ஃப்ரோசன் ஷோல்டர்



வரும் முன் காப்போம்!

கைகளைக்கூட அசைக்க முடியாத பிரச்னை!

‘ஏதோ சுளுக்குப் பிடிச்ச மாதிரி இருக்கு...’ ‘கையை அசைக்கவே முடியல...’‘தோள்பட்டையில மட்டும் பயங்கர வலி...’இனம்புரியாத வலியால் அடிக்கடி இதுபோல  புலம்புகிறவரா நீங்கள்... இது உங்களுக்கான கட்டுரைதான்!

‘‘பெரும்பாலும் நடுத்தர வயதினரைப் பாடாகப்படுத்தும்  தோள்பட்டை வலிக்கு ஃப்ரோசன் ஷோல்டர் (Frozen shoulder). வாயில் நுழையாத பெயராக இருந்தாலும் எளிதில் குணப்படுத்தக்கூடிய பிரச்னைதான் ’’ என்று நம்பிக்கை தரும் அறிமுகத்தோடு தொடங்குகிறார் எலும்புமூட்டு அறுவைசிகிச்சை மருத்துவரான
சண்முகசுந்தரம்.

‘‘நம்முடைய தோள்பட்டையை இயக்கும் தசைகளில் வீக்கமோ, வலியோ ஏற்படும்போதுதான் ஃப்ரோசன் ஷோல்டர் உருவாகிறது. இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால் தோள்பட்டையில் இருக்கும் Rotator cuff muscles தசைகளை 4 விதமாகப் பிரிக்கலாம். இந்த நான்கில், சுப்ராஸ்பைனடஸ்(Supraspinatus) என்ற தசையில் வீக்கம் ஏற்படும்போது கைகளைத் தூக்கினால் வலிக்கும்.

குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் கையைத் தூக்கும்போது வலி இருக்காது. ஃப்ரோசன் ஷோல்டரின் முதல் நிலை இது. இந்த நிலையிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. தோள்பட்டையில் இருக்கும் கேப்ஸ்யூல் பகுதி தேய்ந்து சுருங்குவதால் எலும்புகளிடையே உராய்வு அதிகமாகி தசைகளில் புண்ணை உண்டாக்கும்.

 ‘Adhesive capsulitis’ எனும் இந்தப் பிரச்னையில் 180 டிகிரி கோணத்துக்கு மேல் கையைத் தூக்க முடியாது. இது இரண்டாவது நிலை. இதையும் கவனிக்காமல் விட்டால் ஃப்ரோசன் ஷோல்டர். அசைவுகள் இல்லாத நிலையிலேயே தோள்பட்டையில் வலி இருக்கும். தோள்பகுதியில் இருக்கும் கேப்ஸ்யூல் சுருங்கி, தசைகள் இறுகிவிடுவதால் கையை அசைப்பது கூட சிரமமாகிவிடும்.

40 வயது தாண்டியவர்களே ஃப்ரோசன் ஷோல்டரால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக பெண்களை அதிகம் பாதிக்கும் பிரச்னை இது. கிரிக்கெட்டில் வேகப்பந்து வீசுபவர்களுக்கும் ஃப்ரோசன் ஷோல்டர் பாதிப்பு வரும். நீரிழிவு, வாதம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், தைராய்டு ஹார்மோன் சுரப்பு குறைவாக உள்ளவர்களுக்கும் ஃப்ரோசன் ஷோல்டர் உண்டாகலாம். தோள்பட்டையில் அடிபடுவதை அலட்சியமாக எடுத்துக் கொள்வதும்கூட காலப்போக்கில் ஃப்ரோசன் ஷோல்டரை கொண்டுவந்துவிடும்.

ஃப்ரோசன் ஷோல்டர் ஆரம்ப நிலையில் இருந்தால் வலி நிவாரணிகள், பிஸியோதெரபி பயிற்சிகள் மூலமே சரியாக்கிவிடலாம். வலி அதிகமாக இருந்தால் ஊசி போட்டுக் கொள்ள வேண்டியிருக்கும். கைகளை தூக்கும்போது எத்தனை டிகிரி கோணத்தில் அவர்களுக்கு வலி ஏற்படுகிறது, எந்த இடத்தில் கையை தூக்க முடியாமல் போகிறது என்பதன் அடிப்படையில் இந்த சிகிச்சை மாறும். ‘மேனிபுலேஷன் தெரபி’ என்ற சிகிச்சையை இறுகிய தோள்பட்டை மூட்டுக்கு கொடுத்த பிறகு, 180 டிகிரிக்கு கையைத் தூக்க முடியும்.

