதல் கலோரிகள் தேவைப்பட்டன. 22 பேர்களுக்கு எடையில் எந்த மாற்றமும் இல்லை.

3. ஆல்கஹாலுக்கும் எடைக்கும் உள்ள தொடர்பு பற்றி 89 ஆயிரம் ஆண்கள் மற்றும் 48 ஆயிரம் பெண்களிடம் நீண்ட கால ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

 இந்த ஆய்வுகளிலிருந்து மருத்துவ விஞ்ஞானிகள் கூறுவது என்ன?உண்மையில் ஆல்கஹால் காரணமாக குடிப்பவர்கள் பருமன் ஆவதில்லை.

அதனோடு எடுத்துக் கொள்கிற உணவுகளே காரணம். அதோடு, ஆல்கஹால் அடையாளம் காண முடியாத ஒரு வகை ஆற்றல் குறைப்பான்களை உடலில் செயல்படுத்துகிறது. இதனால் ஓரளவு எடை குறைகிறது.

 இதனால் எடை குறைக்க விரும்புகிறவர்கள் மது அருந்த வேண்டும் என்று அர்த்தமல்ல... மதுவின் ஒட்டுமொத்த செயல்திறனானது, எடை குறைப்பு என்ற விஷயத்தைத் தாண்டி, ஏராளமான எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்.

 மது அருந்துபவர்களுக்கு கலோரி எப்படி கிடைக்கிறது?

உதாரணமாக ஒரு கிளாஸ் ஒயின் (250 மி.லி.) அருந்துபவர்களுக்கு 204 கலோரி கிடைக்கிறது. இதில் 163 கலோரி ஆல்கஹால் மூலமும், 40 கலோரி கார்போஹைட்ரேட் வாயிலாகவும், மீதமுள்ள ஒரு கலோரி புரதம் ஆகவும் பெறப்படுகிறது.325 மி.லி. பியர் அருந்துபவர்களுக்கு 150 கலோரி உருவாகும். இதில் ஆல்கஹாலில் இருந்து 93 கலோரியும், கார்போஹைட்ரேட்டில் இருந்து 55 கலோரியும், புரோட்டீனில் இருந்து 2 கலோரியும் கிடைக்கும்.

ஸ்காட்ச், விஸ்கி போன்ற பானங்களில் (30 மி.லி.) ஒட்டுமொத்த 70 கலோரியும் ஆல்கஹாலில் இருந்தே பெறப்படுகிறது.இவை எல்லாம் பாதி பர்கரில் ஒளிந்திருக்கும் கலோரிகளை விடக் குறைவுதான். ஆனால், இதோடு நாம் நிறுத்துவதில்லையே!

ஆல்கஹால் உருவாக்கும் தயாமின் குறைபாட்டை சாதாரணமாக எண்ண வேண்டாம்... இது மூளையின் செயல்பாட்டிலேயே பாதிப்பை ஏற்படுத்தி, சிந்தனைத் திறன், நினைவாற்றல் ஆகியவற்றையும் குலைக்கும்.

அதிர்ச்சி டேட்டா

கடந்த 10 ஆண்டுகளில்... தமிழக டாஸ்மாக் விற்பனை பணியாளர்கள்  : 33ஆயிரம் பேர்

பணியில் சேரும் போது குடிப்பழக்கம் உள்ளவர்கள் : 3  பேர் மட்டும்

இப்போது குடிப் பழக்கம் உள்ளவர்கள் : கணக்கே இல்லை!

இறந்த பணியாளர்கள்: 4ஆயிரம் பேர்

இவர்களில் குடிநோய் காரணமாக இறந்தவர்கள்: 2 ஆயிரம் பேர்

(தகவல்களைப் பருகுவோம்!)

டாக்டர் ஷாம்