நெறிகட்டுதல் கல்லீரல் பாதிப்பையும் கச்சிதமாகச் சொல்லும்!



தெரியுமா?

நெறிகட்டுதல்... அடிக்கடி கேள்விப்படுகிற வார்த்தைதான்... ஆக்சூவலி, அது என்ன? ஏன் ஏற்படுகிறது? எப்படி சரியாக் குவது? பொதுவாக இதையெல்லாம் யோசிப்பதில்லை. கழுத்து, இடுப்பும் காலும் சேருகிற இடம், அக்குள் என உடலின் பல பகுதிகளில் உண்டாகுகிற இப்பாதிப்பு காரணமாக, தடித்தல், கை, கால் மூட்டு இணைப்புகளில் வலி ஏற்படலாம் என்கிற பொதுநல மருத்துவர் எஸ்.பாஸ்கர், நெறிகட்டுதல் பிரச்னை பற்றி விளக்கமாகப் பேசுகிறார்.

``ரத்தத்தில் உள்ள கழிவுகள் மற்றும் கிருமிகளை அகற்றும் பணியை நமது உடலில் உள்ள நிணநீர் சுரப்பி செய்து வருகிறது. இந்தப் பணி முறையாக நடைபெறாத போது இயல்புக்கு மாறாக நிணநீர் சுரப்பி பெரிதாக விரிவடையும். இந்தக்  காரணத்தால் உண்டாகும் பாதிப்பைத்தான் மருத்துவர்கள் நெறிகட்டுதல் (Lymphadenopathy) எனக் குறிப்பிடுகின்றனர். தொடை இடுக்குப் பகுதியிலும்  சிலருக்கு உடல் முழுவதும்  நெறிகட்டுதல் உண்டாகும்.

18 வயதுக்கு உட்பட்டோருக்கு நிணநீர் சுரப்பி  எந்த அறிகுறியும் இல்லாமலே சில நேரங்களில் பெரிதாகும். இது சாதாரணமானதே. 4 வாரங்களுக்குப் பிறகும் அவர்களுக்கு நெறிகட்டுதல் குறையாவிட்டால் பயாப்சி செய்ய வேண்டும்.

இயல்புக்கு மாறான நிலையில் நெறிகட்டுதல் ஏற்பட தொற்று, எதிர்ப்பு சக்தி மாறுபாடு, புற்றுநோய்  ஆகியவை  காரணங்களாகலாம். நெறிகட்டுதல் உடலில் எந்த அறிகுறியையும் காட்டாது. நெறிகட்டுதல் குழுவாக எவ்வளவு ஏற்பட்டு இருக்கிறது, அதன் அளவு, மென்மை, அதன் நகரும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் பாதிப்புகள் வரும்.  சிலருக்கு ஜுரம், உடல் வலி, தடித்தல், கை, கால் மூட்டு இணைப்புகளில் வலி வரக்கூடும்.

தொற்று மற்றும் நுண்ணுயிரி, பால்வினை நோய்கள், நெறிகட்டுதல் காரணமாக நிணநீர் சுரப்பியில் உண்டாகும் புற்றுநோய், நிணநீர் சுரப்பிக்கு அருகில் உள்ள உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய் இச்சுரப்பியை பாதித்தல், சருமநோய் போன்றவற்றாலும் நெறிகட்டுதல் உண்டாகும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நெறிகட்டுதல் ஏற்பட்டால், பயாப்சி செய்வது நல்லது.

இவர்களுக்கு நெறிகட்டியுள்ள இடம் வலியுடனும் தொட்டால் கடினமாகவும் இருக்கும்.  குடி, புகைப் பிடித்தல் பழக்கம் காரணமாக கல்லீரல், நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தால், அப்பகுதியில் நெறிகட்டி  பெரிதாகிக் கொண்டே போகும். பொதுவாக நெறிகட்டுதல் அளவு ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவாகவே இருக்கும். 2 சென்டிமீட்டரைவிட பெரிதானால் உடனடியாக கவனிக்க வேண்டும்.''

- விஜயகுமார் படம்: ஆர்.கோபால்