எக்ஸ்ரே எடுத்தால் என்ன பிரச்னை?



டாக்டர் எனக்கொரு டவுட்டு!

கதிர்வீச்சு அதிகம் என்பதால் அடிக்கடி எக்ஸ்ரே எடுக்கக் கூடாது என்கிறார்கள். நான் வருடம் ஒருமுறை மாஸ்டர் செக்-அப் செய்து கொள்ளும்போது எக்ஸ்ரேவை தவிர்க்க முடியவில்லை. இதனால் பிரச்னை வருமா?
- டி.இளங்கோவன், சென்னை-111.

ஐயம் தீர்க்கிறார் கன்சல்டன்ட் ரேடியாலஜிஸ்ட் ரமேஷ்...‘‘மார்புப் பகுதியையும் எலும்புகளின் ஆரோக்கியத்தையும் தெரிந்துகொள்ளவே எக்ஸ்ரே பரிசோதனையைப் பயன்படுத்துகிறோம்.  எக்ஸ்ரே எடுக்கும்போது வெளிப்படும் கதிர்வீச்சுகள் ஆபத்தானவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், முறையாக எக்ஸ்ரே பரிசோதனை செய்து கொண்டால் பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

எக்ஸ் கதிர்களின் அளவை Millisievert என்று கணக்கிடுவோம். ஆண்டுக்கு 5 மில்லி சீவெர்ட் வரை எக்ஸ் கதிர்கள் நம் மீது படுவதால் பாதிப்பு ஏற்படாது. எக்ஸ்ரே எடுக்கும்போது வெளிப்படும் கதிர்வீச்சுகளின் அளவு 0.15 மில்லிசீவெர்ட்தான். அதனால், ஆண்டுக்கு ஒருமுறை மாஸ்டர் செக்கப் செய்துகொள்ளும்போது வெளிப்படும் 0.15 மில்லிசீவெர்ட்டால் பாதிப்புகள் எதுவும் வராது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அடிக்கடி எக்ஸ்ரே எடுப்பதுதான் ஆபத்தானது.

 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எக்ஸ்ரே எடுக்கும்போது தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும். கழுத்துப் பகுதியில் Thyroid shield கவசத்தையும், இடுப்புப் பகுதியில் Gonad shield கவசத்தையும் அணிவிக்கிறார்களா என்பதைப் பெற்றோர் கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால் கழுத்தில் தைராய்டு புற்றுநோயோ, இடுப்புப் பகுதியில் விதைப்பை அல்லது கருப்பை புற்றுநோயோ ஏற்படலாம். எதிர்காலத்தில் மலட்டுத்தன்மை ஏற்படலாம்.

அடுத்து, கர்ப்பிணிகள் எக்ஸ்ரே எடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எக்ஸ் கதிர்களால் தாய்க்கு பாதிப்பு இல்லையென்றாலும் கருவில் இருக்கும் குழந்தைக்கு
புற்றுநோயோ, உறுப்புகள் வளர்ச்சியில் சேதமோ ஏற்படலாம். கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களுக்கு எக்ஸ்ரே கட்டாயம் எடுக்கக் கூடாது. தவிர்க்க முடியாத பட்சத்தில் தாய் முக்கியமா, கருவில் இருக்கும் குழந்தை முக்கியமா என்பதன் அடிப்படையிலேயே எக்ஸ்ரே எடுக்க வேண்டியிருக்கும்!’’

- ஜி.வித்யா
படம்: ஏ.டி.தமிழ்வாணன்