கியூபிகல் கோல்ட் ஜில்லுனு ஓர் ஒவ்வாமை!



சூழல் நோய்கள்

ஏ.சி. செய்யப்பட்ட அலுவலகத்தில், ஆடம்பரமான கேபினுக்குள் அமர்ந்தபடி வேலை பார்ப்பது உங்கள் அந்தஸ்தின் அடையாளமாக இருக்கலாம். அது ஆரோக்கியத்தைக் காப்பாற்றுமா?``காற்றோட்டம் இல்லாத  கேபின் போன்ற இடங்களில் வேலை செய்வதால் எளிதில் ஒவ்வாமை ஏற்படலாம். சளித் தொல்லை வரலாம். இதற்கு ‘கியூபிகல் கோல்ட்’ என்றே பெயர்’’ என்கிறார் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவர் தமிழரசன்.

``வாழ்க்கை முறை மாற்றங்கள், சூழலியல் காரணமாக நம்மில் பலர் காற்று, சூரிய வெளிச்சமும் நுழைய முடியாத கேபின் போன்ற சின்னச் சின்ன இடங்களில்  பலமணி நேரம் அமர்ந்து பணியாற்ற வேண்டி இருக்கிறது. இதுபோன்ற இடங்களில் குளிர்சாதன வசதியும் உள்ளது. இதன் காரணமாக, அழுக்கு, தூசி, பாக்டீரியா போன்றவை வெளியேற வழியில்லாமல், அந்தச் சிறிய இடத்துக்குள்ளேயே சுற்றிக்கொண்டு இருக்கும்.

நாம் சுவாசித்து வெளியேற்றுகிற மூச்சுக் காற்றிலும் ஏராளமான பாக்டீரியாக்கள் காணப்படும். இவை சூரிய ஒளி உள்ளே வருவதற்கான வழி இருந்தால், தானாகவே இறந்து விடும். இந்த இடங்களில் காற்றோட்டம் இருக்கும் வகையில் ஜன்னல் மற்றும் சிறுசிறு துவாரங்கள் அமைக்கப்பட்டு இருந்தால், அழுக்கு, தூசி, பாக்டீரியா போன்றவை தாமாகவே வெளியே சென்று விடும். இந்த இடங்களில் பொருத்தப்பட்டுள்ள குளிர்சாதன கருவி, அதில் உள்ள ஃபில்டர் ஆகியவற்றை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். 

அப்படி செய்யாத போது, இங்கு பணிபுரியும் பலரையும் ஒவ்வாமை காரணமாக ஏற்படும் சளித் தொல்லை (Cubicle Cold) பாதிக்கிறது.ஒவ்வாமை காரணமாக சளித் தொல்லை ஏற்படுவதை அறிந்துகொள்ள உடலில் பலவிதமான அறிகுறிகள் தோன்றும். பொதுவாக பருவநிலை மாறினால் எல்லோருக்கும் சளி உண்டாகும்.

 ஒவ்வாமையால் சளித்தொல்லை ஏற்பட்டாலோ ஆண்டு முழுவதும் அப்பிரச்னை  இருக்கும். இந்த சளித் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்குத் தினமும் காலையில் தூங்கி எழுந்த உடனே அடுக்கு தும்மல் வந்து கொண்டே இருக்கும். கண் எரிச்சல், மூக்கு அரிப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், மூக்கு அடைப்பு போன்றவை ஏற்படும்.

ஒவ்வாமையால் ஏற்படும் சளித்தொல்லையானது, ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவக்கூடிய தொற்றுநோய் அல்ல. இந்தச் சளி காரணமாக, காதில் சீழ்பிடித்தல், எலும்பு அரித்தல், கேட்கும் திறன் குறைதல், மூக்கில் இருந்து சளி தொண்டை யில் இறங்குவதால் உண்டாகும் வலி, குரல் மாற்றம் ஆகிய பாதிப்புகள் ஏற்படும். சாதாரணமாக இருக்கிற மூக்கு சதை, சளியால் வீங்கத் தொடங்கும். இதனால் குறட்டை அதிக அளவில் வெளிப்படும். தூங்கும்போது மூச்சடைப்பு ஏற்படும்.

தூசு, அழுக்கு, பாக்டீரியா போன்றவற்றின் ஒவ்வா மையால் உண்டாகும் சளித் தொல்லையால் அவதிப்படுபவர்கள் உணவு விஷயத்தில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். கத்தரிக்காய், தக்காளி, கருவாடு ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பழங்கள் சாப்பிடுவதால் சளி பிடிக்காது.

தரமில்லாத பழங்கள் சாப்பிடுவதை நிறுத்துவதே நல்லது. சிறுவயது முதல் ஆஸ்துமா மற்றும் தோல் அரிப்பு உள்ளவர்களுக்கு சளித்தொல்லை அதிகமாக ஏற்படும். நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளின் உடலில் உள்ள பேன், ஈறு, ரோமம் போன்றவை சளித் தொல்லைக்கு காரணமாக உள்ளன.

பூவில் உள்ள மகரந்தம், வாசனை அதிகமாக உள்ள சோப், பவுடர் மற்றும் பாடி ஸ்பிரே ஆகியவற்றை பயன்படுத்துவதாலும் சளி பிடிக்கும். அதனால், செல்லப்பிராணிகளுடன் ஒரே படுக்கையில் படுத்து தூங்குவதை, நீண்ட நேரம் அவற்றுடன் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். நறுமணம் அதிகம் உள்ள அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது.

ஒவ்வாமையால் ஏற்படும் சளித் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு முதலில் Antihistamine மாத்திரை கொடுக்க வேண்டும். நீண்ட நாளாக இந்தத் தொல்லை இருப்பவர்கள் ஸ்டீராய்டு சாப்பிட வேண்டும். ஒவ்வாமையால் உண்டாகும் சளியால் பல காலம் அவதிப்படுபவர்களுக்கு மூக்கில் நீர்க்கட்டி (Polyp) உண்டாகும். இதனை அறுவை சிகிச்சை மூலம்தான் குணப்படுத்த முடியும்.        

இன்றைய வாழ்க்கை நடைமுறையும் ஒவ்வாமையால் ஏற்படுகிற சளித் தொல்லைக்கு முக்கிய காரணமாக உள்ளது. ஆகவே, ‘சுத்தம் சுகம் தரும்’ என்ற அடிப்படையில், பணிபுரியும் இடம், வசிப்பிடம், சுற்றுப்புறம், உணவு, உடை போன்றவற்றை எப்போதும் சுகாதாரமாக வைத்துக்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்...’’ஒவ்வாமையால் சளித்தொல்லைஏற்பட்டாலோ ஆண்டு முழுவதும் பிரச்னை இருக்கும்.

- விஜயகுமார்
படம்: பரணிகுமார்