வைட்டமின்



ஆங்கிலம் தெரிகிற அளவுக்குக் கூட தமிழ் தெரியாமல் போய்க்கொண்டிருப்பது இந்தக் காலக் கொடுமைகளில் ஒன்று. ஆமாம்... வைட்டமினுக்கு தமிழில் என்ன? யோசித்துக் கொண்டே வரலாற்றைக் கொஞ்சம் புரட்டுவோம்!

வியாபாரங்களுக்காகவும், புதிய நாடுகளின் கண்டுபிடிப்புக்காகவும் கி.பி.14ம் நூற்றாண்டில் கப்பல் பயணம் பிரபலமாகிக் கொண்டிருந்தது. கடல் பயணம் மேற்கொண்டவர்களில் பலர் விநோதமான நோய் தாக்கி இறந்துகொண்டிருந்தார்கள். அது என்ன நோய்? எப்படி குணப்படுத்துவது? யாருக்கும் புரியவில்லை.

கி.பி 17ம்  நூற்றாண்டில் ஜேம்ஸ் லிண்ட் என்ற ஸ்காட்லாந்து மருத்துவர் இந்த மர்மங்களுக்கு விடை கண்டுபிடித்தார். பற்களில் ரத்தம் வடிந்து, முகம் வெளிறி, களைத்துப் போன 12 நபர்களை கப்பலில் பார்த்தார். இவர்களை 6 குழுக்களாகப் பிரித்தார்.  ஒவ்வொரு குழுவுக்கும் உணவுடன் காய்கறி, பழங்கள் போன்ற கூடுதல் உணவு ஒன்றைக் கொடுத்தார். ஆச்சரியம்... எலுமிச்சைச்சாறு, ஆரஞ்சு சேர்த்துக்கொண்ட ஒரு குழுவுக்கு நோய் குணமானது. இந்த மர்ம நோய்தான் பின்னாளில் ‘ஸ்கர்வி’ என்று அறியப்பட்டது.

தன்னுடைய கண்டுபிடிப்பை கட்டுரை யாக எழுதினார் ஜேம்ஸ் லிண்ட். மருத்துவ உலகம் திரும்பிப் பார்த்தாலும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாததால் ஜேம்ஸ் லிண்டின் கண்டுபிடிப்பு நிராகரிக்கப்பட்டது.

உண்மையை   எத்தனை  ஆண்டுகளுக்கு மறைக்க முடியும்? கி.பி. 1905ம் ஆண்டில் கிழக்கு ஆசிய நாடுகளில் பாலீஷ் செய்யப்பட்ட அரிசியை உண்டவர்களுக்கு Beriberi என்ற நோய் தாக்கியது. ‘பாலீஷ் செய்யப்படும்போது அரிசியில் இருக்கும் ஏதோ ஒன்றை இழந்துவிடுகிறோம். அதுதான் பிரச்னைக்குக் காரணம்’ என்று இங்கிலாந்துக்காரரான வில்லியம் ஃப்ளெட்சர் கூறினார்.

அதன்பிறகு, இந்த ‘ஏதோ ஒன்று’ விஷயத்தை தீவிரமாகப் பலரும் ஆராய ஆரம்பித்தார்கள். 1906ல், ஃப்ரெடரிக் ஹாப்கின்ஸன் என்ற விஞ்ஞானி ஜேம்ஸ் லிண்டின் வார்த்தைகளை வழிமொழிந்தார். 1912ல், அமெரிக்கரான கேஸிமிர் ஃபங்க், இந்த ஏதோ ஒன்றுக்கு `Vital Amines' என்று பெயர் வைத்தார்.

உயிர் வாழத் தேவையான சத்து என்ற அர்த்தத்தில் Vital  என்ற வார்த்தையையும், அரிசியில் இருக்கும் Thiamine என்ற சத்தின் பெயரையும் சேர்த்து Vital Amines என்று பெயர் வைத்தார். `வைட்டல் அமின்'தான் நாளடைவில் Vitamin என்று மாறியது.இந்த வைட்டமின்களுக்குதான் தமிழில் ‘உயிர்ச்சத்துகள்’ என்று பெயர்!

- ஜி.வித்யா