மேனிபுலேஷன் தெரபி செய்தும் சரியாகவில்லை எனில் தோள்பட்டை பகுதியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து எந்த தசை அதிகமாகச் சுருங்கியுள்ளது எனப் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் தோள்பட்டை மூட்டில் ‘ஆர்த்தரோஸ்கோபி’ எனப்படும் நவீனவகை அறுவைசிகிச்சையின் மூலம் சரிசெய்து விடலாம். அறுவை சிகிச்சைக்கு பிறகு ஒரு பிஸியோதெரபிஸ்ட்டின் மேற்பார்வையில் தோள்பட்டை தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை செய்து வந்தால் ஃப்ரோசன் ஷோல்டரிலிருந்து  விடுதலை பெறலாம்!’’

தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை தோள்பட்டையில் வலி உள்ளவர்கள்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. மற்றவர்களும் செய்வது தோள் தசைகளை வலுவுடன் வைக்க உதவும்.தசைகளை வலுப்படுத்தும் பயிற்சி காலையில் எழுந்தவுடன் கைகளை மேலும்கீழுமாக தூக்கி இறக்கும் பயிற்சியை செய்ய
வேண்டும்.

180 டிகிரி வரை கைகளை தூக்குவது இதனால் எளிதாகும்.

முழுமையான கோணத்தில் கைகளை சுழற்றும் பயிற்சியை செய்வதும் அவசியம்.

பக்கவாட்டிலும் மேலும் கீழுமாக கைகளை தூக்கி தலைக்கு மேலே வணக்கம் சொல்வது போல செய்ய வேண்டும்.

மேலும் கீழுமாகவும் கைகளை சுழற்ற வேண்டும். பக்கவாட்டிலும் செய்ய வேண்டும். இதனால் தோள்பட்டை தசைகள் இறுக்கம் அடையாமல் வலுவுடன், சற்று தளர்வாக இருக்கும்.

ஒரு துண்டை எடுத்து பின்புறமாக முதுகை துடைப்பதுபோல மேலும் கீழும் அசைப்பதும் தோள்பட்டையை வலுவாக்கும்.

சுவரில் சிறுசிறு கோடுகள் போட்டு, பக்கவாட்டில் நின்றபடி ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் கோடுகளின் மீது ஒன்றன் மீது ஒன்றாக கொண்டுசெல்ல வேண்டும். இதையும் மேலும் கீழும் மாற்றி செய்யவேண்டும்.

தோள்பட்டையை குலுக்கும் ‘ஷோல்டர் ஸ்ட்ரக்கிங்’ பயிற்சிகளை செய்யவேண்டும். தோள்பட்டையை முன்பக்கமாகவும் பின்பக்கமாகவும் மாற்றி அசைக்க வேண்டும்.

‘Teraband ’ எனப்படும் எலாஸ்டிக் கயிறுகளை மேலும் கீழும் பக்கவாட்டிலும் கைகளால் இழுத்து செய்யும் பயிற்சிகளையும்
மேற்கொள்ளலாம். இது தோள்பட்டை தசைகளை நலமுடன் வைத்திருக்கும்.

கையில் ஆள்காட்டி விரலை நீட்டியபடி வட்டம் போடுமாறு கீழ்நோக்கி சுற்ற வேண்டும். பக்கவாட்டிலும் இதே போல செய்யவேண்டும்.

இப்பயிற்சிகளை தோள்பட்டையில் வலி உள்ளவர்கள்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. மற்றவர்களும் செய்வது தோள் தசைகளை வலுவுடன்
வைக்க உதவும்.

40 வயது தாண்டியவர்களே ஃப்ரோசன் ஷோல்டரால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக பெண்களை அதிகம் பாதிக்கும் பிரச்னை இது.

- விஜய் மகேந்திரன்
மாடல்: ஷாலினி படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்