டியர் டாக்டர்



`குங்குமம் டாக்டர்' இதழ்கள் மாதத்துக்கு மாதம் நன்கு மெருகேறி வருவதைப் பார்க்கிறேன்.  பல வகையான தலைப்புகளையும் உள்ளடக்கி, சிறுவர் முதல் முதியோர் வரை எல்லாருக்கும் உபயோகமான கட்டுரைகளைக் கொடுக்கிறீர்கள். டீன் ஏஜ் பெண்கள் முதல் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவோர் வரை எல்லோருக்குமான  உபயோகமான குறிப்புகளை, யாரும் முகம் சுளிக்காத வண்ணம் கொடுக்கிறீர்கள். அடுத்த இதழை ஆவலோடு எதிர்பார்க்கவும் தூண்டுகிறீர்கள். வாழ்த்துகள்!
- மெனுராணி செல்லம், சென்னை- 10

‘உப்புப் பெறாத விஷயத்தைப் பற்றி பேசாதே’ என்று கூறுவதைக் கேட்டதுண்டு; ஆனால், உப்பைப் பற்றி பல்வேறு விஷயங்களை நாங்கள் தெரிந்துகொள்ள பெரிதும் உதவிய அருமையான கட்டுரை ‘உள்ளளவும் நினை!
- வெ. லட்சுமி நாராயணன், வடலூர்.

சுவையில் குறையொன்றுமில்லை... மாற்று உணவுப் பட்டியலுடன் இந்த இதழில் வந்த இரு கட்டுரைகள் நீரிழிவு உள்ள எங்களைப் போன்றவர்களுக்கு பயனுள்ளவை! டாக்டர் சக்தி சுப்பிரமணியன் சன் டி.வி.யில் காலை 8:30 மணிக்கு எங்களுடன் உரையாடினாலும் வேலைக்குச் செல்லும் அவசர கதியில் சரியாக கவனிக்க முடிவதில்லை. `குங்குமம் டாக்டர்' மூலம் அவரை சந்திப்பதில் எங்களுக்கெல்லாம் எல்லையில்லா மகிழ்ச்சி!
- எஸ்.துரைசிங் செல்லப்பா, உருமாண்டம்பாளையம், கோவை-29.

அழகைவிட உயிர் முக்கியமானது என்பதைப் புரிய வைத்து, பருமன் சிகிச்சையான லைப்போசக்‌ஷன் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது அட்டைப்படக் கட்டுரை!
- துர்கா துரைராஜ், புதுச்சேரி.

`கல்லாதது உடலளவு’ பகுதியில் ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ என்ற கட்டுரை படித்தேன்.
டாக்டர் வி.ஹரிஹரன்  எழுதியுள்ள தகவல்கள் நகைச்சுவை உணர்வோடு இருந்ததோடு,  மனதுக்கு இதமாக மருந்து போட்டது போல இருந்தது. 
- சித்ரா பாரதி, திருச்சி.

இதயப் பாதிப்பு என்றால் சாதாரண நெஞ்சுவலி என நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, இதயச் செயலிழப்பின் பின்னணியில் இவ்வ்வ்வ்வளவு பிரச்னைகள் இருக்கலாம் என தெள்ளத் தெளிவாகப் புரிய வைத்துவிட்டார் டாக்டர் கு.கணேசன்.
- நாச்சியப்பன், திருநெல்வேலி.